Friday, July 26, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்      J K  SIVAN 
12ம் நாள் யுத்தம் தொடர்ச்சி           

         
           
     அர்ஜுனன் சபதம்

யுத்தம் நின்றாலும் யுத்த களம் நிசப்தமாக இல்லை. போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் இல்லாவிட்டாலும் நிறைய நரிகள், ஓநாய்கள், கழுகுகள், நாய்கள் சப்தத்தோடு அரை உயிர் கால் உயிருடன் மரணத்தோடு போராடும் மனிதர்கள், மிருகங்களின் ஓலங்கள் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.  சூரியன் ஒளி மங்க  மங்க  உருவங்கள் மறைய ஆரம்பித்தது. இருள் சூழ்ந்தது. பீஷ்மர் தனியாக யுத்தகளத்தில் ஓரிடத்தில் அமைதியாக த்யானத்தில் இருந்தார். ரத்த ஆறு ஓட,  அதன் மீதி காற்று வீசி வெளியே பரவும் போது ரத்த வாடை எங்கும் மூச்சு விட முடியாமல் திணற அடித்தது. 

யுத்தம் முடிந்த பின்பே தான் பாண்டவர்கள் அபிமன்யுவின் உடலை அடைய முடிந்தது. ''என் அருமைக் குழந்தாய் , என்னை காப்பதற்கு அல்லவோ நீ வீர மரணம் அடைந்தாய்? தனி ஒருவனாக எத்தனை மஹா வீரர்களோடு போர் புரிந்தாய்? அத்தனை பெரும் சேர்ந்தல்லவோ உன்னை கொல்ல முடிந்தது? இனி எப்படி நான் அர்ஜுனன் முகத்தைப் பார்ப்பேன்? உன் தாய் சுபத்ரா,அருமை மாமன்  கிருஷ்ணன், வீரத்தந்தை  அர்ஜுனன் இவர்களிடம் எப்படி இந்த சேதி சொல்வேன்?'' கதறினான்  யுதிஷ்டிரன்.

'சஞ்சயா, இனி என் மக்கள் அர்ஜுனன் பீமன் ஆகியோர் சீற்றத்துக்கு ஆளாகி என்ன கதி அடைவரோ தெரியவில்லையே? என்றான்  மற்றொரு பக்கத்தில் திருதராஷ்டிரன்.

அப்போது அங்கே வியாசர் வந்தார்.    ''முனி ஸ்ரேஷ்டரே, நான் தான் அந்த சிறுவனை எங்களுக்கு வியூகத்தை பிளந்து வழி காட்டு என்று சொன்னவன்.... அவன் மரணத்துக்கு நானே காரணம் என்று வருந்தினான் யுதிஷ்டிரன்.

" யுதிஷ்டிரா, மரணம் எல்லோருக்கும் பொதுவானது. இந்த வீரன் வீர மரணம் எய்தி அவனுக்கு உண்டான மோக்ஷத்தை அடைந்து விட்டான். மரணத்தை நினைத்து வருந்தாதே, அதிர்ச்சி கொள்ளாதே.  யுதிஷ்டிரா, முன்னொரு காலத்தில் அகம்பனன் என்று ஒரு ராஜா. அவன் மகன் ஹரி யுத்தத்தில் ஒரு நாள் மாண்டான். ராஜாவுக்கு புத்திர சோகம். வீர மகனை  இழந்ததால் அவன் துக்கம் எல்லையற்றதாகி விட்டது. நாடாள்வதில் மனம் செல்லாமல் துரும்பாக இளைத்து விட்டான். நாரத ரிஷி ஒருநாள் அவனை வந்து பார்த்தார். தனது துக்கத்தை அவரிடம் சொல்லி அழுதான் ராஜா அகம்பனன்.
''அகம்பனா, பிரமன் உயிர்களைப் படை த்தபோது அவற்றை நிரந்தரமாக இருக்க படைக்க வில்லை. படைப்பு என்ற எது ஒன்று இருந்தாலும் அதற்கெல்லாம் முடிவு ஒன்று உண்டு என்ற நியதியில் தான் படைத்தான். எல்லாவற்றையும் முழுமையாக  அழிக்க பிரளயம் என்ற ஒன்றை யுக சந்தியில் வைத்தான். மரண தேவதையை யமதர்ம ராஜனை, தர்ம தேவதையைப்   படைத்து உயிர்களை கொல்லும் பணியை தந்தான்.

