Friday, June 14, 2019

KASI YATHRA





   காசி யாத்திரை கதை   J K  SIVAN 

எத்தனையோ  வருஷங்களுக்கு  முன்பு இரு கிழ நண்பர்கள் காசிக்கு  நடந்தே போக பிளான்  போட்டார்கள்.
சுப்புடு 75வயசு    ரங்கு 78வயசு.   வழுக்கை  தலை.  
சுப்புடு  நிலம்   நீச்சு,   ஐவேஜி  உள்ளவன்.   ஊரில் பெரிய  மனுஷன். பிள்ளைகள்  சரியில்லை. ரங்குவோ   தச்சுவேலை, தோட்டவேலை செய்து பழைய  வீடு ஒன்று   சொந்தம்    ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள்.  .சிவ பக்தர்கள்.  
''ரங்கு  இந்தவருஷம் எப்படியாவது  சிவராத்திரிக்கு   காசிக்கு போவோமா ? ரொம்ப நாளா பிளான் போட்டு  தள்ளி  போயிண்டே இருக்கே.   இன்னும் ஒரு மாசம் இருக்கு அடுத்த வாரமே  கிளம்புவோமா?''
''சுப்புடு  நீ பணக்காரன்.  நான்  எப்படியோ ஆயிரம்  ரூபா போல சேர்த்து வைச்சிருக்கேன்.  ரெண்டுமூணு மாசம்  நாம  வெளியூர்லே இருக்கணும். போறுமான்னு தெரியல. அங்கங்கே  ஏதாவது  யாசகம் பண்ணி வயித்தை கழுவலாம்?'' என்றான் ரங்கு.
''அடுத்த வாரமே கிளம்புவோம்.  சிவபெருமான் பார்த்துப்பார். என் பெரிய பையன் சரியில்லே. அவன் கிட்டே கொஞ்சம் பணம் கொடுத்து வச்சு குடும்பத்தை பார்த்துக்கோன்னு கிளம்பறேன். என் மனைவி வீட்டை  .சமாளித்துக் கொள்வாள் '' என்றான் சுப்புடு.
''என் குடும்பத்தில்  பிரச்னை எதுவும் இல்லை.  நான் இருப்பதே யாருக்கும் லக்ஷியம் இல்லை. இருந்தும்  உபயோகம் இல்லை.'' என்றான் ரங்கு. 
சுப்புடு நண்பர்கள் குடும்பம் எல்லோரும் வழியனுப்ப சௌகரியமாக கிளம்பினான். ரங்கு  பகவான் மேலே பாரத்தை போட்டுவிட்டு  குடும்பத்தில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு மூட்டை யை தலையின் சுமந்தவாறு சென்றான். நிறைய உருளைக்கிழங்கு,  சப்பாத்தி புளியஞ்சாதம்  தண்ணீர் சொம்புடன் துணி மணிகளோடு மூட்டையில்  ஆயிரம் ரூபாயும் இருந்தது. ரங்கு கொஞ்சம்  காலை  விந்தி விந்தி  நடப்பான்.  தேவாரம்  நிறைய பாடுவான். எந்த கவலையும் இல்லாமல் சிரித்த  முகத்துடன் பழகுபவன்.
இருபத்தைந்து நாள் இரவும் பகலும்  நடந்து ஆந்திர தேசம் தாண்டி  வங்காள  எல்லை  போயாகி  விட்டது.   இன்னும்  ஒருவாரம் பத்து  நாளில் நடந்து  காசி எல்லை அடையலாம். 

