Friday, July 12, 2019

VIKRAMADHITHYAN STORY



விக்ரமாதித்தன் கதை   J.K SIVAN      
                              
         
      காந்த  ரூபன் காந்த ரூபி புராணம் 

திரை விலகிவிட்டது.  எதிரே   விக்ரமாதித்தன் நவரத்ன வியாபாரியாக அமர்ந்திருக்கிறான். அவன் வியாபாரி அல்ல. யாரோ ஒரு பெரிய  ராஜகுமாரன் என்று ஏலேல ரம்பைக்கு அடிமனதில் தெரிகிறது. இரவு ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கும் நிசப்தம். காற்று வீசுகிறது. மௌனமாக  இருவரும் அமர்ந்திருக்க  திரைச்சீலை கதை சொல்கிறது.  திரைச்சீலையா  அதற்குள் இருக்கும் கண்ணுக்கு தென்படாத  வேதளமா? நல்ல கதை சொல்வது யாராக இருந்தால் என்ன?

''சந்திரகிரி என்ற ஊருக்கு   கந்தேஸ்வரன்  ராஜா.  அவனுக்கு 101 மனைவிகள்.  ஆரம்பிக்கும்போதே  கதை ஆபத்தாக இருக்கிறது அல்லவா? மேலும் கேட்போம். இவ்வளவு மனைவி இருந்தும் ஒரு குழந்தை கூட இல்லை?  பகவானே இது என்ன துரதிர்ஷ்டம் என்று வேண்டினான். முதல் மனைவிக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன் பெயர்  காந்தரூபன்.வருஷம் ஓடியது.  வளர்ந்தான். திருமணப்பருவம் வந்ததால்  அழகிய  பொருத்தமானஅரசிளங்குமரி ஒருவளை ராஜா தேடினான்.  காந்தரூபனின் உருவத்தை சித்திரக்காரன் ஒருவன் தீட்ட  அதை எடுத்துக்கொண்டு  மந்திரி  பல தேசங்களுக்கு சென்று  ஒரு பொருத்தமான
அரச குமாரியை  தேடினான்.  பல  மாதங்கள் கழித்து தந்திரபுரம் என்ற ஒரு ஊருக்கு வந்தான் மந்திரி.  காந்தேஸ்வரன் போலவே இன்னொரு ராஜா மஹேஸ்வரன்  தனது அழகிய மகள்  காந்தரூபிக்கு  ஒரு நல்ல வரன் தேட அவன் அனுப்பிய மந்திரி தந்திரபுரம் வந்திருந்தான். ரெண்டு மந்திரிகளும் சந்தித்தனர். விஷயம் தெரிந்துகொண்டு மகிழ்ந்தனர். சரியான பொருத்தம் இந்த இளம் ஜோடி என்று தீர்மானித்தனர். ரெண்டு ராஜாக்களும் மகிழ ஒரு நல்லவேளையில்  கல்யாணம் நிச்சயமாகி நிறைவேறியது. 

கந்தேஸ்வரன் ஒரு  ஏழு  உப்பரிகை  மாளிகை கட்டி ஏழாவது உப்பரிகையில்  மகனையும் மருமகளையும்  சந்தோஷமாக வசிக்க வைத்தான். எந்த  கெட்ட கண்ணும் உங்கள் மேல் படக்கூடாது என்றான்.  ஒருநாள் வானத்தில்  ஏழு அப்சரஸ் கன்னிகைகள் பறந்து செல்லும்போது   ஏழாவது மாடியில் நின்றிருந்த காந்தரூபன் அவர்கள் கண்ணில் படவே அந்த ஏழு அப்ஸரஸ்களுக்கும் அவனை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசை வந்துவிட்டது.  அவர்களது தெய்வீக மந்திர சக்தியால் காந்தரூபனை தூக்கிக்கொண்டு போய்விட்டனர். அவனோடு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.........
 இதுவரை கதை சொல்லிய திரை சட்டென்று முடிந்துவிட்டது..
''மேலே சொல்லு? என்றான் விக்ரமாதித்யன்..
''அவ்வளவு தான் எனக்கு  தெரியும்'' என்றது திரைச்சீலை.
அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவேண்டாமா?''
''அதை தெரிந்து கொள்ளவேண்டுமானால் அதோ உட்கார்ந்திருக்கிறாளே இளவரசி அவள் முன்னால்                   எரிகிறதே தீபம் அதைக் கேள். அதற்கு தெரியும். சொல்லட்டும்'' என்றது திரை.
''இது என்ன சினிமாவில் முக்கியமான இடத்தில் இடைவேளை போல..    ''ஏ விளக்கே, மீதி கதையை,,,,, அப்புறம் காந்தரூபனுக்கு என்ன ஆச்சு  என்று சொல்?''