'' பிரம்ம தேவா,  எனக்கு ஒரு தீங்கும் செய்யாத உயிர்களை கொல்லும் கர்மத்தை எனக்கு வைத்தாயே அதன் பாபம் என்னை அணுகாதா? நான் எதற்கு நீ படைத்த உயிர்களை கொல்லவேண்டும்'' என்று தர்ம தேவதை கேட்டாள் .

'' பூமிக்கு பாரம் ஒரு அளவு தான் இருக்க முடியும். பிறப்பும் இறப்பும் சேர்ந்து இருக்க வேண்டும். எனவே உனக்கு எந்த பாபமும் இல்லை.  உன் தொழிலை நீ செய்'' என்று சொல்லியும் அவள் மனம் திருப்தி யடையாததால், சிவனை வேண்டி அவர் ' பிரம்மா, உன் படைப்புகள் அவர்களே ஒருவரையொருவர் அழித்தும், ஒன்றை ஒன்று அழித்தும், முடியும்படியாக படைத்து விடு. எந்த நேரத்தில் மரணம், முடிவு நேரவேண்டுமோ அதை மரணதேவி புரியட்டும். என்றார். எனவே தான் மனிதர்களுக்குள் ஆசை, பொறாமை, தீய எண்ணம், நோய் இவை பெருகி மனிதர்கள் மரணம் அடைய வேண்டிய நிர்பந்தம் உண்டானது . உன் மகன் மரணம் அடைந்தது அவன் விதி, அவன் பிறவிகளில் அவன் சம்பாதித்த புண்ய பாப செயல்களின் பலன். வருந்தாதே என்று தேற்றினார் நாரதர்''

''அதையே தான்  நான் உனக்கும் சொல்கிறேன் யுதிஷ்டிரா' என்றார் வியாசர். ''அபிமன்யு தனது பிறவிப் பயனை அடைந்து விட்டான். அவன் வீரனாக வளர்ந்து வீரத்தை நிலைநாட்டி வீரமரணம் அடைந்தான். அவன் அடுத்த பிறவிக்கு தயாராகி விட்டதில் வருந்த என்ன இருக்கிறது. ஒவ்வொருவருக்குமே இது தானே நியதி?'' என்றார் வியாசர். எனவே யுதிஷ்டிரா,  க்ஷத்ரியனான நீ உன் கடமையை, கர்மத்தை விடாமல் செய்வாயாக. மதியை மயக்கமடைய செய்யாமல் உங்கள் கடமையை திறம்பட செய்யுங்கள் . உங்கள் யுத்தத்தை தொடர்ந்து முடிவைக் காண்பீர்களாக'' என்றார் வியாசர்.

''யுதிஷ்டிரா, தோன்றியது எதுவும் மறைந்தே தீரும். பிறந்தவர் எல்லோரும், இறப்பது உறுதி. இது படைப்பின் தத்துவம். எனவே அபிமன்யுவின் மரணம் உன்னை அமைதி இழக்கச் செய்ய அனுமதிக்காதே. உன் முன்னோர்கள் மிகப் புகழ் வாய்ந்தவர்கள். மகா வீர தீரர்கள். சிபி,  மனு, மாந்தாதா, பகீரதன், யயாதி, நஹுஷன், திலீபன், அம்பரிஷன், ஏன் உன் தந்தை பாண்டு அனைவருமே ஒரு கால கட்டத்தில் மறைந்தார்களே. ராமனே அவதாரம் முடிந்து சரயுவில் முடிந்தானே.  எனவே மறைவது இயற்கை. '' என்ற வியாசர் யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு மறைந்தார்.

''திருதராஷ்டிரா, அந்தி வானம் சிவந்து பின் இருண்டதல்லவா. இரவில் அனைவரும் அவரவர் கூடாரங்களில் அடுத்த நாள் யுத்தத்தைப் பற்றி சிந்தனை செய்து கொண்டு இருந்தார்கள். 
அர்ஜுனன் வந்தால் அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று யுதிஷ்டிரன் யோசனை செய்து கொண்டிருந்தான்

சம்சப்தகர்கள் அநேகரை கொன்று விட்டு அர்ஜுனன் திரும்பிவந்து கொண்டிருந்தான்.

