Thursday, July 25, 2019

AINDHAM VEDHAM

  ஐந்தாம் வேதம்
பதினொன்றாம் நாள்  யுத்தம்

                        ''  யுதிஷ்டிரனை   சிறை  பிடிப்பேன்'' '

''சஞ்சயா என் உடல் நடுங்குகிறது. என் மனதை கலக்கிக் கொண்டிருந்த பயம் உண்மையில் நடக்கப் போகிறது என்று தோன்றுகிறது. பீஷ்மர் வீழ்ந்தபிறகு என் மக்கள் என்ன செய்தார்கள் பார்த்து சொல்'?'

''திருதராஷ்டிரா,  இந்த பத்து நாட்களும் யுத்தத்தில் கலந்து கொள்ளாத கர்ணனை  உன் மக்கள்
 வரவழைத்தார்கள்.   பீஷ்மருக்கு அடுத்தபடியாக சிறந்த வீரன், சக்தி வாய்ந்த அதிரதன் கர்ணன்.

''துரியோதனா, கவலையை விடு. இனி நான் பொறுப்பேற்கிறேன். உனக்காக என் உயிரையே தியாகம் செய்வேன். உனக்கு வெற்றி பெற்று தருவது ஒன்றே என் கடமை. இன்றே பாண்டவர்களே வெல்வேன்.
கர்ணன் யுத்தகளத்தில்  பீஷ்மரை வணங்கினான். 


''தாத்தா, நான் கர்ணன் இன்று முதல் கௌரவ சேனைக்கு தலைவன். என்னை ஆசிர்வதியுங்கள்.''
''கர்ணா,  இனி கௌரவ சேனைக்கு நீயே புத்துயிர். நீ மகா வீரன். துரியோதனனைக் காப்பது இனி உன் கடன். உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்'' என்றார் பீஷ்மர்.  கர்ணா,   நீயும் எனக்கு ஒரு பேரன். அதுவும் முதல் பேரன் என்பதை மறவாதே''.

கௌரவ சேனை புத்துணர்ச்சியோடு, உத்சாகத்தோடு போருக்கு ஆயத்தமாகியது. பீஷ்மருக்கு அடுத்த படியாக சேனைத் தலைவனாக துரோணரை நியமிக்க கர்ணனே துரியோதனனிடம் பரிந்துரைக்க துரோணர் தலைமை பொறுப்பை ஏற்றார்.

''துரியோதனா,  நான் பாண்டவர்களை வெல்வேன். திருஷ்டத்யும்னன் எனக்கு மரணத்தை அளிக்க பிறந்தவன் அவனைத் தவிர மற்றவரை நான் அழிப்பேன்'' என்றார் துரோணர்.

சிந்து ராஜன், கலிங்கர்களின் அரசன், விகர்ணன்,  கௌரவ சேனைக்கு வலது பக்க அணிக்கு பலம் சேர்த்தார்கள். சகுனி, காந்தார சேனை, கிருபர், கிரிதவர்மன், சித்திரசேனன்,துச்சாதனன், காம்போஜர்கள், சுதக்ஷணன், த்ரிகர்த்தர்கள், துரியோதனன் ஆகியோர் இடது பாக, பின்புற பலமாக அணிவகுத்தார்கள். நடுவே துரோணர் தலைமையில் கர்ணன் பொறுப் பெற்றான்.

கிருஷ்ணன் அர்ஜுனனோடு தேரில் ஏறினான். கௌரவ சேனையை துரோணர் சகட (வட்ட) வியூகமாக அமைத்திருந்தார். யுதிஷ்டிரன் தனது சேனையை கிரவுஞ்ச வடிவாக (நாரை) அமைத்து வீரர்கள் பொறுப்பேற்றார்கள்.  யுத்தம் ஆரம்பித்தது.   துரோணர் மிக விரைவில் தான் யார் என்பதை நிரூபித்தார். சூறாவளியாக பாண்டவ சைனியத்தை சூறையாடினார். அவரையே தாக்கினான் திருஷ்டத்யும்னன். அவனை அம்புகளால் குளிப்பாட்டினார் துரோணர். பீஷ்மர் இல்லாத குறையைப் போக்கினார்  துரோணா                              சார்யர். 


