ஒரு இரவு பகலான அதிசயம்
மற்ற நாளில்
உறங்கி அமைதியாக இருந்து ஒரு
நாள் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கும் ஒரு கிராமம்
இருக்கிறது. அதற்கு திருநாங்கூர்
என்று பெயர். ஸ்ரீகாழி (சீர்காழி
என்கிறோம்) அருகில் உள்ளது. அது வீறு கொள்ளும் நாள் தை அமாவாசை. லட்சோப லட்சம் ஜனங்கள் எங்கிருந்தெல்லாமோ
வந்து விடுகிறார்கள்.இரவே பகலாகிவிடுகிற
கோலாகல வைபவம். அதன் பெயர் 11
கருட சேவை. நூற்றுக்கணக்கான வருஷங்களாக தொடர்ந்து நடை பெறுகிறது. இதை தோற்றுவித்தவர் ஸ்ரீ
உ.வே. சித்ரகூடம் விஞ்சமூர் ஸ்ரீனிவாசாரியர் சுவாமிகள். அவருக்கு தான் முதலில் இந்தமாதிரியான 11 கருட சேவை உத்சவங்களை திருநாங்கூர்
ஆலயத்தில் ஏற்படுத்தி
எண்ணற்ற வைஷ்ணவ மனங்களை குளிரச்
செய்யவேண்டும் என்று தோன்றியிருப்பதற்கும் ஒரு காரணம்
இருக்கிறது. அவர் ஒரு
தீவிர திரு மங்கை ஆழ்வார்
பக்தர்.
மேற்சொன்ன சுவாமி என்ன செய்தார் தெரியுமா?
திருமங்கை ஆழ்வார் திருநாங்கூரை சார்ந்த பதினொரு திவ்ய தேசங்களுக்கு பறக்க கருடனில்லாமல் நடந்து கஷ்டப்பட்டு கல்லிலும்
முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும்
அலைந்து பெருமாள் தரிசனம் செய்து அந்தந்த ஆலயங்களில் மங்களாசாசனம் செய்ததை
நன்றியோடு நினைவு கூர்ந்து ஒவ்வொரு
வருஷமும் அந்த ஆழ்வாரை குமுதவல்லியோடு இணைத்து
மீண்டும் மங்களாசாசன ஒலி அங்கெல்லாம் கேட்க வழி செய்தவர்.
ஆழ்வார் இந்த பதினொரு திவ்யதேசங்களுக்கும்
சென்று பெருமாளை திருநாங்கூருக்கு அழைத்து
கருடவாகனத்திலேற்றி பக்தர்கள் மனம் களிக்க
செய்து மறுநாள் அந்தந்த கோவிலுக்கு குமுதவல்லியோடு திருமங்கை ஆழ்வாரே சென்று அவர்களை யதாஸ்தானத்தில் தக்க வைணவ மரியாதையோடு
அமர்வித்து திரும்புகிறார்.
இப்படி ஒரு அற்புத கைங்கர்யம் செய்ய
முன்னோடியாக இருந்த ஸ்ரீ நிவாஸாசாரியார் படம் இத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. 120 வருஷங்களாக இது தொடர்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகளும்
தொடரும்.
தை
அமாவாசை அன்று ஆழ்வாருக்கு மஞ்சள் குளியல் என்று ஒரு விழா சம்பிரதாயமாக
நடக்கிறது. மறுநாள் சீர்காழி சுற்று வட்டாரத்தில் உள்ள 11 திவ்ய தேசங்களிலிருந்து உத்சவர்கள்
பல்லக்கில் திரு நாங்கூர் வந்து விடுகிறார்கள். அவர்களை தனது
தேவி குமுதவல்லி நாச்சியாருடன்
திருமங்கை ஆழ்வார் வரவேற்று, கருட வாகனத்தில் ஏற்றி திருநாங்கூர் நாலு வீதிகளில் தரிசன உலா முடிந்து மூன்றாம்
நாளை காலை ஆழ்வார் அவர்களை அந்தந்த ஊருக்கு கொண்டு சென்று உடனிருந்து
பாசுரம் பாடி யதா ஸ்தானம் அமர்த்தி திருவாலி - திருநகரி
திரும்புகிறார்.
