ஐந்தாம் வேதம் J K SIVAN
ஒன்பதாம் நாள் யுத்தம்
கிழக்கே சூரியன் ரத்தச் சிவப்பாக ,உதித்தபோதே இன்றும் ரத்தக்குளம் தான் என்று உறுதியாகியது.
குருக்ஷேத்ர யுத்த பூமியில் இரு தரப்பிலும் அன்றைய யுத்தத்திற்கு தயாரானார்கள்.
சஞ்சயன் திருதராஷ்டிரனை பார்த்து ''அரசே, இன்று ஒன்பதாவது நாள் யுத்தம் தயாராகிறது. இருபக்க சேனைகளும் வழக்கம்போல் நிற்கின்றன. எந்த நேரமும் யுத்தம் துவங்கலாம். எல்லோரும் கவசங்கள் அணிந்து கொண்டு ஆயுதங்கள் தரித்து அவரவருக்கு இட்ட பொறுப்பில் ஆயத்தமானார்கள்.
பீஷ்மர் மீண்டும் அணியில் எவரவர் தலைமையில் யார் யாரை தாக்கவேண்டும் என்று கடைசி நிமிஷ ஆணையை நினைவுபடுத்தினார். சூரியன் உதயமாகி நேரமாகிவிட்டது. யானைப் படைகள் குதிரை படைகளும் தத்தம் பாதுகாப்பு பணிக்கு தயாராக நிறுத்தப் பட்டிருந்தன. தேர்களில் வண்ண வண்ண கொடிகள் காற்றில் பறந்தன.
யுதிஷ்டிரன் சேனைத் தலைவன் திருஷ்ட த்யும்னனை அழைத்து ''கடலென எதிரே நிற்கும் கௌரவ சேனையை எந்த விதத்தில் நாம் எதிர் கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தோமோ அதை நினைவில் கொண்டு போரை துவங்கு '' என்றதும் பாண்டவ சேனையை ஸ்ரிங்காதகம் என்ற அமைப்பில் நிறுவினான் திருஷ்டத்யும்னன். அதன் முகப்பில் பீமனும் சாத்யகியும். அவர்களுக்கு இடையே அர்ஜுனன். அவனை ஒட்டி யுதிஷ்டிரன் நகுல சகதேவர்கள், பக்கவாட்டில் அபிமன்யு ஒருபுறம், விராடன், மறுபுறம். பின்னால் கடோத்கஜன்.
முரசங்கள் ஒழிக்க, சங்கங்கள் ஒன்று சேர்ந்து சப்தம் எழுப்ப யானைகள் குதிரைகள் பெரிதாக குரல் எழுப்பின. புழுதி பறக்க எதிரே ஓடின. தொடர்ந்து ஆயுதங்கள் உரசும் சப்தம். வீரர்களின் குரல்கள். உயிர்சேதம் ஆரம்பமாகிவிட்டது. போட்டி போட்டுக்கொண்டு இரு தரப்பும் எதிரி வீரர்களை எமனுலகுக்கு அனுப்பினார்கள்.
பீஷ்மரின் தேர் பாண்டவ சேனையை நெருங்கியது. பீஷ்மரின் அம்புகளும், வாளும் , ஈட்டிகளும் சூரிய ஒளியில் மின்னல் போல் கண்ணைப் பறித்தது. பாண்டவ சேனை வீரர்களின் உயிரையும் பறித்தது. பீமன் பீஷ்மரை தாக்கினான். துரியோதனனும் சகோதரர்களும் பீஷ்மருக்கு உதவ அருகே சென்றனர்.