''திருஷ்ட த்யும்னா நீயும் சிகண்டியும் துரோணரை தாக்குங்கள் என்று கட்டளையிட்டான் யுதிஷ்டிரன்.

''வைசம்பாயனரே, இதுவரை நீங்கள் சொல்லிவரும் என் முன்னோர்களின் கதை என்னை சந்தோஷக்கடலில் ஆழ்த்தியது. இப்போது மகாபாரத யுத்தத்தையும் அழகாக வர்ணிக்கிறீர்கள் மேலே என்ன நடந்தது என்று சொல்லுங்கள். மிக்க ஆவலாக இருக்கிறது என்றார் ஜனமேஜயன். வைசம்பாயனர் தொடர்ந்தார்:

துரோணர் பதவி ஏற்றதும் ''துரியோதனா, என்னை பெருமை படுத்தினாய். மகாவீரர் பீஷ்மர் வகித்த பதவி இது.  உனக்கு என்னால் செய்யவேண்டிய கடமையை செய்வேன். இந்த மாபெரும் கௌரவ சேனையை வழி நடத்தி உன் உத்தரவை நிறைவேற்றுவேன்'' என்றார்.

''ஆச்சர்யாரே,  நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். அந்த யுதிஷ்டிரனை வென்று சிறைப் படுத்தி உயிரோடு என் முன்னே கொண்டு நிறுத்தவேண்டும்.

''ஆஹா துரியோதனா , என்ன  விளையாட்டு  இது?  யுதிஷ்டிரனை சிறைப் படுத்துவதா, பீமார்ஜுனர்கள் கிருஷ்ணன் இருக்கும் வரை எவரும்  நினைத்துப் பார்க்கக்கூட   மிகக் கடினமான ஒரு காரியம் அது.

''ஆசார்யரே, யுதிஷ்டிரனை கொல்வதால் வெற்றி எனக்கு கிட்டாது. ஏனென்றால் அடுத்த கணமே அர்ஜுனன் நம் அனைவரையும் கொன்றுவிடுவான். அவரை உயிரோடு பிடித்தால் மீண்டும் சூதாட்டம் ஆடவைத்து அவர்கள் அனைவரையுமே காட்டுக்கு அனுப்பி விடலாம். யுதிஷ்டிரன் சொன்ன வாக்கு தப்பாதவன். அவன் சகோதரர்களும் அவன் சொல் தட்டாதவர்கள். இதற்காகவே யுதிஷ்டிரனை கொல்லாமல் உயிரோடு பிடித்து வரச் சொன்னேன். என்றான் துரியோதனன்.

''துரியோதனா, அர்ஜுனன் மட்டும் யுதிஷ்டிரனை பாதுகாக்க வில்லை என்றால் உன் விருப்பம் நிறைவேறும். அவன் அருகில் இருக்கும் வரை அது நிறைவேறாது.  அர்ஜுனன் என் சிஷ்யன் தான். எனினும் என்னிலும் அதீத சக்தி வாய்ந்தவன். சிறந்த ஆயுதங்களைக்  கொண்டவன். அர்ஜுனனை யுத்த களத்திலிருந்து அப்புறப் படுத்த ஏதாவது யுக்தி உண்டானால் அதை செய் முதலில் . பிறகு உன் விருப்பத்தை நான் நிறைவேற்று கிறேன்''. என்றார் துரோணர்.

"சஞ்சயா, என் மகன் துரியோதனன் என்ன செய்தான்? என்று ஆவலுடன் கேட்டான் திருதராஷ்டிரன்
பாண்டவ சைனியத்திற்கு துரியோதனன் எண்ணமும் துரோணர் திட்டமும் ஒற்றர்கள் மூலம் தெரிந்து விட்டது.

