Wednesday, June 19, 2019

SANT MEERA



                 கண் அவன்  கணவன்-  J K SIVAN 


இந்தியா முழுதும் எண்ணற்ற மக்கள் எண்ணிலா மொழிகளில், வித வித கலாச்சாரங்களில் வாழ்ந்து  வந்தாலும் அனைவர் மனத்திலும் வித்தியாசமின்றி உலவும் ஒரு தெய்வம் தான் கிருஷ்ணன். குழந்தை முதல் கிழவர் வரை அவனுக்கு  பக்தர்கள்.  ஒரு  வடநாட்டு குழந்தை பக்தையைப்  பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.

அந்த குழந்தையின் வயது ஐந்து.   நிறைய  வாய் ஓயாமல் பேசும் சூட்டிகையான பெண்.   ஒருநாள் வீட்டு வாசலில்  வெளியே ஊர்வலம் வருவதை பார்த்து  கேட்டது

“இது என்னம்மா?”.

கல்யாண  ஊர்வலம் டீ  கண்ணு!”

“அவன் யாருமா  நடுவிலே  குதிரை மேலே  தலப்பா  கட்டிண்டு?”.

“அது  தான்  மாப்பிள்ளை. அவன்  தான் அதோ அவன் பக்கத்திலே ஒரு பல்லக்கில் வருதே  அந்த சின்ன பெண்ணுக்கு  கணவன்”.
 
''கல்யாணம் என்றால் இப்படி குதிரை மேலே  மாலை போட்டுக்கொண்டு, கலர் கலரா  டிரஸ் பண்ணிக்கொண்டு  பல்லக்கில்  நிறைய நகையோடு உட்கார்ந்து கொள்வதா?''

''ஆமாம்'' 
      
“ அப்போ எனக்கும் அப்படி  கல்யாணம்  பண்ணுவியா?”

“ ஆமாம்  தடபுடலா”

“அப்போ எனக்கு  யாரு  கணவன்?”

“வா  காட்றேன்.”      அம்மா  குழந்தையை கை பிடித்து  அருகே இருந்த  பூஜை பக்கம் போனாள் . அவள் கண்ணில்  பூஜா அறையில்  கிருஷ்ணனின்  படம் தென்பட்டது.   சிரித்தாள். பிறகு விளையாட்டாக சொன்னாள் .

“இதோ  இவன் தான் உனக்கு  கணவன்”

குழந்தை அந்த வார்த்தையை கெட்டியாக பிடித்துகொண்டாள்  மீரா.  எரியும்  விளக்குக்கு  எண்ணையும் கிடைத்தது. எத்தனை ஜென்மமாக  காத்துக்கொண்டிருந்தாளோ  இந்த  வாய்ப்புக்கு. கிருஷ்ணனை மனதில் பதிய வைத்துக் கொண்டது அந்த குழந்தை. கல்யாணம், காதல், எதுவுமே தெரியாத, அறியாத ஐந்து வயது குழந்தை. காரணம் புரியாமலே கண்ணனை பிடித்துவிட்டது அவளுக்கு. இனி அவளிடமிருந்து அவனுக்கு விடுதலை கிடையாது. 

 தெருவில் ஒருநாள்  ஒரு  பொம்மை  விற்பவன்  ''பொம்மையோ  பொம்மை'' என்று  கத்திக்கொண்டே சென்றான்.  அவன் தலையில் கூடையில் நிறைய  கலர் பூசிய பொம்மைகள்.  ஒரு சின்ன  அழகிய  கிருஷ்ணன்  பொம்மையை  அவன் கூடையில்  வைத்திருப்பதை  பார்த்து விட்டு  அதை வாங்கினால் தான் விடுவேன்  என்று அடம் பிடித்து  அதை வாங்கியது குழந்தை.  ஆமாம்,  தன்  உயிர் போகும்  வரை வைத்திருந்தாள் குழந்தை என்று நாம் அறியும் மீரா.  அவள்  மூச்சு,  பேச்சு  எல்லாமே  கிருஷ்ணன்  தான்.

