Friday, June 14, 2019

siva vakkyar

சித்தர்கள், மஹான்கள்,   J K  SIVAN 
சிவவாக்கியர்.
                                                                      
       சிவவாக்கியரே! சௌக்கியமா?


எனக்கு  பிடித்த வஸ்துக்களில் வசதிகளில், வார்த்தைகளில் எல்லாம்  காந்தம் போல் கவரும் எழுத்து சிவவாக்கியர் பாடல்கள். அடடா எவ்வளவு எளிமையான அழுத்தமான, ஆழமான சிந்திக்கவைக்கும் சொற்கள். எப்படி ஸார்  உங்களால் இதெல்லாம் பனைஓலையிலும் பாடலாகவும்  சொல்லமுடிந்தது?  ஒருநாலு  வார்த்தை  கடிதம் எழுதுவதற்கு  பிரசவ வேதனை படுகிறோமே.

வெகுநாட்களாகிவிட்டது சந்தித்து. சந்தித்தபோதெல்லாம் சிந்தித்ததில்லை. அது தப்பு தான். ஒவ்வொரு முறையும்  அப்புறம் தான் யோசிக்கிறோம்.  அப்புறம் என்பது தள்ளிப்போட சௌகரியமான சமாச்சாரம். சிவவாக்கியரே, நீங்கள் சொன்ன அப்புறம் பற்றிய ஒரு பாடல் இன்று படித்தேன். அருமை. .

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையை கடந்து சென்றகாரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின் கள் பற்றுமின் கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே

''இறைவா,  நீ  யார். தெரியவில்லையே?  நீ  ஹரி மாதிரியும் இல்லை.  பிரம்மன் மாதிரியும் தோன்றவில்லை எனக்கு.   சிவபிரானோ என்று பார்த்தால்  அது மாதிரியும் இல்லையே.   எங்கோ  தூரத்தில்,  பரவெளியில்,  ஒளிமயமாக,  பிரகாசமாக தோன்றுகிறது. எல்லையில்லாமல் கடந்து போகிறது.   என்ன காரணம்? சரியாகப்போயிற்று.  காரணமேது  காரியமேது. அதெல்லாம் கடந்த அப்பாலுக்கு அப்பால்.....கருமை என்று பார்ப்பதற்குள் சிவப்பு, பிறகு வெண்மை, எல்லாம் கலந்த ஒரு தங்க ஒளி.......   ஆஹா  எவ்வளவு பிரம்மாண்டம் நீ  என்று  வியந்து வாய் மூடவில்லை. அதற்கு  அட எப்படி நீ  கண்ணுக்கு தெரியாத  சின்னஞ்சிறியதாக  கூட  மாறிவிட்டாய். பெரியதல்ல  சிரியதல்ல, உருவமுள்ள  அருவமான  என்று  வார்த்தைகளே இல்லை சொல்வதற்கு . விவரிக்க ஒண்ணா வினோதம் நீ. சிக்கெனைப் பிடிக்க தோன்றுகிறது.   வார்த்தை காணாத  துரீயம் நீ.  உணரமுடிந்தவனா/ வளா/ஏதோவா?  நினைத்தால் இனிக்கும் நீ  நெஞ்சுக்குள்ளே அல்லவா குடிகொள்பவன்....

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறுஅருளிடாய்

எங்கெங்கோ சுற்றினேன், ஏதேதோ எல்லாம் படித்தேன். மனப்பாடம் செய்தென். ஒப்பித்தேன், பாடினேன், பேசினேன்,   நீ தான்  இந்த  பூமி. வாழவைக்கும்  ஆதாரம்.  நீ தான் விண் . பரந்த ஆகாயம்..  ஏழு சமுத்ரங்களும் நீயாக தான் தெரிகிறது.   அக்ஷரங்கள் நீ, ஆதாரமான  எண், எழுத்து எல்லாமே நீ.  ஒளியும் நீ ஒலியும் நீ. இசையும் நீ  ஈசனும் நீ.    பார்வையும் நீ  பார்ப்பது எல்லாமும் நீ.  கண்ணை திறந்தாலும் நீ, மூடினாலும் உள்ளே  நீ. பார்வையோ  கண்ணுள்  பாவையோ நீயே.   
உன்னை நினைத்து வாடும் என்னை காப்பதல்லவோ, ஏற்பதல்லவோ எனக்கு பாக்யம். உன் திருவடி ஒன்றல்லவோ எனக்கு  கருவூலம்.

