Sunday, June 23, 2019

yathra vibaram


யாத்ரா விபரம்   J K SIVAN 
                                                             
                       ஐந்து மயானங்களில்  இது ஒன்று 

ஆயிற்று.  வருஷங்கள் பத்துக்கு மேல் ஓடிவிட்டது.  ஆனாலும்  மனதில்  அந்த ஆலயத்துக்கு சென்று வந்தது பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது.  எத்தனைபேர்  திருக்கடையூர் சென்றவர்கள் அதன் அருகே ஒரு ரெண்டு கி. மீ.தூரத்தில்  இருக்கும் மயானம் சிவாலயம் சென்றிருக்கிறீர்கள்?  ஆச்சர்யமாக இருக்கும்,  என்ன  இந்த ஆள்  மயானத்துக்கு போகச் சொல்கிறானே. நாமே எப்படி மயானம் போகமுடியும்?. நாலு  பேர்  அல்லவா வேண்டும், ( நம்மை சேர்க்காமல்).   நாம் தான் இல்லாமல் போய்விடுவோமே!   இப்படி  யோசிக்கும் முன்பு நானே சொல்லி விடுகிறேன் .   ''அந்த''  மயானம்  இல்லை இது.  மெய்ஞ்ஞானம் மயானம் ஆன கதை. மயிலாடு துறையிலிருந்து காரைக்கால் போகும் வழியில் 22கி.மீ. தூரம் 


மூலவர்  ஸ்வயம்பு லிங்கம்.   சிவன் பெயர்  ஸ்ரீ ப்ரம்மபுரீஸ்வரர். அம்பாள் பெயர் ஸ்ரீ நிமலகுஜாம்பாள். வாடாமுலை அம்மன்.  மலர்  குழல் மின்னம்மை. சுந்தரர், சம்பந்தர், அப்பர்  தரிசித்து தேவார பதிகங்கள் இயற்றிய  க்ஷேத்ரம். 276 பாடல் பெற்ற  காவிரி தென்கரை ஸ்தலங்களில் ஒன்று.  55 மேற்கு பார்த்த சிவ ஸ்தலங்களில் ஒன்று. ராஜகோபுரம் இல்லை. பிரம்மாவை  கர்ப்பத்துக்கு ஒன்றாக ஐந்து கர்பங்களில்   மொத்தம் ஐந்து ப்ரம்மாக்களை படைத்தார் சிவன்.  எத்தனையோ லக்ஷம் வருஷங்கள்  கொண்டது ஒரு  கர் பம்.  இப்படி சிவன் படைத்த ஒவ்வொரு ப்ரம்மா  குடிகொண்டிருக்கும் இடம் தான் மயானம். ஐந்து மயானங்கள்.    அவை  காசி மயானம், கச்சி(காஞ்சி புரம்)  மயானம், திருக்கடவூர் மயானம், காழி மயானம் (சீர் காழி)  வீழி நாலூர் மயானம்.  சரித்திரத்தில் இந்த ஊர் பிரம்மபுரி,  வில்வாரண்யம், சிவ வேதபுரி, திருமெய்ஞ்ஞானம்.  இதில் நான்  சொல்வது திருக்கடவூர் மயானம்.

 ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயீர் வழங்க வேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்கண்டேயருக்காக  சிவன் கங்கை நீர் உருவாக்கியதால் இங்கிருந்து தினமும் அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக ஜலம் கொண்டு செல்லப்படுகிறது.  மற்ற மூர்த்திகளுக்கு இந்த ஜலத்தால் அபிஷேகம் கிடையாது.

கோயிலின் வட புற நுழைவாயிலில் உள்ள  கொன்றை மரம் ஸ்தல விருக்ஷம்.  தென் புறத்தில் கோயிலின் குளமான பிரம்ம தீர்த்தம் உள்ளது.  பலி பீடமும் நந்தியை  அடுத்து  முன்மண்டபம் உள்ளது. மூலவர் சன்னதியின் வட புறத்தில் தென் முகமாக சிங்காரவேலர் சன்னதி.  சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்த கோலம்.  இந்த மண்டபத்தை  அடுத்து மூலவர் சன்னதிக்கு  முன்பாக நந்தியும், பலிபீடமும்.  வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள்,  கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, பைரவர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர். திருச்சுற்றில் பைரவர், காசி விசுவநாதர், நால்வர் ஆகியோர் உள்ளனர். சூரியன் உள் திருச்சுற்றின் கீழ் புறத்தில் மேற்கு முகமாக உள்ளார். சண்டிகேஸ்வரர் உள் திருச்சுற்றில் தனிச் சன்னதியில் உள்ளார். விநாயகர் சன்னதி திருச்சுற்றில் உள்ளது. அம்பாள், சுவாமி சன்னதிக்கு எதிர்ப் புறமாக கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.

இந்த ஆலயத்தில் முருகனுக்கு ருத்ராக்ஷ மாலை. காலுக்கு பாதரக்ஷை, கையில் வில்  அம்பு.  சோழ அரசன் ஒருவனுக்காக முருகன், சிங்காரவேலன், அரசன் வேஷத்தில் சென்று  அவன்  எதிரிகளை கொன்று ஜெயித்ததால் அரசன் நிறைய நிலங்களை மான்யம் விட்டான். அவை சிங்காரவேலி நிலம் எனப்படுகிறது. 

ஆலயத்தின் மேற்குப் பிரகாத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார்.  
இந்த ஆலய பிரணவ விநாயகருக்கு தொப்பை கிடையாது. . இந்த ஊரில் தான் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்தார்.

கடவூர் மயானம் ஆலய சிவன் மீது சில தேவார பதிகங்கள். ஒன்றிரண்டு  மாதிரிக்கு தருகிறேன். இதை எழுத முயன்றால் சில நாட்கள் பிடிக்கும்.

வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

மங்கைமணந்த மார்பர் மழுவாள் வலனொன்றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார்  கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.

"பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே  

நாங்கள் இந்த ஆலயத்திற்கு சென்றபோது, கோவிந்தராஜன் என்ற ஒரு ஓதுவாரை பார்த்தேன்.   எழுவயத்திலிருந்து இந்த கோவிலின் நிழலாக  அங்கே இருப்பவர்.  வயதே தெரியாத ஒரு  முகம், உடல் , பூக்கட்டும் திருப்பணி செய்பவர். கடவூர் மயான ஆலய விஷயங்கள் அனைத்தும் பாடம். கதைகள் பாடல்கள் அற்புதமான குரலில் வசீகரித்தது.  கணீர் என்ற உச்சஸ்தாயி யில்  அந்தக்கரண சுத்தியோடு  பாடல் அர்த்தபாவத்துடன் பாடினது இன்னும் நினைவிருக்கிறது.  என் மேல் துண்டை விரித்து  பணம் கலெக்ட் பண்ணி அவருக்கு அளித்தேன். எப்படியும்  400ரூபாய்க்கு மேல் பத்து வருஷத்துக்கு முன்னால் சேர்ந்தது என்றால் பாருங்கள்.

காலை   06:30 AM to 12:00 உச்சி காலம், மறுபடியும் மாலை 04:00 PM to 07:30 PM. ஆலயம்   திறந்திருக்கும்.












No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...