விளையாட்டு  வினையாக  போய்விட்டதே என்று  பெற்றோருக்கு  கவலை  அரித்து தின்றது.  பேசாமல் ஒரு  ராஜகுமாரனுக்கு அவளை கல்யாணம் செய்து வைத்தனர்  பேருக்கு  தான்  கல்யாணம்  அவளை  ஆக்ரமித்தவன்  கிருஷ்ணனே.  அவளை  எல்லோரும்  ஒரு இளம்  சன்யாசினியாகவே  கண்டனர்.  இருபது வயதுக்குள்ளேயே  அவள்  தனியள் ஆனால்.  அவள்  கணவன் ஒரு  போரில்  மாண்டான். மீராவின் உலகில் ஒரே  ஜீவன் தான்.    அது  கிருஷ்ணன்.  வீட்டை   விட்டு  தெருவுக்கு சென்று விட்டாள் மீரா.  கண்ணன் மீது மட்டற்ற காதல் அவளை  அவன்  கோபியாகவே மாற்றியது. கண்ணனை நினைத்து  இரவும்  பகலும்  ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம். பக்தர்களும்  ஆவலுடன் சேர்ந்து கொள்ள  அவளது ராஜ வம்ச குடும்பம்  எதிர்த்தது. அவளைக் கொல்ல  விஷம்  வைத்தார்கள்.  
அவள் குடித்த  விஷத்தை  அம்ருதமாக  மாற்றினான்  கிருஷ்ணன்.  அவதூறு பேசினார்கள்.  எதற்கும்  மசியவில்லை  அவள் மாசற்ற காதல்.  படுக்கையில்  கூரான  விஷம் தோய்ந்த  ஆணிகள்.  அவை அனைத்தையும் ரோஜா                இதழ்களாக  மாற்றினான் கிருஷ்ணன்.    “இந்தா கிருஷ்ணனுக்கு பூ” என்று ஒருநாள்  ஒரு கிழவி மூலம் 
அவளைக் கொல்ல   பூக் குடலையில்  கருநாகம்  வைத்து  தந்தார்கள்.   கைவிட்டு  எடுத்தாள்  மீரா அதை.   நாகம்  மல்லிகை  மாலையாயிற்று

“நீங்கள் மிக பிரசித்த கிருஷ்ண பக்தர்  உங்கள் வாயிலிருந்து  கண்ணன்  பெருமையை   கேட்க ஆசையாய் இருக்கிறது” என்று  மீரா சந்நியாசி ஒரு சைதன்யரின் சிஷ்யர் ரூபா  கோஸ்வாமியை வேண்டினாள்.   கோஸ்வாமி என்ன  சொன்னார்:  “நான்  பெண்களை  பார்ப்பதில்லை  பேசுவதில்லை.”
நீ போய்வா அம்மா''
“ஐயா  இந்த பிரபஞ்சத்தில் புருஷர்கள் யாருமே  இல்லையே.  இருப்பது  ஒரே  ஒரு  புருஷன் கிருஷ்ணன்  தானே, நாம் அனைவருமே அவன் அடிமைகள் தானே” .  மீரா அமைதியாக பதிலளித்தாள்.

பிறகு என்ன?  கோஸ்வாமி  ஓடிவந்து  மீராவின்  காலடியில்  சரணடைந்தார்.  ஊர்  ஊராக  பாடிக்
கொண்டே   ஆடிக்கொண்டே  மீரா  காசிக்கு சென்று  கபீர்  தாசுடன் சேர்ந்து  கிருஷ்ண பஜன்  செய்தாள்.

நேரமாகி விட்டது.  காதலின்  உச்சகட்டம்  வந்து விட்டது. கிரு ஷ்ணனுக்காகவே வாழ்வை அர்பணித்து எண்ணற்ற பக்திபாடல்களை கர்ணாம்ருதமாக வழங்கி விட்டு  துவாரகையில் எல்லாரும்  பார்க்க  மீரா  கிருஷ்ணனோடு கலந்தாள்

இறைவனோடு  கூடிய  வாழ்க்கைக்கு  ஈடு உண்டா. இன்று காலை  தண்ணீர் இல்லாமல்  வீட்டில் கஷ்டம். இதோ இதோ என்று தண்ணீர் தர வாக்களித்தவர்கள் இன்னும் வழி தெரியாமல் தேடுகிறார்களோ? இன்னும்  வரவில்லை.   மொத்தம் 6 பக்கெட் தண்ணீர் தான் இந்த பரந்தவுலகில் நான்  போற்றி  பாதுக்காக்கும் சேமிப்பு. பொக்கிஷம்.  அடுத்த பக்கெட் எங்கிருந்து வருமோ? . கிருஷ்ணனுக்கு தான் தெரியும்.  சென்னையில் அநேகர் நிலை  இது  தான் இன்று.  இன்று மழை வரும் என்று தினமும் சொல்கிறார்கள். வானம் பொய்க்கிறதா. பத்திரிகை செய்தி புளுகா  என்று சோதிக்க நேரம் இல்லையா  ஆர்வம் இல்லையா?.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...