''அரசே உன் மகன் சுனபன் பீமனால் கொல்லப் பட்டு துடி துடித்து மாண்டான். இதைக் கண்டு உனது பிள்ளைகள் ஆதித்யகேது, வஹவசினன் ,குந்ததரன், மகோதரன், அபராஜிதன், பண்டிதகன், ஆகியோர் ஒன்று சேர்ந்து பீமனை பழிவாங்க கடும் தாக்குதல் நடத்தினார்கள். பீமனின் உடல் பூரா காயம் ரத்தம். மகோதரனின் அம்புகள் பீமனின் கவசத்தை பிளந்தது. ஆதித்ய கேது 70 ஈட்டிகளை பீமன் மீது பாய்ச்சினான். குந்ததரன் 90 அம்புகளை எறிந்தான். அருகேயே சென்று அபராஜிதன் பீமனை தாக்கினான். அவனுக்கு துணையாக பண்டிதகன்.
முழு பலத்தோடு அருகே இருந்த அபராஜிதன் தலையை துண்டித்தான் பீமன். உன் மகன் அபராஜிதன் இப்போது பிணம் அரசே. அவனைத் தொடர்ந்து மாண்டவன் உன் மகன் குந்ததரன். எளிதில் அடுத்து பினமானவன் உன் மகன் பண்டிதகன். பீமனின் உக்ரம் கட்டுக்குள் அடங்காமல் பொங்கியதின் விளைவு இது அவனை யமலோகத்தில் அடுத்து பின் தொடர்ந்தவன் விசாலக்ஷன். மார்பில் பீமனின் கதாயுதத்தை தாங்கி உயிர் விட்டவன் உன் இன்னொரு மகன் ஆதித்ய கேது. அடுத்து வஹவசினன் . இனியும் அங்கே பீமனை எதிர்க்க மற்றவர்களுக்கு என்ன புத்தி கோளாறா? ஓடி விட்டனர்.
துரியோதனன் முகம் வெளுத்தது, உடல் வியர்த்தது. கண்களில் திகைப்பு. கோபமும் கூடியது.''சேனா வீரர்களே, அதோ நிற்கிறான் பீமன், அவனைக் கொல்லுங்கள். என் சகோதரர்களை அழிக்கிறான் அவன்.'' என்று கட்டளையிட்டான்.
துரியோதனன் பீஷ்மனிடம் ஓடினான். ''நமது பலமான சேனையை பாண்டவர்கள் நிலை குலைய செய்கிறார்கள். பீமனும் அர்ஜுனனும் நம்மை தாக்குவதை நீங்கள் ரசிக்கிறீர்களா? என் சகோதரர்களை பீமன் கொன்று வருகிறானே.''
இதைக் கேட்டதும் பீஷ்மரின் கண்களில் நீர் வடிந்தது. கடுஞ் சொல் நெஞ்சை பிளந்தது. ''துரியோதனா , ஏற்கனவே, நான் மட்டுமல்ல, துரோணரும், விதுரனும் கூட சொன்னதை மறந்து பேசுகிறாய் . உனக்காக நான் மட்டுமல்ல துரோணரும் உயிருள்ளவரை போராடுவோம். யாரைக் கொல்ல வேண்டும் என்று பீமன் முடிவெடுத்தானோ அவன் மரணம் அடைவது உறுதி என்று எல்லோருக்கும் தெரிந்தது தானே. கடைசி வரை போராடுவோம். பாண்டவர்களை வெல்வது இயலாத காரியம்.'' என்றார் பீஷ்மர்.
''ஐயோ சஞ்சயா, என் மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாள்வதை பீஷ்மரும் துரோணரும் தடுக்க இயலாமலா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? இதை விதி என்று சொல்லாமல் என்ன வென்று சொல்வேன்? ஒவ்வொரு நாளும் என் மக்களை பீமன் கொன்றான் என்பதை தவிர எந்த செய்தியும் என் காதில் விழவில்லை. நான், விதுரன், காந்தாரி, கிருஷ்ணன் எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் இந்த கொடிய மகன் துரியோதனன் கேட்காததால் வந்த நாசம் இது'' என்று அழுதான் திருதராஷ்டிரன். சூரியன் உச்சி வெயிலாக தலைக்கு மேலே கொளுத்தினான். போர் தொடர்ந்து நடந்தது.