''அர்ஜுனா, துரோணர் முயன்று விட்டால் அவரை தடுக்க ஒரு சக்தியும் பயன் பெறாது.  துரோணர் என்னை சிறைபிடிக்க  முயல்கிறார்''

''அண்ணா, துரோணரை என்னால் கொல்ல இயலாது. ஆனால் உங்களை விட்டு பிரியேன். துரியோதனன் கனவிலும் உங்களை சிறை பிடிக்க முடியாது ''  என்றான் 
அர்ஜுனன்.

" யுத்தம் ஆரம்பித்துவிட்டதை சங்க முரச நாதங்களும் சப்தங்களும் அறிவுறுத்தின. படைகள் வழக்கம்போல் மோதின. பல திசைகளிலும் சேனா வீரர்கள் எதிரிகளோடு கடும் யுத்தம் புரிந்தனர். சம பலத்தோடு இருந்தவர்கள் நீயா நானா என்று போரிட்டனர். துரோணரை பாஞ்சால தேச படைகள் மும்முரமாக எதிர்த்தன. திருஷ்ட த்யும்ணன் துரோணரை கொல்ல தீவிரமாக ஈடுபட்டான். அவனிடமிருந்து அவரை காப்பாற்ற ஒரு பெரும் படை சூழ்ந்திருந்தது. மற்றபடி துரோணர் சூரியன் போல் பாண்டவர்களை தஹித்துக் கொண்டி ருந்தார். அவரால் பாண்டவ  சைனியம் குறைந்து வந்து கொண்டே இருந்தது.

சூரியன் உச்சியில் வந்து விட்டான். போர் மும்முரமாக தொடர்ந்தது. துரோணரை எப்படி சமாளிப்பது என்று பாண்டவ சேனை திணறிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் த்ரிகர்த்தர்கள் பெரும் பலம் பொருந்திய யானைப் படையை பாண்டவர்கள் மேல் ஏவினார்கள். பீமன் அங்கே சென்று அவற்றை தடுத்து நிறுத்தினான்.

யுத்தத்தில் ஒரு சமயம் யுதிஷ்டிரன் தலைமையில் ஒரு படை துரோணரை எதிர்த்தது. அதுவே தக்க தருணம் என்று துரோணர் மகிழ்ந்தார்.

சகுனி தனது படையோடு சகாதேவனை எதிர்த்தான். தேரை உடைத்தான். கொடியை சாய்த்தான். நகுலன் சல்லியனை முடுக்கினான். சாத்யகி க்ரிபரை முன்னேற விடாமல் தடுத்து தாக்கினான். அவர் பின் வாங்கினார். அவர் திருஷ்ட கேதுவுடன் சேர்ந்து அவனை தாக்கினார். விராடன் விகர்ணனையும் க்ரிதவர்மனையும் சேர்த்து தாக்கினான். அபிமன்யு சுசர்மனை விரட்டினான். துருபதன் பகதத்தனை எதிர்த்தான்.

சிகண்டி துரோணரை ஒரு புறம் தாக்கினான். அவனை பூரிஸ்ரவஸ் எதிர்த்தான்.கடோத்கஜன் யானைப் படைகளை தடுத்து நிறுத்தினான். கௌரவர்களின் ராக்ஷசப் படை அவனை சூழ்ந்தது. சேகிதானன் விந்த அனுவிந்தர்களை ஆயுதங்களால் வாட்டி வதைத்தான்.

அபிமன்யு பௌரவனை படுகாயமடையச் செய்தான். அவன் தேர்ப்பாகனை கொன்றான். துரோணர் தன்னை எதிர்த்தவர்களை முறியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். அவரது தேர் யுதிஷ்டிரன் இருந்த இடத்தையே நாடியது. அவனை எப்படியாவது உயிரோடு சிறைப் படுத்துவதில் கவனமாக இருந்தார். அவரது வீராவேசமான போர் எப்படியும் இன்று யுத்தம் முடிந்து துரியோதனன் வெற்றி வீரனாக முடிசூடுவான் என்று நினைக்க வைத்தது ரத்த ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது யுத்த களத்தில்.