''கிருஷ்ணா,  சிறிது நேரமாக என் இதயத்தில் ஏனோ ஒரு கலக்கம், இனம் புரியாத வலி, துக்கமா அது என்ன என்றே தெரியவில்லை, என்னை கலங்கச் செய்கிறதே, எதற்காக? என்று தெரியவில்லையே. என் வாய் பேசமுடியாமல் குழறுகிறதே. ஏன்?''   என்றான் அர்ஜுனன். '' யுதிஷ்டிரனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காதல்லவா? என் சகோதரர்கள் யாவரும் நல்ல படியாக இருப்பார்களல்லவா?''

''அர்ஜுனா, உன் சகோதரர்கள் யாவரும் ஒரு ஆபத்தும் இல்லாமல் இருப்பார்கள். வேறெங்கேனும் எவருக்கேனும் கூட ஏதாவது உற்பாதம் ஏற்பட்டிருக்கலாமே. யுத்தத்தில் எது நடக்கும் எது நடக்காது என  முடியும்?" என்று பூடகமாக பதில் சொன்ன கிருஷ்ணன் தேரை நிதானமாக ஓட்டினான். இரவானதால், யுத்தம் முடிந்ததால், நேராக தங்களது பாசறைக்கு திரும்பினார்கள் இருவரும்.
''கிருஷ்ணா கவனித்தாயா?   என் மனதில் தோன்றியது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. எப்போதும் கொட்டும் முரசு சப்தம் இல்லை. வீணை ஒலிக்கவில்லை. அமைதியாக இருக்கிறது எதுவுமே ? காணும் வீரர்கள் உற்சாகமின்றி தலை கவிழ்த்து நிற்கிறார்களே?   நமக்கு உதவும் பாஞ்சாலர்கள், விராடன் ஆகியோருக்கு ஒன்றும் ஆகியிருக்காதே.? எப்போதும் என்னை ஓடி வந்து உற்சாகத்தோடு வரவேற்கும் அபிமன்யு மற்றும் அவனது சகோதரர்களைக் காணோமே? எங்கே சென்றார்கள்?''

தனது சகோதரர்கள் துயரத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்ட அர்ஜுனன் ''இன்று காலை நான் கிளம்பும்போது துரோணர் தனது வியூகத்தை சக்ர வடிவமாக அமைத்திருந்ததை கண்டேன். அபிமன்யுவிற்கு அதை பிளக்கத் தெரியுமே? ஆனால் அதை மறுபடியும் பிளந்து வெளியே வரும் வித்தையை என்னிடம் அவன் இன்னும் கற்கவில்லையே ? எங்கே அவன்? என்னைக் கண்டதும் ஓடிவருவானே? யாரேனும் அவனை சக்ர வியூகத்தை பிளந்து உள்ளே செல்ல அனுமதித்தீர்களா? நீங்கள் பேசாமல் இருப்பதை பார்த்தால் அவன் உள்ளே சென்று மரணம் அடைந்தானா? ஒருவேளை அவன் யமனுலகு சென்றுவிட்டால் நானும் உடனே அங்கே போகிறேன். அவனைக் காணவேண்டும். அவன் யுத்த களத்தில் மா வீரனாக மாண்டு கிடந்தால் சுபத்திரைக்கும் திரௌபதிக்கும் என் மருமகள் உத்தரைக்கும் நான் என்ன பதில் சொல்வேன்?'' அர்ஜுனன் கண்களில் நீர் தாரையாக வடிந்தது.

''அர்ஜுனா, துயரப் படாதே. க்ஷத்ரிய வீராதி வீரர்களின் முடிவு யுத்த களத்தில் இப்படித்தான் இருக்கும். பீஷம்ரைப் பார்த்தாயே. இதையே புகழ் மிக்க வீர மரணம் என்பார்கள். பின் வாங்காத சுத்த வீரன் அபிமன்யு. புகழுடம்பு எய்தி விட்டான்.  உன் சகோதரர்கள், மற்றும் உறவினர்கள் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்தாயே, நீ தானே அவர்களைத் தேற்றி உற்சாகமூட்ட வேண்டியவன். நீயுமா மரணத்தைக்கண்டு கலங்குபவன்.'' என்று மெதுவாக  அர்ஜுனன் முதுகைத் தடவி  ஆறுதலாக சொன்னான் கிருஷ்ணன்.

அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் வார்த்தைகள் புதிய தெம்பைக் கொடுத்தன. கண்களை மூடி ஒரு கணம் த்யானம் செய்தான். பிறகு. ''அண்ணா, அபிமன்யு காலையில் நான் சென்றதிலிருந்து எப்படி உங்களுக்கு உதவினான், எவ்வாறு யுத்தத்தில் தனது பங்கை புரிந்தான் என்று விவரமாக சொல்லுங்கள், காது குளிர கேட்கிறேன். என்னை விட என் மகன் அதி வீரன், தீரன், எண்ணற்ற ஆயிரமாயிரம்  வீரர்களை கொன்று வென்றவன் என்ற செய்தி எனக்கு சந்தோஷத்தை அளிக்கும் அல்லவா?  அவனை யுத்தத்தில் சேர்ந்து கொன்ற கோழைகள், பேடிகள், என்னிடமிருந்து தப்ப முடியாது''

''அர்ஜுனா, சதி திட்டம் தீட்டி உன்னை எங்களிடமிருந்து பிரித்து சம்சப்தகர்களை துரத்தி நீ சென்றதும் துரோணர் தனது சேனையை சக்ரவியூகத்தொடு என்னை சிறைப் பிடிக்க முற்பட்டார். நானும் நமது வீரர்களோடு அவரையும் கௌரவ சேனையையும் எதிர்த்தோம். வியூகத்தை பிளந்து கௌரவர்களை தாக்க அபிமன்யு முன்வந்தான். நாங்கள் அவனுக்கு பக்க பலமாக தொடர்ந்தோம். உன் மகனல்லவா? உன் வேகத்தையும் மிஞ்சி அவன் வியூகத்தை பிளந்து வெகு தூரம் உள்ளே சென்றுவிட்டான். மற்ற எதிரிகள் எங்களை பின் தொடராது தடுத்து போர் புரிந்தனர் நாங்கள் அவர்களை எதிர்த்து அபிமன்யுவை பின் பற்றி செல்ல முயன்றோம். எங்களை முன்னேற விடாமல் வியூகத்தை மூடியவன் ஜயத்ரதன். அவன் ருத்ரனிடம் வரம் பெற்று உன்னைத் தவிர மற்ற நால்வர் எங்களை வெல்வதற்கு வரம் பெற்றதால் எங்களால் அவனை மீறி வென்று உள்ளே செல்ல இயலவில்லை.  இதை பயன் படுத்திக் கொண்டு, துச்சாதனன், துரியோதனன், கர்ணன், துரோணர், அஸ்வத்தாமன் ஆகியோர் அந்த சிறுவனை சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அவன் பெரும் வீரன் என்பதை நிரூபித்து கடைசியில் கொல்லப்பட்டான். அவனைக் காக்கமுடியாமல் செய்தவன் ஜயத்ரதன். இதை விதி என்று தான் சொல்லவேண்டும்.''

''அண்ணா, நாளை ஜயத்ரதன் மரணம் நிச்சயம். எவர் தடுத்தாலும் அவன் கொல்லப்படுவான். நாளை அஸ்தமனத்திற்குள், அதாவது போர் முடியும் முன்பு ஜயத்ரதனை நான் கொல்லா விட்டால், நான் உயிரோடு இருக்க மாட்டேன். தீ மூட்டி அதில் மூழ்கி என் மகனைச் சேர்வேன். இது அக்னி சாட்சியாக சத்யம்''  என சபதம் செய்தான் அர்ஜுனன். அர்ஜுனனின் சபதத்தைக் கேட்ட கிருஷ்ணன் பாஞ்சஜன்யத்தை சப்தித்தான். அர்ஜுனன் தனது தேவதத்தம் எனும் சங்கை ஊதினான்.

பாண்டவ சைன்ய பாசறையை விட்டு கிளம்பி அந்த சப்தங்கள் விண்ணில் முட்டி எதிரொலித்து கௌரவ சேனையின் சைன்ய பாசறையில் நுழைந்து அனைவர் காதிலும் செவிடுபட ஒலித்து அவர்களுக்கு நேரப்போகும் விநாசத்தை நினைவூட்டியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...