Monday, July 8, 2019

AINDHAM VEDHAM

 ஐந்தாம் வேதம் 
எட்டாம் நாள் யுத்தம் 


     
      ''வெற்றியுமில்லை தோல்வியுமில்லை''

''திருதராஷ்டிரரே , யுதிஷ்டிரன் ஏழாம் நாள் மாலை யுத்தம் முடிந்தபோது, பீமனைக் கட்டி உச்சி முகர்ந்தான். உடலெல்லாம் ரத்த வெள்ளமாக பீமன் நின்றாலும் அவனது வீரச்செயலால் கௌரவ சேனை கதி கலங்கி சின்னா பின்னமானது அனைவரும் அறிந்தது தானே.

''தாத்தா,   எவ்வாறு பீமன் நமது மகர வியூகத்தை பிளந்து உள்ளே வர முடிந்தது? . எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது. உங்கள் தலைமையில், துரோணர் உடன் இருக்கும்போது நமக்கு இப்படி ஒரு இழுக்கா?. ஏழு நாளாகியும் பாண்டவர்களை கொல்ல முடியவில்லையே என்ன காரணம்? என் மேல் பாருங்கள் எத்தனை காயம் ' என்றான் துரியோதனன்.

''துரியோதனா, பாண்டவர்கள் வலிமை மிக்கவர்கள். அவர்களுக்கு துணையாக இருப்பவர்களும் அவர்கள் மேல் உள்ள பாசத்தினால் உயிரையே திரணமாக மதித்து போராடும் மா வீரர்கள். தெய்வ சக்தி கொண்ட வர்கள். எனினும் உனக்காக என் உயிரையே பணயம் வைத்து நான் போரிடுவேன். கவலைப் படாதே. அவர்களை வெற்றியடைய அவ்வளவு சுலபத்தில் நான்  விட மாட்டேன்''  என்கிறார் பீஷ்மர்..

கூடாரத்துக்கு வெளியே கும்பலாக அடையாளம் தெரியாத உடல்களை  எல்லாம்  ஒன்று சேர்ந்து எரித்துக் கொண்டிருந்தார்கள்.    கழுகு வல்லூறுகள் ஓநாய்கள், நரிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பிணங்களை ஸ்வாஹா பண்ணிக்கொண்டிருந்தன. துரியோதனன் அந்த உயிர் சேதத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

''துரியோதனா, இன்னுமா யோசனை. இதோ பார், நான் மட்டுமல்ல, துரோணர், கிருபர், சல்லியன், கிரிதவர்மன், அஸ்வத்தாமன், பகதத்தன், பூரி ஸ்ரவஸ், விந்த அனுவிந்தர்கள், திரிகர்த்தர்கள், கோசலர்கள் , சித்திரசேனன் , என்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் வீரர்கள் உனக்காக தம் உயிரைப் பற்றி கவலையே இன்றி உனக்காக  போரிட இங்கே சித்தமாக இருகிறார்கள். தைரியமாக இரு. பாண்டவர்களை விட நமது சைனியம் அளவிலும் சக்தியிலும் அனுபவத்திலும் பெரியது என்று உனக்கே தெரியும்.பாண்டவர்

 களின் ஒரே வலிமை அந்த வாசுதேவன் ஒருவனே.     அவனே அவர்களை ஊக்குவிப்பவன். அவன் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பவன். தவிர அர்ஜுனன் சர்வ சக்தி வாய்ந்தவன். வாசுதேவனால் காக்கப்படுபவன். பீமனும் அவ்வாறே. மற்றவர்களை பற்றி நான் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.
எதையும் பொருட்படுத்தாமல் நான் உனக்காக என் உயிர் பிரியும் வரை போராடுவேன்.''  துரியோதனன் முதுகை தட்டிக்கொடுத்தபடி  பீஷ்மர் அவனுக்கு தைரியமூட்டினார்.

