ஐந்தாம் வேதம் J K SIVAN
ஒன்பதாவது நாள் தொடர்ச்சி
'மா பெரும் தியாகி..''
மகா பாரதத்தில் என்னைப் பொருத்த வரையில் ஒன்பதாவது நாள் மிகவும் முக்கியம் வாய்ந்தது.
ரப்பரை ஒரு அளவுக்கு மேல் இழுத்தால் டப் பென்று அறுந்து விடும் இதை தான் ஆங்கிலத்தில் elasticity என்று சொல்வோம் . அது போல் பீஷ்மர் அன்று இரவு தூங்காமல் வாடினார். துரியோதனன் சுடுசொல் அர்ஜுனன் அம்புகளை விட அவரை அதிகமாகவே துளைத்தன.
அன்று நடந்த சில சம்பவங்கள் மீண்டும் நினைவு கொள்வோம் .
துரியோதனன், ''தம்பி துச்சாதனா, பீஷ்மரை பாண்டவர் சேனை சூழ்ந்து கொண்டுவிட்டது. உடனே நீ பக்க பலமாக பெரும் சேனையை கொண்டுவா'' என்று கட்டளையிட்டான்." சகுனி கூரிய அம்புகள் ஈட்டிகள் கொண்ட குதிரைப் படையை பீஷ்மருக்கு காவலாக நிறுத்தினான். பாண்டவ சைன்யத்தில், இதை கவனித்த அச்வ சாஸ்திர நிபுணன் நகுலன் அந்த குதிரைகளை அப்படியே திரும்பி கௌரவ சேனையையே தாக்கும்படியாக செய்தான்.
சல்லியன் யுதிஷ்டிரனை தாக்க முற்பட்டான். பீமன் உடனே யுதிஷ்டிரனுக்கு உதவ சல்லியனை தாக்கியவனை பின்வாங்கச் செய்தான்.
திருஷ்டத்யும்னன் துரோணரை தாக்கி காயமுறச் செய்தான். யமனே எதிரே தேரில் நின்று உயிர்களை பறிப்பது போல் பீஷ்மர் பாண்டவர்களை பழி வாங்கிக் கொண்டிருந்தார்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. பீஷ்மரை பலர் எதிர்த்து தோல்வியுற்றனர். பாண்டவ சைன்யம் அழிய ஆரம்பித்தது.
''அர்ஜுனா, எதிர்பார்த்த நேரம் வந்து விட்டது. உன் விருப்பம் நிறைவேறப் போகிறது இப்போது. உடனே விடாமல் பீஷ்மரை தாக்கு. சிகண்டியை முன்னால் நிறுத்து.'' என்றான் கிருஷ்ணன்.
''மாதவா உன் ஆணை. நிறைவேற்றுகிறேன். பீஷ்மர் முன்னால் தேரை நிறுத்து.''
பீஷ்மர் அம்புகள் அர்ஜுனன் மேல் பொழியத்தொடங்கின . அர்ஜுனன் பீஷ்மர் வில்லை உடைத்தான். தேரை நொறுக்கினான்.
தனது வில்லை உடைத்து கீழே விழச் செய்த அர்ஜுனனை பீஷ்மர் சிரித்துக் கொண்டே ''ஆஹா, அற்புதமடா, அர்ஜுனா உன் வீரம் ''என்றார். கணத்தில் மற்றொரு வில்லால் அர்ஜுனனை தாக்கினார்.
நேரம் நழுவியது. அர்ஜுனனால் பீஷ்மரை கொல்ல முடியவில்லை.
கிருஷ்ணனால் தாங்க முடியவில்லை.
கண்கள் சிவக்க, முகத்தில் கோபம் வெடிக்க, தேரிலிருந்து கீழே குதித்து பீஷ்மனை நோக்கி வெறும் கரங்களோடு சென்றான். வெறும் கரங்களோடு தன்னை கொல்ல கிருஷ்ணன் வருவதை பார்த்த பீஷ்மர்
''வா, கோவிந்தா வா, உன்னை வணங்குகிறேன். இந்த யுத்தத்தில் இன்று என்னை முடித்துவிடு. அதுவே எனக்கு க்ஷேமம். என்னை எப்படிவேண்டுமானாலும் கொல்வாய் . மூவுலகிலும் கிட்டாத பாக்கியம் எனக்கு. நான் உன் அடிமை''
பீஷ்மரின் இரு கரங்களும் கிருஷ்ணனை சிரத்துக்கு மேல் தூக்கி வணங்கின.
