Wednesday, July 3, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்     J K SIVAN 
ஆறாம் நாள்  யுத்தம் 

                                                   அழிவின் தொடர்கதை

சமுத்திர ஜலத்தில் சிலது ஆவியானாலும் கடலின் அளவு குறைந்தா போய்விடும்,  கொஞ்சமா
கவா
 காணப்படும்?. அதுபோல் கௌரவ சேனை  கண்ணுக்கெட்டாத ஸைன்யமாக ஆறாம் நாள் யுத்தத்துக்கு தயாராகியது.
''சங்குகள் பேரிகைகள் ஒலிக்க, அவரவர் வழக்கம்போல் தத்தம் எதிரிகளை குறிவைத்து தாக்க தயார் நிலையில் இருந்தார்கள்.

'யுதிஷ்டிரன் சேனாபதி திருஷ்டம்த்யும்னனிடம் ''இன்று நமது சேனையை மகர வியூகத்தில் அமைத்து விடுவோம். துருபதனும் அர்ஜுனனும் முதன்மையில் இருக்கட்டும். சகாதேவனும் நகுலனும் இரு கண்களாக பொறுப்பேற்கட்டும். அதன் கூரிய நாசியாக பீமன் முதலில் இருக்கட்டும். பின் பலமாக அபிமன்யு, கடோத்கஜன். வியுகக் கழுத்தாக நான் இருக்கிறேன். பக்க பலமாக விராடன் சாத்யகி நிற்கட்டும். நடுவே சேகிதானன், சிகண்டி குந்திபோஜன், நீ ஆகியோர் எங்கெல்லாம் உதவி தேவையோ அங்கே கண்காணித்து செல்லுங்கள்.

அன்று பீஷ்மர்  கௌரவ  சேனையை நாரை வியூகமாக்கியிருந்தார். நாரையின் அலகாக துரோணர் முன்னே நின்றார்.    அஸ்வத்தாமன் கிருபர் இருவரும் அதன் கண்கள் . அதன் தலையாக, கிருத வர்மன், காம்போஜன், அதன் கழுத்தாகவும்   துரியோதனன் மகன் சூரசேனன். அதன் மார்பாகவும் பொறுப்பேற்று,  ஒரு பெரிய சேனை. அதற்கு சுசர்மன் தலைமை.

யுத்தம் ஆரம்பித்தது. படைகள் ஒன்றை ஒன்று தாக்கின. ஆரம்பத்தில் யானைகள் யானைகளோடு, குதிரைப் படை குதிரையோடு என்று ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல ஒழுங்கு மாறியது. கௌரவர்கள் கட்டுக்கோப்பு குலைய பீமனும் அர்ஜுனனும் முக்ய காரணம். புயலாக தாக்கி நிலை குலைய வைத்தார்கள்.
''சஞ்சயா, இது  எப்படி சாத்தியம். நமது சேனை பிரம்மாண்டமானது.  பெரியது. போர் நெறி முறைகள் அனைத்தும் அறிந்தவர்கள்,  மகா வீரர்கள் துரோணர் பீஷ்மர் தலைமையில் இருக்கும்போது எப்படி நிலை குலையமுடியும்? . வியூகம் எப்படி பிளவு படும்?'' பார்த்து சொல்''  என்றான் திருதராஷ்டிரன்.

துரோணரின் அம்புகள் சாத்யகியை தாக்குவதை அறிந்த பீமன் அவரது தேரை உடைத்தான். அபிமன்யு சரங்களை அவர் மீது பொழிந்தான். சிகண்டி துரோணர் பீஷ்மர் இருவரையுமே தாக்கிக் கொண்டிருந்தான். பீஷ்மர் சிகண்டியை விட்டு விலகினார். சிகண்டி துரோணரை மும்முரமாக தாக்கினான். பீமன் கவனம் துரியோதனன் மீதும் அவனது சகோதரர்கள் மீதும் செல்வதைக் கண்ட பீஷ்மர் அவர்களை அரணாகப் பாதுகாத்தார்.  அவன் அவர்கள் உயிரைக் குடிக்க விரும்பிய யமன் அல்லவா?  அவனை கடும் அம்புகளால் தாக்கினார். அர்ஜுனன் அவரை ஒருபக்கம் விடாமல் அம்புகளால்  துளைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சமாளிப்பதிலேயே அவர் நேரம்,  வீரம்,  இரண்டுமே சென்றது. ஆயுதங்கள், கவசங்களோடும் அவை இன்றியும், உயிரற்றும், உயிர் மெதுவாக பிரிந்துகொண்டும் அனேக உடல்கள் மலையாக குவிந்தன. ஒவ்வொருநாளும் பிண மலைகள் புதிது புதிதாக எங்கும் தோன்றியது. பிணந்தின்னி கழுகுகள், மிருகங்கள் அவற்றுள் போடும் சண்டையின் சத்தமும் ஆனந்தமும்  வேறு சேர்ந்து கொண்டது.  குருக்ஷேத்ரத்தில் ஒரு பெரிய ரத்த ஆறு எப்போதும் ஓடிக் கொண்டே இருந்தது.