தீபம் சொல்லிய மீதி கதை: 
''காந்தரூபனை திடீரென்று காணோமே  என்று காந்தரூபி பதறி எங்கும் அவனைத் தேடினாள். அவள் அலறல் சத்தம் கேட்டு ஆட்கள் ஓடிவந்து எங்கும் தேடினார்கள். எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.  இதை அறிந்த ஏழு அப்சரஸ்களும் வாரத்துக்கு ஒருமுறை காந்தரூபனை தூக்கி வந்து காந்தரூபி அருகே படுக்கையில் விட்டு இருவரும் சந்தோஷமாக  இரவு கழிந்து மறுநாள் காலை அவனைத் தூக்கிக்  கொண்டு செல்வார்கள்.  இரவில் என்ன நடந்தது என்று அவளுக்கு  ஞாபகம் வராதபடி ஒரு மந்திரம்  போடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இது நடந்தது.   ஒருநாள் காந்தரூபி கர்ப்பமானாள்.  
ராஜா  கந்தேஸ்வரனின் மனைவி  காந்தரூபியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  மருமகளை காட்டுக்குத்  துரத்தி விட்டாள். காட்டில் அலைந்த காந்தரூபி ஒரு மயானத்தை அடைகிறாள். அங்கே  ஒரு பரத்தையை பார்க்கிறாள்.  சித்திரவல்லி  என்ற அந்த வேசி  இறந்துபோன  தனது  கர்ப்பவதி பெண்ணின் உடலை தீயிலிட்டுக் கொண்டிருந்தாள். 

கர்ப்பவதியான காந்தரூபியை பார்த்ததும் அவள்மீது பரிதாபமும் இரக்கமும் கொண்டு தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று தனது பெண்போல ஆதரிக்கிறாள்.  காந்தரூபிக்கு ஒரு பையன் பிறக்கிறான். அந்த பிள்ளை குழந்தையை கொன்று காட்டில் வீசிவிட  தனது தாதிக்கு கட்டளையிடுகிறாள் .     

''நினைவு திரும்பிய காந்தரூபி  எனக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கேட்டபோது ஒரு மர பொம்மையை காட்டி '' இது தான் பிறந்தது'' என்கிறாள்.   காந்தரூபி அழுகிறாள்.   காட்டில் காந்தரூபியின் அழகான ஆண் குழந்தையை கொல்ல  மனமில்லாத தாதி அதை ஒரு பெரிய பாம்பு புற்றில் விடுகிறாள்.   ஒரு காளி கோவில் அருகே இருந்த அந்த புற்றில் ஒரு ஐந்து தலை நாகம் வசித்தது.....''
''அப்புறம்...''.
மௌனம்.  ஏலேலரம்பை அருகே எரிந்துகொண்டிருந்த தீபம் ''எனக்கு அவ்வளவு தான்தெரியும் நான் என்ன செய்வது'' என்று கதையை நிறுத்தியது.
''சே என்ன அக்கிரமம் இது... ஒரு ஸ்வாரஸ்யமான கதையை பாதியில் நிறுத்திவிட்டாயே'' என்றான் விக்ரமாதித்யன். 
''மீதி வேண்டுமானால் இளவரசி சாய்ந்துகொண்டிருக்கிறாளே அந்த தலையணையைக்  கேட்டால் அது சொல்லுமே''  என்றது தீபம். 
''தலையணையே , ப்ளீஸ்,  நீ மீதி கதையை சொல்லேன்'' என்று விக்ரமாதித்தன் கேட்க  அது  ''சரி எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன் அதில் தப்பில்லை '' என்று தொடர்ந்தது:

''எங்கோ வெளியே இறை தேட சென்றிருந்த ஐந்து தலை நாகம் தனது புற்றுக்கு திரும்பியபோது அங்கே அழுது கொண்டிருந்த  குழந்தையை கண்டு ஆச்சர்யப்பட்டது. தெய்வீகமான சக்திகள் கொண்ட அந்த பாம்பு அந்த குழந்தை கந்தேஸ்வரன் பேரன் என்று அறிந்தது.  குழந்தையை தூக்கிக் கொண்டு  அவன் தினமும்  வழிபட வரும் காளி கோவிலில் விட்டது. கந்தேஸ்வரன்  காளி பக்தன். தினமும் கும்பிட வருவான். அன்று காலை தரிசனத்தில் தனக்கு காளியின் அருளால் ஒரு குழந்தை கிடைத்தது என்று மகிழ்ந்தான். மதன கேசரி என்று பெயர் வைத்தான்.  மதன கேசரிக்கு 18 வயதாயிற்று.   ஒருநாள் எதேச்சையாக  காந்தரூபியை காண்கிறான். அவள் அழகு அவனை மயக்குகிறது.  சித்ரவல்லி  என்ற பரத்தையின் வீட்டில் அவள் இருக்கிறாள் என்று அங்கே செல்கிறான். 