வைஷ்ணவர்கள்
வாழ்நாளில் ஒரு முறையாவது கலந்து கொண்டு மகிழ விரும்பும் இந்த அனுபவம்
எனக்கு எதிர் பாராத விதமாக கிடைத்தது எனக்கு
கிருஷ்ணன் கொடுத்த வாய்ப்பு
என்று சொல்வதை விடை ஒரு ஆழ்வார் அளித்தது
என்று சொல்வது ரொம்ப பொருத்தம். அந்த
ஆழ்வாரும் ஒரு பெண்.ஆண்டாள்.
அவளது
திருப்பாவை சிறப்பை ஒரு கதையாக ஒரு
புதிய கோணத்தில் பதித்து நான் எழுதிய ''பாவையும்
பரமனும்'' என்கிற புத்தகம் அண்ணன் கோவில் என்கிற ஒரு திவ்ய தேசத்தில் திருமால் அடியார் குழாம் என்று ஒரு
அமைப்பை நிறுவி கலியன் ஒலி என்று வைணவ மாநாடு வருஷா வருஷம் நடத்தி வரும் 84+
வயதான ஸ்ரீ சடகோபன் கல்யாணராமன் கையில் கிடைத்து, அதை
2016ம் வருஷம் மேற் கண்ட மாநாட்டில் பாராட்டி என்னை கௌரவிக்க
அழைத்தார்.
''ஒரு நல்ல சேதி. 9.2.16 அன்றே வந்துடணும் . எங்கள் ஊருக்கு பக்கத்தில் திரு நாங்கூரில் 11
கருட சேவை. பார்க்கணும். மறுநாள் 10.2.16
மாநாட்டில் உங்களை அனைவருக்கும்
அறிமுகப் படுத்தி ஒரு பாராட்டு விழா
நடக்கிறது'' -- கல்யாணராமன்
யார் எது பேசினாலும் ''ஒரு
நல்ல சேதி' என்று
சொல்லும் பழக்கம் உள்ளவர்.
சென்னையில் நங்கநல்லூருக்கே வந்து
விட்டார் நேரில் அழைக்க. கரும்பு
தின்ன கூலி நானும் கேட்க வில்லை. நண்பர்கள்
சூரிய நாராயணன் தம்பதி, சுகவனம்
ஆகியோருடன் அண்ணன் கோவில்
புறப்பட்டு விட்டோம்.
8.2.16 காலை
மகோதய அமாவாசை நித்ய கர்மானுஷ்டானங்களுக்கு பிறகு அண்ணன் கோவிலை
சேரும்போது போஜன வேளை. கலியனுக்கும்
கலியாண ராமனுக்கும் ஒரே எண்ணம். ஒரே வித்யாசமும் கூட . இருவரும் அண்ணன் கோவிலை
சேர்ந்தவர்களாயினும், கல்யாணராமன் எவர் வந்தாலும் 'சாப்பிடுங்கள்' என்று
சொல்வதற்கு பணம் கொள்ளை அடிக்காமல் மனத்தை கொள்ளை கொள்கிறார்.
இந்த
திருமங்கை ஆழ்வாரை பற்றி ஒரு 'நல்ல சேதி'
சொல்ல வேண்டாமா?
திருக் குறையளூர் என்ற ஊரில் பிறந்த ஒருவர். கலியன் என்று பெயர். கட்டு மஸ்தான ஆள். சோழ ராஜாவுடன் நட்பு.
சேனாதிபதியாகி விட்டார். ஒரு
ஊருக்கும் ராஜாவாக்கி விட்டான்
சோழன். எனவே அவர் திருமங்கை மன்னன் ஆனார். அவர் மனது
குமுதவல்லி என்கிற அதி ரூப சுந்தரியிடம் பாய்ந்து அவள்
அடிமையாகிறது. அவளோ ஒரு உள்ளூர் மருத்துவர்
மகள். அவர் நோய்க்கு அவளே மருந்து.
''என்னை நீ மணந்து கொள்ள வேண்டும் '' - கலியன்
''சேனாதிபதி, நான் ஒரு சாதாரண பெண். விஷ்ணு பக்தை. எனக்கு ஒரு
நீண்ட கால விருப்பம். விரதம் என்று கூட சொல்வேன். ஒவ்வொரு நாளும் ஆயிரம்
வைஷ்ணவர்களுக்கு, ஒரு
வருஷ காலம், உங்களால் அமுது படைக்க முடியுமானால், அடுத்த
முகூர்த்தத்தில் நான் உங்கள் மனைவி ஆகிறேன்.
