Friday, November 4, 2022

BEHAVIOUR

சகவாச தோஷம்....  #நங்கநல்லூர்_j_k_SIVAN 

சிலரது  ஞாபக சக்தி அபாரம்.  எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை துல்லியமாக நேற்று சாயந்திரம் நடந்து கண்ணால் பார்த்தது போல்  வர்ணிப்பார்கள்.  

என்னதான்  ரொம்ப  ஜாக்கிரதையாக  நிறைய   பணத்தைக் கொட்டி படமாக்கினாலும், கல்கி பொன்னியின் செல்வனை ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு சோழநாட்டில் நடந்ததை நேரில் பார்த்தது போல் ஐந்து வருஷம் தொடர்ச்சியாக  கல்கி பத்ரிகையில்  எழுதியதைப்  படிப்பது போல ஆகவே  ஆகாது. தனது எழுத்தில் அவர் நம்மை  சோழக்காலத்துக்கு தூக்கிக் கொண்டு போய்விடுவார். ஆறு ஏழு தடவை முழுதும் படித்து  ருசி கண்டவன் நான்.

சிலர்  சங்கீதம் முறையாக கற்றுக்கொள்ளாமலேயே  அட்டகாசமாக  MKT, PUC,  GNB, TMS மாதிரிரே  பாடுவார்கள். அதற்கும்  அவர்களது ஞாபகசக்தி,  வெளிப்படுத்தும்  அலாதி திறன்  தான்  காரணம்.

 சிலரால்  எந்த வாத்யத்தையும்  எளிதில் கற்றுக்
கொண்டு வாசிக்கமுடியும். 

 சிலர்  எந்த ஊர் சென்றாலும் அந்த  பிரதேச மொழியை  சுலபத்தில் கற்றுக்கொண்டு பேச எழுத முடிப்பவர்கள்.   இந்த சக்தியெல்லாம் இயற்கையாகவே  அவர்களுக்கு பிறவியிலிருந்து இருக்கும்  திறமை. குணம் என்று சொல்லலாம்.    பூர்வ ஜென்ம வாசனை என்பது பெரிய  புரியாத  காரணம்.

பெரிய  ஹோட்டல்களில்  டேஸ்டர் என்று சிலர் இருப் பார்கள்.  எந்த  சமையல் அயிட்டத்தையும்  ஒரு துளி நாக்கில் பட்டவுடனே  அதில் என்ன குறை என்று சொல்லிவிடுவார்கள். 

அந்த கால ராஜாக்களுக்கு  ஒரு ஆள் இருப்பான். அவன் ராஜா சாப்பிடும் முன்பு அவரது உணவை  முகர்ந்து பார்த்தே,  ஒரு துளி நாக்கில் வைத்தவுடனேயே  இது ராஜா சாப்பிடக்கூடாது, இதில் விஷம்,  உடலை  பாதிக்கும்  விஷயம் என்ன இருக்கிறது என்று சொல்லிவிடுவான். உப்பு, புளி , காரம் கசப்பு, இனிப்பு எல்லாம் எந்த  அளவில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிடும் திறமை அவர்களுக்கு உண்டு. இந்த  வேலையில் அந்த  ஆசாமிக்கு கரணம் தப்பினால் மரணம்.

சிறந்த  வைர வியாபாரிகள்  ஒரு கல்லைப் புரட்டி அப்படியும்  இப்படியும் திருப்பி பார்த்தே  அது எத்தகையது, என்ன விலை போகும்  என்று சொல்லக்கூடியவர்கள்.   

அன்னதான  சிவன்  கும்ப கோணம்  மகாமக வைபவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இலவசமாக சாப்பிட  தயாரிக்கும் அன்னதான   சமையல்  சாம்பார், ரசம்,  கொதிக்கும்போது  அதன்  ஆவி காற்றில்  வாசனையாக வருவதிலிருந்து  காரம், உப்பு, புளி  எது ஜாஸ்தி, எது கம்மி என்று சொல்லி சரி பண்ண வைத்தவர்.

என் நண்பர்  ராதாகிருஷ்ணய்யர்  யாருடனும் அதிகம் பேசாதவர்,  ஒருவரோடு பேசும்போதே, அல்லது அவர் மற்றவர்  களோடு  பேசுவதைக் கேட்கும்போதே  அவர் எப்படிப்பட்டவர் என்று  சொல்லிவிடுவார்.  எந்த விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று கணித்து விடுபவர்.

சில கிராமத்து விவசாயிகள்  வானத்தைப் பார்த்தே  என்று எவ்வளவு மழை பொழியும் என்று சொல்பவர்கள்.  சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமைக்கு, பேச்சுத் திறமைக்கு  ஈடு உண்டா?

பறவைகள் சில  கேட்ட  ஒலியை  அப்படியே திருப்பி கூவும்.    
அவரவர் குணம்  திறமை வெளிப்பாடு, பண்பு எல்லாமே  யாரோடு சேர்ந்திருக்கிறார்களோ
 அவர்களுடையது போலவே  மாறுவது மனிதர்களுக்கு மட்டுமல்ல  மிருகங்கள் பறவைகளுக்கும் வந்து விடுகிறது என்பதை அனுபவத்தில் காணலாம். 

ஆதிசங்கரர்  அதனால் தான் சத் சங்கம் அவசியம் என்கிறார்.   கெட்டசகவாசம், நல்ல சகவாசம் என்பது உண்மையிலேயே  ரொம்ப  ஓட்டுவாரொட்டி. சட்டென்று ஒட்டிக்கொள்ளும்.  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். 

சிங்கம் முதலை புலி எல்லாம் குட்டியிலிருந்தே வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.  வீட்டில்  பெற்ற குழந்தைகள்,   செல்ல நாய்க்குட்டி போல் வளர்ப்ப வர்கள் உலகத்தில் உண்டு.  மற்றவர்களுக்கு  அவை  கொடிய மிருகமாக தெரியலாமே    தவிர  குணத்தில் அவை பூனைக்குட்டிகள்.    அதற்காக  FLAT   டில்  மட்டுமல்ல  தெருவில் எந்த வீட்டிலும் இருக்க  அனுமதிப் பார்களா?  கொஞ்சம் பெரிதானவுடன்  காட்டில் கொண்டு விட வேண்டியது தான்.  பாவம் அப்போது அந்த  மிருகங்கள் பறவைகளின் கதி என்ன ? 
மற்ற  பறவைகள் மிருகங்கள் போல் அவை   அடுத்த வேளை  உணவை  வேட்டையாடி தேடி ஜீவிக்கமுடியாது. ஏனென்றால் அவை மனிதர்களோடு  மனிதராக  பழகியவை. பிழைக்க முடியாமல் மரணம் தான் முடிவாகிவிடும்.

ரெண்டு நாள் மழையில்  இன்டர்நெட்  வசதி அறுந்து போய்விட்டது போல் இருக்கிறது.  எனக்கு கம்ப்யூட்டர் ஓட்டுவாரொட்டி. பழக்க தோஷம்.  கம்ப்யூட்டரில் நான் எழுதுவது  உங்களுடனே பகிர்வது என்னைப் பொறுத்த
வரை ஒரு நல்ல சகவாசம் என்று தான் நினைக்கிறேன்.  
அது இல்லாமல் ரெண்டு நாள் கஷ்டப்பட்டேன். இன்று தற்காலிகமாக  ஏதோ ஒரு வசதி பண்ணி என் மகன்  இப்போது  என்னை எழுத வைத்திருக்கிறான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...