Wednesday, June 12, 2019

LALITHA SAHASRANAMAM




                      ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(735-749 )   -     
                                               J.K. SIVAN


मिथ्या-जगदधिष्ठाना मुक्तिदा मुक्तिरूपिणी ।
 लास्यप्रिया लयकरी लज्जा रम्भादिवन्दिता ॥ 142॥

மித்யா ஜகததிஷ்டானா முக்திதா, முக்திரூபிணீ |
லாஸ்யப்ரியா, லயகரீ, லஜ்ஜா, ரம்பாதி வம்திதா || 142 ||

भवदाव-सुधावृष्टिः पापारण्य-दवानला ।
 दौर्भाग्य -तूलवातूला जराध्वान्त-रविप्रभा ॥ १४३

பவதாவ ஸுதாவ்றுஷ்டிஃ, பாபாரண்ய தவானலா |
தௌர்பாக்யதூல வாதூலா, ஜராத்வாம்த ரவிப்ரபா || 143 ||

 भाग्याब्धि-चन्द्रिका भक्त-चित्तकेकि -घनाघना ।
 रोगपर्वत -दम्भोलिर् मृत्युदारु -कुठारिका ॥ १४४॥

பாக்யாப்திசம்த்ரிகா, பக்தசித்தகேகி கனாகனா |
ரோகபர்வத தம்போளி, ர்ம்றுத்யுதாரு குடாரிகா || 144 ||
                                           
          லலிதா ஸஹஸ்ரநாமம் - (735- 749 ) அர்த்தம்

* 735 *  மித்யா ஜகததிஷ்டானா  -  நாம்  இருப்பதோ மாயா லோகம். அதில்  நிரந்தரமான அம்பாளை நினைப்பதோ வணங்குவதோ அவளருள் நாடுவதோ நாம் செய்த பூர்வ ஜென்ம பாக்யம் . மாயையை தோற்றுவிப்பதே  அவள் தான்.  ப்ரஹதாரண்யக உபநிஷத் (IV.iv.19) ல் என்ன சொல்கிறது என்றால்:  மனதினால் தான் பிரம்மத்தை அறியமுடியும்.  அதை விட்டு விலகாத ஏகாக்ர  சிந்தனை வேண்டும். அம்பாள் மாயையாக தோன்றுகிறாள். இந்த பிரபஞ்சமே பிரம்மத்தின் வெளிப்பாடு. மாயையால் சூழ்ந்தது என்று அறிந்துகொண்டால் போதும்.

 736 * முக்திதா -  மோக்ஷம்  தருபவள்  அம்பாள்.  எவருக்கு  தகுதி பெறமுடிகிறதோ அவர் பெறலாம். தடையே இல்லை.  முயற்சிக்க வேண்டாமா?  முக்தி கர்மவினையோடு சம்பந்தப்பட்டது.  கர்மவினைப்பயனை மீறி முக்தி பெற வழியில்லை.  கர்மபந்தங்களை விலக்கிக்கொள்ள அவள் அருள் பெறலாம். அதனால் முக்தி பெறவும் வாய்ப்புண்டு  அல்லவா?

* 737 *  முக்திரூபிணீ   -  மோக்ஷ ஸ்வரூபமானவளே  ஸ்ரீ லலிதாம்பிகை தான். வேத சாஸ்திரம் கற்றுவிட்டால் மோக்ஷம் கிடைக்கும்  என்பது பகல் கனவு.  அது மோக்ஷசாதனத்துக்கு அவசியம் என்பது உண்மை. அதுமட்டுமே  போதாது.  ஆத்ம ஞானம்  அவசியம்.  பரமாத்மாவை  உணரும் நிலை பெறவேண்டும். இதற்கு கைவல்யம்  என்று ஒருபெயர். அம்பாளுக்கு  கைவல்ய பல தாயினி என்று ஒரு பெயர்  என்று முன்னமே  குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும் கீழே தருகிறேன் 


