ஐந்தாம் வேதம் - J K SIVAN
பகவத் கீதை -குண த்ரய விபாக யோகம்
14 முக்குணம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் பகவத் கீதையை தொட்டதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்ம ஞானிகளாக மாறி வருகிறோமா இல்லையா? எதனால்? நம்முடைய சீரிய முயற்சியால்? அறிந்து கொள்ளவேண்டிய விஷயத்தில் அக்கறை காட்டியதால். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அதன் வழியில் கட்டுப்படுத்திக் கொள்வதால்.
கீதையை விட்டு மஹா பாரத கதையை மட்டும் நான் சொல்லிக்கொண்டு போனால் எவ்வளவு பெரிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன்? மஹா பாரதத்தை குழந்தைகளுக்கு கதையாக எழுதும்போது எனக்கே ரெண்டு மனசாக இருந்தது. கீதையை இதில் சேர்ப்பதா, வேண்டாமா, எழுதுவதா விடுவதா? என்று. உடலும் உள்ளமும் தளர்ந்து போன அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அப்போது பகவத் கீதையை உபதேசித்தார் என்று காமா சோமா என்று சில பாராவில் சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்ள மனசு இடம் கொடுக்க வில்லை. ஆழம் தெரிந்து தான் காலை விட்டேன். எனக்கு இருந்த ஒரே சங்கடம். கீதையை சரியான அர்த்தத்தோடு சொல்லவேண்டுமே. எங்காவது பிசகி விட்டால் என்னை நம்பி படிக்கும் ஆயிரம் லக்ஷம் வாசகர்களை தவறான வழியில் கொண்டு சென்ற பாபத்துக்கு ஆளாவேனே!
என்னை சரியான பாதையில் சொல்ல கை தூக்கி விட்டவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ வினோபா பவே. அவரது '' கீதா ப்ரவசனம்'' என்ற ஆங்கில புத்தகத்தை கிடைத்தால் படித்துப் பாருங்கள். நிறையவே புரியும். மற்ற உதவியாளர்கள் ஸ்ரீ ராஜாஜி, பாரதியார், விவேகானந்தர், காந்தி, கண்ணதாசன், அரவிந்தர், சுவாமி சின்மயானந்தா.
எல்லோரிலும் பிரத்யேகமாக அருள் புரிந்தவர் அந்த ஸ்ரீ கிருஷ்ணனே. ''கிருஷ்ணா, உன் உபதேசத்தை நான் ஒழுங்காக புரிந்து கொள்ள உன் ஆசியே அதிகம் தேவை'' என்று தான் தொடங்கினேன்.
இந்த கட்டுரையில் கீதையின் பதினான்காம் அத்யாயம் அறிந்து கொள்ளப் போகிறோம்.
ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப் படைப்பது அவனது குணம். அது மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளது. சத்வம், ரஜஸ், தமஸ் என்று. எதையுமே செய்ய அவசியமில்லாத ஆத்மாவை இந்த மூன்றும் பின்னி இழுத்துக் கொண்டு போகும் தன்மையுள்ளவை. . உடலோடு ஒட்டாமல் ஆன்மா தனியே இயங்கும்போது சர்வ ஸ்வதந்தரனாக இருக்கிறான். புலனை அடக்க விவேகமும் வைராக்யமும் அவசியம். இந்த புலனடக்கத்தை 'திதீக்ஷை' என்று வடமொழி பெயரில்
அறிந்திருப்பீர்கள்.
மேலே சொன்ன மூன்று குணங்களும் சகல உயிர்களிலும் .உள்ளது. ஒவ்வொரு கணத்திலும் ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று உயர்ந்து மனிதனை விடாமல் ஆட்டுவிக்கிறது. அடுத்த கணமே மற்றொன்று அதை கீழே இழுத்து தள்ளிவிட்டு தான் மேலே சென்று அவனை கையாள்கிறது. இப்படிப்பட்ட மாறி மாறி தோன்றும் குணங்களால் தான் ஒவ்வொரு மனிதனையும் நாம் அவன் எப்போது எப்படி இருப்பான் என்று சொல்லவே முடியவில்லை. எந்த குணம் உச்சத்தில் இருக்கிறதோ அதன் படி தான் அவன் நடந்துகொள்வான்.'' அவன் என்னப்பா குணங்கெட்ட ஆளா இருக்கான்? அன்னிக்கு ரொம்ப நல்லா பேசினான் நடந்துக்கிட்டான், இன்னிக்கு கம்ப்ளீட்டா மாறிட்டானே' என்று சொல்வது இதைத்தான்.
தமஸ் என்னும் தமோகுணம் சோம்பலையும், மெய்மறதியையும், தூக்கத்தையும் மனிதனுக்கு அமோகமாக அளித்து அவனை உதவாக்கரை யாக்குகிறது. முறைப்படியான திட்டத்தோடு, விடாத உடலுழைப்பால் தமோ குணத்தை தவிர்க்கலாம். அளவான உணவு, அளவான தூக்கம் இதை கட்டுப் படுத்தும். ஆரோக்கியம் மட்டுமில்லை, அறிவு ஒளியும் அதிகரிக்கும். சோம்பல் கிட்டவே வராது.