வழியில் அது ஒரு  பஞ்சப்பிரதேசம்.  எங்கும்  எவரும் அடைக்கலம்   கொடுக்கவில்லை .  இருந்த ரொட்டிகளை  நீர் இல்லாத  ஆற்றங்கரை  அருகே  ஒரு சத்திரம் திண்ணையில் அமர்ந்து இருவரும் சாப்பிட்டார்கள்.  
''சரி கிளம்பு போவோம்.''
கொஞ்ச  தூரம் நடந்ததும் ரங்கு    ''சுப்புடு  எனக்கு நடக்க முடியவில்லை. அதோ சில குடிசைகள் தெரிகிறது.  அங்கே எங்காவது ஒரு வீட்டில் சற்று  ஓய்வெடுத்து  விட்டு   தண்ணீர் குடித்து சொம்பில் நிரப்பி எடுத்துக் கொண்டு  வருகிறேன்.நீயும் வருகிறாயா. இல்லை மெதுவாக போய்க்கொண்டிருக்கிறாயா.?'' என்றான் ரங்கு.
சீக்கிரம்  இருட்டிவிடும்.  சரி  நான் மெதுவாக  மேலே நடந்து போய் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் என்னை அடுத்த ஊர்  ராம்பூர் சத்திரத்தில்  வந்து சேர்ந்துகொள். காத்திருக்கிறேன்'' என்றான் சுப்புடு. அவன் வேகமாக நடப்பவன். 

குடிசைகளை நோக்கி நடந்தான் ரங்கு.
ஒரு  சின்ன குடிசை முதலில் தென்பட்டது.  கதவை தட்டினான். ஏழை வீடு. அடுப்பு. மண்சுவற்றில் கிருஷ்ணன் சாமி படம்.  சுவற்றோரம்  ஒரு  பெஞ்ச்.  தலையை அதில்  சாய்த்து ஒரு கிழவி. அவள் மடியில்   ஒரு குட்டி பையன் அழுகிறான்.  ரொட்டி  ரொட்டி  என்று கேட்கிறான். அடுப்பு  பக்கம் தரையில்  ஒருத்தி கண்கள் மூடி  காலை மட்டும்  அசைக்கிறாள்.  வீடு முழுதும்  துர்  நாற்றம்.   கதவு ஓரம்  ஒரு குண்டு ஆள்  படுத்துக்கொண்டு இருந்தான்.  விழித்துக்கொண்டு தான் அசைவில்லாமல் கிடந்தான்.  எழுப்பினாலும்  எழவில்லை.    ஒரு பெண் குழந்தை  அவள்  காலடியில்  சுருண்டு படுத்திருந்தது. சமையல் அறையில்  எதுவுமில்லை.  அடுப்பு எரியவில்லை.    கிழவி மடியில்  அந்த மூன்று வயது பையன்  'ரொட்டி  ரொட்டி பாட்டி''   என்று  அழுதவாறு  கத்திக்  கொண்டிருந்தான்.   கிழவி என்னென்னவோ சமாதானம் சொல்லியும் அழுகை நிற்கவில்லை. 

