திரும்பி பார்ப்பதற்குள் ஒரு சில வருஷங்கள் ஓடிவிட்டது. சுமார் ஒரு வார காலம் மும்பை ஷீரடி என்று புனித பயணம் மேற்கொண்டதில் அன்றாட எழுத்து பயிற்சி நின்று விட்டது. தமிழ் நாட்டை தாண்டின வுடனே நாக்கு செத்து போயிடும். மும்பையிலே வெஜிடேரியன் சாப்பாடு என்றவுடன் நமது எதிர்பார்ப்பு மரணமடைந்துவிடும். சாம்பார் தித்திப்புடன் தடிமனான இட்லியுடன் கிடைக்கிறது. உள்ளே தள்ளுவது சற்று கடினம் தான். வடா பாவ் என்று புரிபடாத ஒரு ருசியில் நிறைய பேர் சாப்பிடும் வஸ்து கிடைக்கிறது. கார சாரமான மிளகாய்ப்பொடி நல்லெண்ணையை மனதில் நினைத்துக்கொண்டு --( ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள்-- ஸ்ரீ ராமானுஜர்-- கோவிலில் காஞ்சிபுரம் இட்லிக்கு கோவிலில் பிரசாத ஸ்டாலில் கொடுப்பதை சாப்பிட்டவர்களுக்கு அதன் ருசி, இதை படிக்கும்போது நாக்கில் நீர் சுரக்க வைக்கவில்லை என்றால் எனக்கு எழுதத் தெரியவில்லை என்று தான்அர்த்தமாகும்.)
பம்பாய் என்று அநேக வருஷங்கள் அழைக்கப்பட்டு மனதில் ஊறின பெயரை மாற்றி கொம்பில்லாத பசுவைப் போல மும்பை என்று அழைப்பது ஏதோ வேஷ்டி இடுப்பில் நழுவியது போல கஷ்டமாகத்தான் இருக்கிறது. எங்கும் எதிலும் மாற்றம். நிறைய ஜனங்கள் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். எல்லோருக்குமே எதிலோ எங்கோ முக்ய வேலை இருக்குமோ? வேகம் வேகம் வேகம். வாகனங்களை விட நடப்பவர்கள் வேகமாக செல்ல முடிகிறது. மாடி ரயில் நிறைய பறக்கிறது. சுபிட்சம் எங்கும் தெரிகிறது. ஏழை நடுத்தரம் பணக்காரன் எல்லோரும் சந்தோஷமாக வாழ பம்பாய் மஹாலக்ஷ்மி வழி வகுத்திருக்கிறாள்.
சாய் சத்சரிதம் தொடர்வோம்.
தபோல்கர் என்பவருக்கு ஒரு தாகம். ஷீர்டி சாய் பாபா பக்தர். பகவானின் அற்புத லீலைகளை ஒரு புத்தகமாக்கினால் என்ன? என்னால் முடியுமா? முடியவேண்டும். அவர் அருளால் முடியலாம். அடுத்தமுறை பாபாவை நேரில் கண்டு அவர் ஆசியோடு தொடங்க எண்ணம். ஆனால் கேட்க தைர்யம் போதவில்லை. நண்பர் ஷாமாவை முடுக்கிவிட்டார். ஷாமா தான் மாதவ்ராவ் தேஷ்பாண்டே. பாபாவின் ஒரு அணுக்க தொண்டர்.
ஒருநாள் ஷாமா 'நீ என்னுடன் வா. பாபாவிடம் உன் எண்ணத்தை சொல்வோம். ஆசிபெறுவோம் '' இருவரும் பாபா முன் நின்று வணங்கினார்கள். மெதுவாக ஷாமா ''குருநாதா, தபோல்கர் பாபாவின் லீலைகளை புத்தகமாக எழுத ஆசைப்படுகிறார். உங்கள் ஆசிர்வாதத்தோடு துவங்க வந்திருக்கிறார்''
பாபாவின் பார்வை முழுமையாக தபோல்கர் மீது விழுந்தது. கைகள் மேலே எழும்பின. தலை அசைத்து '' கிட்டே வா'' என அழைத்த ஜாடையை புரிந்துகொண்டு பாபா அருகே நெருங்கி சிரம் தாழ்த்தி குனிய பாபாவின் கரங்கள் அவர் சிரத்தை தொட்டு தடவுகிறது. அருகில் இருந்து ''உதி'' எனும் திரு நீற்றை அளித்து அவர்களை பாபா வழி அனுப்ப ஷாமாவுக்கு பரம சந்தோஷம். '' ஹேமாத், (ரொம்ப நெருக்கமானவர்கள் அழைக்கும் பெயர்) நீ அதிர்ஷ்டக்காரன். இனி நீ எழுதப்போவதில்லை, பாபாவே தனது அனுபவங்களை உன்னை ஒரு கருவியாக கொண்டு பக்தர்களை இனி அணுகப்போகிறார்'' பக்தர்கள் மனதில் பரிபூர்ண நம்பிக்கை ஊட்டும் காவியமாகப் போகிறது. '' என்கிறார் ஷாமா.