யுதிஷ்டிரன் ஆணையில் அனைத்து பாண்டவ படைகளும் பீஷ்மரை குறிவைத்தன.
எண்ணற்ற அரசர்களை அர்ஜுனன் கொன்றான். பீஷ்மர் துரோணர் அஸ்வத்தாமா, கிருபர் ஆகியோரும் பாண்டவ சேனையை அழித்தனர். சூறையாடினர். யுத்தம் உச்ச கட்டத்திற்கு தாவியது.
வ்ரிஷவன் என்பவன் உயிர் தப்பித்தால் போதும் என்று காயங்களோடு அங்கிருந்து ஓடினான். துரியோதனன் அபிமன்யுவையும் பீமனையும் கொல்ல ராக்ஷசப் படையை ஏவி விட்டான். அவர்களை நெருங்குமுன்பே அர்ஜுனன் அம்புகள் ரெண்டாயிரம் வீரர்களை கொண்ட அந்த படையை எமலோகம் அனுப்பிவிட்டது.
துரியோதனனின் சுடு சொல் பீஷ்மரை அர்ஜுனனின் அம்புகளைவிட ஆழமாக பிளந்தன. ''இன்றே பாண்டவர்களை அழிப்பேன் இன்றேல் மரணம். இது நிச்சயம்'' என்று முடிவெடுத்தார். அது செயலாக விளைந்து பாண்டவ சைனியம் பெருத்த நஷ்டத்தை சந்தித்தது. எங்கும் உடைந்த தேர்கள். உயிரிழந்த வீரர்களது உடல்கள், குதிரைகள், யானைகள், ரத்தத்தில் மிதந்தன.
இந்திரனே நேரில் வந்து போர் புரிவது போல் சாத்யகி கௌரவ சேனையை ஒருபுறம் தாக்கி கொன்று கொண்டிருந்தான். துரோணர் துளியும் ஈவு இரக்கமின்றி பீஷமரைப் போலவே வேறு ஒரு புறமாக பாண்டவர்களை வதைத்துக் கொண்டிருந்தார். அர்ஜுனன் அவரையும் பீஷ்மரையும் சரமாரியாக துளைத்துக் கொண்டிருந்தானே. கொலைவெறி எவர் கண்ணிலும் தெரிந்தது. வாழ்வா சாவா என்ற ஒரே நோக்கம்.
''திரிதராஷ்டிரா, இந்த நிலையில் போர் தொடர்ந்தால் நமது படைகள் வெற்றி பெறுவது நிச்சயம். பீஷ்மரின் முழ பலமும் துரோணரின் வீரத்தோடு சேர்ந்து காணப் படுகிறதை பாண்டவ சைனியம் தடுமாறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.'' என்றான் சஞ்சயன்.
நமக்கு எல்லாம் தெரிந்த ஒரு விஷயம் வியாசர் பாரத ஸ்லோகங்களில் குறிப்பிடவில்லை என்று கொஞ்சம் ஆச்சரியமும் சந்தேகமும் எனக்குள்ளது. ஒருவேளை நாம் சரியாக பார்க்கவில்லையா. அல்லது உண்மையி
லேயே இல்லையா. அந்த விஷயம் என்ன?
(அரவான், இரவான் , இரவாத் என்றெல்லாம் பெயர்களில் அறிமுகமான அர்ஜுனன்---நாக லோக ராணி மகன் பாரத யுத்தத்திற்கு ஆரம்பிக்க ஒரு நல்ல நாள் பார்த்து அதில் களபலி கொடுக்கப் பட்டான். அதால் பின்னால் பாண்டவ அணி வெற்றி பெற்றது என்று ஒரு சேதி உண்டு. அந்த இரவான் வீரத்தோடும் சாகசத்தோடும் யுத்தம் செய்து 9ம் நாள் யுத்தத்தில் உயிர் துறக்கிறான் என்று மஹா பாரதத்தில் வருகிறது. யுத்தம் ஆரம்பிக்கும் களபலி கொடுக்கப்பட்டிருந்தால் எப்படி 9நாள் யுத்தத்தில் பங்கேற்று மாண்டான்? எது சரி என்று பிறகு பார்க்கலாம்.இதுவரை நாம் பார்த்த பாரத தொடரில் யுத்தத்திற்கு நல்ல நாள் பார்த்ததோ, அரவான் களபலி கொடுக்கப் பட்டதோ வரவில்லை )
''சஞ்சயா, அரவான் கொல்லப் பட்டது அர்ஜுனனுக்கு தெரியுமா? அவன் என்ன செய்தான்?'' என்று கேட்கிறான் திருதராஷ்டிரன்.