அர்ஜுனன் படுவேகமாக துரோணரின் படைகளை அழிக்க ஆரம்பித்தான். அவரைத் துன்புறுத்தினான். கொல்ல விரும்பவில்லை. சூரிய அஸ்தமன நேரம் நெருங்கியது. போரின் வேகம் கூடியது. முடிவு எதிர்ப்பார்த்தபடி இருக்க இரு சேனைகளும் விரைந்தன. துரோணரை துரியோதனன் சந்தித்தபோது அவர் விசனத்தோடு இருந்தார்.

''துரியோதனா நான் என்ன சொன்னேன், அர்ஜுனன் அருகே இருக்கும் வரை யுதிஷ்டிரனை பிடிக்க இயலாதே என்றேனே'' என்றார்

''அர்ஜுனனை யாராவது என்னோடு போர் புரிய வா என்று தனியே விலகச் செய்யுங்கள் பிறகு யுதிஷ்டிரனை நான் பிடிக்கிறேன்'' என்றார் துரோணர்.

''த்ரிதராஷ்டிரா, துரோணரின் வார்த்தையை கேட்ட திரிகர்த்தர்கள் அரசன் சுசர்மன் குறுக்கிட்டு ''துரியோதனா, அர்ஜுனன் எங்களை படாத பாடு படுத்துகிறான். அவனை பழி வாங்க வேண்டும். அவனை பழி தீர்க்க இது நல்ல யோசனை. நாங்கள் அவனை எங்களோடு போரிட அழைத்து வெகுதூரம் யுத்த களத்திலிருந்து அவனை விலக்கிக் கொள்கிறோம் . இதை சபதமாக எடுத்துக் கொள்வோம். 'அவனது ஐந்து சகோதரர்களோடும் இவ்வாறு சுசர்மன் சபதம் எடுத்துக் கொண்டான். அவ்வாறே அர்ஜுனனை யுத்தம் செய்ய அழைத்தார்கள்.

"அண்ணா சபதம் செய்து என்னை போருக்கு அழைக்கும்போது திரிகர்த்தர்கள் தலைவன் சுசர்மனிடம் நான் போரிட வரமாட்டேன் என்று சொல்ல முடியாது. அது வீரமல்ல. ஒன்று நிச்சயம் அவர்களை வென்று கொன்று திரும்புவேன்.எனக்கு உங்கள் ஆசியும் அனுமதியும் வேண்டும் என்றான் அர்ஜுனன் ''

''அர்ஜுனா,  இது ஒரு யுக்தி. சமயோசித திட்டம். துரோணர் என்னை உயிரோடு சிறை பிடிக்க இது ஒரு தந்திரம். எனினும் நீ உன் சத்யத்துக்கு கட்டுப்பட்டு த்ரிகர்த்தர்களோடு போர் புரிந்து வெற்றியோடு வா''  என்கிறார்  யுதிஷ்டிரர்

''அண்ணா, இன்று சத்யஜித் உங்களுக்கு துணை நிற்பான்.அவன் உங்கள் அருகே உயிரோடு இருக்கும் வரை துரோணர் உங்களை நெருங்க முடியாது. யுதிஷ்டிரன் அனுமதி பெற்று அர்ஜுனன் திரிகர்த்தர்களை சந்திக்க சென்றான்.

த்ரிகர்த்தர்கள் அரைவட்டமாக பிறைச்சந்திரனைப் போல் அர்ஜுனனைச்  சூழ்ந்து கொண்டார்கள். அவன் தனி ஒருவனாக அவர்களை நோக்கினான். அவனுக்கு  சிரிப்பு வந்தது.

'கிருஷ்ணா, வேடிக்கை பார்த்தாயா, என்னைத் தனி ஒருவனாகக் கருதி வெல்வதற்கும் கொல்வதிலும் விருப்பத்தோடு அழைத்த இந்த சம்சப்தகர்கள் அழுவதற்கு பதில் மகிழ்கிறார்கள். விரைவில் அவர்கள் பூவுல வாழ்க்கையை முடிக்கிறேன்.