தபோல்கர் தான் ஹேமாத்ரி பந்த். காகாசாஹேப் தீக்ஷித் மற்றும் நானாசாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின் நெருங்கிய நண்பர். தபோல்கரை பார்க்கும்போதெல்லாம் நானாசாஹேப் ''ஹேமத், ஷீர்டி போனீர்களா? பாபா தரிசனம் ஆயிற்றா ? என்று கேட்பவர். ஒன்றிரண்டு முறை கூறியும் ,முயற்சித்தும் அவர் ஷீர்டி போகமுடியாமல் ஏதோ வேறு வேலைகள் அவரது ஷீர்டி விஜயத்தை தள்ளிப்போட வைத்துக் கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் ரயில் வசதி இருந்தது. நானாசாஹேப் ஒரு முறை பாந்திரா செல்ல நேர்ந்தபோது தபோல்கர் அங்கே வசிப்பதால் அவரைத்தேடி சென்றார்.
''என்னய்யா இன்னும் நீங்கள் ஷீர்டி போகவில்லையா?' என்று தபோல்கரிடம் மீண்டும் ஞாபகப்படுத்த அவரும் ''சரி இப்போதே புறப்படுகிறேனே'' என்கிறார். ரயிலில் சென்று தாதரில் இறங்கி மன்மத் செல்லும் வேறு ரயிலைப்பிடித்து ஷீர்டி செல்ல உத்தேசம். ரயிலில் அறிமுகமில்லாத ஒரு பிரயாணி ''சார் எங்கே போகிறீர்கள்?'' என்கிறான். '' தாதரில் இறங்கி மன்மத் போகும் ரயிலை பிடித்து ஷீர்டி போகிறேன்''.
''தாதரில் இறங்கவேண்டாம். மன்மத் போகும் ரயில் அங்கே வராது'' என்று ஷீர்டி செல்லும் வழியை கூற ஷீர்டி வந்து சேர்கிறார் தபோல்கர். நேராக வாடா வுக்கு சென்று தங்கி பாபாவை த் தேடி செல்ல எண்ணம். இங்கே தான் வாடா அருகில் பாபா ஒரு மசூதியில் இருக்கிறார் என்று யாரோ சொல்ல பாபாவை சென்று தரிசிக்கிறார். இப்போது போல் அப்போதெல்லாம் கூட்டம் இல்லை. பாபா அருகில் சென்று அவர் திருவடிகளை தொட்டு வணங்குகிறார். உடல் சிலிர்க்கிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதோ ஒரு புதிய சக்தி மின்சாரம் போல் பாய்கிறது. வாழ்க்கையையே அக்கணம் மாற்றிவிட்டதோ ?
''பாபா போன்ற குரு அவசியம் தேவை என மனம் விழைகிறது. அங்கே பாபா அருகே காக்கா சாஹேப் கண்ணில் படுகிறார்.
''காகா , ''ஹேமாத்'' என்ன சொல்கிறார்?'' - பாபா. தபோல்கருக்கு ஆச்சர்யம். எப்படி தன்னை ''ஹேமாத் '' என்று அழைக்கிறார்?.தபோல்கர் படித்தவர். மராத்தி குறுநில மன்னர்கள் மஹாதேவ், ராம்தேவ் ஆகியோருக்கு மந்திரி. நிறைய ஆன்மீக புத்தகங்கள் எழுதியவர். கணக்கு வழக்குகள் பார்க்க புது முறை வகுத்தவர். பிற்காலத்தில் ஷீர்டி சமஸ்தானத்தில் கணக்கு வழக்குகள் பார்த்து நிர்வாகம் பார்க்கும்போது அவர் பெயர் ''ஹேமாதிரி பந்த்'' . நாம் எல்லோரும் இப்போது படித்து இன்புறும் ''சாய் ஸத்சரிதா'' புத்தகத்தை எழுதியவர் ஹேமாத் பந்த் என்ற பெயரில் பிரபலமான கோவிந்தா ரகுநாத் தபோல்கர்.
கீதையில் கிருஷ்ணன் சொல்வது தான் நடக்கிறது. ' அநீதி, அக்கிரமம், 'தீயசக்திகள் பரவி தர்மம் நேர்மை ஆகியவை குறைந்து தவிக்கும்போது நானே வருவேன் அவற்றை அழிப்பேன். தர்மம் நிலைநாட்டுவேன்'' என்பது தான் ஒருவகையில் ஷீர்டியில் பாபாவின் அவதாரமோ? ஷீர்டி ஹமத் நகர் ஜில்லாவில், கோதாவரியை கடந்து கோபர்காவ்ன் வழியாக நிம்காவ்ன் நோக்கி நடந்தால் தெரியும் கிராம் என்று அக்காலத்தில் அடையாளம் சொல்வார்கள்.
No comments:
Post a Comment