ஐந்தாம் வேதம் J K SIVAN
10ம் நாள் தொடர்ச்சி.
( ஆமாம் விதி வலியது தான். என்னென்னவோ சிந்தித்து எழுத மனம் விரும்பினாலும் எனது கம்பியூட்டருக்கு அந்த எண்ணம் பிடிக்கவில்லை. தர்ணா பண்ணி விட்டது. இன்று காலை கொஞ்சம் மெதுவாக ஆமை நத்தைக்கு போட்டியாக ஊர்ந்து செல்கிறது. அதையும் விடாமல் தாகத்திற்கு அரை டம்பளர் தண்ணீர் தான் இது.- ஜே .கே. சிவன் )
பத்தாம் நாள் மாலை யுத்தம் முடிந்தது. இருபக்க சேனையிலிருந்தும் எல்லோருமே பீஷ்மரை சூழ்ந்து கொண்டார்கள். அப்போது யார் கௌரவர் யார் பாண்டவர்கள் சேனை என்ற வேறுபாடே இல்லை. இப்படியே இருந்தால் யுத்தமே நடந்திருக்காதே என்று கூட தோன்றியது. அனைவரும் அங்கே கூடியது ஒரு மகா புருஷரை வணங்க.
''வாருங்கள் மகா வீரர்களே வாருங்கள். என்னால் தலையை தூக்கி பார்க்க முடியவில்லையே. தலை தொங்கி இருக்கிறதே. தலைக்கு உயரமாக ஒரு தலையணை போல் ஒன்று வேண்டுமே..மெத்து மெத்தென்று தலையணைகளை தூக்கிக் கொண்டு வந்தார்கள் கௌரவர்கள்.
'' இதெல்லாம் யார் கேட்டார்கள்... ஒரு வீரனுக்கா இதெல்லாம் தேவை. ''தனஞ்ஜயா, நீ இந்த நிலையில் எனக்கு எது உசிதமான ஒரு தலையணையோ அதற்கு ஏற்பாடு செய்''-- பீஷ்மர் ''
அர்ஜுனன் மந்திரங்களை உச்சரித்தான் காண்டிபத்திலிருந்து பூமியை நோக்கி மூன்று நேரான அம்புகளை செலுத்தி அவர் தலையை அவை தாங்கி உயர்ந்திருக்குமாறு செய்தான். மிக்க மகிழ்ச்சி அடைந்தார் பீஷ்மர்.
'எனக்கு அம்பு படுக்கையை கொடுத்த அர்ஜுனன் தகுந்த தலையணையும் தந்தான்'' என்கிறார் பீஷ்மர்.
அஸ்னாபுரத்திலிருந்து வைத்தியர்கள் வந்தார்கள். அம்புகளை பிடுங்கி மருந்து, பச்சிலை வைத்தியம் செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பினார் பீஷ்மர்.
''எனக்கு வைத்தியம் எதற்கு? ஒரு சுத்த வீரனுக்கு போர்க்களத்தில் மார்பில் அம்புகளை தாங்கி மரணம் எய்துவது சிறப்பு, பேர், புகழ். இதற்கு மேல் எனக்கு எதற்கு வைத்தியம்?. மரணத்தை என்று எதிர் நோக்குவது என்ற ஒன்று தான் இனி எனக்கு பாக்கி. தக்ஷிணாயினம் விரைவில் சில தினங்களில் முடியும் உத்தராயண புண்ய காலத்தில் மரணம் அடைவேன். வைத்தியர்களுக்கு வெகுமதி கொடுத்து அனுப்புங்கள்.''
''எனக்கு குடிக்க ஜலம் வேண்டும்'' என்ற பீஷ்மருக்கு குளிர்ந்த நீரை குடம் குடமாக கொண்டு வந்து தந்தார்கள் கௌரவர்கள்.
''ஓஹோ.... மனிதர்களுக்கு தேவையான இந்த சௌகர்யங்கள் இனி எனக்கு தேவையல்ல. எங்கே அர்ஜுனன் அவனை இங்கே வரச் சொல்லுங்கள்'' என்றார் பீஷ்மர்.
ஓடி வந்த அர்ஜுனன் அவரை வணங்கினான்...
''அர்ஜுனா, என் வீரச் செல்வமே, உன் அம்புகள் என் உடல் பூரா ஆடையாக , படுக்கையாக தலையணை
யாக இருக்கிறதடா. திகு திகு என்று உடல் எரிந்து வாய் உலர்ந்து விட்டது. எனக்கு பருக நீர் வேண்டுமடா''.
அவரை வணங்கி காண்டிபத்தை எடுத்தான்,வருணனை உச்சரித்து வேண்டி பூமியில் ஒரு அம்பை பாய்ச்சினான். ''தாயே பாதாள கங்கா மாதா, உன் மகன் தாகம் தீர்க்க வா '' அம்பு சரேலென்று பூமியைப் பிளந்து பாதாள கங்கை வரை சென்று அங்கிருந்து குளிர்ந்த நீர் ஊற்றுப் போல் வந்து அவர் உடல் பூரா மென்மையாக குளிரச் செய்தது. அவருக்கு பருக வாயில் மெலிதாக குழாய் போல கங்கை நீர் தாரையாக வடிந்தது.
அர்ஜுனனின் வீர சாகசம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
''துரியோதனா நாங்கள் சொன்னதை நீ கேட்கவில்லை. கோபத்தை பொறாமையை விடு. அக்னி, வாயு, வருணன், இந்திரன்,சோமன், சூரியன் சிவன் பிரம்மா, விஷ்ணு போன்றோர் சக்தியை அம்புகளில் செலுத்தும் வீரர்களோடு போரிட இன்னும் அவசியமா உனக்கு?. போரை நிறுத்தி பாண்டவர்களோடு சமாதானமாக இருந்து வாழ்வாயாக. அவர்கள் ராஜ்யத்தை அவர்களுக்கு திருப்பிக் கொடு.'' என்கிறார் பீஷ்மர் மெல்லிய குரலில்.
''திருதராஷ்டிரா, உன் மகன் அந்த மாவீரர் பேச்சை துளியும் லட்சியம் செய்ய வில்லை.'' என்று சஞ்சயன் எடுத்துக் கூறினான்.
பாண்டவர்கள் கூடாரத்தில் ஒரு நீண்ட பெரு மூச்சு.
'' பாண்டவர்களே உங்கள் நல்ல காலம் பீஷ்மர் இனி யுத்தத்தில் இல்லை. அவரை எதிர்த்து கௌரவர்களை வெல்வது குதிரைக் கொம்பு. ' என்றான் கிருஷ்ணன்.
'''கிருஷ்ணா இது உன் அருள் என்றார் யுதிஷ்டிரர். உன்னையே சரண் அடைந்தவர்களுக்கு நீ கொடுத்த பாதுகாப்பு''.
குருக்ஷேத்திர யுத்த பூமியில் கர்ணன் பீஷ்மரை தனியாகச் சென்று பார்த்தான். அவரை வணங்கினான்.
'' கர்ணா, நீ குந்தி புத்திரன். ராதேயன் அல்ல. எல்லா விவரங்களும் வியாசரும் நாரதரும் என்னிடம் சொன்னார்கள். நீ சுத்த வீரன், அர்ஜுனனுக்கு ஈடு இணையானவன். உன் மீது எனக்கு என்றுமே கோபம் இல்லை. உன் வீரத்தை தான தர்மத்தையும் அதிகம் மெச்சுபவன் நான். பாண்டவர்கள் உன் சகோதரர்கள். அவர்களோடு நீ ஒற்றுமையாக இரு.''
''தாத்தா, எனக்கு இதெல்லாம் தெரியும், என்னை என் தாய் கை விட்டாள் . அதிரதன் வளர்த்தான், துரியோதனன் கௌரவம் சம அந்தஸ்து தந்தான். துரியோதனனுக்காக என் உயிரையும் விடுவேன். விதியை யாராலும் வெல்ல முடியாது. பாண்டவர்களை துரியோதனனுக்காக எதிர்த்து கொல்வேன் . அது என் நன்றிக் கடன். யுத்தம் இனி நான் தொடர்வேன். இது உறுதியான முடிவு'' என்றான் கர்ணன்..
''கர்ணா, விதி கொடியது. கடைசிவரை, உன் உயிரையும் பணயம் வைத்து என் சமாதான முயற்சியில் நான் பாடுபட்டு தோற்றேன். இனி உன் அரசனுக்கு நீ உன் கடமையைச் செய் '' என்கிறார் பீஷ்மர்.
பீஷ்மரை வணங்கி கர்ணன் கௌரவ பாசறை சென்றான் என்பதோடு மகாபாரதத்தின் மிக முக்யமான பீஷ்ம பர்வம் முடிகிறது. மேலே நமது நீண்ட பாரதப் பயணத்தை தொடர்வோம்.
No comments:
Post a Comment