ரங்கு உள்ளே நுழைந்து  விட்டான்.கிழவி தான்  மெல்லிய குரலில்   '' யாருப்பா  நீ  என்ன வேணும் ?''
''குடிக்க தண்ணீ'' கிடைக்குமா 
''ஒண்ணுமே  இல்லியேப்பா,  கிணத்துல கொஞ்சூண்டு தண்ணி இருக்கு. ஆழமாக அடியிலே இருக்கு. கயிற்றை கட்டி சொம்பில்  கிணற்றில்   மொண்டு  நீயே எடுத்து குடி.  என்னால் எழுந்திருக்க முடியவில்லை''- -  பாட்டி. 
''ஏன் எல்லோரும்  இப்படி படுத்து கிடக்கீங்க ?''
' நாங்க  எல்லோருமே கொஞ்சம் கொஞ்சமாக  செத்துக்கிட்டிருக்கோம் பா.  'சாப்பிட்டு நாலு நாளாச்சு எல்லோரும்.  அது என்  பிள்ளை.    கூலி வேலை எங்கேயும் கிடைக்கல்லே. மார் வலி.  மயக்கத்திலே  கிடக்கான். அதோ தரையில் கிடக்கிறது அவன் மனைவி . ரெண்டு குழந்தைகள்.  இந்த பையனுக்கு பால் இல்லை. அவளுக்கு சோறில்லாமல் மயக்கம்.   சோர்ந்து கிடக்காள் .  சீக்கிரம்  செத்துவிடுவா அவ தான் முதல்லே. உடம்பிலே இன்னும்  உயிர் ஒட்டிக்கிட்டிருக்கு''  அந்த பெண் குழந்தை  என் பேத்தி.7 வயஸு . அது தான் எனக்கு உதவும். அதுக்கு சோறில்லாமல் வயிற்று வலி. தூங்குது. பிச்சை எடுப்போம்.  எங்களால்  ரெண்டு மூணு நாளா  எங்கேயும் போய் ஒண்ணும்  கொண்டு வரமுடியல.  ஊரெல்லாம்  பஞ்சம்.யாரும் எதுவும் தரலை. தண்ணி எடுத்து குடிக்க முடியலே.  இந்த பையன் பசியில்  அழறான். என்ன செய்வேன்?
ரங்கு ''பரமேஸ்வரா'' என்று அடிவயிற்றிலிருந்து குரல் கொடுத்தான். தலைமீதிருந்து மூட்டையை இறக்கி தரையில் வைத்தான். கொஞ்சம்  ரொட்டி  இருந்ததை எடுத்து  எல்லோருக்கும் கொடுத்தான். அந்த பெண்மணி பேச்சு மூச்சில்லாமல் இருந்தாள் . கிழவி, பெண் குழந்தை, பையன், அந்த ஆள் எல்லோருக்கும் கிணற்றில் நீர் மொண்டு கொண்டு வந்து கொடுத்தான். உடலில் கொஞ்சம் தெம்பு வந்தது அந்த ஆளுக்கு.  ரங்கு வீட்டில் தேடினான் ஒரு பொருளும் இல்லை.  வெளியே சென்றான்  சற்று தூரத்தில் ஒரு சிறு மளிகைக் கடை.  அரிசி சக்கரை பருப்பு எண்ணெய்  எல்லாம்  கொஞ்சம் வாங்கினான். சமையல் அறையில்  அவசியமாக தேவையான சில  சாமான்கள்  சேர்ந்தது. வீட்டிற்கு வந்து அடுப்பை மூட்டி கஞ்சி வைத்து  அந்த பெண்மணிக்கு  கொஞ்சம் கொஞ்சமாக வாயில் கொடுத்தான்.   கண் விழித்தாள். கையில் இருந்த ரொட்டிகளையும் , வேகவைத்த  உருளைக்கிழங்குகளை யும்  கொடுத்து  எல்லோருக்கும்  உயிரூட்டி
னான்.  நண்பன்  சுப்புடு பற்றிய நினைப்பு வந்தது. 

அட விஸ்வநாதா,   காசி யாத்திரை செல்ல கிளம்பினோம்.  எப்படி போவது?  இந்த நிர்க்கதியான குடும்பத்தை விட்டு செல்ல மனம் இடம் கொடுக்க வில்லையே?   ஊரெங்கும் பஞ்சம்.  சேர்த்து வைத்த தானியம்  காலி. பசி.    உதவினவர்களும் ஏழைகள். வேறே  வழியில்லாமல் பட்டினி.  பிச்சை எடுக்க வழியில்லை.  கிழவிக்கு  தெம்பில்லை.  முடிய வில்லை.  மனைவி  வியாதிக் காரி. 

நான்காவது நாள்  அந்த  வீட்டுக்காரி ஒருவழியாக எழுந்தாள்.   சமைத்தாள் .  எல்லாரும்  அரைவயிறு உண்டார்கள்.   நான் போய்  ஏதாவது சாமான்கள்  வாங்கி  வருகிறேன். சாப்பிடுவோம்.

'' நாளை சாயந்திரம் நான்  இங்கிருந்து  காசிக்கு போகலாம் என்றிருக்கிறேன்''  என்றான்  ரங்கு   அந்த பெண், வீட்டுக்காரன்,  கிழவி, குழந்தைகள் அனைவருமே அவனை தெய்வமாக பார்த்தார்கள்.   பால்  வாங்கினான்.  கோவிலுக்கு போனான்.

எப்படி இவர்கள் வாழ்வு நடக்கும்? .  நான் போனால் யார் உதவி  செய்வார்கள்? . எப்படியோ அவர்கள் அடமானம் வைத்த நிலத்தை மீட்டுக் கொடுத்தான். வட்டி  கட்டியதில் கைப்பணம் கொஞ்சம் கரைந்தது.  ரங்கு நினைத்தபடி மறுநாளும் போக முடியவில்லை.  ஒரு  பசு அடுத்த ஊரில் பாதி விலைக்கு  யாரோ  விற்றார்கள். அதை வாங்கி வந்தான்.  புல் தேடி சேகரித்து வந்து பசுவுக்கு போட்டான்.  தொட்டியில் தண்ணீர் கொடுத்தான். பால் கறந்து குழந்தைகளுக்கு கொடுத்தான்.
அடுத்த நாள் காலை  கிளம்பும்போது அந்த சின்ன பையன் '' தாத்தா தாத்தா   போகாதே''  என்று காலை கட்டிக்  கொண்டான்.அந்த பெண் கையைப்  பிடித்துக்கொண்டு உள்ளே இழுத்தது.
ரங்கு தோட்ட வேலையில் நிபுணன் அல்லவா. எப்படியோ அதிகம் தண்ணீர் தேவையில்லாத பயிர்கள் வீட்டில்  வளர வைத்தான். பசி அடங்கிய குடும்பம் வேலை செய்ய உதவியது.  ஒரு கட்டை கைவண்டி  வாடகைக்கு எடுத்து  சாமான்கள் வாங்கி விற்றான். அந்த வீட்டுக்காரன்  சாமான்கள்  விற்று பணம் கொண்டுவந்தான். 
கிழவி அந்த வீட்டுக்காரிக்கு உதவினாள் . வீட்டு வேலைகள் செய்து ரெண்டு பெண்களும் காசு கொண்டுவந்தார்கள். சாமான்கள் வாங்க முடிந்தது. துணி கொஞ்சம் வாங்கி கொடுத்தான் ரங்கு. 

அவன் வந்து பதினைந்து நாள் ஆகிவிட்டது. அவர்கள் தன்னை விடமாட்டார்கள் என்று புரிந்து கொண்டான். அடுத்த நாள் விடியற்காலை அவர்கள் எல்லோரும் தூங்கும்போது மூட்டையை எடுத்துக்கொண்டு  கிளம்பினான் ரங்கு.  மூன்று நாள் ஆகிவிட்டது. எங்கோ ஒரு சத்திரத்தில் அமர்ந்து  கையில் இருக்கும் பணத்தை  எண்ணினான். ஆயிரம்  ரூபாய் கொண்டுவததில் மீதி    84  ரூபாய் தான் இருந்தது. 

''எப்படி காசிக்கு போவது? அங்கிருந்து ஊர் திரும்புவது?நாம் ஒன்று  எண்ணினால் ஈஸ்வரன் வேறு நினைத்திருக்கிறான். என்னால் இந்த காசை வைத்துக்கொண்டு வெளியூர் செல்வதோ பல நாள் தங்குவதோ முடியாது. என்னவோ பகவான் அந்த ஏழை வீட்டில் அவர்களுக்கு பரோபகாரம் செய்ய ஒரு சந்தர்ப்பம்  அளித்தான். அவனருளால் அவர்கள் மீண்டும் தலை தூக்க உதவியது திருப்தியாக இருக்கிறது.  போதும்.அடுத்த வருஷம் முடிந்தால் காசி போகலாம். சுப்புடு கொடுத்து வைத்தவன். புண்யாத்மா . நான் மஹா பாவி. என் விதி''.   