அவர்கள் விடுத்த அம்புகளையும் ஆயுதகளையும் அர்ஜுனன் தடுத்து உடைத்தான். புற்றிலிருந்து ஈசல் போல அவர்களது அம்புகள் அர்ஜுனனை அடைந்ததும் அவற்றை நொடியில் அவன் தடுத்து பயனற்றதாக்கினான்.

சிறிது நேரத்திலேயே சுதன்வன் தலை துண்டிக்கப் பட்டு இறந்தான். விரைவில் இந்த போரை முடித்துவிட்டு யுத்தகளத்தில் யுதிஷ்டிரனை அடைய அர்ஜுனன் எண்ணினான். த்வஷ்டிரா என்கிற அஸ்த் தரம் பலபேரை ஒரே நேரத்தில் கொல்லக்கூடியது . அதை பிரயோகப் படுத்தி சம்சப்தகர்களை தாக்கினான். அந்த அஸ்தரம் பல அர்ஜுனர்களாக, க்ரிஷ்ணர்களாக சம்சப்தகர்களுக்கு தோற்றம் அளித்து தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் கிருஷ்ணன் அர்ஜுனன் என்று எண்ணி கொன்று கொண்டார்கள்.

''அர்ஜுனா,  இந்த களேபரத்தில் நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டான் கிருஷ்ணன். வாயவ்ய அஸ்திரம் ஒன்றை அர்ஜுனன் தொடுத்தான் (வாயுவின் சக்தி) அது பெரும் சூறாவளியாக சம்சப்தகர்களை அப்படியே காய்ந்த இலைகள் போல காற்றில் தூக்கித் தூர சென்று கீழே போட்டது.
அநேகர் தலை துண்டிக்கப் பட்டு கீழே விழுந்தார்கள் . கை கால், முகம், ஆயுதம், கொடி தேர், தேர் குதிரைகள், பாகன் எல்லாம் இழந்து அநேகர் குற்றுயிரானார்கள்.

அர்ஜுனன் இவ்வாறு சம்சப்தகர்களோடு யுத்தத்தில் ஈடுபட்ட நேரம் துரோணர் யுதிஷ்டிரனை குறி வைத்து படையை நகர்த்திக் கொண்டிருந்தார்.

துரியோதனன் அவன் சகோதரர்கள், கிரிதவர்மன், கிருபர் ஆகியோர் வியூகத்தின் முக்ய பொறுப்பில் இருக்க, படை பாண்டவர் அணியை நெருங்கியது. பூதசர்மன், க்ஷேம சர்மன், கரகாக்ஷன், கலிங்கர்கள், சிங்களர்கள், கிழக்கத்திய சேனை, யவனர்கள் காம்போஜர்கள், ஆயிரக்கணக்கான யானைப் படைகள், தேர்கள் இவற்றொடு  சல்லியன், பூரிச்ரவஸ் , சோமதத்தன் ஆகியோர் புடைசூழ யுதிஷ்டிரனை குறி வைத்து நகர்ந்தன.
அச்வத்தாமன் பின் பலமாக இருந்தான். கர்ணன், விகர்ணன், ஜெயத்ரதன் , பீமரதன் மற்றும் நிஷாதர்கள் சூழ்ந்து ஒரு படை வேறு பக்கமாக பாண்டவர்களை தாக்கியது.

''திருஷ்ட த்யும்னா, நீ எதிரே வரும் துரோணரைத்  தாக்கு. அர்ஜுனன் பொறுப்பு இப்போது உன்னிடம்'' என்றான் யுதிஷ்டிரன்.

''அரசே, துரோணர் உங்களை நெருங்காமல் தாக்குவேன்.'' என்றான் அவன்.

துரியோதனன் சகோதரன் துர்முகன் த்ரிஷ்டத்யும்னனை தாக்கினான். பாண்டவ சேனையை அழித்து முன்னேறினார் துரோணர்.