கண நேரத்தில் அர்ஜுனன் ஓடிவந்தான். தரையில் குனிந்து கிருஷ்ணன் கால்களை கட்டிக் கொண்டான். மேலே தொங்கிய மஞ்சள் வஸ்த்ரத்தை பிடித்து இழுத்தான். இரு கரங்களாலும் கிருஷ்ணனை வளைத்து கட்டிக் கொண்டான். அவனையும் இழுத்துக் கொண்டு கிருஷ்ணன் பீஷ்மனை நோக்கி ஓடினான்.
அர்ஜுனன், கிருஷ்ணன் கால்களை சேர்த்து கட்டிக் கொண்டான். கிருஷ்ணன் நாகம் போல் சீறினான். மூச்சு சப்தத்தில் விண்ணைப் பிளக்க கோபம் தெரிந்தது.
''கேசவா, நிறுத்து. நில். உன் வார்த்தை பொய்யாகக் கூடாது. நான் யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன். போர் புரிய மாட்டேன் என்றாயே வாசுதேவா. திரும்பு வா என்னுடன். நானே பிதாமகரை கொல்வேன் . உன்னை பொய்யனாக்க விடமாட்டேன். உன் மீது சத்யம். என் காண்டிபத்தின் மீது ஆணை.''
க்ஷண காலத்தில் கிருஷ்ணன் கோபம் தணிந்தது. புன் முறுவல் விதானத்தில் மலர்ந்தது. மறு வார்த்தை பேசவில்லை. கோபத்தை தணித்து, மீண்டும் தேர் தட்டில் ஏறி அமர்ந்தான் கிருஷ்ணன். மறுபடியும் உக்கிரமான அர்ஜுனன் பீஷ்மர் யுத்தம் தொடர்ந்தது. எத்தனையோ உயிர்கள் பலியாயின.
சூரியன் மேற்கு திசையில் இறங்க ஆரம்பித்தான். இரண்டு சேனைகளும் எண்ணற்ற வீரர்களை இழந்தாகிவிட்டது. யுத்தம் நிறுத்தப் பட்டது.
யுதிஷ்டிரன் கிருஷ்ணனை கூடாரத்தில் சென்று பேசினான். அவன் முகத்தில் கவலையால் வியர்வை துளிர்த்தது.
''கிருஷ்ணா, பீஷ்மரை எதிர்த்து போரிட முயற்சித்தது என் தவறோ. நான் விலகி காட்டுக்கு சென்று தவம் செய்கிறேன். என் தம்பிகள் நாட்டை ஆளட்டும்''. என்றான் யுதிஷ்டிரன்.
''ஆம், யுதிஷ்டிரா, பீஷ்மனை எவரும் எதிர்க்கவோ வெல்லவோ முடியாது. கங்கையிடம் வரம் பெற்றவன்.
இனி உனக்கு இருக்கும் ஒரே வழி இது தான். நேராக பீஷ்மனிடம் போ. உன் மீது பற்று உண்டு பீஷ்மருக்கு. அவரை வேண்டி இந்த யுத்தத்தில் எதிரிகளை வீழ்த்தி என் சேனை வெற்றிபெற என்ன வழி என்று அவரையே கேள்.'' என்றான் கிருஷ்ணன்.
எதிரியிடமேசென்று உன்னை கொல்வதற்கு, வெல்வதற்கு என்ன வழி என்று யாராவது கேட்பார்களா? கேட்டால் தான் அந்த எதிரி மனமுவந்து பதில் சொல்வானா. அவனை வரவேற்று இப்படி நீ செய்தால் நான் மரணமடைவேன் என்று தானே வலிய வந்து சொல்வானா? அது தான் பீஷ்மருக்கும் மற்றவர்க்கும் உள்ள வித்தியாசம். யுதிஷ்டிரன் நேர்மையானவன். அவருடைய ஆசியோடு தான் போரைத் துவக்கியவன். போரில் விருப்பமின்றி வேறு வழியின்றி போருக்கு இசைந்தவன்.
யுதிஷ்டிரன், அர்ஜுனன், பீமன் நகுல சஹாதேவர்கள் கௌரவ சேனை கூடாரங்களை அடைந்து பீஷ்மர் கூடாரத்தில் நுழைந்து அவரை வணங்கி நின்றனர்.
''என் வீரச் செல்வங்களே வாருங்கள், உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். உங்கள் மகிழ்ச்சியே எனக்கு சந்தோஷத்தை தரும். உங்களுக்காக நான் எதையும் செய்வேன் என்று தெரியுமல் லவா?''என்றார் பீஷ்மர். அவர் முகத்தில் அவர் உள்ளத்தில் இருந்த பற்றும் பாசமும் பளிச்சிட்டது.