முடியுமா?'' என்றாள்
குமுதவல்லி. அவள் பிறந்து வளர்ந்த ஊர்
அண்ணன் பெருமாள் கோவில் என்கிற
ஊரில் (திரு வெள்ளக் குளம் என்றும் பெயர். 108ல் ஒரு திவ்ய தேசம்).
அங்கே தான் கலியன் ஒலி மாலை வைணவ மாநாடு.
'ஆஹா, நல்ல சேதி. அப்படியே. இதென்ன பிரமாதம்'' என்று
கலியன் தலையாட்டி குமுதவல்லி மனைவியாகி, ஆயிரக் கணக்கானோருக்கு அண்ணன்கோவில் மற்றும்
அருகில் உள்ள ஊர்களில் அன்றாட
ததிஆராதனம் (அன்ன தானம்). வழக்கம்
பழக்கமாகிவிட்டது. கலியன் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பழகி ஒரு சிறந்த வைஷ்ணவரானார். மங்கை மடம் என்ற
ஊரில் இரவும் பகலும் ததி ஆராதனம்.
செல்வமும் குறைந்தது.கரைந்தது. எப்படி ததி ஆராதனம் தொடர்ந்து செய்வது. பணம் இல்லையே?
''என் அன்றாட ததி ஆராதன கைங்கர்யத்துக்கு பொருள்
சேர்க்க திருடுவதைத் தவிர இனி வேறு
வழியில்லை'' என்று முடி வெடுத்து செயலிலும் காட்டினார்
கலியன். மீதி யிருந்த பொருள் பழைய விஷ்ணு ஆலயங்கள் புனருத்தாரணம் பெற உதவியது. பழுது பட்டிருந்த ஸ்ரீரங்கம் ஆலயம்
சீர் பட்டது திருமங்கை மன்னனால்
என்பார்கள்.
ஒருநாள் எங்கு பணம் கொள்ளையடிக்கலாம்
என்று திட்டமிட்ட போது காட்டு வழியாக
ஒரு கல்யாண பார்ட்டி வருவது தெரிந்தது. நிறைய நகைகள், பொருள்கள்
பணம் கிடைக்குமே! . கலியனும்
கூட்டாளிகளும் தீவட்டிகளுடன் வழி மறித்து
கொள்ளை அடிக்க தயாராயினர். நள்ளிரவு.
கலியன் குதிரைக்கு ஆடல் மா என்று பேர். அதன் மேல் தான்
அவரது பயணம்.
திருமணங் கொல்லை என்ற ஊர் மண்டபம் ஒன்றில் அந்த
திருமண கோஷ்டி தங்கியிருப்பது தெரிந்து கொள்ளையர்கள் அவர்களைச்
சூழ்ந்து சகல நகை, பொருள் ஆடைகள் எல்லாம் கைப்பற்றினர். மூட்டை
கட்டியாயிற்று.
கலியன் கண்ணில் அந்த நேரம் பார்த்து திருமணப் பெண் காலில் ஒரு ' பள
பள'
வெள்ளி மெட்டி பட்டது. ''அடடா, இது
கொஞ்சம் பெருங்காயம் வாங்கவாவது உபயோகமாகுமே''
கலியன் அந்த பெண்ணின் கால் விரல் மெட்டியை உருவ, அது
வெளியே வரவில்லை. மூட்டை கட்டிய
கொள்ளையடித்த பொருள்களும் அசைக்க
முடியவில்லை. என்ன ஆச்சர்யம்''
''ஹுஹும், என்னதான் பலமாக கலியன் இழுத்தாலும் மூட்டை அசையவில்லை. மெட்டியும்
காலை விட்டு மெட்டி விடு படவில்லை.
''இதில் ஏதோ மர்மம் இருக்கிறதோ? இன்னுமொரு
முறை இழுப்போம். காலைக் கொஞ்சம் தூக்குவோம். அட, இந்த சிறு பெண்ணின் காலையே நம்மால் தூக்க முடியவில்லையே. இந்த மாப்பிள்ளை ஆசாமி ஏதாவது மந்திர தந்திரம்
போட்டிருப்பானோ' என்று
அவனை ஆராய்கிறார் கலியன்.
''ஏ,
மாப்பிள்ளைப் பயலே, இதோ
என் கையில் என்ன பார்த்தாயா, கூர் வாள் . நீ என்ன செப்பிடு வித்தை
காட்டியிருக்கிறாய் சொல், ஏன் என்னால் இந்த பெண்ணின் காலையே தூக்க
முடியவில்லை, மெட்டியும் கழல வில்லை. எங்கள் மூட்டையும் நகரவில்லை. என்ன மந்திரம் போட்டாய், ரகசியம் சொல்?
