ஒரு அதிசய ராஜா. - நங்கநல்லூர் J K SIVAN
மகரிஷி ரமணருக்கு ரொம்ப பிடித்த ஒரு நூல் யோக வாசிஷ்டம். அதில் பகீரதனைப் பற்றி ஒரு சமாசாரம்.
ராஜ்ய பாரம் வேண்டாம் என்று துறவியாகி பகீரதன் ஆத்ம விசாரம் செய்ய காட்டுக்குப் போகும்போது தனது
சொத்து, நகை, உடைமைகள் சகலத்தையும் தானமளித்து எனக்கு ராஜ்யமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்கிறான். வேண்டும் என்பவர்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம்.'' என்றான். ஆனால் எவருமே அவன் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை. அவனை மாதிரி நேர்மையாக யார் ஆள முடியும் ? பகீரதன் என்ன செய்வது என்று யோசித்து ஒரு எதிரி நாட்டரசனை அழைக்கிறான்.
'அப்பனே, நீ பல முறை விரும்பிய எனது ராஜ்யத்தை சண்டை போடாமலேயே எடுத்துக் கொள், நானே உனக்கு மனமுவந்து தருகிறேன்'' என்கிறான். தானாக வரும் ராஜ்ய லக்ஷ்மியை அந்த ராஜா வேண்டாம் என்பானா? அவன் ராஜாவாகி விட அவனிடம் பகீரதன் பிக்ஷை வாங்கிக்கொண்டு காட்டுக்குச் செல்கிறான்.
பகீரதன் அன்றாடம் உஞ்சவிருத்தி எடுத்து அதில் கிடைப்பதை உண்டு காட்டில் ஆத்ம விசாரத்தில் (ஆத்ம ஜிஞ்ஞாஸம் ) முழுகினான். ஊர் ஊராக சென்று பிக்ஷையில் வாழ்ந்தான்.
ஒருநாள் எங்கோ ஒரு தேசத்தில் அந்த ஊர்க்காரர்கள் பகீரதனை ராஜாவாக்கு கிறார்கள். வேறுவழியின்றி அந்த நாட்டுக்கு ராஜாவாகிறான். நாடு நாடாக சென்றான். ஒரு நாள் தனது நாட்டுக்கே திரும்பி வருகிறான்.
அவனது அரண்மனையின் பழைய விசுவாசமான ஒரு சேவகன் பகீரதனை அடையாளம் கண்டு கொண்டு ஓடிப்போய் மந்திரிகளிடம் சொல்கிறான். அப்போது பகீரதன் நாட்டை ஆண்டு கொண்டு வந்த அரசன் இறந்து போய் வேறு ஒரு புது ராஜாவை நியமிக்க யோசித்துக் கொண்டிருந்த மந்திரிகளுக்கு சேவகன் சொன்ன சேதி தேனாக காதில் இனிக்க அவர்கள் ஓடி வந்து பகீரதனையே திரும்ப ராஜாவாக்கி விடுகிறார்கள். நாட்டு மக்களும் ''ஆஹா பகீரதன் ஒருவனே சரியான நல்ல ராஜா. நமது பழைய நல்ல ராஜாவே கிடைத்துவிட்டார்'' என்று வரவேற்கிறார்கள். வேறுவழியின்றி பகீரதன் ராஜ்யபாரம் திரும்ப ஏற்றுக்கொள்கிறான்.
தாமரை இலைத் தண்ணீராக சுயநலம் இன்றி பொதுநலம் கருதிய ராஜாவாக ஞானி பகீரதன் ஆட்சியில் எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கிறார்கள்''.
இப்படி ஒரு ராஜா நம்மை ஆள நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?
No comments:
Post a Comment