''பீஷ்ம பிதாமகரே, உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. நாங்கள் இந்த யுத்தத்தில் வெற்றிபெறுவது எப்படி என்று உபதேசிக்க வேண்டும். உங்களையும் மற்றவர்களையும் எப்படி ஜெயிப்பது என்று எங்களுக்கு நீங்களே உபதேசிக்கவேண்டும் '' என்றான் யுதிஷ்டிரன்.
''குழந்தைகளே, நான் உயிரோடு இருக்கும்வரை உங்களாலும் மற்றவர் எவராலும் என்னையோ கௌரவர்களையோ வெற்றிகொள்ள முடியாது. இது நிச்சயம். என்னை முதலில் கொன்றால் தான் உங்களால் வெற்றியை பற்றியே நினைக்க முடியும். புரிகிறதா?'' என்கிறார் பீஷ்மர். .
' உங்களை எப்படி நாங்கள் வெற்றி கொள்ளமுடியும் தாத்தா. யமனை எவர் வென்று உயிர் பறிக்க முடியும் ?''
''வாஸ்தவம் யுதிஷ்டிரா. என் கையில் வில் இருக்கும் வரை எவரும் என்னை மூவுலகிலும் வெல்ல முடியாது.
என் ஆயுதத்தை நான் கீழே வைத்தால் எவரும் என்னை வெல்லலாம். எவன் ஆணல்லவோ, எவன் பெண்ணின் பெயரை கொண்டவனோ, எவள் என்னைக் கொல்ல தவமிருந்து வரம் பெற்று ஆணாகி எதிர்க்கிறாளோ, அவளோடு-- இல்லை அவனோடு-- நான் வில்லெடுத்து போரிடமாட்டேன். அப்போது சகுனம் எனக்கு எதிராக தோன்றும். அப்போது நான் வில்லெடுத்து போர் புரியமாட்டேன். உன் சேனையில் இருக்கிறானே சிகண்டி, அவன் முன்பு அம்பை என்ற காசிராஜன் பெண்ணாக இருந்தவள். இப்போது ஒரு ஆண். துருபதன் மகனாக வந்திருக்கிறான் அல்லவா. அர்ஜுனனை அவனை முன்னால் நிறுத்தி என்னை தாக்கச் சொல். நான் வில்லெடுத்து அவனை எதிர்க்க மாட்டேன். அந்த நேரத்தில் அர்ஜுனனை விட்டு என்னை கொல்லச் செய் . அர்ஜுனனோ, கிருஷ்ணனோ தவிர வேறு எவராலும் என் மார்பை பிளக்க முடியாது.'' பிறகு உனக்கு போரில் வெற்றி நிச்சயம். என்னுடைய ஆசிகள் உங்களுக்கு போய்வாருங்கள்'' என்று பீஷ்மர் சொன்னதும் அவரை வணங்கி பாண்டவர்கள் திரும்பினார்கள்.
''கிருஷ்ணா இப்படிப்பட்ட உன்னதமான மனிதரை, எப்படி கொல்ல மனசு வரும்? என்றான் அர்ஜுனன் .
"பீஷ்மனைக் கொல்வேன் என்று ஆணையிட்டதும் சபதம் செய்ததும் நீ தானே. இப்போது எப்படி அதிலிருந்து விலகமுடியும். நீ க்ஷத்ரியன் உன் கடமை போர் புரிவது. யார் இறப்பார், யார் இருப்பார் என்ற கவலை உனக்கு ஏது, எதற்கு? பீஷ்மர் இருக்கும் வரை, ஏன் இறக்கும் வரை, வெற்றியின் நிழலைக் கூட நீ பார்க்க முடியாது. அவர் இறக்கும் நேரம் வந்து விட்டது. இந்த நேரத்தில் அது முடிந்தாக வேண்டும். அவரே சொன்னபடி உன்னைத்தவிர வேறு எவராலும் அவரோடு போர் புரியமுடியாது'' என்று தெளிவாக சொன்னான் கிருஷ்ணன்.
" கிருஷ்ணா, சிகண்டி தான் பீஷ்மர் மரணத்துக்கு காரணமாவான். அதற்காகவே தவமிருந்து ஆணான அம்பை. நான் சிகண்டியை முன்னால் நிறுத்தி பீஷ்மரை தாக்கச் செய்வேன். மற்றவர்கள் சிகண்டியை தாக்காமல் நான் அவனைக் காப்பேன்.
''திருதராஷ்டிரா, பீஷ்மர் இவ்வாறு பாண்டவர்களோடு பேசி சந்தோஷமாக விடைபெற்றார்கள்'' என்று இதை திருதராஷ்டிரனிடம் சொல்கிறான் சஞ்சயன்.
No comments:
Post a Comment