ஊர் நோக்கி நடந்தான் ரங்கு.  சுருக்கு வழியில்  யார் யாரோ வழியில் கொண்டுவிட,  ஒரு குதிரைவண்டிக் காரன் உதவ  சீக்கிரமே  பதினான்கு நாளில் ஊர் திரும்பினான்.

''என்ன அதற்குள் வந்துவிட்டீர்கள்?''  என்றாள் மனைவி. ரங்கு யாரிடமும் நடந்ததை சொல்லவில்லை. கையில் பணம் காணாமல் போய்விட்டது.  மேற்கொண்டு காசி போக பயமாக இருந்தது. வந்துவிட்டேன்'' என்ற .  அவனை திட்டினார்கள்.   ''இதற்கு கூட உனக்கு துப்பு இல்லை'' . என்று ஏசினார்கள். பேசாமல் வாங்கிக்கொண்டான்  ரங்கு.  சுப்புடு மனைவி  விஷயம்  கேள்விப்பட்டு வந்தாள் . 

''எங்கே சுப்புடு ? எங்கு கேட்டாள் .  
''வழியில் பிரிந்து விட்டோம். அவன் காசிக்கு சென்று தரிசனம் முடித்து கங்கை நீர் கொண்டுவருவான்.   காசி விஸ்வநாதன் தரிசனம் கிடைக்க கொடுத்துவைத்தவன், எனக்கு கைப்பணம் காணாமல் போனதால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை'' 

சுப்புடு மனைவியும்  அவனை கேலி செய்தாள்.ரங்குவின் மனதில் காசி விஸ்வநாத தரிசன ஏக்கம் ஒருபுறம்.  ஒரு முன்பின் தெரியாத குடும்பத்தை காப்பாற்றிய சந்தோஷம் மறு பக்கம்.  

இரண்டு மாதம் கழித்து ஒருநாள் சுப்புடு  கங்கை நீர், பிரசாதம், அங்கே கிடைத்த படங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பினான்.
''ரங்கு எங்கே வந்துவிட்டானா?  என்றான் ரங்குவின் மனைவியிடம்.
''அவர் காசிக்கு போகவில்லை, ரெண்டுமாதம் முன்பே பாதிவழியில் திரும்பி வந்து விட்டார். கைப்பணத்தை வழியில்  எங்கோ கோட்டை விட்டு விட்டார். உங்களோடு சேர்ந்து கொள்ள முடியவில்லை '' என்றாள் .

சுப்புடு நடந்தை திரும்பி எண்ணினான்.
''தண்ணீர் குடித்து ஓய்வெடுத்து விட்டு  உன்னை வந்தடைகிறேன் என்று சென்ற ரங்குவிற்காக  ரெண்டு நாள் ராம்பூரில் காத்திருந்து,  ஒருவேளை முன்பாக நடந்து சென்றுவிட்டானோ என்ற  ஐயத்தில்,   காசி  வரை  சென்றுவிட்டான் சுப்புடு அங்கே யாரைக் கேட்டாலும் தெரியவில்லை, எங்கும் காணவில்லை.  சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதனை காண பெரிய கூட்டம்.  அதில் முண்டியடித்துக்கொண்டு  சுப்புடு ஒரு இடம் பிடித்து விஸ்வநாத தரிசனம் செய்த போது தான்  வழுக்கை மண்டையோடு கருப்பு கம்பளி போர்த்தி,   ரங்கு முதல் வரிசையில் விஸ்வநாதன் முன் நின்று இரு கைகளை  தூக்கி தரிசனம் செய்வது  தெரிந்தது. ''அட இவன் எப்படி எனக்கு முன்பே வந்தான்? யாராவது உதவி இருப்பார்கள். அருகே சென்று சேர்ந்து கொள்ள முயன்றபோது நகர வழியில்லை.  கூட்டத்தில் வழுக்கை மண்டை மறைந்தது.  அடுத்த நாள் கங்கையில் குளிக்கச்சென்றபோது  அங்கே  தூரத்தில்  ஒரு படகில் வழுக்கை மண்டை, அதே தாடி,  நீள முகம். கருப்பு  கம்பளி.  ரங்கு தான். இவன் எப்படி கங்கையில் எனக்கு முன்பு?  கூப்பிட்டான்  சப்தத்தில்  ரன்குவின் காதில் அழைத்தது விழவில்லை.  அடுத்த சந்திப்பு  அன்னபூரணி தரிசனத்தில் எல்லோருக்கும் கைநிறைய  பிரசாதங்கள் வழங்கிக்  கொண்டிருந்தான் ரங்கு.  அருகே செல்ல முடியாத  கும்பல். கடைசியாக  அவன் ரங்குவை  பார்த்தது  விஸ்வநாத  ஆலய  ப்ரதக்ஷிணத்தில்   சிறிய சந்து ஒன்றில்   ரங்குவை சுற்றி   அநேகர் தேவாரம் சிவஸ்தோத்ரம் பாடிக்கொண்டு சென்றார்கள்.  ரங்கு பிரதானமாக நடுவே பாடிக்கொண்டு  சென்றான். அவனை அணுகுவது இயலாத காரியம்.

