Monday, July 15, 2019

sheerdi sai



ஷீர்டி சாய் பாபா

                                  மனித  உருவில் ஒரு  தெய்வம்
           





                                                    J.K. SIVAN 


நங்கநல்லூர் வாசி நான், அருகே மடிப்பாக்கத்தில் பாரத்  நகர் என்கிற ஒரு  குடியிருப்பில் மேடவாக்கம் மெயின் ரோடு அருகிலேயே, எனக்கு ஒரு  பிளாட்  (flat ) இருந்தபோது  அதை  வாடகைக்கு விட்டிருந்தோம். அதற்காகவாவது  அருகே இருந்த பைரவ சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி  போவேன்.ஒரு சிறிய கிரௌண்டில் கட்டிய  ஸ்ரீ பைரவ சாய் ஆலயம். சாய்பாபாவின் பளிங்குச்சிலை தியானமண்டபத்திலும் இருக்கிறது. பைரவர் சிலை பிரகாரத்தில் . மனதுக்கு  வேறு எங்கும் கிட்டாத ஒரு நிம்மதி, அங்கே சென்றபோதெல்லாம்   சில நிமிஷங்கள் அமர்ந்து கண்மூடி  தியானம் செய்தபோது எனக்கு கிடைக்கிறது. இது புருடா இல்லை. 


மக்கள் எதை விரும்புகிறார்கள்? எதில் ஆர்வம் அதிகம்?  எல்லோரும் அறிந்த பிரபல  மஹா  மனிதராக இருந்தால் அவரைப்பற்றி இதுவரை தெரியாத தகவல்கள் பற்றி தானே. அப்படித்தானே மகா பெரியவா சம்பவ கட்டுரைகள் கடல் மடை திறந்தால் போல் நம்மிடையே உலவுகிறது. மகிழ்ச்சியும் தருகிறதே.

மற்றொன்று, ஒருவரைப்பற்றி தெரியாமல் இது வரை இருந்தால் அவரைபற்றிய தகவலும்  ருசிக்கிறதே. அப்படித்தானே வேமனாவை,  பத்ரகிரி ராஜாவை, சிவவாக்கியரை, பல சித்தர்களை முக நூலில் உலவவிட்டதில் எனக்கு  பரமானந்தம்.  அவர்களை விட   சற்று உயர்ந்த நிலையில்  சேஷாத்திரி ஸ்வாமிகள் பற்றி சதாசிவ பிரம்மேந்திரர் பற்றி எல்லாம் ப்ரம்மஞானிகள்  பற்றி எழுதினேன். இன்னொருவர் பற்றி சில தகவல்கள்.


ஒவ்வொருநாளும் எண்ணற்ற வாட்சாப் ஈமெயில் sms களில் விமானம் ரெடி,, கார் செல்கிறது. நீங்கள் ஷீர்டி பாபா தரிசனத்துக்கு ரெடியா என்று கேட்டு பல செய்திகள். உலகெங்கும்  இருந்துபல கோடி பக்தர்கள் ஷீர்டி வருவது அந்த மஹாஞானியின் சிலாரூபத்தில் அவரை உணர்வதற்கு தான். இன்னும் அவர் இருக்கிறாரே இதோ முதுகில் கழுத்து பட்டையில் அவர் ஸ்வாசம் புஸ் என்று விழுகிறதே  என்கிறார்கள் அவர் பக்தகோடிகள்.

பாபா வாழ்ந்த காலம் ஏறக்குறைய நான்கு தலைமுறைக்கு முன்னால் .உண்மைப் பெயர் தெரியாது. எங்கே பிறந்தார், என்று பிறந்தார். ஹும்ஹும் ஒன்றுமே தகவல் இல்லை. ஆச்சர்யமானவர். இந்து முஸ்லிம் என்று மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் போற்றப்பட்டவர். அவர் இருந்த ஊராலேயே அவர் பெயர் ஷீர்டி பாபா என்று. ஒவ்வொரு வீட்டிலும் போற்றி வணங்கப்படும் மகான்.

16 வயது அவருக்கு அந்த ஊருக்கு வந்த போது . வாசம் செய்தது ஒரு இடிந்த மசூதியில் 83 வயதுவரை . தகனம் ஒரு கோவிலில்-- இதுவரை அங்கேயே தானே தவிர எங்கும் பயணம் இல்லை. ஆனால் உலகப்ரசித்தம். பல கோடி மக்கள் இன்றும் வழிபடும் ப்ரத்யக்ஷ பகவான் . பள்ளிக்கூடம் பார்த்ததில்லை.
படித்ததில்லை. பரம ஏழை. நீண்ட கிழிசல் அழுக்கு தொள தொள அங்கி . அதிகம் பேச்சு கிடையாது. அன்றன்று கப்பரையில் விழுவது தான் ஆகாரம். சொல்லும் சில வார்த்தைகள் '' ஸ்ரத்தை ''( கலப்பட மில்லாத நம்பிக்கை) ''சபூரி'' (கருணை) இருந்தால் போதும் கடவுள் உன்னிடம்"  மற்றபடி அவர் சொல்வது  புரியாது.  உபநிஷத் மஹா வாக்கியம் மாதிரி சுருக்கமாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஸ்பஷ்டமாக புரியும். சேஷாத்திரி ஸ்வாமிகள் மாதிரி என்று சொன்னேனே.

