Friday, June 21, 2019

VIKRAMADHITHYAN


         
விக்ரமாதித்தன் கதை   J K  SIVAN 

            2    உச்சினி  மா  காளி  அருள் 

இந்திய  சரித்ரத்தில்  பொற்காலம் என்றால் அது   ரெண்டாம் சந்திரகுப்தன் என்றும் விக்ரமாதித்தன் என்றும் பெயர் பெற்ற அருமையான அரசன் ஆண்ட காலம் தான். வீரம் , கல்வி, நேர்மை, நியாயம் எதற்கும் அவனுக்கு இணை அவனே என்கிறார்கள் சரித்திர ஆசிரியர்கள். சமுத்ர குப்தனுக்கு மகன். அவனுக்கு பிறகு   34 ஆண்டுகள் அவன் நம்மை  ஆண்டவன். 380-414 வரை.  எத்தனையோ ராஜ்யங்களை ஜெயித்தவன். 
விக்ரமாதித்தன் காசுகள் இன்னும்  மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.    விக்ரமாதித்யன் என்றால் சூரியனைப் போல் பராக்ரமம் கொண்டவன் என்று அர்த்தம்.    

இந்தியாவுக்கு வந்த  சீன யாத்ரீகன்  ஹ்யுவான்ஸ்வாங் (602-664 கி.பி)  விக்ரமாதித்தியனை பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறான்.   சிங்காசன பட்டிஸி  என்கிற நூல்  32  விக்ரமாதித்தன் கதைகளை சொல்கிறது. போஜன் ராஜாவாகும்போது அவனுக்கு ஒரு நாள் அதிர்ஷ்டம் கிட்டுகிறது. விக்ரமாதித்யனின் சிங்காசனம் கண்ணில் படுகிறது. பல நூறாண்டுகள் கழித்து அது கிடைத்த சந்தோஷத்தில் அவன் அதை எடுத்து வந்து அதில் அமர முயற்சிக்கிறான். அந்த சிம்மாசனத்தில்  32 பொம்மைகள். அந்த பொம்மைகள் ஒருகாலத்தில் தேவலோக அப்ஸரஸ்கள் . ஏதோ சாபத்தால் பொம்மையானவர்கள்.    போஜன் அந்த சிம்மாசனத்தில் ஏறி அமரும்போது முதல் பொம்மை பேசுகிறது.

''போஜா, என்ன அவசரம் உனக்கு?  நீ என்ன விக்ரமாதித்தனா? அவனை போல பராக்ரமம், புத்திசாலித்தனம், வீரம், நேர்மை, சாஸ்த்ர ஞானம் உண்டா உனக்கு?இருந்தால் அல்லவோ உனக்கு அவன் சிம்மாசனத்தில் உட்கார யோக்கியதாம்சம்?''

''நீயே சொல்லேன் விக்கிரமாதித்தனை பற்றி,  எனக்கு எப்படி தெரியும்? என்ற போஜனுக்கு   பதுமை கதை சொல்கிறது. இது போல் ஒவ்வொரு படியிலும் உள்ள 32 பதுமைக் கதைகள் தான் விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்.         கடைசியில் கதை கேட்ட போஜன் ''பொம்மைகளா, நான் எந்தவிதத்திலும் விக்ரமாதித்தன் ஆகமுடியாது'' என்று கீழே இறங்கும்போது,   ''போஜா, பரவாயில்லை , நீ உண்மை உணர்ந்தவன் என்பதால் மேலே போய் உட்கார்''   என்று அவனை சிங்காசனத்தில் அமர அனுமதிக்கிறதாக கதை முடியும். போஜன் 1055ல்  மறைந்தான் என்று சரித்திரம் சொல்கிறது. நிறைய பேர் நிறைய மொழிகளில் இந்த விக்ரமாதித்தன் கதைகளை எழுதி இருக்கிறார்கள். நானும்  சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்தவன் தான். பிறகு தனியாக  அரு .ராமநாதன் எழுதிய புத்தகமும்  படித்தேன்.ஆங்கிலத்திலும் சமீபத்தில் அருமை நண்பர் சிறந்த பன்மொழிப்புலவர்  ஸ்ரீ  பி.ஆர். ராமசந்திரன் ஆங்கிலத்தில் கதைகளாக எழுதியதை நீங்களும் அவரது வலை   இணைய தளத்தில் படிக்கலாம். 

பாவிஷ்ய புராணம் என்ற அரிய நூல் என்ன சொல்கிறது தெரியுமா?  உலகம் வேதங்களின் மதிப்பை உணராமல் க்ஷீணிக்கும்போது பரமசிவன் விக்ரமாதித்யனை பூமிக்கு அனுப்பினார். குப்தர்கள் காலத்தில் பௌத்தமதம் கை ஓங்கியிருந்தது. ஹிந்து  சனாதனம் அழிவை நோக்கி பிரயாணித்தது.   சிவனருளால் விக்கிரமாதித்தனுக்கு 32 பதுமைகள்  படித்த்த சிம்மாசனம் கிடைக்கிறது.  பைசாசங்களில் ஒன்றை பிடித்து வேதாளமாக  பார்வதி தேவி விக்ரமாதித்தனிடம் அனுப்புகிறாளாம். அது அவனை பாதுக்காக்க. அது தவிர அவனை புதிர்மேல் புதிராக போட்டு  வேறு  துளைத்து விடுகிறது.  அவனது சமயோசித்தம், புத்தி கூர்மை அந்த கதைகளின் முடிவில் அவன் சொல்லும் பதில்களில் உள்ளது.

