அதிவீர ராம பாண்டியன்
இதெல்லாம் தான் அழகு.
1. ''எழுத்தறி வித்தவ னிறைவனாகும்.''
எழுத்து படிப்பு வாசனை இல்லாதவன் விலங்குகளுக்கு சமானம் இல்லை. விலங்கு தான். ஆகவே தான் நமது கையைப்பிடித்து வளைத்து ''அ'' ஆ'' எழுதவைத்தவன் தெய்வத்துக்கு சமம்.
2. ''கல்விக் கழகு கசடற மொழிதல்''.
எதையாவது கற்பது என்பது நுனிப்புல் மேய்வது அல்ல. மனப்பாடம் செய்து கக்குவது அல்ல. அர்த்தம் புரிந்து ரசித்து அதை தப்பிஓல்லாமல் கற்பது. அதை தவறின்றி கணீரென்று மொழிவது என்கிறான் பாண்டியன். முழுங்குவது அல்ல. அது தான் அந்த கல்விக்கு சிறப்பு. அதை அழகு என்கிறான் அதிவீர ராம பாண்டியன்.
3. ''செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.''
பணம் ஒருவரிடம் இருந்தால் என்ன செய்யவேண்டும். எப்படியாவது அதை நாட்டை கடத்தி வேறு நாட்டு பதுக்கி வைப்பதா? அப்படித்தான் பெரும் பணக்காரர்கள், படித்த முட்டாள்கள் செய்கிறார்கள். அதிவீரராம பாண்டியனைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் செய்வது தப்பு. செல்வந்தனுக்கு அழகு தன்னை சார்ந்த சுற்றம் நட்பு தன்னை அண்டி நிற்கும் ஜீவன்களுக்கு உதவி அவர்கள் வறுமையை போக்குவது.
4 ''வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும்.''
அதிவீர ராம பாண்டியன் இப்போதிருந்தால் என்ன சொல்வானோ, செய்வானோ? வேதத்தை ஓதுபவர்கள் (இப்போது மந்திரம் சொல்பவர்கள் ''ஓதியவர்களா, ஓதுபவர்களா?'' மேடையை நிறைப்பவர்களா? நன்றாக வேதம் கற்றவர்கள் தவறில்லாமல் வேதமாதாவை உபாசித்தவர்கள், கற்றதை திறம்பட தவறின்றி ஓதவேண்டும், அந்த சப்தமே போதும். அவர்கள் நல்ல ஒழுக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது தான் அவர்களுக்கும் மரியாதை. அவர்களது மந்திரங்களுக்கும் மதிப்பு.
5. ''மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை''
ஒரு நாட்டை எப்படியாவது நாமே ஆளவேண்டும் என்று என்னென்னவோ சாக்கடைக்குள், கூரைக்குள், பாதாள அறைக்கு, வண்டி நிற்குமிடங்களில் எல்லாம் பணம் திருடி வைத்து என்னை ஆதரித்து தேர்வு செய்யுங்கள் என்று பணத்தால் உரிமை பெறுபவன் உண்மையில் இந்த நாட்டை, நம்மை ஜாக்கிரதையாக பாதுகாப்பான என்று ஒரு நொடியாவது சிந்திக்கவேண்டாமா? அவன் பேசாமல் இருந்தாலும் தேடிச்சென்று அவனை இழுத்து வந்து ''நீ தாண்டா எங்கள் ராஜா. நீ பதவிக்கு வந்துவிட்டால் எங்களை நன்றாக பாதுகாப்பாய்'' என்று நாடே தேடிவரும்படி நடந்துகொள்பவன் அரசாள்பவன். அது தான் செங்கோல் ஆட்சி. அதிவீரா நீ இப்போது இல்லாமல் போய்விட்டாயே?
6, '' வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல்''
வியாபாரம் செய்யும் வணிகர்கள் நல்ல பொருட்களை, நேர்மையான விலைக்கு, நாணயமான எடைக்கு தரவேண்டும் என்கிறான் பாண்டியன். அரிசியில் கலக்க அரிசிபோலவே கல், ஜவ்வரிசி போலவே பிளாஸ்டிக் உருண்டை... அவனுக்கு தெரியாது. எடை மேலே உரையில் எழுதியிருப்பது அல்ல, காற்றிலேயே தானாக கரைந்து உறைக்குள் குறைந்துவிடும் என அவனுக்கு தெரியாது.
7.'' உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல்';'
சோம்பலின்றி உழைப்பவன் உழவன். ஊருக்கு சோறு போடுபவன். சேரில் அவன் கால் இல்லாவிட்டால் உன்காரில் நீ போகமுடியாது என்று சினிமா பாட்டு உண்டு. கிருஷ்ணா நிறைய உண்மையான உழவர்களை பெருக்கி இந்த நன்னாட்டுக்கு அளிப்பாய்.
8. ''மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்''
ஒவ்வொரு மந்திரியும் சாணக்கியன் போல் இருக்கவேண்டும். அரசுக்கு, நாட்டு மக்களுக்கு, நன்மை பயக்கும் திட்டங்கள் எதிர்கால, நீண்ட நன்மையை கருதி யோசித்து அளிக்கவேண்டும். பஞ்சம் பட்டினி பற்றாக்குறை வராமல், களவு அநீதி, நேர்மையின்மை இன்றி மக்கள் வாழ வசதிகள் பெருக்க வேண்டும். வரும் பொருள் உரைத்தால் என்பதை தப்பாக புரிந்து கொண்டு தங்களுக்கு எங்கிருந்தெல்லாம் பொருள் வரும் என்று தேடி அதை எதிர்காலத்தில் தனது மக்களுக்கு சேர்த்து வைப்பதை பற்றி நிச்சயம் அதிவீரராமன் சொல்லவில்லை.
No comments:
Post a Comment