''அரசே அருகே இருந்த கடோத்கஜன் பெரும் கூச்சல் போடுகிறான். அண்டமே எதிரொலிக்கிறது அவனது சப்தத்தில். துரியோதனன் கடோத்கஜனை தாக்க நெருங்கினான். கோபத்தில் இருந்த கடோத்கஜனின் படையும் துரியோதனன் படையும் மோதியது. கடோத்கஜனின் ராக்ஷச வீரர்கள் துரியோதனனுடன் வந்த யானைப் படையை கொன்று காயப் படுத்தியது. எண்ணற்ற ஆயுதங்களுடன் ராக்ஷசர்கள் கௌரவர்களை தாக்கி கொன்றார்கள். துரியோதனன் கடோத்கஜனின் வீரர்கள் வேகவதன், மஹருத்ரன், வித்யுஜிஹ்வன், பிரமாதின் ஆகியோரை கொன்றான். பீமன் கண்ணில் இந்த காட்சி பட்டதும் அங்கே விரைந்தான். அவனது வருகை துரியோதனனுக்கு அச்சத்தை தந்தாலும் அவன் அங்கிருந்து விலகவில்லை.
''துரியோதனா, இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என் தந்தைக்கும் மற்றோருக்கும் தாய்க்கும் நீ செய்த கொடுமைக்கு என் கையால் உன்னை பழி தீர்ப்பேன் என்று ஓடிவந்தான் கடோத்கஜன். தீயுமிழும் ஒரு வலிய ஆயுதத்தை கடோத்கஜன் துரியோதனன் மீது பிரயோகித்தான். இதை தடுக்க எங்கிருந்தோ ஓடிவந்து பகதத்தன் தனது யானையை குறுக்கே நிறுத்த, துரியோதனைக் காத்த அந்த யானை மாண்டது. கடோத்கஜன் மற்றுமொறு கொடிய ஆயுதத்தை எடுத்து தாக்க தாயாரானான். அவனது சப்தம் பீஷ்மரின் காதில் விழ, அவர் துரியோதனனை காப்பாற்ற விரைந்தார்.
அவரைத் தொடர்ந்து, சோமதத்தன், வல்ஹிகன், ஜயத்ரதன், கிருபர், பூரிச்ரவஸ் விகர்ணன், அச்வத்தாமன் சித்திரசேனன் ஆகியோரும் அங்கே கூடினர். மயிர்க்கூச்செறியும் வீர தீர சாகசச் செயல்கள் கடோத்கஜனால் அங்கு நிறைவேறியது. தீப் பற்றி எரியும் தேர்கள், பிணங்கள் பொசுங்கி வேகும் நாற்றம் காற்றில் கலந்து மூச்சு திணறியது. குதிரைகள் யானைகள் பயந்து கட்டுக்கடங்காமல் உயிர் தப்ப ஓடின. ராக்ஷசப் படைகள் கௌரவர்களை அங்கங்களை இழக்க வைத்தன.