ஜைன புராணங்கள் விக்ரமனின் சகாப்தம் முடிந்ததை, சாலிவாஹனன் அவனை வென்றதை, அதன் பிறகு சாலிவாகன சகாப்தம் தொடர்ந்ததை சொல்கிறது.  சாலிவாஹனை  சாதவாஹனன் என்று சில புத்தகங்கள் அடையாளம் காட்டுகிறது. ஒரேயடியாக  சாலிவாஹனனோ, சாதவாஹனனோ, அவன் தான் போஜன் என்று சிலர் நேரில்  பார்க்காமலேயே சத்யம் செய்கிறார்கள். குறுக்கே புகுந்து ஒரு வெள்ளைக்கார ஆசிரியர்  HANS  T. BAKER  என்பவர்  ராமர் பிறந்த அயோத்யா சாகேதம் என்கிற ஊர், குப்த  ராஜா ஸ்கந்தகுப்தன் என்பவன் தானும் ஒரு ராமன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டு  சாகேதத்தை அயோத்யா என்று பேர் மாற்றினான் என்று கிளப்பி விட்டார்.  
ஜ்யோதிரவிதர்பணா  என்கிற நூலில் (22.10) காளிதாசன் பற்றி சொல்லும்போது, ஒன்பது அற்புதமான நிபுணர்கள், சாஸ்திரங்கள் அறிந்த விற்பன்னர்கள் விக்ரமாதித்யன் சபையில்  இருந்தார்கள்  என்று பேர்களை சொல்கிறது.

அமரசிம்மன், தன்வந்தரி, கடாகரபரர், காளிதாசன், க்ஷபனகன், ஷங்கு , வராஹமிஹிரர், வரருசி, வேதாள பட்டன். இது தப்பான லிஸ்ட்  என்று சில  ஆர்ப்பாட்டங்கள்.  விக்ரமாதித்தனே  ஒரு கற்பனை பாத்திரம். அவன் ரெண்டாம் சந்திரகுப்தன் கிடையவே கிடையாது என்று ஒரு கூட்டம்.
ஸார்  நமக்கு வேண்டியது ஒரு விறுவிறுப்பான கதை. மேலே மேலே கேட்க துடிக்கிறது காது.ஆகவே சரித்திரக்காரர்களையும்  ஆராய்ச்சியாளர்களையும் மொத்தமாக பிடித்து வேதாளத்தின் கையில் கொடுத்து விட்டு கதையை ரசிப்போம்.

கதா சரித்சாகரம் என்ற புத்தகம்  25 வேதாள கதை சொல்கிறது.  விக்ரமாதித்தன் ப்ரதிஷ்டானபுர ராஜா  என்கிறது.  

பாவிஷ்ய புராணம் விக்ரமாதித்தன் கந்தர்வசேனன் என்ற ராஜாவின் பிள்ளை. காட்டில் அவன் 12 வருஷம் தவம் இருந்தான். அதன் பயனாக அம்பாவதி  நகர ( உஜ்ஜயினி) ராஜாவானான். அவனுக்கு 32 பதுமைகள் பதித்த  தங்க சிம்மாசனம் கிடைத்தது என்கிறது.      விக்கிரமாதித்தனும் அவன் மந்திரி பட்டியும் ஒரு புது தலைநகரம் அரண்மனை அமைக்க  இடம் தேடினார்கள். வசனகிரி எனும் இடம் பிடித்தது. அருகே குணவதி எனும் ஆறு ஓடியது. காட்டின் எல்லையில் ஒரு காளி கோவில்.  பட்டி காட்டில் அலைந்து இதை தேடினான். காளிகோவிலில் ஒரு கல்வெட்டு ''கோவில் குளத்தின் பக்கம் ஒரு அரசமரம்.அந்த மரத்தில் கயிற்றால் ஆனா ஏழு பரண்கள். குளத்தின் நடுவே ஒரு பெரிய சூலம். எவன் ஒரே வெட்டில் அந்த 7 கயிற்று பரண்களை விடுவித்து தலைக்குப்புற அந்த சூலத்தில் விழுகிறானோ, அவன்  காளி அருள் பெறுவான்.''

பட்டி  விக்ரமாதித்தனிடம் ஓடிவந்து விஷயம் சொல்லி,''விக்ரமா, நீ மரம் ஏறு. ஏழு கயிற்றுப்பாலங்களின் முனைகளை ஒரு கயிறாக இணைத்து ஒரே வீட்டில் கயிறை அறுத்து தலைகுப்புற  அந்த சூலத்தில் குதி. உன்னால் முடியும்.  காளி அருள் பெற தக்கவன் நீ '' என்கிறான்.  மறு யோசனை இன்றி, பயம் துளியும்  இல்லாமல் விக்ரமன் மரம் ஏறி, கயிற்று பாலங்களை ஒன்றாக இணைத்து, ஒரே வீட்டில் துண்டித்து, அங்கிருந்து தலை சூலத்தில் படுமாறு குதிக்கிறான். சூலம் அவன் மண்டையை ரெண்டாக பிளக்கும் முன்பு காளி தோன்றி ''விக்ரமா, நீ இங்கேயே ஒரு நகரம் அமைப்பாய். ஒரு புதையல் உனக்கு கிடைக்கும், இந்த இடம் உஜ்ஜயினி என்று உன்னால் பேரிடப்படும் '' என்கிறாள்.  '' உச்சினிமாகாளி  இவ்வாறு அருள விக்ரமாதித்தன் ராஜாவாகி ஆண்டு, இன்றும் நினைவில் இருக்க அமரத்வம் பெறுகிறான்.



                                    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...