ஒரே விஷயம் தான் ஆனால் அர்த்தம் அனுபவம் இரண்டும் வேறுபடும் நிலைமை நாம் அநேகர் வாழ்க்கையில் அறிந்ததுண்டு.
ஒரு நல்ல நண்பன் டாக்டர் என்பதால் அவனிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தை படுபவர்கள் பலர். அதே சமயம் ஒரு நல்ல டாக்டர் நண்பனாக அமைந்து அவரால் ஆனந்தம் அடைபவர்களும் உண்டு. அப்படி ஒரு டாக்டர் எனக்கு கிடைத்தது கிருஷ்ணன் கருணை. அதே டாக்டர் ஆன்மீகவாதியாகவும் இருந்து நிறைய நல்ல பணிகளில் ஈடுபடுவதும், தர்மம் செய்வதும், உதவுவதுமாக அந்த காலத்து ''பல்''லவ அரசர்கள் போல் அமைந்தால் இன்னும் எத்தனை சௌகர்யம். பல்லவர்களை போல் அவரும் சிவ பக்தர். எப்போதும் சிவபஞ்சாக்ஷர மந்த்ரங்கள், ருத்ரம் சமகம் சொல்பவர். அவரது பத்து வயது மகனுக்கும் கூட அபிஷேக முறைகள் ருத்ரம் சமகம் எல்லாம் தெரியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வீட்டில் ஒன்றிரண்டு முறை அனுஷம் ஏகாதச ருத்ரம் எல்லாவற்றிலும் பங்கு கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைத்த டாக்டர் அப்படி ஒருவர் அவரும் ஒரு கிருஷ்ணன் தான். டாக்டர் ஜெயகிரிஷ்ணா. இன்முகம் காட்ட பற்கள் அத்தியாவசியம். அவர் சிரித்துக்கொண்டே இருப்பவர். எல்லோருக்கும் அழகிய பற்களைக் கட்டி, காட்டி, சிரிக்கச் செய்யும் கிருஷ்ணன். அவர் சிரிப்பில் போஸ்டர்களில் நாம் பார்க்கும் அரசியல் வாதி சிரிப்பு இருக்காது.
நங்கநல்லூரில் முதலில் எனக்கு அறிமுகமானதே அவர் அங்கு ஒரு கிளை ஆரம்பித்தபோது . நான் நங்கநல்லூர் முதியவர்கள் நல சங்க செயலர். என்னையும் திறப்பு விழாவில் ஒரு விளக்கேற்ற அழைத்தார்கள். அவரது உதவியோடு ''பல'' முதியவர்களுக்கு அங்கு இலவச ''பல்'' சோதனை, மருந்துகள்,ப்ரஷ், பேஸ்ட் எல்லாம் கொடுத்தார். அப்படித்தான் என் பல்லும் அவரது நட்பை நாடியது.
அவரது மருத்துவ மனையில் நுழைந்தாலே ஏதோ ஒரு வெளிநாட்டு, பெரிய ஸ்தாபனத்தில் நுழைந்தது போன்ற தூய்மை, அமைதி, கவனிப்பு, புத்தம் புதிய சாதனங்கள், இதோடு அவர் குறித்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் இன் முகத்துடன் ஊக்கத்துடன் சிகிச்சை அளிப்பது ஒரு அசாதாரண விஷயம்.
முதல் பல் டாக்டர் முனுசாமி பச்சை மரத்தை பார் என்று சொல்லி ப்ளக் என்று குறடாவால் ஆடிய பல்லை பிடுங்கி ஏதோ மரத்துக்கு ஓட்டைகளை அடைக்கும் லப்பம் மாதிரி ஒரு கெட்டியான களிம்பு பிடுங்கப்பட்ட பல் துவாரத்தில் அடைத்த காலம் முதல் பல பல் டாக்டர்களின் சிகிச்சைகளை ''அனுபவித்து'' இருக்கிறேன். எனவே மனதில் கொஞ்சம் உறுத்தலுடன் தான் பல் உபத்திரவம் செய்தபோது டாக்டர் ஜெயகிரிஷ்ணனை நெருங்கினேன்.
பற்களுக்கு செடிகள், மரங்கள் போல் வேர் உண்டு. ஆழமாக உள்நோக்கி செல்லும் அவற்றில் நோய் infectiion ஏற்பட்டு வலி தாங்கமுடியாமல் இருக்கும். சில பற்கள் பெண்களின் நாணம் போல் கூசும். உச்சந்தலை வரை ஜிவ்வென்று அதிரும். வலிக்கும். தூக்கத்தை விழுங்கிவிடும். எவரைக்கண்டாலும் கத்த வைக்கும். கோபத்துக்கு தாய். கடந்த ஐந்து வருஷங்களில் ரெண்டு மூன்று பற்களின் வேர்கள் சோதிக்கப்பட்டு (ரெண்டு மூன்று முறை அந்த சாய்மான நாற்காலியில் வாய் பிளந்து அமர்ந்து) அவரை சீர் செய்யப்பட்டன (root canal treatment ). அப்புறம் இதை எழுதும் வரை வலியோ பல்லைபற்றிய சிந்தனையோ இல்லை. பற்கள் சிலவற்றுக்கு மஹான்களைப் போல் ஜீவ சமாதி அவசியம் என்பதை அவரிடம் அறிந்து கொண்டேன். என்னுடைய சில பற்கள் காலத்தால் கரைந்து குறைந்து சிதைந்து போன்றவற்றை பிடுங்காமல், அவற்றிக்கு தந்தம் மாதிரி ஒரு உலோகஉரை crown அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றின் நிஷ்டையை இதுவரை எதுவும் கலைக்கவில்லை. அதே போல பற்களைக் கெட்டியாக பிணைத்துக்கொண்டிருக்கும் அவற்றின் ஆதார சதை சிலசமயம் பற்களுக்கும் தனக்கும் இடைவெளி ஏற்படுத்திக்கொண்டு வீங்கியோ, நலிவுற்றோ, துன்புறுத்தும். அவற்றை லேஸர் மூலம் குணப்படுத்தி இருக்கிறார். அதுவரை சாப்பிடுவது ரொம்ப கடினம். குளிர்ந்த, சூடான நீருக்கு கூட அங்கே அனுமதி இல்லை.
அதேபோல் இன்னொரு விஷயம் அவசியம் சொல்லவேண்டும்.
அவரது நிறுவனத்தின் பெயர் அப்போது ஒரு அதிசயமான பெயர் கொண்டது. தந்த ரக்ஷா. பல தந்த ராக்ஷஸர்களிடம் சிக்கிய என் பற்களுக்கு உண்மையிலேயே டாக்டர் ஜெயகிரிஷ்ணாவின் தந்த ரக்ஷா ஒரு புகலிடமாக அமைந்தது. என்னைப்போல பலருக்கும் தான். நங்கநல்லூரில் மட்டும் அல்ல. எங்கிருந்தோவெல்லாம் அவரைத் தேடி வருகிறார்கள் என்றால் சும்மாவா? மடிப்பாக்கத்தில் இருக்கும் DR JAY'S DENTAL CARE ல் அவரை சந்திக்கலாம்.
No comments:
Post a Comment