விக்கிரமாதித்தன் கதை J K SIVAN
ராணியின் தத்ரூப ஓவியம்
போஜனின் மந்திரி பலே ஆள். ராஜதந்திரி. ''அப்படித்தான் பஹுஸ்ருதன் என்கிற மந்திரி நந்தவம்ச ராஜாவிடம் சொன்னான்'' ... என்று மொட்டையாக எதையோ சொல்லி போஜனின் ஆர்வத்தை கிளப்பியதோடல்லாமல் நண்பர்களே ,வாசகர்களே , உங்களிடமும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டானே. ஆகவே மறுநாள் காலை மந்திரியை பிடித்து போஜன் '' நேற்று என்னவோ சொன்னாயே யாரோ பஹுஸ்ருதன் என்பவன் சொன்னான் என்று என்ன அது சொல் என்றான்? மந்திரி தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொன்ன விபரம்:
வடக்கே எங்கேயோ வைசாலி என்கிற அழகிய ராஜ்யத்தை நந்தன் என்கிற ராஜா பரிபாலனம் செய்து
வந்தான். புத்திசாலி. திறமை மிக்கவன், நல்ல குணங்கள் கொண்டவனும் கூட. அவனது வீரத்தால் அண்டை நாட்டு ராஜாக்கள் அவனை எதிர்க்காமல் நட்போடு பழகிவந்தார்கள். ராணி பானுமதி ராஜாவின் மனைவி. கொள்ளை அழகி. ஒரே பிள்ளை ஜெயபாலன். ஆட்சியை அவன் திறம்பட நடத்த பெரிதும் உதவியவன் மந்திரி பஹூஸ் ருதன். மந்திரியைக் கேட்காமல் நந்தன் ஒரு துரும்பை கூட எடுத்து போடமாட்டான்.
ஒழுங்காக எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால், அப்புறம் கதை எதற்கு? ஒருநாள் ஒரு சம்பவம் நடந்தது.
நந்தனின் மனைவி பானுமதி அழகி. தேவலோக அப்ஸரஸ் போல் இருப்பாள். அழகான மனைவி ஆபத்தின் உறைவிடம் அல்லவா? ஆகவே அவளை விட்டு எங்கும் பிரிந்திருக்க மாட்டான் நந்தன். அவள் நிழல் அவன். அரசவை மண்டபத்தில் இருக்கும்போது கூட அருகிலே ஒரு சிம்மாசனத்தில் அவளும் இருக்கவேண்டும். அவளுக்கு அந்தப்புரத்தில் சுதந்திரமாக இருக்க ஆசை. யார் கேட்பார்கள் அவள் விருப்பத்தை ? எங்கு போனாலும் அவன் பின்னால் ஒரு பல்லக்கில் திரைகளை மூடியபடி அவளை தூக்கி வர செய்வான்.
ராஜாவின் இந்த குணம் மந்திரி பஹுஸ்ருதனுக்கு பிடிக்கவில்லை. அரசன் செயல் எரிச்சலாக இருந்தது. அதனால் பானுமதிக்கு ஏதாவது ஒரு ஆபத்து உண்டாகும் என்று கவலை வேறு. ராணிக்கும் இப்படி அடிமையாக இருப்பது பிடிக்கவில்லை. என்ன செய்யமுடியும்? பதி சொல் தவறாத பாவை அவள்.
சமயம் பார்த்து ஒருநாள் நந்தனிடம் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தான் பஹுஸ்ருதன்:
''மஹாராஜா, ஒரு முக்கிய விஷயம் சொல்லவேண்டும். இதை கேட்டவுடன் உங்களுக்கு பிடிக்காமல்; என் மீது கோபம் வரலாம். இருந்தாலும் நான் உங்கள் கவனத்துக்கு இதை கொண்டுவருவது என் கடமை.''
''மந்திரி என்ன பலமாக ஏதோ பீடிகை போடுகிறாய். விஷயததை சொல்லு. எனக்கு தெரியும் நீ எதையும் நாட்டு நன்மையும் எனது நன்மையையும் கருதியே நினைப்பவன், செய்பவன் என்று ''
மென்று விழுங்கிய மந்திரிக்கு கொஞ்சம் தைர்யம் வந்தது. ''நன்றி மஹாராஜா. பட்டென்று மனதில் பட்டதை சொல்லி விடுகிறேன். இது மாதிரி நீங்கள் அரண்மனை சபைக்கு ராணியை அழைத்து வந்து பக்கத்தில் அமரவைப்பது தவறு. யார் கண், எண்ணம், பார்வை சிந்தனை, எப்படி இருக்கும் என்று தெரியாது. இதனால் ராணிக்கும் ராஜ்யத்துக்கும் உங்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரலாம். ராணிக்கும் இப்படி பலர் முன்னிலையில் தென்படுபவது பிடிக்கவில்லை என்று உணர்கிறேன்''
‘மந்திரி, நீ சொல்வது புதிதல்ல. எனக்கும் தெரியும். ஆனாலும் என்னால் அவளை தனியாக அந்தப்புரத்தில் விட்டுவிட்டு அமைதியாக இங்கே நாள் முழுதும்
இருக்க முடியாதே. என்ன செய்வேன்'' என்று அழாக்குறையாக நந்தன் பதிலளித்தான்.
