ஐந்தாம் வேதம் J K SIVAN
பகவத் கீதை 15 புருஷோத்தம யோகம்
''108'' ம் வாழ்க்கை மரமும்
108 என்பது மிகவும் ஸ்ரேஷ்டமான எண் . அதுவே இந்த புருஷோத்தமன் பற்றிய அத்தியாயத்துக்கு எனக்கு அமைந்ததும் அவன் அருளாலே அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும். புருஷோத்தமன் என்ற பெயருக்கு ஒருவரே சொந்தம் கொண்டாட முடியும். அது ஸ்ரீமன் நாராயணன். அவரது அம்சமான, அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணன். வேறு யாரும் இந்த பெயரில் வோட்டு போட முடியாது.
பகவத் கீதையின் 15வது அத்யாயம் அவர் பெயரில் உள்ளது. அழகான பெயர். புருஷோத்தம யோகம். இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணன் என்ன உபதேசித்தார் அர்ஜுனனுக்கு? அவன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்?
ஆரம்பிக்கும்போதே விறுவிறுப்பான ஒரு செய்தியாக வளர்கிறது. எல்லா மரங்களுக்கும் வேர் எங்கே இருக்கும்? கீழே பூமியில் என்று தான் குழந்தைகளும் கூட சொல்லும். சில சந்தேகப் பிராணிகள் விதை விதைத்து செடியாக வளரும்போதே வேர் பரவியிருக்கிறதா என்று செடியைப் பிடுங்கிப் பார்ப்பார்கள் என்று கேலியாக சொல்வதுண்டே .
'' அர்ஜுனா, வாழ்க்கை, சம்சாரம், என்ற அரசமரத்துக்கு வேர் மேலே, கிளை கீழே. அழிவற்றது. வேதங்கள் தான் அதன் இலைகள். இந்த மரம் மூன்று குணங்களால் வளரும் கிளைகளை உடையது. இந்த வாழ்க்கை மரம் வெட்டப் படவேண்டும் என்றால் அதற்குரிய கோடாலி, வாள் ஆகியவை வைராக்யமும், ஆசையின்மை (அனாசக்தி) இரண்டுமே. அழித்தல் இல்லாமல் ஆக்கல் கிடையாதே. ஒன்று போனால் தான் மற்றொன்று அதன் இடத்தில் வரும். களை, பூண்டு, புல் இவற்றை அழித்து நீக்கினால் தான் செடி வளரும். இறப்பு இருந்தால் அடுத்து பிறப்பு. ராவணன் (ரஜோ குணம்) கும்பகர்ணன் (தமோ குணம்) அழிந்து தான் விபீஷணன் (சத்வகுணம்) தழைக்க முடிந்தது.
முக்காலி என்றாலே மூன்று காலில் நிற்பது. ஒரு கால் இல்லாவிட்டாலும் அது பயன் படாது. அதுபோல் கர்மம் செய்யும்போது பக்தி, ஞானம் இரண்டும் வேண்டும். இது இல்லாவிட்டால் உழைப்பு பயன் தராது. பக்தி பாவனை இருந்தால் செய்யும் கர்மத்தில் பளு தெரியாது. அன்பு இருந்தால் சுலபமாகும்.
ஆன்ம ஞானம் இல்லாவிடில் மூன்று குணங்களை தாண்டி முன்னேறுவது குதிரைக் கொம்பு. அந்த ஆன்ம ஞானம் பெறுவது எப்படி?
செய்யும் கருமத்தில் சத்வ குணத்தை இணைத்து நிறுத்தி, கெட்டியாக பற்றிக்கொண்டு, அதன் ஆசையையும், அகங்காரத்தையும் பக்தியினால் விலக்கினால் கிடைப்பது ஆன்ம ஞானம்.
அவனை அடைய முயல்கிறேன். அவன் பரம புருஷன். புருஷோத்தமன். நான் அக்ஷர புருஷன். (களைப்பில்லாமல் சோர்வுறாது,உழைக்கும் சனாதன புருஷன்). சனாதன என்றால் என்றுமுள்ள என்று அர்த்தம். நமது இந்துமதம் அதனால் தான் சனாதன தர்மம் என்ற பெயர் கொண்டது. அதாவது என்று முள்ள தர்மத்தை கடைப்பிடிக்கும் மார்க்கம். அவன் ஆண்டான். நான் அடிமை
இந்த அத்யாயத்தில் கீதை ஒரு அபூர்வ பாடம் கற்பிக்கிறது. கர்மம் செய்யும்போது அதில் பக்தியின் அம்சத்தை சேர்த்து கலந்து செய். அதனோடு பிறகு ஞானத்தையும் கலந்து விடு. வாழ்க்கை ஒரு புது கலவையாகி விடுகிறது. அத்வைத மயமான சேவா மார்கத்தில் அது நம்மை கொண்டு சேர்க்கிறது.
