Thursday, November 17, 2022

MADURAI MEENAKSHI




 மதுரை அரசாளும்  மீனாக்ஷி  -#நங்கநல்லூர்_J_K_SIVAN


இன்று விடியற்காலை  நாலு மணி.  வாசலில் மழை இருக்கிறதா என்று பார்க்க தலையை நீட்டினேன். சில்லென்று காற்று. மழை இல்லை.  கரெண்ட் இல்லை.  அரை இருட்டு இல்லை, முக்கால் இருட்டு.  எங்கோ எதிர் வீட்டில் முணுக் முணுக்  என்று விளக்கு. டேப் ரெகார் டரா அல்லது மொபைல் பெரிசாக பாடுகிறதா?  மதுரை சோமுவின் குரல்  ''மதுரை அரசாளும்  மீனாக்ஷி....'' அற்புத  ஆலாபனையோடு  காதில் லேசாக கேட்டது. பரவாயில்லை  84ல்  காது இன்னும் கேட்கிறதே. தேங்க்ஸ் கிருஷ்ணா. 

இன்று வெள்ளிக்கிழமை. மீனாக்ஷியைப்  பற்றி நாலு வரி எழுதேண்டா .....
உள்ளேயிருந்து கட்டளை. தூக்கம் அப்புறம் வராததால்  கம்ப்யூட்டர் முன்னால் ... இதோ  மீனாக்ஷி ....

மதுரை மீனாக்ஷி தூங்கா நகரத்தின்  தாய். எண்ணற்ற ஹிந்து பக்தர்கள் தரிசித்து மகிழும் அன்னை பராசக்
தி. அவள்சாதாரணமானவளா?  ஹிந்துக்களுக்கு மட்டும் அருள்பவளா?  இல்லை என்கிறது சரித்திர நிகழ்ச்சி ஒன்று. நிஜமாக நடந்த ஒரு சம்பவம். சொல்கிறேன் கேளுங்கள்.

கிட்டத்தட்ட  200  வருஷங்களுக்கு  முன்பு  கிழக்கிந்திய கம்பனி,  வெள்ளைக்காரன் ஆட்சியில்  மதுரைக்கு  கலெக்டராக இருந்தவர் ரோஸ் பீட்டர் என்பவர். (1812 -1828.  எல்லா வெள்ளைக்காரர்களையும்  போலவே அவருக்கும்  ஒரு  ஆச்சர்யம்.    எதற்கு இந்த  முட்டாள்  ஹிந்து மக்கள்    ஒரு கருங்கல்லை   மீனாக்ஷி  எனும் தெய்வமாக இப்படி விழுந்து விழுந்து வழிபடுகிறார் கள்!?  அந்த கருங்கல்லில் அப்படி என்ன சக்தி இருக்கிறது?  நிச்சயம் ஏதோ இருக்கணும். இல்லையென்றால் இத்தனை பேரும் முட்டாள்களா?
வெள்ளைக்கார  கலெக்டர்  கோவிலுக்குள் போகவோ   மீனாக்ஷியை பார்க்கவோ  அனுமதி இல்லை ஹிந்துக்
கள் மட்டுமே   ஆலயத்திற்குள் நுழையலாம்.  பிற மதத்தினரும் இதை மதித்தார்கள்.

மீனாக்ஷி  ஆலயத்துக்கு நேர் எதிரே  தான்   கலெக்டர் மாளிகை. கிருத்துவராக இருந்தும் ரோஸ் பீட்டருக்கு நாளாக நாளாக மதுரை மீனாக்ஷி  மேல்  ஒரு தனி மதிப்பு மரியாதை வளர்ந்தது.   ஏதோ ஒரு சக்தி அவளி டம் இருப்பதை  உணர்ந்தார். தனது அறையில் மீனாக்ஷி  உருவப்படம் வைத்திருந்தார். மீனாக்ஷி ஆலயம் அவர் கட்டுப்பாட்டில்  தான் இருந்தது.  தினமும்   குதிரையின் மீது பிரயாணம் செய்தவாறு கோவிலைச் சுற்றி வருவார். ஆலய நிர்வாகம் ஒழுங்காக நடப்பதில்  பிரத்யேகமாக  கவனம் செலுத்தினார்.

மழைக்கால சமயம் ஒருமுறை  இரவில் வெகுநேரம்   கனத்த  மழை  விடாமல் பெய்தது.  செவிடாக்கும்  இடி  இடித்து ஜோ  என்று வானமே பிளந்தது போல் 3 நாள்  விடாமல் பொழிந்தது.  மதுரை  நீரில் நிரம்பி  மிதக்க ஆரம்பித்து விட்டது.  அன்று இரவு  மழை  விடவில்லை.  கலெக்டர்  தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.  திடீரென்று  தூக்கம் கலைந்தது.  யாரோ அவரை எழுப்பி கையைப் பிடித்து  இழுத்து  ''வா வெளியே ''  என்று தள்ளிக்கொண்டு  போனது கனவா நினைவா ? 

