பொய் சொன்ன வாய்க்கு தான் போஜனம் - ஜே கே சிவன்
நான் பொய் பேசியதே இல்லை என்று சொன்னால் அது தான் நான் சொன்ன பொய்களிலேயே கொள்ளு தாத்தா. வெள்ளைப் பொய் என்பார்கள் ஆங்கிலத்தில் WHITE LIES, அதால் எவருக்கும் தீங்கு உண்டாகாது. நல்லது வேணுமானால் நடக்கலாம். பொய் பேசாத ராஜா ஹரிச்சந்திரன் படாத பாடு பட்டான் என்று படித்திருக்கிறேன். காந்திஜி பள்ளிக்கூடத்தில் பொய் பேச மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். பொய்சொல்லாத கவிஞனோ எழுத்தாளனோ, கதாசிரியனோ என்னையும் சேர்த்து எவனும் இல்லை. பொய் அதிகம் சொல்லி, சொல்ல வைத்து, பிழைப்பவர்கள் கருப்பு கோட்டுக்காரர்கள். பொய் சத்தியம், வாக்கு சொல்லி ஜெயித்து சுகமான வாழ்க்கை வாழ்பவர்கள் அரசியல்வாதிகள். பொய்சொல்லி மனைவியிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் ரெண்டும் கெட்டான்கள் நம் ஊரில் மட்டும் அல்ல, தேசத்திலும் அதிகம். பொய் எந்த மொழியில் பேசினால் என்ன? விளைவு தானே முக்கியம்.
அண்டப்புளுகன் ஆகாசப் புளுகன் என்ற பேர் பெற்ற கோயபெல்ஸ் ஹிட்லரின் முக்கிய பிரச்சார மந்திரி. முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது கெட்டிக்கார பொய் மாஸ்டர்களுக்கு தான் முடியும். ''பொய் சொன்னாலும் பொருந்த சொல்'' என்கிற வாசகமே அவர்களால் உண்டானதாக இருக்கலாம்.
ஆண்களை விட பெண்கள் பொய் அதிகம் சொல்வார்கள் என்று எவனோ ஒரு வெள்ளைக்காரன் நிறைய ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருக்கிறான். இந்த மாயை நிரம்பிய உலகத்தில் பொய் பிராணவாயு.
தில்லு முல்லு என்ற படத்தில் ரஜனி குட்டி புளுகுகள், அம்மா புளுகு என்று நிறைய பொய் சொல்வார். அதை பார்த்து ரசிக்காத தமிழனே இல்லை எனலாம். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடித்து வைக்கலாம் என்று பழைய காலத்தில் நம்பியவர்கள் ஒரு பொய் சொல்ல்லமுடிந்தாலும் கல்யாணங்களை முறிக்கும் காலம் இது.
காயமே பொய்யடா காத்தடித்த பையடா என்று வேதாந்திகள் தாடிக்கார ஞானிகள் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு பொய் சம்பந்தப்பட்ட கதை சொல்லி நிறுத்துகிறேன்.
சாமண்ணா பொய் பேசமாட்டான். உண்மை தவிர வேறொன்றுமில்லை ஆசாமி. அவன் பொய் பேசாததை ஊர் கண்ணால் கண்டது. காதால் கேட்டது. விஷயம் ஊர் ராஜா மார்த்தாண்டனுக்கு சென்றது.''பொய்சொல்லாதவன் எவனுமே கிடையாது'' என்பது ராஜாவின் வாதம். அவன் சாமண்ணாவை எப்படியாவது பொய்யன் என்று ஒரு தடவை நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
சாமண்ணாவை அழைத்தான் ராஜா. அவன் எதிரே கைகைட்டி நின்றான் சாமண்ணா.
சாமண்ணா ஒரு சாதாரண எளிமையான மனிதன் என்று தீர்மானித்தான் ராஜா.
'' என்னப்பா நீ பொய்யே பேசமாட்டியாமே, அப்படியா?'' என்றான் ராஜா.
''நான் என்ன சொல்றதுங்க. நீங்க என்ன சொல்றீங்கன்னு சரியா புரியலீங்க''
''அதான்பா, நீ ஸத்யஸந்தன், பொய் பேசாதவன் ன்னு ஊரே சொல்லுதே அதை பத்தி கேட்டேன்''
"என்ன சொல்றாங்க என்னைப்பத்தி?''