ஞானதேவர் சொன்னது போல் பக்தியும் ஞானமும் வேறல்ல. ஒரே பொருளுக்கான ரெண்டு பெயர்கள். செய்யும் கர்மத்தில் அன்பு கலந்தால் சேவை பரிமளிக்கிறது. தாயின் சேவை இனிப்பது போல். அன்பின் வெளிப்பாடு தான் சேவை. அன்பு இருக்குமிடத்தில் ஞானம் கண்டிப்பாக இருக்கும்.
இந்த புருஷோத்தம யோகத்தில் பகவான் நம் வாழ்க்கையின் காரியங்கள் அனைத்திலும் ஞானமும் பக்தியும் நிரம்பி ததும்புமாறு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இது வேத சாரம்.
நாம் செய்த, செய்ய எண்ணிய, காரியங்கள் நமக்கு மறந்து போகலாம். எடைக்கு எடை அவற்றிற்கான வினைப்பயனை கர்ம நியதி மறக்காமல் நமக்கு வட்டியோடு சேர்த்து தந்து விடும்.
ஆரம்பத்தில் எதற்கு அஸ்வத மரத்தை பற்றி சொல்லியிருக்கிறார் கிருஷ்ணன்.? நிறைய பேர் இதை ஆல மரம் என்றும் எடுத்துக் கொள்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். அரச மரம் என்று தான் அஸ்வத்த மரத்தை உணர்த்துகிறார்.
ஏன் தலைகீழாக? வேர் மேலே, கிளை கீழே? மாயத் தோற்றத்தை விவரிக்க. ஆற்றங்கரை மரத்தின் பிம்பம் தண்ணீரில் தலை கீழாக தோன்றும். வேர் மேலே கிளை கீழே. நிலையற்ற சம்சார உலகியல் மரம். இது உண்டாக ஆதி காரணன் நாராயணன் எனும் ஆதி புருஷன் பரமேஸ்வரன். அனைத்துக்கும் மேலான, பரம பதத்தில் உள்ளவர். அவரிடமிருந்து தோன்றியதால் வேர் மேலே என்று சொல்லப் படுகிறது. ஊர்த்வ மூலம். மற்ற மரங்களைப் போல் அல்லாமல் இதன் ஆரம்பம் மேலே. ஸ்ருஷ்டி கீழே படர்ந்து வளர்ந்து மேலும் கீழுமாக அடி முடி காணாமல் தொடர்கிறது.இதன் முழு வடிவம் யாரும் காணாதது. விஷயங்களில் புலன்கள் சென்றடைந்து குணங்கள் வளர்ந்து இறப்பும் பிறப்பும் உண்டாகி சம்சார மாயையில் நாம் உழல்கிறோம். இந்த சம்சார மரத்தை வெட்டும் கருவி வைராக்யம் பக்தி-ஞான கோடாலிகள். அதாவது பற்றற்ற மன நிலை.
இந்த பிரபஞ்சம் ஆண்டவன் வடிவம். காணும் யாவும் அவனே. அவனது சர்வ சக்தி ஸ்வரூபமே. அதுவே எண்ணற்ற உடல்களாக உயிருக்கு உயிராக பல ஜன்மங்களை எடுக்கிறது.
அர்ஜுனா, அனைத்துக்கும் உணவளித்துக் காப்பவனும் நானே, சுவாசமும் நானே. தேகமும் ஆன்மாவும் நானே. புருஷோத்தமனான என்னை இவ்வாறு பரிபூர்ணமாக அறிந்தவனே ஞானவான். என்னை ஆராதித்து என்னையே அடைபவன்'' என்கிறார் கிருஷ்ணன்.
மிக உயர்ந்த தத்துவம் இந்த அத்தியாயத்தில் விளக்கப் படுகிறது இல்லையா. புரிகிறதா? புரியும்படியாக சொல்ல முடிந்ததா என்னால்?
No comments:
Post a Comment