கலிங்க படைகளின் துணையோடு துரியோதனன் தலைமை தாங்கி பாண்டவர்களை எதிர்த்தான். துரியோதனனின் செயலை பார்த்த பீஷ்மர் அவனுக்கு காவலாக வந்தார்.  
ஜயத்ரதன் துச்சாதனனோடும் சகுனியோடும் சேர்ந்து திரிகர்த்தர்களின் 14000 குதிரைப் படையுடன், பாண்டவர்களை ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டிருந்தான். சிகண்டி, சகாதேவன் துருபதன்  அவனையும் அவன் படையையும் எதிர்த்தார்கள்.

சாத்யகி துரோணரை எதிர்த்துக் கொண்டிருந்தபோது அவனுக்கு உதவியாக திருஷ்ட த்யும்னனும் துருபதனும் வேறு சேர்ந்து கொண்டார்கள். துரோணருக்கு பக்க பலமாக கிருபரும் கிருத வர்மனும் இணைந்தார்கள். எண்ணற்ற உயிர்கள் மடிந்தாலும், வெற்றி தோல்வி இன்றி ஆறு நாளாக இன்னும் யுத்தம் தொடர்கிறது'' என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்.
''என் செய்வேன் , இது விதி விதி'' என்று தலையில் அடித்துக் கொண்டான் கண்ணற்ற அரசன்.
திருஷ்டகேதுவும் கடோத்கஜனும் துச்சாதனனின்  குதிரைப் படைகளை அழித்துக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய யுத்தத்தில் பாண்டவ சைன்யத்தை த்வம்சம் செய்து கொண்டிருந்தார் பீஷ்மர். அவரோடு துரோணரின் பங்கும் அதிகம் இருந்தது அந்த அழிவில்.

அஸ்வத்தாமன் அர்ஜுனனை அம்புகளால் தாக்கும்போது 76 அம்புகள் கிருஷ்ணனையும் துளைத்தது. அர்ஜுனனன் அவன் வில்லை ஒடித்து ஒரு கணம் அவனைக் கொல்வதற்கு தயங்கினான். குருவின் பிள்ளை, பிராமணன் என்பதால் அவனைக் கொல்லாமல் விட்டான். துரியோதனன் மகன் லக்ஷ்மணன் அபிமன்யுவை தாக்க, அவன் லக்ஷ்மணனின் வில்லையும் தெரியும் நொறுக்கி, லக்ஷ்மணன் கிருபரின் தேரில் சென்று அமர்ந்துகொண்டான். அவர் அவன் உயிரைக் காத்தார்.
பூரிஸ்ரவசும் சாத்யகியும் சம பலத்துடன் மோதி வாழ்வா சாவா யுத்தத்தில் ஈடுபட்டனர்.
அன்றைய யுத்தத்தில் இதுவரை முப்பதினாயிரம் கௌரவ சேனை வீரர்களை அர்ஜுனன் கொன்றான் என்கிறார் வியாசர்.

சூரியன் மேற்கே மலைவாயில் விழ அன்றைய யுத்தம் நிறுத்தப் பட்டது.
இரவு வேதனையோடும் சோதனையோடும் கௌரவர்களை அணுகியது. 
இன்னும் எத்தனை நாளோ என்று பெருமூச்சு விட்டான் திருதராஷ்டிரன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...