நரசிம்மா ஆ ஆ ஆ .... J K SIVAN
இன்னும் கொஞ்சம் சோழிங்கர் பற்றி.
சோழிங்கர் மலை நரசிம்மனை பற்றி எழுதினேன் ஞாபகம் இருக்கிறதா? அங்கே தான் பக்த பிரகலாதனுக் காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை நாங்களும் தரிசிக்க வேண்டாமா என்று ரிஷிகள் கூட்டமாக சேர்ந்தார்கள். வாமதேவர், வசிஷ்டர், காஸ்யபர் அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கே வந்து தவமிருந்தார்கள். விஸ்வாமித்திரர் கூட இதில் சேர்த்தி. தவம் வீண் போகுமா. நரசிம்ம தரிசனம் பெற்றார்கள்.
ராமன் ராவணாதிகளை கொன்று சீதையை மீட்டாயிற்று. அயோத்தி திரும்பினான். ஒருநாள் சோளிங்கர் பக்கம் ராமனும் ஆஞ்சநேயனும் வருகிறார்கள். ''ஆஞ்சநேயா அதோ பார், இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு ராக்ஷஸர்கள் இடைஞ்சலாக இருக்கக்கூடாது. நீ பார்த்துக்கொள் '' என்கிறார்.
ஆஞ்சநேயர் அங்கே ஒரு மலையில் இருக்கிறார். சோளிங்கர் மலையில் நரசிம்மர் ஆஞ்சநேயர் இருவருக்கும் மலை இருக்கிறதல்லவா. அது சம்பந்தமான கதை இது. எதிர்பார்த்தபடி காலன், கேயன் என்று ராக்ஷஸர்கள் அங்கே வர, ஆஞ்சநேயர் அவர்களை வெல்ல கஷ்டப்படுகிறார். ஸ்ரீ ராமா என்று வேண்ட, ஆஞ்சநேயருக்கு பக்க பலமாக நாராயணனின் சங்கு, சக்கரங்கள் தோன்றி ரெண்டு ராக்ஷஸர்களை நொடியில் தீர்த்து கட்டி ரிஷிகள் தொந்தரவில்லாமல் தவம் செய்தார்கள். தவத்தை மெச்சி ரிஷிகள் முன்பு பெருமாள் தோன்றி என்னை நரசிம்மனாக பார்க்க விரும்பினீர்களே இப்போது பாருங்கள் என்று உக்ர நரசிம்மன் அங்கே தோன்ற நாமும் இன்றுவரை அவரை அங்கே தரிசிக்கிறோம்.
''ஆஞ்சநேயா நீயும் என்னெதிரே கையில் சங்கு சக்ரம் ஏந்திக்கொண்டு இந்த மலையில் இரு..இப்போது ராக்ஷஸர்களை அழித்தாயே அது போல் இங்கே வரும் என் பக்தர்களுக்கு பல ராக்ஷஸர்கள் பல ரூபங்களில் தொந்தரவு கொடுக்கும்போது காப்பாற்று'' என்று நிச்சயம் சொல்லி இருப்பார். ஆகவே தான் ஆஞ்சநேயர் சங்குசக்ரதாரியாக நமக்கு அருள் பாலிக்கிறார். சோழிங்க ஸ்தல புராணம் நிறைய விஷயங்கள் சொல்கிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவு 2 மணிக்கே பெரியமலை கோவில் நடையைத்திறந்து விடுவார்கள். ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.
No comments:
Post a Comment