. சொல்லா விட்டால் இந்த வாள் பேசும். ஜாக்ரதை''
''ஐயா எனக்கு எந்த ரகசியம், வசியம், மந்திரம்
தந்திரமும் தெரியாது. நீர் போய் அதோ தெரிகிறதே அந்த காவேரியில் ஸ்நானம் செய்து
விட்டு வாரும். உமக்கு எனக்குத் தெரிந்த பரம
உயர்ந்த ரகசியம் ஒன்று சொல்கிறேன்.'' என்றான் மாப்பிள்ளை சிரித்துக் கொண்டே
.
நல்ல பையனாக கலியன் போய் காவேரி ஸ்நானம் செய்துவிட்டு மாப்பிள்ளை அருகே வந்ததும் மாப்பிள்ளை 'மகாவிஷ்ணு' அவருக்கு
அஷ்டாக்ஷரி திருமந்திர உபதேசம்
செய்ய கலியன் ஞானியாகி நாராயண பக்தராக அந்த
திவ்ய தம்பதிகள் காலில் விழுகிறார். இது நடந்த இடம் திருமணங் கொல்லை, என்கிற வரதராஜபுரம். திருநகரி பக்கம் இருக்கிறது. வருஷாவருஷம் வேடு பறி
உத்சவம் படு ஜோர் இங்கு.
தான் இதுவரை செய்த கொலை, கொள்ளை, தீங்குகளுக்கு வருந்துகிறார்.(''வாடினேன்
வாடி' ) பாசுரங்கள்
பா மழையாக பொழிய ஆரம்பித்து விட்டது. ஊர்
ஊராக சென்று அங்கங்கே
பெருமாள் மீது எண்ணற்ற பாசுரங்கள்.
இனி திருமங்கை ஆழ்வார் நமக்கெல்லாம் தெரிந்தவர். ''ஆடல்
மா'' குதிரை ஏறி 86
திவ்ய தேசங்களுக்கு சென்று மங்களா
சாசனம் செய்தவர்.
இனி நான் என்ன பார்த்தேன் 9.2.16 நாங்கூர்
11 கருட சேவை அன்று என்று மட்டும் சொல்கிறேன்.
கண்ணுக்கெட்டியவரை ஜன வெள்ளம்.
அவல் நெல் அரிசிப்பொரி யிலிருந்து
அன்ட்ராய்டு செல் வரை அத்தனை பொருள்களும் மலையாக இரு வரிசையில்.
எங்கும் சப்தம். ஊதல், பலூன், மிளகாய் பஜ்ஜி, டீ , காபி
வியாபாரிகள் மீதும் இடிக்காமல், எவர்
காலையோ மிதிக்காமல் ஆழ்வாரை தரிசனம் பண்ணமுடியாது.
மண் தரை, மழை, சொத
சொத என்று சேறாகி நடக்க தொல்லை கொடுத்தது. நிறைய நெரிசல். வாகனங்களை எங்கோ தடுத்து ஆட்கொண்டு நிறுத்தி விட்டார்கள்
போலீசார். இருந்தாலும் கூட்டம் நகர இடம் கொடுக்க வில்லை.
காவல் நிலைய அதிகாரி எல்லாப் பெண்களும் கழுத்தை
மூடி தங்கள் நகைகளை பாதுகாக்க ஞாபகப் படுத்திக்கொண்டே தங்கம் கிலோ, கிராம் என்ன விலை என்றெல்லாம் வாய் ஓயாமல் சொல்லியும் அந்த
பதினொரு கிராமங்களிலிருந்தும் மற்றும் எங்கிருந்தெல்லாமோ வந்தவர் எவர் காதிலும் அது விழவில்லை. காணமல் போன குழந்தைகள் மற்றவர்கள் பற்றியும்
அறிவிப்பு இடையிடையே. எங்கும் வரிசையாக அன்ன தான ஏற்பாடு. எல்லா ஊர் உத்சவர்களும் ஆஜர். திருநாங்கூர் பத்ரி நாராயணன் ஆலயத்தின் உள்ளே
கண்ணைப் பறிக்கும் பதினோரு ஒரே மாதிரியான கருட வாகனங்கள். வண்ணச்
சீருடையில் அதைத் தாங்கும் ஸ்ரீ பாதம்
தாங்கிகள். எங்கும் வைஷ்ணவ மயம்.