அப்போது மதனகேசரிக்கு ஒரு பசு அதன் கன்றுடன் பேசும் பாஷை புரிகிறது.  பசு அதன் கன்றிடம்
 ''சே, எவ்வளவு கேவலமான நீசன்  இந்த மதன கேசரி பார்த்தாயா?  பெற்ற  தாயிடம் கீழ்த்தரமான ஆசை கொண்ட கயவன்''  என்று சொல்வதை கேட்டு நடுங்கினான். தலை சுற்றியது.  அவனைக்  கண்டவுடன் அளவுக்கடங்காத தாய்ப்பாசத்தால் காந்தரூபிக்கு  தாய்ப்பால் சுரந்தது.... 

மதனகேசரி ஓடினான். ராஜா கந்தேஸ்வரனிடம்  தனது தாய் தந்தை யார் என்று கேட்டு துளைக்கிறான்.  ராஜா தனது மருமகள்  காந்த ரூபி,  கணவன் காந்தரூபன் காணாமல் போனதும் எப்படியோ  கர்ப்பமுற்றாள். அவளை காட்டுக்கு துரத்தி விட்டேன் என்றான்.  காவல் அதிகாரிகளிடம் நடந்ததை  விசாரித்து கண்டுபிடியுங்கள் என்கிறான் இளவரசன் மதனகேசரி.  சித்திரவல்லி என்ற பரத்தை, குழந்தையை  புற்றில் விட்ட தாதி ஆகியோரிடம் உண்மை அறிகிறார்கள்.  கந்தேஸ்வரனும் மதன கேசரியும் கோயில் சென்று  கண்ணீர் விட்டு கதறி தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுகிறார்கள்.  காளி ப்ரத்யக்ஷமாகி  '' காந்தரூபி  நிரபராதி. திங்கட்கிழமை  அன்று   விரதமிருந்து ஏழுஅப்சரஸ்களை  வேண்டினால்  கணவன் காந்தரூபனை திரும்ப பெறலாம்'' என்று சொல்ல அவ்வாறே காந்தரூபி விரதமிருந்து காந்தரூபனை திரும்ப பெற்றாள் .

' மகாராஜா விக்ரமாதித்யா, நீ கேட்டதால்  நான், இந்த தீபம்,  திரைச்சீலை,  ஆகியோர் உனக்கு காந்தரூபன் சரித்திரம் முழுதாக சொன்னோம்'' என்றது தலையணை. 

 ''ஆஹா இந்த அபூர்வமானவன் சாதாரண நகை, நவரத்ன வியாபாரி அல்ல, உஜ்ஜயினி  மஹாராஜா  புகழ்பெற்ற விக்ரமாதித்யன் அல்லவா  நல்லவேளை இவனை அடைந்தோம் என்று ஏலேலரம்பையும் அவள் தந்தையும் மகிழ  ஸ்வயம்வாரத்துக்கு  வந்திருந்த 56 தேச ராஜாக்களும் விக்ரமாதித்தனை வணங்கி ''உங்களோடு தெரியாமல் போட்டி போட்டுவிட்டோம். மன்னிக்கவேண்டும் '' என்று  தங்கள் ராஜ்யம் செல்கிறார்கள். தனது மனைவியோடு விக்ரமாதித்யன் பிராமண வீட்டுக்கு சென்று அங்கே விட்டு வைத்திருந்த பிராமணன் குழந்தையை அழைத்துக்கொண்டு உஜ்ஜயினி திரும்பி.  குழந்தை உயிருடன் மீண்ட தால் மகிழ்ந்த பிராமணனும் அவனை வாழ்த்துகிறான் . 

மூன்றாம் படி யிலிருந்த கோமளவல்லி பொம்மை இவ்வாறு கதை சொல்லி முடித்து ''போஜராஜனே  இப்போது சொல், எங்கள் விக்ரமாதித்தன் சக்தி உனக்கு உண்டா. நீ அவனுக்கு ஈடா ?''  
''இல்லவே இல்லை'' என்று புரியும்படியாக தலையை ஒடித்து ஆட்டினான் போஜன். இரவாகிவிட்டது. மறுநாள் வரலாம் என்று   அரண்மனைக்குள் சென்றான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...