சத்யஜித் வீரமாக போராடி துரோணரை தடுத்தான். விரைவில் அவனது சிரம் துண்டிக்கப்பட்டு இறந்தான். யுதிஷ்டிரன் பாதுகாப்பாக பின் வாங்கினான்.  மத்ஸ்ய வீரன் சதனிகன் துரோணரை எதிர்க்க அவனும் தலை இழந்து இறந்தான். பாஞ்சாலர்கள் இதர மத்ஸ்ய வீரர்கள், துரோணரை தாக்கினார்கள்.    சிகண்டி கடுங்கோபமாக தாக்கினான். உத்தமௌஜா, சாத்யகி ஆகியோரும் எதிர்ப்பில் பங்கு கொண்டனர்.  க்ஷேமன் எதிர்த்து த்ரோணரால் உயிரிழந்தான்.

துரோணர் யுதிஷ்டிரனை நெருங்கினார். பாஞ்சல்யன் எதிர்த்து உயிரிழந்தான்.

''கர்ணா,   பார்த்தாயா,ஆச்சார்யார் எப்படி பாண்டவ சேனையை புலியின் முன் நிற்கும் மான் கூட்டமாக சிதற அடிக்கிறார். '' என்றான் துரியோதனன்.

அந்த நேரம் பீமன் துரோணரை எதிர்த்தான். அவனைத் தொடர்ந்து பாண்டவ சைன்யம் மீண்டும் ஒன்று கூடி எதிர்த்தது. விடாது பெய்த அல்ல எய்த அம்பு மழையில் இருபக்கமும். எண்ணற்ற உயிர்கள் மாண்டன. விராடன் துரோணரை தாக்கினான். அவரை பின் வாங்கச் செய்ய இயலவில்லை. திருஷ்ட த்யும்னன் விடாமல் துரோணரை அம்புகளால் துன்புறுத்தினான்.

''சஞ்சயா, சம்சப்தகர்களை தொடர்ந்து சென்ற அர்ஜுனன் என்ன செய்தான் என்று பார்த்து சொல்? என்றான் திருதராஷ்டிரன்.

''அரசே உங்கள் மகன் துரியோதனன் பீமனை எதிர்த்தான். வெகுநேரம் இருவருக்கும் யுத்தம் நடந்தது. எதிரிகளின் யானைப் படையை விரைவில் பீமன் குலைத்தான். பெரும் யானைப் படையை துரியோதனன் பீமன் மேல் ஏவி விட, பீமன் அந்த யானைக்கூட்டத்தின் மிக சக்திவாய்ந்த சுப்ரதீகம் என்கிற யானையை குறி வைத்து தாக்கி அது அவன் மீது மலைபோல் சாய்ந்தது. பீமன் ஓடிவிட்டான் என்று கௌரவ சேனை மகிழ்ந்தது. ஆனால் பீமனுக்கு அஞ்சலிகபேதம் என்ற சாஸ்திரம் தெரிந்ததால் வெறும் கைகளால் அந்த யானையை தாக்கினான். அது அவன் கழுத்தைப் பிடித்து தூக்கி தனது காலில் அடித்து அவனை முறித்து கொல்லப் பார்த்தது. முடியாமல் ஓடியது. யுதிஷ்டிரன் பகதத்தனை தாக்கி எதிர்த்தான். பகதத்தனை எதிர்த்த ருசி பர்வன் கொல்லப்பட்டான்.

'' கிருஷ்ணா, தூரத்தில் யானைகளின் பிளிறல் கேட்கிறதே. பகத்ததன் யானைப் படைகளில் சிறந்தவற்றை உடையவன். அவனது சுப்ரதீகம் மத யானை. அதன் குரல் போல் இருக்கிறதே. நமது பாண்டவ சைனியத்தில் நம் இருவர் இல்லாதது அவர்களை பலத்தோடு,    கௌரவர்களை சமாளிப்பதை கஷ்டமாக்கியிருக்குமே. சீக்கிரம் நாம் அங்கே செல்லவேண்டும்'' என்றான் அர்ஜுனன்..