இரவெல்லாம் வெகுநேரம் கௌரவ சேனையில் பேச்சு தொடர்ந்தது. மறுநாள் எப்படி பாண்டவர்களை கொல்வது என திட்டம் தீட்டப் பட்டது.
எட்டாம் நாள் பொழுது விடிந்தது. உற்சாகமாக பீஷ்மர் அணிவகுத்தார். அன்று மண்டல வியூகம். சுற்றிலும் பயங்கர ஆயுதங்களை கொண்ட வீரர்கள். அவர்களுக்கு பக்க பலமாக யானைப்படைகள், குதிரை வீரர்கள் அம்புகள் ஈட்டிகளுடன். அரணாக தேர் வீரர்கள். ஒவ்வொரு குதிரை வீரன் பின்னாலும்  7 வில்லாளிகள். ஒவ்வொரு வில்லாளிக்கும்  பக்க பலமாக கேடயம் தாங்கிய எண்ணற்ற வாள் வீரர்கள். மண்டல முகப்பில் பீஷ்மர். மறுபக்கம் துரோணர்.

மண்டல வியூகம் பலத்தோடு மேற்கே நோக்கி நகர்ந்தது. மண்டல வியூகத்தை கண்ட யுதிஷ்டிரன் யுத்த சாஸ்த்ரத்தில் அதை வெற்றியோடு பிளக்க  வஜ்ர வியூகம் அமைத்தான். எவர் எங்கு பதவி ஏற்று படையைச் சேதமின்றி காத்து கௌரவர்களை முறியடிக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.

அஸ்வத்தாமன்  சிகண்டியை எதிர்க்க, துரோணர் பாஞ்சாலனை எதிர்த்தார். நகுல சகாதேவர்கள் மத்ரர்களை எதிர்த்தனர். நிறைய மகா வீரர்கள் ஒன்று சேர்ந்து அர்ஜுனனை எதிர்கொண்டனர். பீமன் க்ருபரை தாக்கி வியுகத்தை பிளக்க முனைந்தான். அபிமன்யு அவனுக்கு உதவியாக இருந்தான். சித்திரசேனன் , விகர்ணன் ஆகியோர் க்ருபருக்கு உதவியாக போரிட்டனர்.

ஒருபக்கம்  கௌரவ சேனையின் ஒரு பகுதி சாத்யகியை தாக்கிக் கொண்டிருந்தது. பூரிச்ரவஸ் த்ரிஷ்டகேதுவுடன் யுத்தம் செய்தான். க்ருபரை சேகிதானன் தடுத்து எதிர்த்தான். கௌரவ சேனையை யார் எவரை எதிர்க்கவேண்டும் என்று ஏற்கனவே பாண்டவர்கள் திட்டமிட்டபடி தாக்கி அவர்ளை நிலை குலையச் செய்தனர். 

கௌரவ சேனையின் பெரும்பகுதி அர்ஜுனைனையும் பீமனையும் எதிர்ப்பதிலே ஈடுபட்டிருந்தது.
புகை மண்டலம் போல் அம்புகளும் ஆயுதங்களும் அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் சுற்றி சூழ்ந்திருந்தான.

அர்ஜுனனின் தாக்குதல்கள் கடுமையாக இருந்ததால் கௌரவ சேனை பீஷ்மரின் பாதுகாப்புக்கு அணுகின.
அவர்களை அர்ஜுனனிடமிருந்து பீஷ்மர் காத்து நிறுத்தினார். அவரது சர மழை அர்ஜுனனை எதிர் நோக்கி வந்து கொண்டே இருந்தது.

''சுசர்மா, நீ துச்சாதனனுடன் சேர்ந்து சேனையின் ஒரு பகுதியோடு பீஷ்மருக்கு துணையாக செல், நான் பீமனை எதிர்கொள்கிறேன்'' என்றான் துரியோதனன்.

விராடனும் துருபதனும் அர்பிமன்யுவும் துரோணரை மேலே பாண்டவ சேனைக்குள்  புகாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். திருஷ்டத்யும்னன் விரைந்து அங்கே சென்றான்.