ஜெயத்ரதன் குதிரை தேர்களை இழந்து அவந்தி ராஜன் தேருக்கு ஓடினான். சல்லியன் காயமடைந்தான். எல்லா வீரர்களும் இப்போது கடோத்கஜனை சூழ்ந்து கொண்டார்கள். திடீரென்று அவன் மேலே ஆகாயத்தில் மாயமாய் மறைந்து தாக்கினான். அவனது நிலையை கண்ட யுதிஷ்டிரன் பீமனிடம் சொல்ல, பீமனின் கவனம் இப்போது கடோத்கஜனிடம் சென்றது. அபிமன்யுவும் அவனோடு விரைந்தான். மிருகமா, மனிதனா, ராக்ஷர்களா யாருடைய ரத்தம் என்று அறியமுடியாதபடி ரத்தம் ஒன்றாய் கலந்து ஓடியது.
தனது சேனை சிதறி ஓடுவதைக் கண்ட துரியோதனன் பீமனை அம்புகளால் தாக்கினான். அபிமன்யுவும் கடோத்கஜனும் பீமனோடு தாக்குதலை சேர்ந்து கொண்டனர். துரியோதனனுக்கு உதவ துரோணர் அங்கே வந்தார்.
பீமனை அனைவரும் தாக்க அவன் கௌரவர்களை பொடிப் பொடியாக்கிக் கொண்டிருந்தான்.
கடோத்கஜன் மாயா ஜாலங்கள் செய்து கௌரவ சேனையை ஓடச் செய்தான். அன்றைய போர் அஸ்தமன நேரத்தை நெருங்கியது. இரவு பிறந்துவிட்டால் ராக்ஷசப் படையோடு இனி மோதுவது வெற்றியைத் தராது என்று கௌரவ சேனை தீர்மானித்தது. அன்றைய மாவீரன் கடோத்கஜன் என்பதில் சந்தேகமில்லை.
துரியோதனன் மீண்டும் பீஷ்மரை சந்தித்து குமுறினான். ''தாத்தா உங்களை நம்பி 11 அக்ஷௌணி சைனியத்தை ஒப்படைத்தும் வெற்றி இன்னும் உங்களால் பெற முடியவில்லை. கடோத்கஜனை நீங்கள் உடனே கொல்ல வேண்டும்'' என்றான். பீஷ்மரும் இதற்கு பகதத்தன் ஏற்றவன் என்று கருதி அவனை கடோத்கஜனை கொல்லும் பணியில் ஏவினார். ஒரு பெரும் போர் நடந்தது.சுப்ரதீகம் என்கிற யானை மீது பகதத்தன் ஏறி கடும் ஆயுதங்களால் பீமனை தாக்கினான். எதிர்த்து வந்த மதயானையை அபிமன்யு, பீமன் ஆகியோர் தாக்கவே அது காயமுற்று திரும்பி படுவேகமாக கௌரவ சேனையை நோக்கியே திரும்ப ஓடியது. பகதத்தன் பீமனையும் அபிமன்யுவையும் கடோத்கஜனையும் தாக்க அங்கே அர்ஜுனன் கிருஷ்ணனோடு வந்து விட்டான்.
பகதத்தன் யுதிஷ்டிரனை குறி வைத்து தாக்கினான். அர்ஜுனனை எதிர்க்க துரியோதனன் மேலும் படைவீரர்களை அங்கே அனுப்பினான். அர்ஜுனனை பார்த்த பீமன் அவனிடம் அரவான் கொல்லப் பட்டதை அறிவித்தான். அர்ஜுனன் கடுங்கோபமும் விசனமும் அடைந்தான். அன்றைய போரில் அரசே, உங்கள் மக்கள் அனத்ரிதி, குந்த பேதின் ,விரடன், தீர்கலோசனன், த்ரிகவாஹு , சுவாஹு, கனிகத்யஜன், ஆகியோரை பீமன் தானே கொன்றான். அஸ்தமனம் ஆகியும் போர் நிற்கவில்லை. இருள் கவ்வ ஆரம்பித்ததும் போர் நின்றது.
இரவு கௌரவர்கள் பாசறையில் துரியோதனன், துச்சாதனன், சகுனியோடும், கர்ணனோடும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தான்.