மந்திரி யோசித்து வைத்திருந்த ஆலோசனையை சொன்னான்: ''எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒரு திறமைசாலி ஓவியனை அழைத்து ராணி மாதிரி ஒரு உருவப்படம் வரைந்து அதை உங்கள் அருகே வைத்துக் கொள்ளுங்கள். அதை பார்க்கும்போது அடிக்கடி ராணியை பார்ப்பது போல் இருக்கும். ராணிக்கும் தொந்தரவு இல்லை.''
''பஹுஸ்ருதா, அருமையான யோசனை சொன்னாய். இந்தா என் பரிசு என்று கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி மந்திரிக்கு அணிவித்தான் நந்தன். சிறிது நாளில் ஒரு நல்ல ஓவியனை கொண்டுவந்து நந்தன் முன் நிறுத்தினான் மந்திரி .
‘ஓவியரே, நமது மகாராணியை மிகத் தத்ரூபமாக ஆளுயரத்தில் தாங்கள் வரைந்து தர வேண்டும். உம்மால் முடியுமா?’ என்று கேட்டான் நந்தன்.
‘மகாராஜா! நான் ஒரு புஷ்பத்தை வரைந்தால், அதை நிஜமான பூ வென்று ஏமாந்து அநேக வண்டுகள், பூச்சிகள்,எல்லாம் வந்து மொய்க்கும்.. தேனின்றி ஏமாந்து போகும். அநேகர் அதை பார்த்திருக்கிறார்கள். ஆகவே உங்கள் ராணியை ஒருமுறை சரியாக நான் பார்த்துவிட்டால் அது போதும். அவரைப்போலவே ஆளுயர வண்ண ஓவியம் என்னால் வரைய முடியும்'' என்றான் ஓவியன். அரண்மனை அந்தப்புரம் அழைத்துப் போனார்கள். அவளைப் பார்த்தவுடனே அவள் மிக உயர்ந்த ரக பெண்மணி என்று அறிந்துகொண்டான். அவனுக்கு தான் சாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரம் நான்கு வகை பெண்கள் பற்றி எல்லாம் நன்றாக தெரியுமே. உயர்ந்த வகைப் பெண் பத்தினி. குலப்பெண், கற்புக்கரசியாக,, பதிபக்தி மிக்கவளாக, கடவுள் பக்தி நிறைந்தவளாக இருப்பவள். தேகத்தில் இயற்கையாகவே நறுமணம் வீசும். முகம் செண்பக மலராக புன்னகை பூத்தவாறு
இருக்கும். கொடியிடை, நீண்ட கருத்த சுருள் சுருளான பின்புறம் வரை நாகம் போல் வளைந்த கூந்தல், பௌர்ணமி சந்திரன் முகம், அகல நீள கண்கள், மிருதுவான பேச்சு,அழகிய உதடுகள்,கருணை மிக்க இதயம்,
இன்னும் எத்தனையோ சிறப்புகள் கொண்டவள். அவளை அப்படியே ஓவியத்தில் சித்திரமாக்கினான் ஓவியன். அதைப் பார்த்த நந்தன் அசந்து போய் ''ஏ ஓவியா, அசாத்தியமாக வரைந்திருக்கிறாய். அப்படியே என் மனைவியை இதில் கொண்டுவந்து விட்டாய்....உனக்கு என்ன வேண்டும் சொல், பரிசு தருகிறேன்'' என்றான்.
''மஹாராஜா, நான் உலகிலேயே சிறந்த ஓவியன். பல ராஜாக்கள் என்னை வா என்னிடம் என்று வரவேற்கிறார்கள். நான் தங்களை சந்தித்ததே உங்கள் அதிர்ஷ்டம்'' என்று சொல்லும்போது நந்தனின் ராஜகுரு அங்கே வந்தபோது அவன் சொன்னது அவர் காதிலும் விழுந்தது. அவருக்கும் சகல சாஸ்திரங்களும் தெரியுமே. ஓவியத்தை பார்த்தார்.
''சிறந்த ஓவியர், நீர் நிச்சயம் பிரமாதமான கலைஞன் தான். ஆனாலும் மகாராணியின் அங்கத்தை அப்படியே வரைந்திருக்கிறீர்களே,ஒரு சிறு தவறு இருக்கிறதே'' என்கிறார் ராஜகுரு
''அப்படி இருக்க முடியாதே சுவாமி, என்ன தவறு என்று நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா?'' - ஓவியன்.
‘மகாராணியாரின் இடது துடையில் ஒரு சிறு கருப்பு மச்சம் உண்டு. அந்த மச்சத்தை நீ குறிப்பிட வில்லையே?
'என்கிறார் ராஜகுரு.