சாய் என்றால் மராத்தியில் மகான். அதுவே  உலகளாவிய பெயராக காரணமானவர் ஷீர்டி சாய் பாபா. பாபாவை வணங்கி பணிவிடை செய்தவர் ஷீரடியில் காண்டோபா கோவிலில் தங்க வசதி செய்து கொடுத்தவர மஹல்ஸாபதி என்கிற பக்தர். அந்த கோவிலில் கட்டாந்தரையில் தான் பாபா படுப்பார். தலையணை ஒரு செங்கல்.

பாபா என்று ஷிர்டி வந்தாரோ அன்றிலிருந்து அவர் மகத்வம் புரிபட்டது. பக்தர்கள் காந்தம் போல் கவரப்பட்டனர். அமானுஷ்யமான செயல்கள் நடந்தன. அற்புதங்கள் அதிசயங்கள் அளக்க வொண்ணாது நிகழ்ந்தன. நிகழ்கின்றன இன்றும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக உணர்வு அவரிடம் தோன்றியதால் மக்கள் கடலாக திரண்டனர். அவரது ஆசிக்கு காத்திருந்தனர். இன்றும் கூட பாபா சம்பந்தமான  வினோத அதிசய செய்திகள் பக்தர்களின் கண்கூடான அனுபவமாக பல பக்கங்களிலிருந்தும் நம்மை வெள்ளமாக வந்து அடைகின்றதே.

பாபாவால் இந்த தேசத்துக்கே ஒரு பெருமையும் புகழும் உண்டு. ஒன்று சேரமுடியாத ரெண்டு மதத்தினரை  ஒன்று சேர்த்து அவரை வழிபட வைத்தவர் ஷீர்டி பாபா. இரு மதத்தினரும் பக்தர்கள் என்ற அணைப்பில் இணைந்தனர். ஒன்றாயினர். அவர் இருமதத்தையும் இணைத்த ஒரு பாலம். அவரே ஹிந்து முஸ்லிம் மத தெய்வீக் பாடல்களை பாடுவது வழக்கம்.

அவரை தத்தாத்ரேயர் அவதாரமாகவும் சிவனின் உருவாகவும் கண்டனர் பக்தர்கள். அவர் எந்த உபதேசமும் பிரசங்கமும் என்றுமே நிகழ்த்தவில்லை. ஓரிரண்டு வார்த்தைகள். நறுக்குத் தெரித்தாற்போல். அதுவே காட்டுத்தீயாக பரவி மனதை ஆக்ரமித்தது. எல்லோருக்கும் புரியும்படியான ஒரு எளிய மொழியில் '' ஏதோ ஒரு சக்தியின் உந்துதலால் தான் ஒருவர் ஒரு இடம் போகிறார், ஒருவரைச் சந்திக்கிறார். அது தான் தெய்வ சங்கல்பம். எனவே யாரையும் எந்த உயிரையும் இகழாதீர். விரட்டாதீர். மாறாக அன்புடன் வரவேற்று மரியாதை செய் '' என்பார்.

ஷீர்டி சாய் பாபாவின் முக்யத்த்வம், அவரது வாழ்க்கையே ஒரு வழிகாட்டி, உதாரணம், உபதேசம் என்பது தான். சில அற்புதமான பழைய ஒரிஜினல் படங்கள் கீழே காணலாம். முதல் தொப்பிக்காரர் தான் மஹல்ஸாபதி -- நேசம்.  துவாரகமாய் - கண்டோபா கோவிலில் பாபா - வாசம். ஒரு தெரு நாயுடன் - பாசம்           
எண்ணற்றோர் அன்றும் இன்றும் பாபாவை நம்பி வேண்டி பயன் பெற்ற அதிசய சம்பவங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் எழுத நூறு வருஷமாவது ஆகும் அப்போதும் முற்றுப் புள்ளி வைக்க முடியாதபடி தொடரும்.