சுப்புடு திரும்பியபோது அவர்கள் பிரிந்த ஊர் வழியாக வந்தான் அந்த சிறிய குடிசைவீடுகள் கண்ணில் பட்டது.  எப்படியோ ரங்கு தண்ணீர் கொண்டுவருகிறேன் என்று சொல்லி சென்ற வீடு கண்டுபிடித்தான். கிழவி, அந்த வீட்டுக்காரன், அவன் மனைவி, குழந்தைகள் அனைவரும்  அவன் கேட்ட கேள்விக்கு சரியான பதிலளித்தார்கள். இப்போது பஞ்சம் நீங்கி ஊர்  சுபிக்ஷமாக இருந்தது.  பச்சை  பசேல் என்று ரங்கு பயிரிட்ட செடி கொடிகள் கண்ணில் பட்டது.  ரங்கு மனித உருவில் தெய்வம் அவர்களை பொறுத்தவரை.  தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்டு நுழைந்தவன்  அந்த உயிர்களை ரக்ஷித்து  வசதிகள் செயது கொடுத்து  ஒரு நாள் காலை அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிட்டதை  கண்ணீர்மல்க கூறினார்கள்.

ஊர் திரும்பி சென்ற சுப்புடு  ரங்குவை சந்தித்தபோது  அவன் ஆர்வமாக  '  என்ன சுப்புடு சௌக்யமாக   வந்தாயா.  விஸ்வநாத தரிசனம் கிடைத்ததா?   என்று  ஏக்கத்தோடு கேட்டபோது.  அவனை விஸ்வநாதர் சந்நிதியில், கங்கையில், ஆலயத்தில்,  ப்ரதக்ஷிணத்தில் எல்லாம் சந்தித்ததை சுப்புடு  ஆச்சர்யோத்தோடு விவரித்தான். ''  

'' என்ன உளறுகிறாய்.  யாரையோ பார்த்திருக்கிறாய்.  எனக்கு ஏதப்பா அந்த பாக்யம். முடிந்தால் அடுத்த வருஷம் ஆயிரம் ரூபாய்  சேர்ந்தவுடன். இல்லையேல் அடுத்த ஜென்மத்தில்  தான் விஸ்வநாத தரிசனம் ''என்று தான் என்று ரங்கு முணுமுணுத்தான்.

(லியோ டால்ஸ்டாய் எழுதிய '' இரு கிழவர்கள்'' (TWO OLD MEN)  என்ற ரஷ்ய கதை.  அவர்கள் சென்றது இயேசுவை  தரிசிக்க,ஜெருசலேம்,  பெத்லஹெம்'' .  கதை மூலக்கருத்து  ஒன்றே.  தமிழ் படுத்தும்போது  சுப்புடு ரங்கு, காசி விஸ்வநாதன், ஏழைகள் ஆள் மாற்றி இருக்கிறேன் )

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...