யாத்ரா விபரம் J K SIVAN
ஆறுவிரல் மஹாலக்ஷ்மி
நாம் மிகவும் புண்ணியசாலிகள். மறக்காமல் முதுகில் தட்டிக்கொள்ளுங்கள். நமது தேசம் ஒன்றில் தான் எண்ணற்ற ஆலயங்கள் இன்னும் இருக்கின்றன. எவ்வளவோ இருந்து பல அழிந்தும் இன்னும் சில மிஞ்சி உள்ளதே . ஆலயம் என்பதன் பொருளே ஆன்மாவோடு லயம் ஆவது. கோ: தெய்வம் , இல்: இருக்கும் இடம். இப்போது புரிகிறதா நமது முன்னோர்கள் எதற்காக கோயில்களுக்கும் ஆலயங்களுக்கும் முக்யத்துவம் கொடுத்து தமது வாழ்க்கையை இறைவனோடு பிணைத்துக் கொண்டார்கள் என்று?.
சமீபத்தில் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு திடீரென்று புறப்பட்டு அரசர் கோவில் என்ற க்ஷேத்ரம் சென்றேன்.
சில வருஷங்களுக்கு முன்பு நண்பர்களோடு நான் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மார்கத்தில் சில கோவில்கள் சென்றபோது இந்த ஆலயத்தை முதன்முதலாக தரிசித்தது நினைவில் வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் அருகே பாலாற்றங்கரையில் ஒரு அமைதியான கிராமம். அதன் பெயர் வேடிக்கையானது. அரசர் கோவில். சென்னையிலிருந்து தென்மேற்கே 67 கி.மீ, செங்கல்பட்டிற்குத் தென்மேற்கே 27 கி.மீ, காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் இந்த அரசர் கோவில் இருக்கிறது.
இந்த கோவிலில் அதிசயம் என்னவென்றால் இங்கே ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருள்பாலிக்கிறார். குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான ஸ்தலம் பெருமாள் கமல வரதராஜப் பெருமாள். இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும்.
செல்வங்களை வேண்டியவர்க்கு வாரி வழங்குபவள் மஹாலக்ஷ்மி. மொத்தமாக 64 லட்சுமிகள் உண்டு. அவர்கள் அனைவரிலும் பிரதானமானவள் தாயார் சுந்தர மகாலட்சுமி. ஆதி மூல லட்சுமி . பெயருக்கேற்றபடி சுந்தரமஹாலக்ஷ்மி அதி சுந்தர ரூபவதி. குபேர சம்பத் சக்தி. வாரி வழங்குபவள். சிறு குழந்தை போல ' புசு புசு' கன்னம். சிரித்த முகம். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி தரும் தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரை. பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். சுக்ரன் ஆறு எனும் எண் சம்பந்தப்பட்டவர். அவரை தனது ஆணைக்குட்பட்டு செயல் பட வைக்கும் சக்தி கொண்டவள் இந்த தாயார்.
ஒருவன் நன்றாக சுபிக்ஷமாக இருந்தால் ''அவனுக்கு என்னப்பா சுக்ர தசை. கொழிக்கிறான்'' என்கிறோம். இங்கே மஹாலக்ஷ்மி சுக்ரனையே தனது வசம் கொண்டு தன ஆகர்ஷண லக்ஷ்மியாக அருள் பாலிக்கிறாள். பிரதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் இங்கே வந்து தாயாரை வழிபடுகிறார். பெருமாள் ‘கமல’ வரதராஜ பெருமாள். இவரை காஞ்சி வரதருக்கும் மூத்தவர், அண்ணா, என்பார்கள் .
ஒரு கதை. பிரம்மா சாப பாப விமோசனம் தேடும்போது நிறைய ரிஷிகளை, முனிவர்களை கேட்கிறார். ராஜாவும், விஷ்ணுவும் சேர்ந்து இருக்கும் ஒரு க்ஷேத்திரத்துக்கு சென்று தரிசித்தால் பாப விமோச்சனம் நிச்சயம்'' என அவர்கள் சொல்ல இங்கே வருகிறார். நாராயணன் பாலாற்றங்கரையில் இங்கே வாசம் செயகிறார். ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். இருவரும் இங்கே இருப்பதை அறிந்து தரிசித்து ப்ரம்மா, பாப விமோசனம் பெறுகிறார். அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயர்.
ஜனக மஹாராஜா முதலில்கட்டிய கோவில் எனவே இதற்கு அரசர் கோவில் என்று பெயர் வந்தது என்கிறார்கள்.
தாயார் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. பாற்கடலில் உருவானவள் பாலாற்றை பார்த்தபடியிருக்கிறாள். அழகிய கல் மண்டபம் .காதுகளில் குண்டலங்கள், கைகளில் அணிகலன்கள், சங்குக் கழுத்தில் மூன்று துளசி மணி மாலைகள், துளசி மணி மாலையின் முடிவில் துளசிப் பத்திரம் போன்றவையும், நெற்றியில் சூரிய –சந்திர பிரபைகள் .
மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ‘சுந்தர’னாக ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.
வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்க ளையும் கொடுப்பாள் மகாலட்சுமி. தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள்.
தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.
அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள்.
பெருமாள் கமல வரதராஜர் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்ததால் ‘கமல’ வரதராஜர். பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர்கள்.. கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவர்.
விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வதால் மிக பழைய கால கோவில்.
கோயிலின் தல விருக்ஷம் அரசமரம். இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமாள் என கல்வெட்டு சொல்கிறது.
இங்கே பாலாறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வழக்கமாக ஓடாமல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வது அதிசயம். ஆகவே இது தட்சிண பிரவாகம்..
கருடாழ்வார் சன்னிதியின் எதிரே 24 தூண்கள் கொண்ட அழகிய கல் மண்டபம் உள்ளது. பெருந்தேவி தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின் தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண் ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன.
மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான துளை ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு சிறு ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது. இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.
சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். (காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பாகவும், காஞ்சிக்கு அருகே ஓடும் பாலாற்றில் சித்திரா பவுர்ணமி அன்று திருஊரல்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது)
கோவிலின் வடமேற்கே தென்புறச் சுவரில் காணப்படும் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு (கி.பி.1237), வடச்சுவரில் , தென்புறச் சுவரில் காணப்படும் முதலாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1259) கல்வெட்டு, வடமேற்குச் சுவரில் அமைந்துள்ள இரண்டாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1291) கல்வெட்டு, படைவீடைத் தலைநகராகக் கொண்ட ராஜ நாராயண சம்புவராயர் (கி.பி. 1352) கல்வெட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள விஜயநகர பேரரசர் கல்வெட்டு போன்றவை இத்தலத்தின் தொன்மையை காட்டுகிறது. இந்தக் கல்வெட்டுகள் யார் யார் அப்போது நிலக்கொடை, பசுதானம் கொடுத்த்தார்கள், வரிவிலக்கு பெற்றார்கள் என தெரிந்துகொள்ளலாம். சோழ பாண்டியர் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒரு திருக்கோவிலாக இருந்திருக்கிறது. . மூன்றாம் ராஜராஜன் காலத்தில் சிறப்புற்று இருந்த இந்த ஆலயம், பின்னர் பழுதடைந்து மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயனின் ஆட்சி காலத்தில் திருப்பணி மேற்கொண்டு புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
நான் சில வருஷங்களுக்கு முன்பு போன போது கோவில் சிதிலமடைந்து செடிகள் மரங்கள் கோவில் கோபுரத்தில் காணப்பட்டது மனதை பிளந்தது. ஒரு விஷயம். பட்டாச்சாரியார் எங்கோ இருப்பதை அறிந்து அவருக்கு டெலிபோன் பண்ணி அரைமணி நேரம் கழித்து வந்தார். வந்தவர் ஒரு அதிசயமாக ஒரு விஷயம் சொன்னார்.
''இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் வர முடியாது. தாயார் அனுக்கிரஹம் இருந்து அழைத்தால் தான் வர முடியும். உங்களுக்கு இன்று இங்கே வர எப்படி தோன்றியது. உங்களில் யாரோ மக நக்ஷத்திரக்காரர் இருக்கிறாரோ அவரால் தான் வந்தீர்களோ....!!''
என்னுடன் 16-17 பேர். விசாரித்ததில் என்னைத் தவிர வேறு யாரும் மக நக்ஷத்திரக்காரன் இல்லை. அடியேன் அந்த கண்ணன் பட்டாச்சார்யரை முன் பின் பார்த்ததில்லை நான் தான் மற்றவர்களை அழைத்து வந்தவன். என் நக்ஷத்ரத்தை பேப்பரில் போடவில்லை. அதை தெரிந்துகொள்ள எவருக்குமே விருப்பமுமில்லை.பின் எதற்கு .....இவர்.... இப்படி.... ஏன் ஏன் ஏன் ? ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. வாஸ்தவம் தான்.
மஹாலக்ஷ்மி செல்வம் தருபவள். ஆதி மூல லட்சுமி . 64 லட்சுமி அவதாரங்களாக இருப்பினும் அனைத்துக்கும் ஆதாரம். செல்வம் என்றால் ரூபாய் அல்ல. அஷ்ட ஐஸ்வர்யங்கள்.
ஶ்ரீசுந்தர மஹாலக்ஷ்மி சமேத ஶ்ரீகமல வரதராஜப் பெருமாள் அருள் பாலிக்கும் இந்த க்ஷேத்ரம் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஒரு ஆலயம்.
பிரம்ம தேவன் ஶ்ரீமந்நாராயணனைக் குறித்து தவமியற்றிய க்ஷேத்ரம். தவத்தில் மகிழ்ந்த ஶ்ரீமந் நாராயணன் ஶ்ரீதேவி ஶ்ரீபூமிதேவி சமேதராக பிரம்ம தேவனுக்குத் திருக்காட்சி தந்து அருளினாா்.பிரம்ம தேவனின் வேண்டுகோளை ஏற்று தினைப் பொழுதும் திருமகளைப் பிரியாத திருக்கோலத்தில் எம்பெருமான் இத்தலத்தில் நித்யவாசம் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment