Thursday, July 4, 2019

BAHADUR DOG

                     வீட்டு நாயும் காட்டு நாயும் ​  J K SIVAN 

நான் ஒரு கதை சொல்கிறேன். யாராலாவது இது போல் எழுத முடியுமா?  முடிந்தால்  மோடிஜியிடம்  இந்த நாட்டில் பாதி உங்கள் பேரில் எழுதி தர சொல்கிறேன்.
தென் இந்தியாவில் அப்போது நிறைய காடுகள் ஜாஸ்தி, அதனால் மரங்கள் அடர்ந்து, மழை பெய்து, குட்டை,குளங்கள் ஏரிகள் யாரும் திருடாமல் நீர் நிறைந்து தண்ணீர் லாரியே  இல்லை. வெள்ளைக் காரன் தான் ஆண்டுவந்தான். கழகங்கள் எதுவும் தோன்றவில்லை.

உக்கிரசேன பாண்டியன் ஒரு பாளையத்துக்கு அதிபதி. வெள்ளைக்காரனிடம் விசுவாசமாக இருந்ததால் ஆபத்தில்லை.  யாருடனும் யுத்தம் செய்ய அவசியமில்லை. ஒரு துப்பாக்கி இருந்தது. அதால் வேட்டைக்கு போவார். நிறைய வேட்டை நாய்கள் வளர்த்தார். அவருடைய நாய்களில் ''பஹதூர்'' செல்ல நாய். வேட்டைக்கு கூட்டிப்போனால் அதற்கு சந்தோஷம். வீட்டில் எப்போதும் கட்டிப்போட்டிருப்பார்கள். காட்டில் அன்று சுதந்திரமாக ஓடி ஆட முடிந்தது. தினமும் குளிப்பாட்டி, வேளாவேளைக்கு தீனி. கொழுகொழுவென்று தங்க நிற நாய்.  காட்டில் நாய்கள்  ஓநாய் வகை. கூட்டமாக வாழும். அவைகளை வேட்டையாடி கொல்வது தனது அந்தஸ்துக்கு குறைவு என்று பாண்டியன் கருதியதால் நல்லவேளை இவனிடமிருந்து தப்பினோம் என்று காட்டு ஓ நாய்களுக்கு மகிழ்ச்சி. . அந்த நாய்களில் ஒன்று  தான் காட்டில் தன் இனத்தவனான ''பஹதூரை'' பார்த்துவிட்டு நட்பு கொண்டாடியது.  ஆஹா   என்ன அழகு, வாளிப்பு, உடல் கட்டு, நான் இங்கே அடுத்த வேளை  தின்பதற்கு நாளெல்லாம் அலையவேண்டி இருக்கிறதே என்று நினைத்தது. பேச்சு கொடுத்தது.

''அண்ணே , உங்களிடம்  நான் கொஞ்சம் கேள்வி கேட்கட்டுமா'' 

''உன்னைப் போன்றவனிடம் நாம்  பேசுவதில்லை.நமது அந்தஸ்துக்கு அது குறைச்சல். இருந்தாலும் பரவாயில்லை உன் மீது ப்ரீதி  ஏற்பட்டதால் உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்''

''நீங்கள் யார், எங்கிருக்கிறீர்கள், எதற்கு இந்த காட்டிற்கு வந்திருக்கிறீர்கள், வசதியாக இருக்கிறீர்களே எப்படி?

நாம் உக்கிரசேன பாண்டியனிடத்தில் இருக்கிறோம். அவர் நமக்கு ராஜோபசாரஞ் செய்து வருகிறார். நமக்கும்அவரிடத்தில் பக்தியுண்டு. நம்மை அவர் மற்றெந்த நாய்களைக் காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

''அண்ணா, என் வாழ்க்கையும்   ஒரு வாழ்க்கையா? காற்றிலும் மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியிருக்கிறது. பசியின் கொடுமையைச் சகிக்க முடியாததாய் இருக்கிறது.

''தம்பி, உன்னுடைய ஊழ்வினைப் பயனை நீயே அனுபவித்துத் தீரவேண்டும். பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இந்தப் பதவி கிடைத்தது''  என்றது பஹதூர்/

''நாயாரே, நானும் உக்கிரசேனனுடைய நட்பை நாடி வரலாமா? சுகதுக்கங்களே ஸமரஸமாய் இருந்தால் மாத்திரமே இவ்வுலக வாழ்வு சகிக்கத்தக்கது. என்னுடைய கஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

''நல்லதப்பா, என் கூட வா''

இரு நாய்களும் சம்பாஷித்துக் கொண்டே வழி நடந்தார்கள். திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுசயம் தோன்றிற்று. பகதூரின் கழுத்தைச் சுற்றி அகலமான தழும்பு இருந்தது. ஓநாய் அதைப் பார்த்தவுடன் ஒருகேள்வி கேட்டது.

 ''பகதூர் அண்ணா, , உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

''ஹ ஹ ஹா ஓ, அது ஒன்றுமில்லை எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.

ஓ  தங்கமா?  அந்தப் பொன் பதக்கம் எங்கே?   நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை?

என்னை வெள்ளிச் சங்கிலியால் கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

பகதூர் அண்ணா, உம்மை ஏன் கட்டவேண்டும், யார் உம்மை கட்டுகிறார்கள்?

என்னுடைய எஜமானன் என்னைக் கட்டுவார். அவரைப் பார்க்க வரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும்படி என்னைக் கட்டிவைப்பார்.

ஓநாய் திடுக்கிட்டது.  ''தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றவா  பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப் பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன். எனக்கு எஜமானனும் இல்லை, சங்கிலியும் இல்லை. கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன். யதேச்சையாய் எங்கும் செல்வேன், எதையும் தின்பேன், எதையும் சொல்வேன், எவரோடும் சேர்வேன். பராதீனம் பிராண சங்கடம்; ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ போகவோ, உண்ணவோ உறங்கவோ, மலம் ஜலம் கழிக்கவோ ஸம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்கவேண்டும்.

இவ் வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப்போய்விட்டது.

+++
ராவ் பஹதுர்களும் திவான் பஹதூர்களும்  நிறைய  வெள்ளைக்காரன் காலத்தில் பெருமையாக, மதிப்பும் மரியாதையும் பெற்று அவனுக்கு கைகட்டி சேவகம் செய்தவர்கள்.. நாம் அதெல்லாம்  சாதாரண மனிதனாக சுதந்திரமனிதனாக ரேஷன் கடையில் சர்க்கரைக்கு ஒரு கிலோ பருப்புக்கு வரிசையில் நிற்கிறோம். நாம் நல்லவேளை கழுத்துப்பட்டை  கட்டப்பட்ட  பஹதூர்கள் இல்லை.

அன்புள்ள வாசகர்களே, இது என் கதையல்ல, 1916ல்  சுதந்திர தாகத்தோடு, மஹாகவி வெள்ளையன் அரசாங்கத்திலிருந்து    நாம் விடுதலை பெற விழைந்து நம்மவர் சிலர் பற்றி மனதில் கொண்டு எழுதிய அர்த்த புஷ்டி  கதை.நாய்க்கு பஹதூர் பெயர் அற்புத கற்பனை.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...