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன்அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்குமாற தெங்கனே

உன்னைப்பற்றி  எவ்வளவு நினைக்கிறேன்.  அதெல்லாம் கண்டதே இல்லை.  நான் நினைத்ததோ, நினைக்காததோ, எல்லாமே  நீயாக அல்லவோ இருக்கிறாய்!  நினைப்பத்தொன்று . புரிந்து கொண்டால் நான் கண்டதும் நீ,  காணாததும் நீ.  ஆமாமப்பா   நீயில்லாமல் வேறு ஒன்றுமே  இல்லை. நினைப்பது, மறப்பது, மறந்து போனது,   எல்லாமே  நீ தான், நீ மட்டும் தான்.  மயக்கமாக வருகிறது, மாயமாய் இருக்கிறது அதுவும் நீ தான் என்று புரிகிறது.  ஆரம்பம் முடிவு என்று ஒன்று  இல்லாத  பழமனாதி  நீயே.  அண்டமோ, அகண்டமோ, எல்லாம் நீயாகவே  தானா பராத்பரா? இப்படிப்பட்ட  உன்னை எனக்குள்ளே எப்படி புரிந்து கொள்வது, என்று  நினைவில் இருத்திக் கொள்வேன்.  நீயே சொல்?

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம்இந்த நாமமே!  
என்னென்னவோ பேர் அதற்கெல்லாம்.  மாங்காய் மாலை, பதக்கம், நெக்லெஸ்,  மாம்பழ சங்கிலி, கோதுமை  சங்கிலி,  குண்டலம்,தோடு, எந்த பேரோடும், உருவத்தோடும் இருந்தாலும் எல்லாமே  ஒரே தங்கம் தான். ஆதாரம் ஒன்று, உருவங்கள் பல.  அப்படித்தான் எங்கள்  மஹா  விஷ்ணுவும் பரமேஸ்வரனும், ரெண்டு பேரும்  அந்த பரம்பொருள் ஒன்று தான்.  இது தான் ஒஸ்தி, உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று வாய் கிழிய பேசும் மனிதர்களே, எங்கும் நிறைந்த பல் வேறு பெயர்கள் உருவங்கள் கொண்ட  அந்த ஒன்று தான் பரம்பொருள்.  அதன் பெயர் தான் பரமாத்மா. 

அண்டர் கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மை  தன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறுகூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.
                       

 தேவாதி தேவன் பரமன் எங்கிருக்கிறான்?  அதை யார் அறிவார்கள்?  ஞானிகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்?   அவன் எங்கும்  அங்கோ இங்கோ தனியாக எங்கோ  இல்லை. எங்கும்  எதிலும் நிறைந்தவன் என்று அறிவார்கள். இது  பழம்பெரும் உண்மை.  எல்லோருக்கும் தெரிந்தஉண்மையும்  அதுவே.  வேதங்கள் எல்லாமே  அதை தானே  திரும்ப திரும்ப சொல்கிறது.  இதெல்லாம் ஏன்  மறந்து போகிறது? எதற்கு  அதோ இருக்கிறதே அந்த ஊரில் உள்ள கோவிலில் தான்  அவன் இருக்கிறான் என்று கை  நீட்டி எதையோ காட்டுகிறாய்.  எங்கெங்கோ ஊர் ஊராக செல்கிறாய்?  அங்கும் தான் இருக்கிறார் ஆனால் அங்கே மட்டும்  தான்  என்று இல்லை அப்பனே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...