இன்றைய விசேஷம் - ஜூலை 6ம் தேதி
J K SIVAN
ராஜப்பா நன்றாக படித்து ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி. தனது அறையில் வேலையாக இருக்கும்போது அறையின் வாசலில் பித்தானை யாரோ அமுக்க '' கம் இன்'' என்றான். அவனது நண்பன் மனைவியோடு ஐந்து வயது பெண் குழந்தையோடு நுழைய அவர்களோடு மனம் விட்டு பேசினான். அவர்கள் போன பிறகு விசாலாக்ஷி அவன் மனைவி ஆபீஸுக்கு திடீரென்று வந்தாள் . எப்போது எதற்கு வருவாள் என்று அவளுக்கே தெரியாது. தனது கணவன் மேல் அத்தனை பிரியம், மற்றவர்கள் கண்களில் இருந்து அழகான கம்பீரமான புத்திசாலி கணவனை கண்குத்தி பாம்பாக பாதுகாப்பதாக நினைப்பவள். அவள் வந்த நேரம் உள்ளே ராஜப்பா யாருடனோ பேசிக்கொண்டிருப்பதாக அறிந்து வரவேற்பறையில் ஒரு பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தில் கொட்டை எழுத்தில் ' இன்று உலக முத்தமிடும் நாள்''
''அடப்பாவிகளா இப்படி ஒரு நாளை கூட கொண்டாடுகிறார்களா? எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறதே கொண்டாட என்று அவள் நினைக்கும்போது அவள் எதிரே ராஜப்பாவின் அறை கதவு திறந்தது அவனது காரியதரிசி மேரி முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு வெளியே சில பேப்பர்களை தாங்கிக் கொண்டு வந்தாள். விசாவை பார்த்து ஒரு புன்முறுவல். அடிக்கடி வருபவளாச்சே.
விசா ராஜப்பாவின் அறைக்குள் சென்றாள். அவன் சிரிப்புடன் வரவேற்றான். அவளுக்கு ஹை வோல்ட்டேஜ் ஷாக் அடித்தது. ராஜப்பாவின் வலது கன்னத்தில் லிப்ஸ்டிக் உதடு பிம்பம் லேசாக அழுந்தி இருந்தது. முழுதும் மறையவில்லை........ எப்படி இருக்கும் அவளுக்கு. இப்போது தானே பேப்பரில் படித்தாள் . ''இன்று ஜூலை 6 உலக முத்தம் இடும் நாள்''.
''ராஜா உன்னை கையும் களவுமாக பிடித்து விட்டேன்''
''என்ன சொல்கிறாய் விசா?
''உன் பல நாள் திருட்டு நாடகம் இன்று அம்பலமாகி விட்டதே.''
'' விசா இன்று மாலை நான் டெல்லிக்கு அவசரமாக போகவேண்டும். மிக முக்கியமான ஒரு கான்பிரன்ஸ் பிசினஸ் CONFERENCE. நீ இந்த நேரத்தில் இப்படி கூச்சல் போட்டு அமைதியை கெடுக்கிறாயே.
நான் ஒன்றும் சொல்லவில்லை. இதைப் பார் என்று கையில் வைத்திருந்த பத்திரிக்கை பக்கத்தை அவன் முன் போட்டாள் . இ.உ.மு.நாள். அதை தொடர்ந்து தனது கைப்பையிலிருந்து சிறு கண்ணாடியை அவன் முகத்தில் காட்டினாள். வலது கன்னத்தில் லிப்ஸ்டிக் ஒட்டிக்கொண்டு உதடு பிம்பம்..... போறாதா அவளுக்கு.
சிரித்தான். அந்த நேரம் பார்த்து அவன் நண்பன் குடும்பம் உள்ளே மீண்டும் நுழைந்தது.
''சாரி டா ..ராஜா.. என் மொபைல் போன் உன் டேபிள்மேல் வைத்துவிட்டு போய்விட்டேன்.. அவன் ஐந்து வயது குழந்தை ரோஜா மீண்டும் பாய்ந்து அவனை அணுகி அவன் இடது கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தது. அதே லிப்ஸ்டிக் சிறு உதடு பிம்பம்.
''அங்கிள் இன்னிக்கு வேர்ல்ட் கிஸ்ஸிங் டே..... அதான் ரெண்டு கன்னத்திலும் உங்களுக்கு....
குறிப்பு: 2006ல் தான் எந்த மஹாநுபாவனோ முதலாக உலக முத்தமிடும் நாள் வழக்கப்படுத்தினான். உலகத்தில் 5% முத்தமிடுபவர்கள் 45வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். வாரத்திற்கு 31முறை என்று வேறு கண்டுபிடித்திருக்கிறார்கள். அவசியமா? அதை கொண்டாடும் வழிமுறை: தீபாவளி போல் விடிகாலை மடியாக குளித்து விட்டு நண்பர்களை ''நலமா'' விசாரித்துவிட்டு அப்படியே ஒரு ''ப்ச்'' மனைவிக்கு கொடுக்கவேண்டுமாம். முத்தமிட மில்லியன் வழிகள் இருக்கிறதாம்...
No comments:
Post a Comment