அர்ஜுனன் வேகமாக தேரில் பகத்ததனை நோக்கி விரைந்தான். அந்த நேரம் பதினாயிரம் கோபாலர்களுடன் சம்சப்தகர்கள் அர்ஜுனனை மீண்டும் போருக்கு அழைத்தார்கள். அர்ஜுனனால் பகதத்தனை எதிர்க்க அங்கே போக முடியவில்லை. சம்சப்தகர்கள் அழைத்தால் அவர்களோடு  தான்  யுத்தம்  செல்ல வேண்டும் என்ற கடமையும் இருந்தது.

அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை விடுத்து அநேகரை கொன்றான். வித வித சக்தி வாய்ந்த அம்புகளை செலுத்தி சம்சப்தகர்களை விரைவில் கொன்று வெல்ல விரும்பினான். அவர்களை அனேகமாக கொன்ற அர்ஜுனன்

'' கிருஷ்ணா சீக்கிரம் பகதத்தனை அணுகு'' என்றான் கிருஷ்ணன் செலுத்திய வெள்ளைக் குதிரைகள் பகதத்தன் தேரை நோக்கி ஓடின. த்ரிகர்த்தர்களின் அரசன் சுசர்மன் அதற்குள் வீரர்களுடன் அர்ஜுனனை துரத்தி போருக்கு மீண்டும் அழைத்தான்.

தேரை மீண்டும் கிருஷ்ணன் சம்சப்தகர்கள் பக்கம் திருப்பி அர்ஜுனன் அவர்களை சாடினான். சுசர்மன் சகோதரர்களை கொன்றான். சுசர்மன் கிருஷ்ணனை நோக்கி ஒரு பெரிய கதாயுதத்தை வீச அர்ஜுனன் அதை பொடியாக்கி சுசர்மனை தாக்கினான்.

இருவரும் விரைந்து பகதத்தனை நெருங்கினார்கள். யானையின் மீது இருந்து போர் புரிந்த பகதத்தன் அர்ஜுனனை பல அம்புகளால் தாக்கினான். கிருஷ்ணன் மீதும் ஆயுதங்களை வீசினான். அர்ஜுனன் அவற்றையெல்லாம் லாகவமாக தடுத்து உடைத்தான். பகதத்தன் கிருஷ்ணன் மேல் அம்புகளை விடுத்தான்.

பகதத்தனிடம் வைஷ்ணவ ஆயுதம் ஒன்று இருந்தது அது மிகவும் சக்திவாய்ந்தது அதை அவன் அர்ஜுனன் மீது வீச கிருஷ்ணன் அதை எதிர்கொண்டு தனது மார்பில் வாங்கிக் கொள்ள கிருஷ்ணன் கழுத்தில் அது மலர் ஹாரமாக விழுந்தது.

''கிருஷ்ணா,. நீ எதற்காக என்னை தாக்குபவனின் ஆயுதங்களை தாங்குகிறாய். என்னால் முடியாவிட்டால் எனக்கு உதவு. நீ சத்தியம் செய்தபடி யுத்தத்தில் பங்கு கொள்ள வேண்டாமே'' என்றான் அர்ஜுனன்.

''இல்லை அர்ஜுனா உனக்கு தெரியாது. நான் முன்பு நரகாசுரனுக்கு வரமாக அளித்த மிகவும் சக்திவாய்ந்த என்னுடைய ஆயுதம், வைஷ்ணவ ஆயுதம் அது எப்படியோ இப்போது பகதத்தனிடம் வந்துள்ளது. அதை அவன் உன் மேல் பிரயோகப் படுத்தினால் நீ அதை எதிர்ப்பது சுலபமல்ல. எனவே நான் அதை தாங்கினேன். என் ஆயுதம் அல்லவா என்னை அது ஒன்றும் செய்யாது. இப்போது நீ பகதத்தனைக் கொல் '' என்றான் கிருஷ்ணன்.

சரமாரியாக அம்புகளை பகதத்தன் மீதும் அவனது மத யானை சுப்ரதீகத்தின் மீதும் பொழிந்தான் அர்ஜுனன். சுப்ரதீகம் சுருண்டு விழுந்தது. பகதத்தன் கீழே விழுந்து அர்ஜுனனை தாக்க முயன்றவன் அர்ஜுனனின் சக்தி வாய்ந்த அம்பினால் உயிர் இழந்து பிணமானான். அர்ஜுனன் பகதத்தன் படைகளை கொன்று விரட்டினான்.