யுத்தம் கடுமையாகி விராடனின் மகன் சங்கன் துரோணரின் அம்புகளால் மார்பு பிளந்து இறந்தான்.
சிகண்டி துரோணரை தாக்க அங்கே அவருக்கு உதவ அஸ்வத்தாமன் பீஷ்மருக்கு உதவ  நெருங்கினான்.
அன்றைய யுத்தத்தில் துரோணரின் வீரம் திறமை பலம் கொடி கட்டி பறந்ததால் பாண்டவர்கள் சேனை அதிக நாசம் அடைந்தது.

குருக்ஷேத்ரத்தில் யுத்தத்தில் ஈடுபட்டவர்களை விட யம தூதர்கள் அதிகமாக காணப் பட்டார்கள். எண்ணற்ற உயிர்களை பறிப்பதில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டார்கள் . அதன் விளைவாக குருக்ஷேத்திரத்தில் ரத்த ஆறு பெருகி ஓடியது. பிணங்கள் குவிந்து கொண்டே சென்றன. சூரியன் உச்சியில் நின்று இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு பக்கம் பீமனைப் பார்த்து உற்சாகமடைந்த இடும்பன் பகதத்தனை வாட்டி வதைத்தான். யானைகளை மாம்பிஞ்சுகளாக தூக்கி எறிந்து கௌரவ சேனையை அழித்தான். கௌரவ சேனையை ஒரு புறம் கடோத்கஜன் துவைத்துக் கொண்டிருந்தான். பூரிஸ்ரவசுக்கும் சாத்யகிக்கும் கடும்போர் தொடர்ந்து நடந்தது. திரிகர்தர்கள் பெரும்படையோடு அர்ஜுனனை வளைத்துக் கொண்டு அவனால் தாக்கப்பட்டு விழித்தார்கள். பெருஞ்சேதம் உயிரழப்பு அவர்களுக்கு.

''சிகண்டி, நீ பீஷ்மரை பழிவாங்க பிறந்தவன். உன் கடமையை எப்போது துவங்கப் போகிறாய்'' என்றான் யுதிஷ்டிரன்.

சரமாரியாக சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மேல் பாய்ந்தன. அவர் அவற்றை தடுக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. சல்லியன் அவருக்காக அந்த வேலையில் ஈடுபட்டான். வருணாஸ்திரம் விட்டு சல்லியன் வில்லை ஓடித்தான் சிகண்டி. ஜயத்ரதனை பீமன் தாக்கினான்.

''அரசே, உன்மகன் சித்ர சேனன் பீமனை தாக்க பீமன் அவன்மேல் தனது மலை போன்ற கதாயுதத்தை வீச தயாரானான். மற்ற வீரர்கள் உயிர் தப்ப சித்ர சேனனை விட்டு அகன்றனர். விகர்ணன் அவனை காப்பாற்ற தனது தேரில் ஏற்றிக் கொண்டான். யுதிஷ்டிரனை பீஷ்மன் கடுமையாக தாக்கினார். யுதிஷ்டிரனின் தேர் நொறுங்கியதால் அவன் நகுலனின் தேரில் ஏறினான். சிகண்டி நேரடியாக பீஷ்மரை தாக்கினதில் அவர் எதிர்ப்பில் சற்று தயக்கம் காணப் பட்டது. சிகண்டியின் அம்புகளை தடுக்காததால் பீஷ்மர் உடல் முழுதும் ரத்தம் ஆறாக பெருகியது.

சுசர்மன் தலைமையில் எதிர்த்த திரிகர்த்தர்களை முறியடித்து அர்ஜுனன் பாசறை திரும்பினான். சூரியன் அஸ்தமித்தாகி விட்டதே. எட்டாவது நாள் யுத்தமும் முடிவடைந்தது.''

இவ்வாறு சஞ்சயன் திருதரஷ்டிரனுக்கு அன்றைய நிலவரத்தை சொல்லி முடித்தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...