ரெண்டாவதான இந்த ரஜோ குணம் இருக்கிறதே அது ஒருவிதமான எதிரி. அதன் குணாதிசயம் என்ன தெரியுமா? எண்ணற்ற செயலில் நம்மை ஈடுபட வைக்கும். பேராசைப் படவைக்கும். அமானுஷ்ய செயல்களை செய்விக்க தூண்டும். கோபம், தாபம், உணர்ச்சிகளை அள்ளிக்கொண்டு வந்து நம்மிடம் தள்ளும். இதால் கர்மப் பற்று அதிகரிக்காதா? ஒருபக்கம் தமோ குணம் அவனை இழுக்க மற்றொரு கையை பிடித்து ரஜோ குணம் இழுக்க இருதலைக் கொள்ளி நிலை மனிதனுக்கு . எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? மாறி மாறி வரும் எண்ணங்களால் அலைக் கழிந்து எதை செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறோம். எடுத்ததில் எல்லாம் தவறுகள், அவசர முடிவுகள், எதிர்பார்ப்புகள் வேறு சேர்ந்து நிம்மதியை குலைக்கும். ஸ்வதர்மம் காற்றில் போய்விடும்.
ஒரு உதாரணம். அவரவர் தமது ஸ்வதர்மத்தில் உண்டான காரியத்தில் மனம் திளைத்து செய்யும் கர்மம் எப்படி என்றால் நிலத்தை பண் படுத்தி விதை விதைப்பது போல். நல்ல பலனை கொடுக்கும். ரஜோகுண காரியங்கள் விதைகளை காற்றில் வீசி எறிவதைப் போல. பயனற்று பலனற்று போகும். ஸ்வதர்ம கர்மம் ஒவ்வொரு மனிதனோடும் கூடவே பிறந்தது. அக்கரைக்கு இக்கரை பச்சை என்று மற்றவன் ஸ்வதர்மத்தை எப்போதும் நம்முடன் ஒப்பிட
வேண்டாம். ரஜோகுணம் கையிலிருக்கும் களாக் காயை விட்டு விட்டு எங்கோ தொங்கும் பலாக்காயை நாட வைத்து ஏமாற்றும். ரஜோ குணம் புரிய இது போதும் இப்போதைக்கு.
இனி மூன்றாவதான சத்வ குணம் பற்றி கொஞ்சம்.
தமோ ரஜோ குணங்களை விட சத்வ குணம் சிறந்தது. அதையும் மெதுவாக ஆன்மாவிலிருந்து பிரிப்பது தான் ஞானம். கண்ணாடியில் முகம் பளிச்சென்று தெரியவேண்டுமானால் கண்ணாடியை முதலில் சுத்தமாக துடைக்கவேண்டும். இது தான் தமோ ரஜோ குணங்களை அகற்றுவது. பாதரச விளக்கிலோ, பெட்ரோமாக்ஸ் விளக்கிலோ, வெளிச்சம் கண்ணை கூசாமல் இருக்க வெண்மையாக அதன் கண்ணாடி மீது வண்ணம் பூசுகிறார்களே அது தான் சத்வ குணம் ஆன்மாவை ஆக்ரமிக்காமல் பார்த்துக் கொள்வது.
சத்வ குணத்தை விடாமல் பிடித்து நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக்க பயன் அளிக்கும். சர்க்கரையாக இருந்தாலும் அளவு மீறக் கூடாதே. யார் யார் டெலிபோன் நம்பரோ நினைவில் இருக்கும். பாக்கெட்டில் இருக்கும் நமது மொபைல் நம்பர் மட்டும் கவனத்தில் இருக்காது. அது போல் சத்வ குணத்தை ம் எப்போதும் நம்மிடம் இருத்திக் கொண்டால் அதைப் பற்றிய கர்வம், அகம்பாவம் அகன்று விடும்.
மூச்சு விடுகிறோமே அது இடைவிடாது நம்மைக் கேளாமலேயே நடக்கிறது. அது மிக மிக மிக அவசியம் இல்லையா?. எனினும் அதைப் பற்றி நாம் கொஞ்சமும் நினைப்பதில்லை, பேசுவதில்லை. அதை கண்டுகொள்வதில்லை. அதுபோல் சத்வகுணம் இரண்டற நம் ஆத்மாவோடு கலந்தால் அது தனது அடையாளம் இன்றி போய் விடும். 'வாழை மரம் படித்த தில்லை கனிகொடுக்க மறந்ததா' என்பார் கண்ணதாசன். மாமரம் எண்ணற்ற இனிய சுவையான பழங்களை அளித்தாலும் ஒரு பழத்தின் ருசியும் அது அறிந்ததில்லை. இது தான் தியாகம். உயர்ந்த ஆன்மா சத்வ குணத்தின் ஈடுபாடோடு செய்வது இத்தகைய தன்னலமற்ற தியாகம். இதை ஆத்ம ஞானம், ஆத்ம தரிசனம் என்று புகழ்கிறோம்.
No comments:
Post a Comment