''அடுத்து என்ன நடக்கும், ஆழ்வார்
எப்போது மங்களா சாசனம் பண்ணுவார்? புறப்பாடு எப்போது,
எல்லா ஊருக்குமா? வண்டியிலா, தோளில் தூக்கிக் கொண்டா? நீங்கள் எந்த ஊர்? எங்கேயோ பார்த்த மாதிரியா இருக்கே? '' இந்த கேள்விகளை எத்தனையோ பேர் திருப்பி திருப்பி
கேட்கிறார்கள். பதில் சொல்லி கட்டுப்பிடியாகவில்லை. அசட்டு சிரிப்பு சேர்ந்த
தலையாட்டல்.
தெருவில் எல்லா வீடுகளிலும் மக்கள்
வெள்ளம். சிலர் பால்,ஆகாராதிகள் எல்லாம் விநியோகம் செய்தார்கள். ஊர்க்கார அரசியல் வாதிகள், அதிகாரிகள்
கொஞ்சம் முண்டி யடிக்காமல் உள்ளே சென்று திரும்பினார்கள். தள்ளு முள்ளு
என்பதற்கு அர்த்தம் புரியாவிட்டாலும் அனுபவம் புரிய வைக்கும்படியான கூட்டம்.
பளிச் பளிச் என்று கைப் பேசி
காமிராக்கள் கிளிக்கி ஆழ்வார், உத்சவர்கள்
எல்லோருமே படமானார்கள். ராத்திரி பூரா
ஒரு மொட்டை மாடியில் நெளிந்து, அமர்ந்து,
படுத்து, பொழுது போனது. ஒருபக்கம் பஜனை கோஷ்டியின்
உரத்த பாடல்கள், இடையிடையே
பிரசங்கம்.
திருக்காவளம்பாடி, திருமணிக்
கூடம், திருப் பார்த்தன் பள்ளி, அண்ணன்
கோயில், திருவாலி,திரு
நகரி, திரு நாங்கூர், திருத்தேவனார் தொகை,திருவண் புருஷோத்தமம், அரிமேய விண்ணகரம், செம்பொன்
செய்கோவில், மணி மாடக் கோவில், வைகுந்த விண்ணகரம், திருத்
தெற்றியம்பலம், ஆகியவை பிரசித்தி பெற்ற திவ்ய தேசங்கள் இந்த
சீர்காழி பகுதியில். இந்த ஊர்களில் ஒரு 11
கோவில்களின் உத்சவர்கள் பங்கேற்பு.
பிரம்மஹத்தி பாபம் நீங்க சிவபெருமான் ஒருமுறை ஏகாதசி ருத்ர அஸ்வமேத யாகம் செய்கிறார். ஸ்ரீ மன் நாராயணன் ஸ்ரீ தேவி,
பூதேவி, சமேதராக காட்சி கொடுத்து சிவன் விருப்பப் படியே 11 திருநாங்கூர்
கிராமங்களில் திவ்ய தேச ஸ்தலமாக
கோயில் கொள்கிறார்.இவை ருத்ரர் வழிபட்டவை.
இந்த பதினொரு திவ்ய
தேசத்திலும் திருமங்கை ஆழ்வார் ஒருவரே
மங்களாசாசனம் செய்திருப்பது விந்தை.
எல்லாம் அந்த கிருஷ்ணன் செய்யும்
லீலைகள். எனக்கு இந்த வருஷ கருடசேவை
காட்டி, கூட என்னோடு வரும் 12
பேரும் ரசிக்க, இந்த வருஷ கலியன் ஒலி மாலை வைணவ மாநாட்டில் 19.1.2018
அன்று அடியேனின் ''அமுதன்
ஈந்த ஆழ்வார்கள்'' என்ற நூல் மீண்டும் மறுபதிப்பாக
வெளியிடப்பட்டு அடியேனுக்கு ''வைணவ
சேவா ரத்னா'' விருது அளிக்க அழைத்திருக்கிறார்கள். சதா சர்வ காலமும் கிருஷ்ண சிந்தனையில்
ஈடுபட்டு எண்ணற்ற கட்டுரைகள் கதைகள் எழுதுவதற்காக அவன் தரும் ஒரு பரிசா?
No comments:
Post a Comment