'' பீஷ்மரோ, துரோணரோ அஸ்வத்தாமா யாருமே பாண்டவர்களை ஜெயிக்க வில்லை. முடியவில்லையா என்றும் தெரியவில்லை. நம் சேனைகள் நாசம் அடைந்து வருகின்றன. என் நம்பிக்கை பல ஹீனமடைந்து வருகிறது. '' என்று குமுறினான் துரியோதனன்.
''பீஷ்மரை முதலில் சைன்யத்திலிருந்து அகற்று. நான் பொறுப்பேற்று வெல்கிறேன். அவர் ஆயுதங்களை கீழே வைக்கட்டும் பிறகு நான் ஜெயித்துக் காட்டுகிறேன். பீஷ்மர் பாண்டவர்களிடம் கருணை காட்டுவதால் உனக்கு தோல்வி நேர்கிறது என்று புரிந்து கொள் '' என்று அரற்றினான் கர்ணன்.
''திருதராஷ்டிரா, உன் மகன் துரியோதனன் உடனே துச்சா தனனோடு பீஷ்மரின் கூடாரம் சென்றான்
பிதாமகரே, நீங்கள் பரம வீர பௌருஷர். எவராலும் வெல்ல முடியாதவர் என்ற பெயர் பெற்றும் ஏனோ உங்களால் பாண்டவர்களை இன்னும் வெல்லவோ கொல்லவோ முடியவில்லை. உங்கள் பாசத்தாலோ கருணையாலோ, நீங்கள் அவர்களை கொல்ல தயங்குகிறீர்கள் என்று தோன்றுகிறது. அல்லது என் மீது உங்களுக்கு அருவருப்பு, கோபமோ காரணமாகவும் இருக்கலாம். ஒன்று நீங்கள் அவர்களை கொல்ல வேண்டும் அல்லது கர்ணன் பொறுப்பேற்று அவர்களை கொல்ல வேண்டும். இரண்டில் ஒன்று தான் வழி'' என்றான் துரியோதனன்.
நீண்ட பெருமூச்சு பதிலாக வந்தது பீஷ்மரிடமிருந்து. ''துரியோதனா நீ என்னை உன் வார்த்தைகளால் கொல்கிறாய் . உனக்காக நான் முழு மூச்சுடன் போர் புரிந்து வருகிறேன்.உனக்கு நன்மை செய்வதை என் கடமையாக கொண்டவன். இந்த யுத்தத்தில் என் உயிரை உனக்காக விட சித்தமாயிருக்கிறேன் என்றேன். நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லை. பாண்டவர்களை வெல்வது முடியாத காரியம். கந்தர்வர்கள் உன்னை சிறைப் படுத்தியபோது உன்னைக் கொல்லாமல் அவர்களிடமிருந்து அர்ஜுனன் ஒருவனே உன் உயிரை காப்பாற்றினான். கர்ணனோ உன் சகோதரர்களோ எவராலும் உன்னை காப்பாற்ற முடியவில்லை. விராடன் நகரில் நம் அனைவரையும் வீழ்த்தி நம் வஸ்திரங்களை தனி ஒருவனாக அவன் பறித்துக் கொண்டு போனான். மறந்துவிட்டாயா? இந்திரனாலும் வெல்ல முடியாதவன் அர்ஜுனன். உலகைக் காக்கும் வாசுதேவனின் பாதுகாப்பில் இருக்கும் அர்ஜுனன் சாதாரணமானவன் அல்ல.
சிகண்டி ஒருவனைத் தவிர மற்றெல்லாரையும் நான் கொல்வேன் . கவலை கொள்ளாதே. நாளை நடக்கும் யத்தத்தில் என் வீரத்தை பற்றி உலகே பேசும் பார்.'' என்றார் பீஷ்மர்
துரியோதனன் திரும்பினான். மற்றவர்களிடம் நாளை பீஷ்மர் பாண்டவர்களை கொன்று யுத்தம் நாளை வெற்றிகரமாக நமக்கு முடியும்''என்றான் துரியோதனன்.
No comments:
Post a Comment