*625* கைவல்ய பததாயினீ -- ஒவ்வொரு ஜீவனின் கடைசி மரணாந்த காலம் தான் கைவல்யம். அந்த நேரம் அவனோடு, அவளோடு, எந்த உறவும், நட்பும் இல்லை. அவன் தனியாக செல்கிறான். அவனது செயல்களும் எண்ணங்களும் தான் அவனை கடத்திச் செல்லும். ஆன்மா அந்த உடலை விட்டு என்ன விநாடியும் பிரியும். இது தொடர்ந்து கொண்டே போய் ஆன்மா பிரம்மத்தை, பரமாத்மாவுடன் சேர்வது, ஆகவே கைவல்யத்தை முக்தி என்றும் சொல்லலாமே. இந்த பிறவாமையை தருபவள் ஸ்ரீ லலிதாம்பாள் என்கிறது இந்த நாமம். கைவல்யம் என்பது நான்கு பதங்களை (சாலோக்ய, சாரூப, சாமீப, சாயுஜ்ய பதங்கள் )தாண்டியது.  
கைவல்ய பதம்  என்பது சாங்கிய யோகத்தில் உபயோகப்படும் பதம்.  அத்வைதிகள் முக்தி என்பார்கள். அஞ்ஞானம் அகன்று ஞானம் பெற்ற நிலை. முக்திக்கு மோக்ஷத்திற்கும் வித்யாசம் உண்டு. மேலே சொன்ன  சாலோக்ய, சான்றோரை, சாயுஜ்ய பதவிகள் போல் தனியானதொன்று முக்தி நிலை.  மோக்ஷம் என்பது பகவானோடு ஒன்றரக்கலந்த நிலை.மோக்ஷமடைந்தவன்  பிறப்பு  இறப்பற்றவன்.

* 738*  லாஸ்யப்ரியா -  பெண்கள் ஆடுவது நாட்யம். சங்கீதம், நட்டுவாங்கம், தாள வாத்யங்களோடு சேர்ந்து ஆடுவது. ஸ்ரீ லலிதாம்பாள் சங்கீத நாட்யப்ரியை என்பதை லாஸ்ய ப்ரியா என்ற இந்த நாமம் உணர்த்துகிறது.

* 739 *  லயகரீ-   நாட்யத்தையும்  சங்கீதத்தையும்  இணைக்கும் பாலம் தான் அம்பாள் ஸ்ரீ லலிதா. ஸ்வரம் தான் அப்பா, லயம் தான் அம்மா என்று ஒரு வாசகம் உண்டு.  லயம்  சங்கீத ஞானத்தை உடன் சேர்ந்த தாள வாத்யத்தோடு  இணைத்து அனுபவிப்பது ரசமான அனுபவம்.  அனுசரித்து  அதை வெளிப்படுத்துவது.
தியானத்திற்கும் அப்பாற்பட்டது லய நிலை.  சங்கீத தேவதைகளுடன் ஒன்றிய நிலை.  தான் என்ற உணர்வு கரைந்து தெய்வீகமான இசையுடன் கலப்பது பற்றி சிவசூத்ரம் (III.31)  ''ஸ்திதி லயவ் '' அதாவது  பரமேஸ்வரனின் சக்தி விரிந்தும் சுருங்கியும்  பிரபஞ்சத்தை ஆளுமை செய்வது. இதை தான்  ''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே '' என்று ஒரு பாட்டில் கேட்டோம். சிவசக்தி.

* 740 * லஜ்ஜா -  நாணம்  மிகுந்தவள்  அம்பாள்.பெண்மைக்குரிய பண்பு.  அம்பாளை தனியே உபாசிப்பது இதனால் தான். அம்பாள் கூட்டம்  ஆரவாரம் கோஷ்டியை விரும்பாதவள் . தனி மனது நினைப்பதை அறிபவள். 

* 741 * , ரம்பாதி வந்திதா  -  ரம்பை, மேனகை, ஊர்வசி திலோத்தமை போன்ற  தேவலோக  அரம்பையர் வணங்கும் தெய்வம் அம்பாள்  என இந்த நாமம் அறிவிக்கிறது.   ரம்பை குபேரன் மகன் நள குபேரன் மனைவி.  ராவணனால் ஒருமுறை கடத் தப்பட்டவள்.  ராவணனுக்கு  கடத்தல் புத்தி அடிக்கடி தோன்றும் போல் இருக்கிறது.  ரம்பைக்கு கௌரி என்றும் பெயர் உண்டு.  அவள் அழகை இது பறைசாற்றுகிறதே.

* 742 * பவதாவ ஸுதாவ்றுஷ்டிஃ,    --பொருள் விரும்பி  ஆசையில் மூழ்கி தவிக்கும், பரிதவிக்கும்  மானிட வாழ்க்கை எனும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டவனுக்கு  தேன்மழையாக  அவன் தாபத்தை போக்குபவள் அம்பாள் என்று இந்த அற்புத நாமம் சொல்கிறது.  பவம் தான் சம்சாரம் தாவம் என்றால் காடு .


* 743 * பாபாரண்ய தவானலா  -  ஒரு அருமையான நாமம் இது.  பாபக் காட்டுத்தீ.    பாபங்களை சுட்டெரிப்பவள்.  பாபநாசினி என்கிறோமே.அது 

* 744 *தௌர்பாக்யதூல வாதூலா-  துரதிஷ்டம் என்ற   இலவம்பஞ்சை சூறாவளிக்காற்றாக பறக்கவிடுபவள் அம்பாள் என்ற நாமம்.  நமது  பூர்வ ஜென்ம வினைப்பயன் தான் பஞ்சு மூட்டை  இங்கே. 

* 745 *  ஜராத்வந்தர விப்ரபா-   விருத்தாப்பியம், என்ற முதுமையின்  இருளை விழுங்கும்   சூரிய ஒளி சக்தி அம்பாள் என்கிறது இந்த நாமம்.   அழியக்கூடியது  உடல்.  என்றும் ஒளிவீசி திகழ்வது  ஆன்மா. அழியக்கூடியவை மீது  ஆசை வைக்கும்  உடல் தானும் அழிந்து போகிறது.  ஆகவே தான்  அழிந்துகொண்டிருக்கும் இந்த உடலின் ஒரு அறிவிப்பு தான்  முதுமை, விருத்தாப்பியம், வயோதிகம். அதை உணர்ந்து கொள் எகிறது  இந்த நாமம்.

* 746 * பாக்யாப்திசந்திரிகா  -  அதிர்ஷ்டம் எனும் கடலுக்கு ஒளி வீசும் பிரகாசம் தான் அம்பாள் எனும் முழுநிலா.சில இடங்களில் அம்பாளை சூரியனுக்கு சாப்பிட்டோம். முழுநிலவும்  அவளே.

* 747 *பக்த சித்த கேகி கண கணா  -  பக்தனின் மனது தான்  அழகிய தோகை விரித்தாடும் மயில். அம்பாள் அதை ஆடவைக்கும் கருமுகில்.

* 748 *ரோகபர்வத தம்போளி  -  இந்திரனின் கையில் உள்ள  ஆயுதம்  வஜ்ராயுதம். அது மலைகளை பிறந்துவிடும். ஸ்ரீ லலிதாம்பிகை  அப்படிப்பட்ட  ஒரு  வலுமிக்க  ஆயுத மாக பக்தர்களின் உடல் மன  வியாதிகளை, நோய்களை, வலிகளை போக்குபவள்.

* 749 *  ம்ருத்யு தாரு குடாரிகா-  மரணம் எனும் தொடர்ந்து வளரும்  மரத்தை வெட்டி வீழ்த்தி சாய்க்கும்  கோடாலி தான்  அம்பாள் ஸ்ரீ லலிதை என்று இந்த அழகிய நாமம் சொல்கிறது.  மரணம் தான் ஒருவனை அதிக அளவு பயமுறுத்துகிறது.  அதை நீக்கும் கருவி அம்பாள்.  மரணத்தை எவர் விலக்கமுடியும்?  ஏன் பயம்? வரும்போது வந்துவிட்டு போகட்டுமே? பயத்திற்கு காரணம். இன்னும் ஆசை, அதை துய்க்க விருப்பம், பாசம், நேசம், பொறாமை, பேராசை எல்லாம். அறியாமையால் உண்டாவது எல்லாமே.


சக்தி பீடம்:            
                               கொல்லூர் மூகாம்பிகை.