மைலாப்பூரில் வியாழக்கிழமைகளில்  சாய்பாபா  ஆலய தெருவில் ஒரு அங்குலம் கூட இடைவெளி கிடையாது.எண்ணற்ற சாய் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள். பார்க்கவே புளகாங்கிதம். ஏதோ ஒரு மந்திர சக்தி நம்மை பிணைக்கிறது.  பாபா வாழ்ந்த ஷீர்டி ஒரு புண்ய பூமி.

அவர் முக்கால்வாசி நாள் வெறும் காலோடு தான் நடந்தார். காலணி அணிவது சில நேரங்களில். நீளமான குர்தா ஒன்று முழுக்கையோடு, முழங்கால் தாண்டி கீழே பாதிக் கால் வரை அணிந்திருப்பார். ஒரு தரம் ஷீர்டி பக்கம் பெரும் புயல். மக்கள் ஓடிவந்தனர். பொருள், விளைச்சல் சேதம். பாபாவிடம் முறையிட்டனர். பாபா ''ஏ புயலே என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்  நிறுத்து உன் அட்டகாசத்தை'' என்பது போல் கைகளை ஆட்டி ஏதோ சொன்னார். அடுத்த சில நிமிஷங்களில் புயல் ஓய்ந்தது என்கிறார்கள். இயற்கையைக் கூட கட்டுப் படுத்தக்கூடிய சக்தி மகான்களுக்கு உண்டு

''மஹல்ஸாபதி,  உன் குடும்பத்தில் ஒரு துரதிர்ஷ்டம் நேரப்போகிறது.ஆனால் அதற்காக கவலைப்படாதே. யாமிருக்க பயமேது ' என்கிறார் ஒருநாள். சில நாள் கழித்து அந்த குடும்பத்தில் அனைவருமே நோய் வாய்ப்பட்டனர். பல டாக்டர்கள் மருந்து கொடுக்க வந்தபோது பாபா ''நோய் சில நாள் பாதிக்கபோகிறது. உங்கள் மருந்து பயன் தராது .போங்கள் '' என்கிறார். டாக்டர்கள் போய்விட்டார்கள். தனது கையில் ஒரு கட்டையோ செங்கல்லோ வைத்துக்கொண்டு தான் இருந்த மசூதியை சுற்றி வந்தார். ''ஹே நோயே, என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். உன்னால் இதை அணுக முடியுமா? போ இங்கிருந்து'' என்று தன் கையில் இருந்த கல்லை காட்டுகிறார். அடுத்த ரெண்டே நாளில்  மஹல்ஸாபதி வீட்டில் அனைவரும் குணமாகிறார்கள்.
1918ல் அக்டோபர் 15 விஜய தசமி  அன்று ஒரு மஹா சம்பவம் நடந்தது.

அதற்கு ரெண்டு வருஷங்களுக்கு முன்பே 1916ல் ஷீர்டி சாய் பாபா ''நான் இன்னும் கொஞ்சம் காலத்தில் இதே தேதியில் மறைவேன் '' என ஜாடையாக உணர்த்தின சம்பவம் இது..

அன்று சாயந்திரம் பக்தர்கள் சீமோலங்கன் கிராமத்திலிருந்து எல்லை கடந்து ஷீர்டிக்கு திரும்பி வந்தது பற்றி பாபாவுக்கு திடீரென்று ஏனோ ரொம்ப கோபம் வந்துவிட்டது. தலையை சுற்றி அணியும் துணியை எடுத்து விசிறினார். இடுப்பு துணி, நீண்ட குர்தா எல்லாவற்றையும் கழற்றி னார் . துண்டு துண்டாக எல்லாவற்றையும் கிழித்து அருகே எப்போதும் எரியும் அக்னி குண்டத்தில் (துனி) போட்டார். கண்கள் சிவக்க நின்றார். ''வாருங்கள் எல்லோரும். நான் இந்துவா முஸ்லிமா என்று சந்தேகம் தானே. வந்து பாருங்கள்'' என்று கத்தினார்.

அருகிலிருந்தோர் நடுங்கினார்கள். பயத்திலும் பக்தியிலும் யாரும் அவர் அருகே வரவில்லை. ஆடையின்றி நின்ற பாபாவின் அருகே மெதுவாக பாகோஜி ஷிண்டே எனும் குஷ்டரோகி பக்தர் சென்றார். தன் மீதிருந்த நீண்ட வஸ்திரத்தை பாபாவின் இடையில் சுற்றினார்.