 ரோபோ  போல  பீட்டர் ரோஸ்  வெளியே நடந்தார்.  கையைப்பிடித்து அழைத்து, இல்லை,  இழுத்துச்  சென்ற பெண் யார்?. ஐந்து வயதுக்குள்  இருக்கும் போல் இருக்கிறதே.  அதற்கா என்னை பிடித்து இழுக்கும் பலம்?  எதற்கு என்னை எழுப்பி வெளியே கொண்டு செல்கிறாள்?   காரிருளில் கொட்டும் மழையில் பேசாமல்  அவள் பின்னால் வெளியே   நடந்தார் பீட்டர் ரோஸ்.

வெளியே  காவலில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம் . கவலை.  எதற்கு கலெக்டர் தனியே இரவில் எழுந்து வெளியே நடக்கிறார். அரைத்  தூக்கம் போல் இருக்கிறதே அவரைப்பார்த்தால். தூக்கத்தில் நடக்கும் வியாதியோ?

ரோஸ்  தனது  வீட்டிலிருந்து  வெளியே வந்த  அடுத்த சில வினாடிகளில்   காரிருளில் பளீர் பளீர்  என்று  கண்ணைப் பறிக்கும் மின்னல் கீற்றுகளை தொடர்ந்து  எதிர்பாராதபடி  காதைப்  பொடிபட வைக்கும் இடி சப்தம்.  அவர் வசித்த ;பழைய மாளிகை, அதுவும் அவர் படுத்திருந்த  அறை மீது பெரும் இடி விழுந்து   நொறுங் கி விழுந்ததை  தனது  கண்ணாலேயே பார்த்தார்.  அப்போதுதான் கலெக்டருக்கு சுய நினைவு வந்தது.   உடல் நடுங்கியது. அந்த  குளிர் இரவிலும் உடல் வியர்த்தது. பேச்சு வரவில்லை.திரும்பிப் பார்த்தார். தனது மாளிகை இடிந்து விழுந்திருந்தது.

எங்கே அந்த பெண்?  அழகிய அந்த பெண் யார்? அவர் பார்த்த  பொழுது அவள்  காலிலே ஒன்றும் அணிய வில்லை.  நேராக  கோவிலை நோக்கி உள்ளே ஓடினாள். மூடியிருந்த கோவில் கதவுக்குள் எப்படி நுழைந்தாள்?  எங்குமே தேடியும் அவளைக் காணோம். நிசப்த நள்ளிர வில் எங்கே ஒரு சிறு பெண் ஓடி கண்ணெதிரே மறைய முடியும்? ஹிந்துக்கள் கோவிலில் காலணி அணிந்து கொண்டு உள்ளே செல்ல மாட்டார்களே'. 

ஏதோ பிரமையில் இருந்த கலெக்டர் இன்னும்  சுதாரித் துக் கொள்ளவில்லை.  அதிசயமாக  தானாகவே இருளில் அறையில் இருந்து வெளியே வந்து உயிர் தப்பிய அவரை  எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள்.  என்ன நடந்தது?

''அழகான ஒரு  சிறு பெண்.  நான்கு ஐந்து வயது  குழந்தை. சிரித்த முகம். ஆஹா  என்ன அழகு.  கண் ணைப் பறிக்கும் ஆபரணங்கள் பளிச்சென்று அணிந்தவள். பாசமாக என்னை பார்த்தவள் ''பீட்டர் எழுந்திரு  உடனே. என்று என்னை தூக்கத்திலிருந்து  உலுக்கி எழுப்பி வா என் பின்னே''  என்று  என் கைக ளை பிடித்து  இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள் . பலமுறை யோசித்தேன். அவள் வேறு யாரா கவும் இருக்க முடியாது. நிச்சயம்  எதிரே கோவிலில் நீங்கள் கும்பிடுகிற  அந்த  மதுரை மீனாக்ஷி அம்பாள் தான். எனக்கு சந்தேகமே இல்லை. ஏன் என்றால்   நான் என்  அறையில் அவள் படத்தில் பார்த்தது போலவே இருந்தது அவள் முகம்.    எனக்கு ஒன்றும்  தோன்றாமல்  ஏதோ ஒரு சக்தி என்னை ஆக்ரமிக்க   நானும் அந்த பெண் உருவத்தின்  பின்னால்  தூக்கம் கலைந்து சென்றேன்''  
ரோஸ் மீனாக்ஷி அம்மன் படத்தை பல முறை பார்த்து அவள் சக்தியைப் பற்றி  வியந்தவர் அல்லவா.  ஆம்  அந்த பெண் குழந்தை நிச்சயம்  என் மனதில் எப்போ தும் இருந்த   உங்கள் மதுரை கடவுள் மீனாக்ஷியே தான் ''  இந்த அதிசய சம்பவம் உண்மை. மதுரை ஆலய சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.