'' நீ பொய்யே சொல்றதில்லேயாமே ''
''ஆமாங்க''
''இனிமே ஏதாவது பொய் சொல்ற திட்டம் இருக்கா உனக்கு?
''அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க ராஜா''
''அப்படீன்னா உன் வாழ்நாள் பூரா பொய்யே சொல்லமாட்டியா?''
" ஆமாங்க. பொய்யே சொல்லமாட்டேன். நிச்சயம்'' .
''பொய் தந்திரமானது. வாயிலிருந்து சுலபமாக வந்து ஒரு கலக்கு கலக்கிவிடும். ஜாக்கிரதையாக இருக்கணும்'' என்றான் ராஜா.
"நான் உஷாராக இருப்பேன் ராஜா''
ஒருநாள் ராஜா திட்டமிட்டபடி சாமண்ணாவை எல்லோர் முன்னிலையிலும் அழைத்தான்.
''என்னோடு என் குதிரை லாயத்துக்கு வா''
தயாராக நின்ற குதிரை மேல் ஏறி உட்கார்ந்த ராஜா '' சாமண்ணா, நான் அடுத்த ஊர் அர்ஜண்டாக போகிறேன். நீ அரண்மனை சென்று ராணியிடம் நான் நாளை மதியம் சாப்பாட்டுக்கு வருவேன். தயார் பண்ணி காத்திருக்க சொல். உடனே போ '' என்றான்.
"அப்படியே மஹாராஜா'' என்று சாமண்ணா அரண்மனை திரும்பினான்.
அவன் தலை மறைந்தவுடன் ராஜா எல்லோரையும் பார்த்து ''சாமண்ணா வகையாக மாட்டிக்கொண்டான். நான் எங்கும் போகப்போவதில்லை. சாமண்ணா ராணியிடம் சொன்னது பொய் ஆகப் போகிறது. நீங்கள் எல்லோரும் சாட்சி.'' என்றான் ராஜா.
சாமண்ணா ராணியிடம் சென்று வணங்கி '' அம்மணி, ராஜா என்னிடம் எதற்கோ அடுத்த ஊர் செல்வதாகவும் நாளை மதியம் தான் திரும்புவதாகவும் அப்போது உங்களை உணவு தயார் செயது காத்திருக்கவும் சொல்ல சொன்னார்''. ஒருவேளை அரசர் போனாலும் போகலாம், போகாமலும் இருக்கலாம் அது அவர் விருப்பம். நீங்களும் நாளை மதியம் அவருக்கு உணவை தயாரிப்பதும் உங்கள் விருப்பம்.''
''புதிர் போடாதே. ராஜா நாளை தான் வருவாரா மாட்டாரா சொல்?'' என்றாள் ராணி.
''இதில் புதிர் எதுவும் இல்லை, ராஜா குதிரை மேல் ஏறியதை பார்த்தேன். அவர் சொன்னதை சொன்னேன். நம்பகமாக நான் எதுவும் சொல்வதற்கில்லை. போவதும் வருவதும் அவர் விருப்பம் இல்லையா அம்மணி''
சாமண்ணாவின் பேச்சு ராணிக்கு பிடித்தது. சரி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று விட்டுவிட்டாள் .
ராஜா வீடு திரும்பினான். ராணி எதுவும் கேட்கவில்லை. ''சாமண்ணா என்பவன் இங்கு வந்து உன்னிடம் நான் வெளியூர் சென்றுவிட்டேன் என்று பொய் சொன்னானா?' பொய்யே பேசமாட்டேன் என்பவன் சொன்னது பொய் ''என்று நிரூபித்துவிட்டேன்.
" என்ன பொய் ?''
"நான் எங்குமே போகாதபோது வெளியூர் போகிறேன், நாளை மதியம் தான் வருவேன் என்று சொன்னது பொய் இல்லையா?'
இல்லையே என்று தலையாட்டினாள் ராணி. ''நீங்கள் சொன்னதை சொன்னான். நீங்கள் போவது போகாதது அவனுக்கு நிச்சயமாக தெரியாது, என்று தானே சொன்னான்
ராஜாவுக்கு அப்போது தான் புரிந்தது தனது கண்ணால் நிச்சயமாக பார்த்ததை பேசுபவன் தான் பொய் பேசாதவன். சாமண்ணா அப்படி ஒருவன் என்று.
No comments:
Post a Comment