"சகுனியின் சகோதரர்கள் வ்ரிஷகன் அசலன் இருவரும் முன்னே ஒருவன் பின்னே ஒருவனாக அர்ஜுனனை தாக்கினார்கள். அவர்களை அர்ஜுனன் கொன்றான். அவர்களுடன் பிறந்த மற்ற சகோதரர்களையும் அர்ஜுனன் கொன்றான். இவற்றை கண்ட சகுனி திடுக்கிட்டான். அவனிடமிருந்த ஆயுதங்களை வீசி அர்ஜுனனை பழிவாங்க அலைந்தான். மாயமாக எங்கும் இருள் சூழும் புகைமண்டல அஸ்தரங்களை பாண்டவர் மீது வீசினான். அர்ஜுனன் ஜ்யோதிஷ்கா என்ற அஸ்த்ரத்தை தொடுத்து அந்த இருளை, புகையை போக்கினான். எங்கும் நீர் நிரம்பி அலையாக தோன்றும் மாய அம்பினை சகுனி விடுக்க அதை ஆதித்யா என்னும் அம்பினால் ஆவியாக மாற்றி உலர வைத்தான் அர்ஜுனன். என்னென்னமோ ஜாலங்கள் செய்து அவை பலனளிக்காமல் உயிர் தப்பி ஓடினான் சகுனி.

இரு மலைத்தொடர்கள் நடுவே ஓடும் கங்கை போல் பிணக்குவியல்களுக்கு இடையே ரத்த ஆறு. களைப்பின்றி திருஷ்டத்யும்னன் துரோணரை தாக்கிக் கொண்டிருந்தான். நீலன் மற்றொரு பக்கம் துரோணரை தாக்க அவனை அஸ்வத்தாமன் வெகுண்டு எதிர்த்தான். இருவருக்கும் நடந்த நீண்ட யுத்தத்தில் நீலனின் தலையை அஸ்வத்தாமன் துண்டித்து கொன்றான்.

மீண்டும் அழைத்த சில சம்சப்தகர்களையும் கொன்று அர்ஜுனன் துரோணரை எதிர்க்க திரும்பினான். அவன் மீது கர்ணன் அக்னி அஸ்த்ரங்களை தொடுத்தான். அர்ஜுனன் வருணாஸ்த்ரம் விடுத்து அதை தடுத்தான்.

சாத்யகி, பீமன் ஆகியோர் கர்ணனை தாக்குவதில் சேர்ந்து கொண்டனர். கர்ணன் அவர்களின் தாக்குதலை எளிதில் தடுத்து அவர்களை எதிர்த்தான். அர்ஜுனன் கர்ணனை அம்புகளால் துளைத்தான். அவனோடு சேர்ந்து தாக்கிய சத்ருஞ்சயனை கொன்றான். விபாதன் என்பவன் தலையை இழந்தான். அவன் சகோதரர்களையும் கொன்றான். திருஷ்டத்யும்னன் நிஷாதர்கள் படையையும் அதன் அரசன் சர்மவர்மன் வ்ரிஹத் க்ஷத்திரன் ஆகியோரையும் கொன்றான் . சாத்யகியை எதிர்த்த கர்ணனுக்கு உதவ துரியோதனன், ஜெயத்ரதன் துரோணர் ஆகியோர் அங்கே வந்தனர். உயிரற்ற வீரர்கள், யானைகள், உடைந்த தேர்கள் யுத்தகளத்தின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்ட நிலையில் அன்றைய போர் சூரிய அஸ்தமனத்தின் போது நிறுத்தப் பட்டது.

''த்ரிதராஷ்டிரா, இன்று மாலைக்குள் யுதிஷ்டிரனைப் பிடிப்பேன்''  என்ற துரோணர் தோல்வி அடைந்தார். கௌரவ சேனை ஏமாற்றத்தோடு கூடாரங்களுக்கு திரும்பியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...