கீரை இட்லி சாஸ்திரம்...நங்கநல்லூர் J K SIVAN
கண்ணால் பார்த்து வெகுகாலம் ஆகிறது. முருங்கைக் கீரை பேப்பரில் படித்ததோடு சரி. எங்கள் வீட்டில் முருங்கை மரம் ஒன்று இருந்தபோது அடிக்கடி முருங்கைக் கீரை கூட்டு, முருங்கை இலை போட்ட அடை சாப்பிட்ட காலம் பறந்து விட்டது. அம்மா வெண்ணை காய்ச்சும்போது முருங்கை இலை போட்டதாக லேசாக ஒரு ஞாபகம்.
எழுபத்தைந்து வருஷத்துக்கு முந்திய ஒரு பழைய நினைவு குறுக்கிடுகிறது.
''கீரைமா கீரை'' வழக்கமாக கீரை விற்கிற பட்டு வாசலில் நின்று குரல் கொடுத்தாள் .
அம்மா உள்ளே இருந்து வந்தவள்
''பட்டு என்னடி கீரை வச்சிருக்கே'
''முளைக்கீரை, மணல் தக்காளி, பசலைக் கீரை, அரைக்கீரை. மா.. . எது வேணும்?''
அப்பா வீட்டில் அடுத்த பக்கம் இருக்கும் குட்டி திண்ணையில் ஹிந்து பத்திரிகை படித்துக் கொண்டு
உட்கார்ந்திருக்கிறார்.
" ஒரு கட்டு முளைக் கீரை என்னடி விலை....?"
" ஓரணாம்மா"
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன். வழக்கமா அரையணான்னு தானே தருவே...
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன். வழக்கமா அரையணான்னு தானே தருவே...
''அது சின்ன கட்டு அம்மா. இன்னிக்கு பெரிய கட்டு தான் இருக்குது''
'சரி முக்கால் அணா ன்னு சொல்லி நாலு கட்டு கொடுத்த்துட்டு போ"
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. முக்காலணா தான்'' அம்மா பேரம் பேசுகிறாள்.
'' சரிம்மா மேலே ஒரு காலணா போட்டு கொடும்மா. உன் கை ராசி''
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. முக்காலணா தான்'' அம்மா பேரம் பேசுகிறாள்.
'' சரிம்மா மேலே ஒரு காலணா போட்டு கொடும்மா. உன் கை ராசி''
"சொன்னா சொன்னது தான் பட்டு. மேலே கீழே எதுவுமே கிடையாது. நாலு கட்டுக்கு மொத்தம் மூணு அணா தான் தருவேன்.முடிஞ்சா கொடு இல்லேன்னா போம்மா''
கீரைக்காரி பட்டு கொஞ்சம் பேசாமல் யோசித்தாள் " உன் கை தாம்மா போணி ...சரிம்மா உன் இஷ்டம்" என்று சொல்லி பெரிய திண்ணையில் ஓரத்தில் நாலு கீரை கட்டு வைத்தவள் மூணு அணாவை வாங்கி
சுருக்குப் பையில் போட்டு கூடையில் வைத்தவள் திரும்ப கூடையை தூக்கி தலையில் வைத்துக் கொள்ள முயன்று திண்ணையில் குப்புற சரிந்தாள் ''
''என்னடி பட்டு என்ன ஆச்சு உனக்கு....''
அம்மா வந்து அவளை தூக்கி திண்ணையில் உட்கார வைத்தாள்
''பசிம்மா....
''காலையிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலேயா நீ ?''
''இல்லேம்மா. ஊட்டுக்கு போய் தான் கஞ்சி காச்சணும்''
"சரி. உட்காரு . இதோ வர்றேன்."
அம்மா உள்ளே சென்று ஒரு வாழை இலை யில் ஆறு சூடான இட்லியும், தேங்காய் சட்னியோடும் வந்தாள். " ''இந்தா சாப்டுட்டு போ"
கீரைக்காரி சாப்பிட்டு முடித்து ''அம்மா நீ மவ ராசியா இருக்கோணும் '' என்று வாழ்த்தி விட்டு சென்றாள் .
இதெல்லாம் குட்டி திண்ணையில் இருந்து பேப்பரை தூக்கிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த அப்பா
''ஏண்டி ஒரு காலணாவுக்கு இவ்வளவு பேரம் அவளோடு பேசினே, ஒரு இட்லி அரையணான்னு வச்சிண்டா கூட ஆறு இட்லிக்கு மூணணா எப்படி உட்டுக் கொடுத்தே'' என்று கேட்டார்.
''ஆமான்னா ... அது வேறே இது வேறே.. வியாபாரத்துல தர்மம் பார்க்க படாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க படாதும் பா. உங்களுக்கு தெரியாததா....'' என்றாள்
No comments:
Post a Comment