ராஜகுரு சொன்னதை கேட்ட ராஜா நந்தன் திடுக்கிட்டான். மகாராணியின் இடது துடை மச்சம் சமாச்சாரம் அவனை அதைப்பற்றியே எண்ண வைத்தது. ‘அது எப்படி நானே கவனிக்காத மச்சம் இந்த ராஜகுருவுக்கு தெரிந்தது? ஏதோ குருட்டாம்போக்கில் பொய்யா? உடனே போய் அதை சோதிக்கவேண்டும் என்று அந்தப்புரம் ஓடினான் நந்தன். மகாராணி தூங்கிக்கொண்டிருந்தாள் அவள் இடது துடையைப் பரிசோதித்தான். அடே எப்படி ராஜகுரு சொன்னது போல் மச்சம் இருக்கிறது? ஆச்சர்யத்திற்கு பதில் ஆத்திரம் தான் வந்தது. கண் சிவந்தது. நாசி துடித்தது. ராணிக்கும் ராஜகுருவுக்கும் கள்ள நட்பா? இல்லாவிட்டால் எப்படி அவருக்கு இது தெரிந்தது. நானே இதுவரை கவனித்ததில்லையே?''
நந்தன் தான் எதற்கும் மந்திரி பஹுஸ்ருதனை கன்சல்ட் பண்ணுவானே . கூப்பிட்டு விஷயம் சொன்னான்.
''மந்திரி, ஏதோ தவறு நிச்சயம் நடந்திருக்கிறது. சந்தேகமாக இருக்கிறது. இந்த கள்ள ராஜகுருவை இப்போதே தண்டிக்கவேண்டும். மரண தண்டனை நிறைவேற்று'' .
ராஜா ஆத்திரத்தில் ஆணையிட்டான் என தெரிகிறது. அவன் ஆணையை மீறமுடியாது. மந்திரி ராஜகுரு வீட்டுக்குச் சென்று நடந்ததை சொன்னான். ராஜகுரு மனம் வருந்தினார். ''ராஜ்யத்தை ஆள்பவனிடம் அன்பு, கருணை, நட்பு, பாசம் நன்றி, எதையும் எப்போதும் எதிர்பார்க்கமுடியாது என்பது உண்மையாகிவிட்டதே.
இதைக் கேட்ட ராஜகுரு மனம் உடைந்து போனார். ‘ராஜ்ஜியத்தை ஆளும் அரசனுக்கு நட்பு, நன்றி, அன்பு, பாசம், உறவு ஏதும் கிடையாது என்பது எத்தனை உண்மை’ என்று எண்ணினார். நான் உத்தமானவன் என்ற உண்மை என்னை காப்பாற்றட்டும்.'' என்கிறார் ராஜகுரு. மந்திரி பஹுஸ்ருதன் ராஜகுருவை ராஜா நந்தன் கண்ணில் படாமல் எங்கோ ஒரு மாளிகையில் தனியாக ஒளித்து வைத்து அவர் உயிரை காப்பாற்றி னான்.ஒன்றிரண்டு வருஷங்கள் ஓடியது.
இளவரசன் ஜெயபாலன் ஒருநாள் வேட்டையாட கிளம்பினான். மந்திரி பஹுஸ்ருதன் பிள்ளை புத்திசாகரன் தான் அவன் நண்பன். அவர்கள் வேட்டையாட கிளம்பிய நேரம் சகுனம் சரியில்லை. ஒரு கறுப்புப் பூனை திடீரென்று குறுக்கே ஓடியது. ஒற்றை பிராமணன் எதிரே வந்தான். அகால நேரத்தில் ஆந்தை அலறியது. ட்ட காலத்தில் ஆந்தையின் அலறல் சப்தம் கேட்டது . தலையில் விறகு கட்டைகள் சுமந்து ஒருவன் கண்ணில் பட்டான்.மேகங்கள் கூடி வானம் கறுத்தது. மந்திரி குமாரன், ''இளவரசே, இன்று நேரம் சரியில்லை, கெட்ட சகுனங்கள் தெரிகிறது. இன்று வேட்டை வேண்டாம். இன்னொருநாள் போகலாம்.'' என்றான்.
இளங்கன்று பயமரியாதே. இளவரசன் ஜெயபாலன் ''அடே, நண்பா,எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இப்போதே வேட்டைக்கு புறப்படுவோம். எது வந்தாலும் ஒரு கை பார்க்கிறேன்'' என்றான்.
‘ இல்லை நண்பா. தெரிந்தும் சில காரியங்கள் செய்யக்கூடாது. ஒரு நிதானம் வேண்டும். விஷம் என்று தெரிந்தும், குடித்தால் என்ன செய்யும் பார்க்கலாம் என்றா குடிப்பார்கள்? விபரீதமான செயல் இது. விளையாட வேண்டாம்'' ஜெயபாலன் காதில் இதெல்லாம் ஏறவில்லை , வேட்டைக்கு கிளம்பிவிட்டான்.
அப்பன் நந்தனைப் போலவே பிள்ளை...
அவன் பின்னால் நாமும் காட்டுக்கு போவோம்.
No comments:
Post a Comment