மழை நின்றது. மறுபடியும் மதுரை பழைய இயல்பு  நிலைக்கு தயாரானது.  பீட்டர் ரோஸ் மனதில் ஒரு எண்ணம்.  ''என்னைக் கைபிடித்து வெளியே  இழுத்து, நொறுங்கிய பழைய மாளிகை சிதிலத்தில் இருந்து உயிர்  காப்பாற்றிய அம்பிகைக்கு நான் நன்றி காணிக்கை ஏதாவது உடனே செய்ய வேண்டும்.''

கோவில் நிர்வாகத்தினரை  அழைத்தார்.  ''உங்கள் மீனாட்சி அம்பாளுக்கு எந்த நகை ஆபணம்  இல்லை யோ, தேவையோ, அதை என்னிடம் சொல்லுங்கள். நான் உடனே  அதைச் செய்து  என்  காணிக்கையாக அளிக்க  விரும்புகிறேன்';'

''அம்பாள் மீனாக்ஷி சர்வாலங்கார சர்வாபரண பூஷிதை. எல்லாமே இருக்கிறது, எதுவும் வேண்டாம்''

''இல்லை ஏதாவது ஒன்று நான் செய்து தந்தே ஆக வேண்டும். நீங்களும் அதை அவளுக்காக  பெற்றுக் கொள்ள வேண்டும் . அது எது என்ன என்று நீங்கள் கலந்து ஆலோசித்து உடனே சொல்லுங்கள். இது என் அன்புக்கட்டளை.''

யோசித்த ஆலய நிர்வாகிகள் ''கலெக்டர் அவர்களே,  எங்கள் மீனாக்ஷி  அம்பிகைக்கு ஒரு காலணி  ஜோடி செய்து  தாருங்கள்'' என்றனர்.

''மிக்க மகிழ்ச்சி,  ஆஹா, நானும் அதையே தான் நினைத்தேன்.  அந்த பெண் அன்றிறவு காலில் எதுவும் அணியாமல் தான் கோவிலுக்குள் ஓடினாள். உடனே ஏற்பாடு செய்கிறேன்''

கலெக்டர் பீட்டர் ரோஸ், தங்கத்தால் இரண்டு  கொலுசு காலணி செய்தார்.  அதில் 412 பவளங்களும், 72 மரகதக் கற்கள் – 80 வைரக்கற்கள் பொருத்தி – அதில் “”பீட்டர்”” என்று  பெயர் பதித்து காணிக்கையாக கொடுத்தார்.  இந்த  கொலுசு  காலணி இன்றும் “”சித்திரைத்  திரு விழா”” காலத்தில்  அம்பாள் மீனாக்ஷிக்கு அணிவிக் கிறார்கள். பீட்டர் ரோஸ் வெள்ளைக்காரர்  என்றாலும் மதுரை மக்கள், பக்தர்கள் அவரை பீட்டர் பாண்டியன் என்று தான் அன்போடு அழைத்தார்கள்.

சித்திரை திருவிழாவில் ஐந்தாம் நாள் அம்பாள் குதிரை வாகனத்தில்  மதுரை பிரதான வீதி ஊர்வலத்தில் வரும்போது இதை அணிவாள். எல்லோரும் பார்க்கலாம்.

பீட்டர் ரோஸ் மீனாக்ஷி பக்தர் என்பதில் சந்தேகமே இல்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில்  வேட்டையாட செல்லும்போது ஒரு காட்டு   யானை அவரைத்  தாக்கி அவர் தனியே  வசமாக அதனிடம் அகப்பட்டுக்கொண்ட போது ''அம்மா மீனாக்ஷி  என்னை காப்பாற்று''  என்று வேண்ட அவரிடம் இருந்த துப்பாக்கியில் இருந்த ஒரே குண்டால்  யானையை படுகாயம்  அடையச் செய்து ஓடச் செய்தார். உயிர் தப்பினார்.

பதவி காலம் முடிந்து பீட்டர் ரோஸ் மற்றவர்களைப்  போல் இங்கிலாந்து திரும்பவில்லை.  

''என்னை  இங்கே மதுரையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் புதைத்து விடுங்கள்''

 இந்த சர்ச்  மெயின் கார்டு சதுக்கத்தில் இன்றும் உள்ள து. அவரது கல்லறை மதுரை மீனாட்சி ஆலயத்தை பார்த்தவாறு தான் இருக்கிறது.  உண்மையான பக்திக்கு மதம் என்றும் தடையாக இருந்ததில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...