Saturday, November 5, 2022

big temple



 தமிழ்க்  கோவில் -   நங்கநல்லூர் J K SIVAN 

தொழில் நுட்பம் மிகுந்த இந்நாளில் யாரோ ஒரு   பாலம் கட்டி அதற்கு என்ன பெயர் வைப்பது என்று சண்டை போட்டு அது முடிவதற்குள் பாலம் தொபுக்கடீர் என்று  விழுந்து பிராணனை விட்டது. அப்பாடா இனி எனக்கு பேர் வேண்டாம்! என்று அதற்கு சந்தோஷம்.  இப்படிப்பட்ட  நிலையில் ஒரு வித நவீன  உபகரணங்கள், இன்ஜினியர்கள்  இல்லாமல் ஒரு ஆயிரம் வருஷ கோவில்  எப்படி இன்றும் என்றும்  ஜம்மென்று நிற்கிறது!.
அடிக்கடி  கனவிலும்  கூட  வந்து என்னை  பிரமிக்க வைக்கும்  ஒரு  அதிசயம்   தஞ்சாவூர்  ப்ரஹதீஸ்வரர்  ஆலயம். பெரிய கோவில் , பெரு உடையார் கோவில், தக்ஷிண மேரு  என்றும் பெயர். காவிரியின்  தென்கரையில் ஜம்மென்று  1000 வருஷங்களுக்கு முன்பு  ராஜ ராஜ சோழன் கட்டிய  216 அடி  உயர  கோவில். பாடல் பெற்ற சிவ ஸ்தலம். இந்தியாவுக்கு என்றும் பெருமை  தரும்  கௌரவ கலைச்  சின்னம்.  உலகத்திலேயே சிறந்த கட்டிட கலை மிக்க  ஒரு  அதிசயக் கோவில். ஆறு ஏழு  வருஷம்  இரவும் பகலும் அதே நினைவாக  ராஜா  மன்றாடி  கட்டிய  அற்புத கோயில்.   உலகத்தில் எத்தனையோ பேர்  இன்றும்  வந்து பார்த்து ஆச்சரியமடையும்  கலைக் கோயில். 
அதெப்படி  சோழனுக்கு  இவ்வளவு பெரிய  நந்தியை எதிரே வைக்கத் தோன்றியது?  இந்த ராஜாவின் பிள்ளை அப்பனை விட  ஒருபடி மேலே போய் பெருமை சேர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு இன்னொரு அற்புத கோயிலைக்  கட்டினான் அதுதான்  கங்கைகொண்ட   சோழபுரத்தில்  நாம் காணும்  இன்னொரு ப்ரஹதீஸ்வரர்.    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான  பராமரிப்பில் உள்ள  88 கோயில்களில்  முதலாவது பெருவுடையார் கோவில்.
காஞ்சிபுரத்தில்  பல்லவன் ராஜ சிம்மன்  கட்டிய  கைலாசநாதர்  கோவில் பற்றி  ராஜ ராஜ  சோழன் கேள்விப்பட்டு அதைச் சென்று  பார்த்தான். சோழ ராஜா சிவபக்தன்.   தன்னை சிவபாத சேகரன் என்று கல்வெட்டில்  போட்டுக்கொண்டவன்.  ''நானும் இதைப் போல் ஒரு அருமையான  பெரிய  சிவன் கோவில் கட்டுவேன்''  என  தீர்மானம் செய்து அதை நிறைவேற்றியவன்.     எப்படி இருக்கவேண்டும் கோவில்?  ராஜா மனதில்  திருவாரூர் தியாகராஜா  கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதி  நினைவுக்கு வந்தது. அதே மாதிரி. அல்லது  இன்னொரு மாடல்  திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில்  கட்டிய  சின்னஅழகான  செங்கல் கோவில். 
திருவிடை மருதூரில்  சுவாமி பெயர் மஹாலிங்கம். அனால் கோவில் மஹா கோவிலாக இல்லையே? தஞ்ஜாவூரில் தான் கட்டப்போகும்  கோவில் மட்டும் அல்ல,  நந்தி, லிங்கம் கூட பெரிசாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தான்.  கட்டி  முடிக்கும்  வரையில்  ராஜாவுக்கு ஆறு  ஏழு வருஷம் தூக்கம் வரவே இல்லை.   ராஜாவுக்கு  ஒரு அருமையான  சிற்பி கிடைத்தான். குஞ்சர மல்லன்.  இராசராசப் பெருந்தச்சன் என்று அவன்  பெயரைக் கல்வெட்டுகள்  சொல்கிறது.
கோயிலின்  அடிப்பாகம் 16 அடி உயரம். ஒரே கல்லில்  செதுக்கிய நந்தி.  20 டன் எடை.  2 மீட்டர் உயரம், 6 மீட்டர் நீளம்,  2 1/2  மீட்டர் அகலம்.   ப்ரஹதீஸ்வரர் 3.7 மீட்டர் உயரம். வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ..  108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில்   காணலாம் 
ராஜா  கோவிலைக் கட்டும்போது  அழகி என்னும் இடையர் குல பாட்டி  தினமும்  கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்க எல்லோருக்கும் தயிர், மோர் வழங்கினாளாம் . ரொம்ப நல்ல பாட்டி.  அவள்  ஞாபகமாக  கோவில்  கலசமான  80டன் எடை கொண்ட கல்லில் ''அழகி''   என்று பெயர் பொறித்திருக்கிறான்.  அதை  ''இடைச்சிக் கல்'' என்கிறார்கள். அந்தக்  கல்லின் நிழலே  ப்ரஹதீஸ்வரர் மேல்  தினமும் விழுகிறது. கல்வெட்டு பொய்  சொல்லாது.   அன்றாட வேலைக்கு  கோவிலில் நிறைய  பூசாரிகள், சிற்பிகள் , தேவார ஓதுவார்களும்,  சங்கீத வித்வான்கள், நடனமாதர்களும், மேலும் பல வேலைகளுக்கு பல  பணியாட்களும் தேவைகளுக்கேற்ப  ராஜா  வேலைக்கு வைத்திருந்தான் என்கிறது.   50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் சம்பளம் பெற்றார்கள். 
தஞ்சை  பெரிய கோவில் தமிழ் வடிவம்  என்பதற்கு   வேண்டாமா? உயரம் 12 அடி :  உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி:  18 மெய் எழுத்துக்கள். கோபுர உயரம் 216 அடி : உயிர் மெய் எழுத்துக்கள்  12x 18: 216. 216,  ப்ரஹதீஸ்வரருக்கும்  நந்திக்கு இடையே  : 247 அடி :  உயிர் மெய் எழுதது+ ஆயுத எழுத்து 1:  247.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...