Wednesday, January 31, 2018

SHORT STORY



            தமஸோமாம் ஜோதிர் கமய ....J.K. SIVAN

காயாரோஹண சிவாச்சாரியார்  77  வயதை தாண்டினாலும் தினமும்  அர்த்தநாரீஸ்வரனுக்கு  பூஜை மூன்று காலமும் பண்ணாமல் வீடு திரும்பியதில்லை.   அர்தநாரிஸ்வரர்  அந்த ஊர்  சின்ன ஒரு மலை மீது  பல நூற்றாண்டுகளாக அருள்பாலிப்பவர்.  சிவாச்சாரியார்  ஐந்தாவது தலைமுறையாக  அர்ச்சகர் அந்த ஆலயத்தில்.

பவழக்குன்று என்ற அந்த மலைக்கு பின்னால் ஒரு பெரிய  ஏரி .  அதில் சில படகோட்டிகள்  அக்கரைக்கு சென்று பொருள்கள் வாங்கி வியாபாரம் செய்பவர்கள்.

அன்று  கடுங்குளிர், எங்கும் பனிமூட்டம். கண்ணே தெரியவில்லை.  சாயந்திரம் ஆகிவிட்டது. மழையும் பிடித்துக் கொண்டது. மூன்றாம் கால  அர்ச்சனை நைவேத்தியத்துடன் காயாரோஹணம் கிளம்பியபோது அவர் வீட்டில் எதிர்ப்பு.

இந்த கொட்ற மழையிலும் இருட்டிலும் நீங்க இப்போ போகணுமா மலை மேலே ஏறி?  சொல்லுங்கோ?  யார்  வந்து அங்கே காத்தியிண்டு இருக்கப்போறா?  நல்ல நாளிலேயே  மூணு பேர் வந்தா  அதிசயம்.  இப்போ எதுக்கு போறேள். மனசாலே பகவானை வேண்டிண்டு இங்கேயே  அவருக்கு நைவேத்தியம் பண்ணுங்கோ.  ஒத்துப்பார்.  உங்களைப்பத்தி அர்தநாரீஸ்வரனுக்கு தெரியாதா?''

பதில் சொல்லாமல் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்  அர்ச்சகர். என்ன தோன்றிற்றோ. தலையில் துண்டை போட்டு மூடிக்கொண்டு   கையில் ஒரு பளிச் என்ற  வெளிச்சம் தரும்  விளக்கை எடுத்துக்கொண்டு இருட்டில் கிளம்பிவிட்டார்.

மெதுவாக  மலையேறும்போது ஒரு எண்ணம்.

''யார் அங்கே இருக்கப்போறா. நானும் சிவனும் தான். யாருக்கு  என்ன பிரயோசனம் நான் போறதிலே.''
இருட்டில் ஏரி நீர் சப்தம் அது ரொம்பி ஓடுவதை அறிவித்தது. கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை. காற்று பலமாக வீச  தொடங்கியது.அவர் உடம்பு குளிரில் நடுங்கியது.

க்ரீச் என்று மரக்கதவு  சாவியை வாங்கிக்கொண்டு சபதித்தது. உள்ளே  வெளிச்சம் காட்டிக்கொண்டு போய்  சந்நிதியின் கதவையும் திறந்தார்.  எங்கும் அமைதி. எண்ணையில் திரியை தூண்டி விட்டு  பெரிதாக ஆக்கி விளக்கேற்றினார்.  கையில் கொண்டுவந்திருந்த  வெளிச்ச விளக்கை வெளியே பிறையில் வைத்தார். அது எரிந்து கொண்டு மலையை ஒட்டிய  ஏரியைப் பார்த்தது.

நிதானமாக  ஸ்லோகங்கள் சொல்லி, கொண்டுவந்திருந்த மலர்களை தூவி பரமேஸ்வரனை தியானித்து ஸ்லோகங்கள் சொன்னார். வீட்டில் மடியாக பண்ணிய  நைவேத்தியத்தை  அர்ப்பணித்தார். கடமை முடித்ததில் ஆத்ம திருப்தி. 

''அர்த்தநாரி  என்னால் முடிந்தவரை உனக்கு சேவை செயகிறேனடா? எனக்கப்புறம்  ஒரு சரியான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன். அது நிறைவேற நீ தான் அருளவேண்டும்'' வணங்கி பிரசாதம் எடுத்துக்கொண்டு  கதவை சாத்தி பூட்டினார். வெளி மரக்கதவு சாத்துமுன்பு  வெளிச்ச விளக்கை எடுத்துக்கொண்டு  பூட்டி விட்டு  மலை இறங்கினார்.

இதனால் யாருக்கு பலனோ இல்லையோ எனக்கு பலன் உண்டு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு மலைப்படிகளில் இறங்கினார்.

மறுநாள் காலை பளிச்சென்று சூரியன் உதித்தான். மழை இல்லை. யாரோ ஓடிவந்தார்கள். 
மரக்கடை   அந்தோணி. 
''சாமி. என் உயிரை காப்பாத்தினீங்க''
''என்னப்பா சொல்றே?''
''நேத்து ராத்திரி குப்பன் படகுலே பெயிண்ட் சாமான் எல்லாம் வாங்கி வந்தேன். இருட்டிலே மாட்டிக்கொண்டோம். குப்பன் வராம அவன் பிள்ளை சங்கரன் தான் படகோட்டி வந்தான். வழி தெரியலே. சில இடங்களில் பாறைகள் .  குப்பன் இருந்தால் ஒருவழியாக அனுபவத்தில் கரை சேர்ப்பான். இந்த பையன் துடித்துக் கொண்டிருந்தான்.  அப்போது தான் ;மலைமேல்  நீங்கள் வெளிச்சம் காட்டினீங்க.   ''அதோ நம்ம கோவில் தெரியுது மலைமேல், அந்த பக்கம் போனா பாறைங்க இல்லை. ''   தப்பாக எங்கோ சென்றுகொண்டிருந்த படகை திருப்பி தைரியமாக மெதுவாக  படகை  வெளிச்சத்தை நோக்கி செலுத்தி கரை வந்து சேர்ந்தோம்.   
உங்களாலே  எங்களுக்கு உயிர் தப்பிச்சுது.

இருட்டிலிருந்து நம்மை மீட்பவன் அல்லவா அர்த்தநாரி.  அறிந்து தானே என்னை மலைக்கு வரவழைத்தான்...... காயாரோஹணம் கைகூப்பி  அவனை வணங்கினார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...