மிகவும்  சக்தி வாய்ந்த அம்பாள் மூகாம்பிகையை தரிசிக்காத ஹிந்து இல்லை எனலாம். கொல்லூர்  கர்நாடகாவில் உள்ள ஒரு முக்கிய க்ஷேத்ரம்.  சிவனிடம்  வரம்பெற்ற  கௌமாசுரன் எல்லோரையும் துன்புறுத்திவந்தான். அவர்கள் துன்பம் தவிர்க்க  அசுரகுரு சுக்ராச்சாரியார் அவன் ஒரு பெண்ணால் கொல்லப்படுவான் என்று கூறுகிறார். பார்வதி தேவியே  பெண்ணாக இதற்கென தோன்றுவாள் என்று சொல்கிறார். மிகவும் கடினமாக தவமிருந்து வரம் பெரும் நிலையில் அம்பாளுக்கு தெரிகிறது இந்த அசுரன் நேரம் கேட்டு பெற்றால் உலகத்துக்கு நாசம் என்று.  எனவே  தவப்பயனாக சிவன் தோன்றி வரமளிக்கும் சமயம் அம்பாள் கௌமாசுரனை  பேச்சற்ற ஊமையாக்குகிறாள்.  மூகம் என்பது பேசாமை. ஊமை.
கௌமாசுரன் மூகாசுரன்  ஆகிவிட்டான். கொல்லூரில்  அம்பாள் அவனை கொல்கிறாள் மூகாம்பிகை என்று எல்லோராலும் வணங்கப்படுகிறாள். அந்த இடத்திற்கு  ''மரண கட்டே'' என்று கன்னடத்தில் பெயர்.  அம்பிகைக்கு இங்கே  சங்கு சக்கரம் கைகளில் உண்டு.  பத்மாசனத்தில் அமர்ந்த கோலம்.
கொல்லூர் சிவன் ஸ்வயம்பு லிங்கம். சிவனோடு சேர்ந்த சக்தி என்பதால் கொல்லூர் தேவி அபார சக்தி படைத்தவள்.  இன்னொரு விசேஷம் இங்கே  அம்பாளுடன் சேர்ந்த சக்திகள்  ப்ரம்ம விஷ்ணு சிவன், லட்சுமி சரஸ்வதி பார்வதி.  ஆதி சங்கரர் ஸ்தாபித்த சக்தி பஞ்சலோக அம்பாள்  இங்கே என்பார்கள். 
சௌபர்ணிகா நதியின் கரையில் யந்த்ரம்  பிரதிஷ்டை செய்து  ஸ்தாபித்து  அம்பாளின் சர்வ சக்தி அங்கே வியாபித்து இருக்க செய்ததாக சொல்வார்கள்.

1200 வருஷ கோவில் இது.  ராணி சென்னம்மா கட்டினது . ஆலயத்தில்  அம்பாள் சந்நிதி தவிர  லட்சுமி  மண்டபம்  நான்கு   ஸ்தம்பங்கள் (135  அடி )  கொண்ட நீளமான மண்டபம். தூண்களில் சிற்பங்கள் ஏராளம்.
ஆமை முதுகில் நிற்பது போல் ஒரு உயர தீபஸ்தம்பம். 21 வட்டங்கள் கொண்டது.
வெளிப்பிரகாரத்தில்  முருகன், சரஸ்வதி,  ப்ராணலிங்கேஸ்வரர், ப்ராணதார்த்தீஸ்வரர் , வீரபத்திரன்  ஆகியோருக்கு சந்நிதிகள்  

சுற்றுலா செல்பவர்கள் அவசியம்  சென்று தரிசிக்கும் ஒரு ஆலயம். உடுப்பியிலிருந்து 73 கி.கே. முருதேஸ்வரிலிருந்து 60 கி.மீ. மங்களூரிலிருந்து 133 கி.மீ.  குடஜாத்ரி மலைச்சிகர கோவில்.  பரசுராமர் ஸ்தாபித்த  7 முக்தி ஸ்தலங்களில்  இது ஒன்று.  நிறைய பேரை நான் அழைத்து சென்றிருக்கிறேன்.  தமிழக முன்னாள் முதல்வர்  எம்.ஜீ ஆர்.   மூகாம்பிகை பக்தர்.  ஒரு சமயம்  ஒரு  தங்க வாள் அம்பாளுக்கு சாற்றி இருக்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...