Wednesday, June 19, 2019

VALLALAR



                                                                ஸ்தோத்ரம் பல விதம்

தங்களை மற்றோர் எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பெரிய மனிதர்களாகவோ, பணக்காரர்களாகவோ தான் இருக்கவேண்டும் என்று நியதி இல்லை. எந்த வர்கத்திலும் தன்னை அண்டி இருப்பவர்கள் இப்படி செய்யவேண்டும்  என்று எதிர்பார்ப்பவர்கள்  எங்குமே உண்டு.

''
அய்யா மாதிரி உண்டுங்களா? அய்யா சொன்னா சொன்னதுதான். ஆணி அடிச்சது மாறில்ல இருக்குது.'' ஒருவேளை சாப்பாடோ,ஐந்து ரூபாயோ கூட அண்டியவனை இப்படி பேச வைக்கிறது.

''
உங்களைபோல யாருன்னா இப்படி எல்லாம் செய்வா? குறிப்பறிந்து ஒவ்வொண்ணையும் பண்றதிலே உங்களுக்கு நிகர் நீங்கதான். உங்கண்ணாவும் இருக்காரே....! புதுப்புடவை மனைவி வாங்கிக்கொண்டபோது வாய் மூடி பணம் கொடுத்த கணவனிடம் அவளை இப்படி பேச செய்யும்.

''
இந்த ராகத்தை அண்ணா இன்னிக்கி பாடினதுபோல் யாரும் விஸ்தாரமா அலசி பிழிஞ்சு கொடுத்ததில்லை. முப்பது வருஷத்திலே நான் கேட்டதே இல்லை.''  --   பக்க வாத்தியம் அடுத்த கச்சேரி சான்சுக்காக வித்வானிடம் சொல்லும் வார்த்தையே தவிர அது பாட்டை கவனிக்காமல் வீட்டை நினைத்துக்கொண்டே வாசித்ததது தான் உண்மை.

''
அம்மா உன் கை தாராளம். நேத்து கொடுத்தியே உப்புமா எங்க ஊட்டிலே எல்லாமே நல்லா துன்னுச்சுங்க. '' -- ஊசிப்போன உப்புமாவை ரோட்டிலேயே கொட்டி அதைத் தின்ற நாய் கோபத்தோடு துரத்திக்கடிக்க வந்தபோதும் அதை மறந்து வேலைக்காரி பட்டு எஜமானியைப் புகழ்வது அட்வான்ஸ் 100 ரூபாய்க்காக.

இப்படி எல்லோரும் புகழ்ந்து பாடுவதை கேட்பவர்கள் மனநிலை என்ன? சந்தோஷம். உண்மையிலேயே தான் அப்படித்தான் இருக்கிறோம் என்ற நினைப்பு  கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வளர்ந்து ஒருநாள் அப்படியே ஆகவும் வழி உண்டு. இவர்களை முகஸ்துதி பிரியர்கள் என்று அறியலாம்.

இதற்கு நேர் மாறாக ஒன்று இருக்கிறதே  தெரியுமோ?
கடவுளை ஸ்தோத்ரம் செய்வது மனம் மகிழ்ந்து. பலன் எதிர்நோக்காது இருப்பது. ஸ்தோத்ரம் இந்திரன் சந்திரன் என்றெல்லாம் இயற்கைக்கு மாறாக புகழாமல் என்றும் உண்மையான தாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இதை இயற்றிய மகான்கள் புராணங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி இவற்றை இயற்றியிருக்கிறார்கள். அவற்றை சொல்லும்போது அவற்றின் பொருள் உணர்ந்து நாம் உச்சரிக்கும்போது நம் மனம் இன்பமடைகிறது. பகவானின் பாரபட்ச மில்லாத அன்பு,கருணை, பாசம், பற்று எல்லாம் புரிகிறது.

இரண்டறக்கலக்கும் மன நிலையை அளிக்கும் வண்ணம் அழுத்தமான வார்த்தைகளில் பல மகான்கள் சரணாகதி அடைந்து பாடியிருக்கிறார்கள்.

''
நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ? நல்லோர்க் கிங்
கீயேன் ஒன்றும் இல்லேன் நான் என்செய் கேனோ? என்னுடையதாயே
அன்னையாய், சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ?சேயேன்
தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ?.''

வள்ளலார் கெஞ்சுகிறார். இந்த நாய் துன்பக்கடலில் விழுந்து அல்லல் படுவது உனக்கு அழகா?

நல்லவர்களுக்கு நான் ஒன்றுமே கொடுத்ததில்லையே? என்னிடம் ஒன்றுமே கொடுக்க இல்லையே? நீதானே அம்மா எனக்கு ! கொஞ்சம் தயவு காட்டமாட்டாயா? குழந்தை தானே  நான் உனக்கு,  என்னை காப்பற்றவேண்டாமா? விட்டுவிட்டால் உலகம் உன்னைப் பார்த்து சிரிக்காதா?.
என்ன பக்தி பார்த்தீர்களா. இது முகஸ்துதியா? பரிபூர்ண பக்தி. நம்பிக்கை.

''
தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
ஒறி லாதுநல் தொண்டருக் கருள்வான்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.''

அம்மா தான் கிடையாதே. அப்பா என்று உன்னை நம்பி உன் சந்நிதி வந்தேன். நீர் என்னடாவென்றால் வாயில்லையோ என்று சந்தேகப்படும்படி வாயே திறக்கவில்லை. உம்மை, என் மனத்தை ஒரு கோயிலாக்கி அதற்குள் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறேனே. என்னுடைய குறை உமக்கு தெரியாதோ? . திருவொற்றியூரில் உட்கார்ந்து கொண்டு தொண்டர்களுக்கு எல்லாம் அருள்பவரே என்னையும் அவர்களில் ஒன்றாக கருதி அருளவேண்டும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...