''பாபாஜி,  என்ன ஆயிற்று?'' என்று கேட்ட ஷிண்டே பெற்ற பதில் '' சிமோலங்கன் -- தசரா நாள்''
''ஆமாம் தசரா. இது என்னுடைய சீமோலங்கன் - தசரா'' என்று தரையில் ஒரு கம்பினால் அடிக்கிறார் பாபா. இரவு 11 மணி வரை பாபாவின் கோபம் ஏனோ அடங்கவில்லை. வழக்கமாக நடக்கும் சாவடி ஊர்வலம் அந்த இரவு நடக்குமா என்று பக்தர்கள் பயந்தனர். நடு இரவு 12 மணிக்கு பாபா வழக்கம்போல் சாந்தமாக காணப்பட்டார். வழக்கமாக அணியும் உடைகளை அணிந்தார். சாவடி ஊர்வலம் நடை பெற்றது. கூடவே வந்தார். தசரா தான் உலகைக் கடக்கும் நாள் என்று உணர்த்திய சம்பவம் இது.

ஒரு பக்தர். ராமச்சந்திர பாடில். உடல் நிலை ரொம்ப தீவிரமாக பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். வீட்டில் என்னென்னவோ மருந்து மாயம் பண்ணி பார்த்தும் குணமில்லை. சில நாட்களோ மணிகளோ தான் பூலோக வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அந்த இரவு பாபா நள்ளிரவில் பாடிலின் படுக்கைக்கு அருகே வந்து நின்றார். பாடில் மெதுவாக பாபாவின் கால்களை பிடித்துக் கொண்டார்.
''இனிமே நம்பிக்கை இல்ல பாபா. எப்ப கிளம்புவேன் நிச்சயமாக என்று சொல்லுங்க பாபா ''
” நீ எதுக்கு அலட்டிக்கிறே. உனக்கு ஒண்ணும் ஆகப்போறதில்லை. உன் சீட்டு கிழியாது. ஆனா தாதியா பாடில் பத்தி சொல்லமுடியாது. அவன் இன்னும் ரெண்டு வருஷத்தில் விஜயதசமி அன்னிக்கு போயிடுவான்''
ராமச்சந்திர பாடீலுக்கு குணமாகி சைக்கிள் ஒட்டிக்கொண்டு சென்றார்.

வருஷம் ரெண்டு ஓடியது. 1918 விஜயதசமி அன்று. தாத்தியா பாடீலுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்தார். பாபாவுக்கும் நல்ல ஜுரம். தாத்தியா பாடில் பாபாவின் பரம பக்தர். அவர் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வந்தது. நெஞ்சில் பாபாவின் நினைவு மட்டும்.

பாபா சொன்னது நினைவுக்கு வந்தது. ராமச்சந்திர தாதா, பாலா ஷிண்டே இருவருமே பாபா சொன்னது போல் நடந்திடுமோ என்று பயந்தார்கள். தாதியா பாடிலின் இறுதிக்கணம் நெருங்கியது. பாபா அவர் அருகே ஜுரத்தோடு வந்தார். அவரை தொட்டு தடவிக் கொடுத்தார். பிறகு தான் ஜுரத்தோடு போய் அமர்ந்தார். படுத்தார். புதிதாக ஒரு வாடா அவருக்காக அமைத்துக் கொண்டி ருந்தார்கள். 
''எனக்கு இந்த மசூதியிலிருப்பது சரிப்படவில்லை. என்னை தூக்கிக்கொண்டு அந்த தகடி வாடாவில் கொண்டு விடுங்கள் '' என்கிறார் பாபா.
 அங்கே தான் இன்றும் அவரது சமாதியை தரிசிக்கிறோம். அங்கே முரளிதரனை ஸ்தாபிதம் பண்ண உத்தேசமாக இருந்தது. பாடில் பிழைத்தார். பாபா சொன்ன தேதி நேரத்தில் 15.10.1918ல்  மஹா சமாதி அடைந்தார்.    'நான் இந்த சமாதியிலிருந்து உங்களோடு தொடர்பில் இருப்பேன்'' யாமிருக்க பயமேன்'' என்றார் பாபா.
ஷீர்டி சாய்பாபா  பற்றி நிறைய  உண்மையான தகவல்களை திரட்டி  ''ஸ்ரீ சாய் சத் சரிதா'' என்கிற ஆங்கிலப்புத்தகம் கிடைக்கிறது. மராத்தியில் ஸ்ரீ ஹேமத் பந்த் என்பவர் எழுதி  ஆங்கிலத்தில் ஸ்ரீ நாகேஷ் வாசுதேவ் குணாஜி  என்பவர் மொழி பெயர்த்த புத்தகம். 50க்கும் மேற்பட்ட ஆங்கில புத்தகத்தை என்னிடம் கொடுத்து உங்களை சந்திக்கும் சாய் பக்தர்களுக்கு  இலவசமாக அளியுங்கள் என்று ஒரு பாபா பக்த நண்பர் என்னிடம் கொடுத்து நானும் அவ்வாறே அதை விநியோகித்தேன். 
அந்த புத்தகம் விறுவிறுப்பாக செல்கிறது.  அதிலிருந்து சில  .விஷயங்கள் அளிக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...