அமாவாசை அன்று பூரண சந்திரன் - J.K. SIVAN
இன்று போல் அன்றும் ஒரு அமாவாசை நாள். நான் திருக்கடவூர் பலமுறை சென்றதுண்டு. மறலியைக் காலால் உதைத்து மார்க்கண்டேயனை காலனிடமிருந்து காப்பற்றிய கால சம்ஹார மூர்த்தியை பார்த்து, அமிர்தகடேஸ்வரரைப்பார்த்து வியந்து தரிசித்ததும் உண்டு.
ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆலயத்தில் இருந்த ஒரு சாது பிராமணர் சுப்ரமணிய பட்டர். அபிராமி உபாசகர். சோழநாடு மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலம் அது. ரெண்டாம் சரபோஜி ராவ் பான்ஸ்லே தான் அப்போது ராஜா. (கி. பி. 1675–1728)
பட்டர் சதாசர்வ காலமும் அம்பாள் அபிராமியை தொழுது வணங்கி பாடி பரவசமடைபவர். இதனால் அவரை யார் போற்றினாலும் தூற்றினாலும் லக்ஷியம் பண்ணாதவர். ஊரே அவரை அபிராமி பட்டர் என்று தான் அழைத்தது. உண்மை பெயர் அவருக்கே மறந்து போனது.
ஒருநாள் ராஜா திடீரென்று திருக்கடவூர் கோவிலுக்கு வந்துவிட்டான். பட்டர் அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி யோக நிலையிலேயே இருந்தார். அவள் அவர் முன் தோன்றி காட்சி கொடுத்து கொண்டிருந்தாள். அந்த முக காந்தி ஒளியில் மயங்கி தேன் குடித்த வண்டானார் பட்டர். அந்த நேரம் அவருக்கு நாள் நக்ஷத்ரம், கிழமை, திதி எதுவுமே என் மனதில் இல்லையே ராஜா கோவிலைச்சுற்றி பார்த்துவிட்டு பட்டரை சந்தித்தவன் இன்று 'பட்டரே , இன்று அமாவாசை இன்னும் எத்தனை நாழி இருக்கிறது என்று கேட்டான்?
அன்று அமாவாசை என்பது பட்டருக்கு தெரியும். ஆனால் அபிராமி பட்டர் அதை மறந்து அபிராமவல்லியின் முக கமலா ஒளியில் திளைத்து ''ஆஹா இன்று பெளர்ணமி ஆச்சே'' என்று சொல்ல, அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர். சரபோஜிக்கு கடுங்கோபம்.
''பட்டரே, என்ன சொன்னீர் இன்று பௌர்ணமியா, எங்கே முழுநிலாவை காட்டும் பார்க்கலாம்? சேனாதிபதி, இன்று இரவு முழுநிலவு வானில் தோன்றாவிட்டால் இந்த பட்டரை உயிரோடு கொளுத்திவிடுங்கள். '' ராஜா கட்டளையிட்டான்.
ராஜா சொன்னபிறகு மாற்றம் ஏது . கீழே நெருப்பு மூட்டினார்கள். அபிராமி பட்டர் ''ஆஹா என்ன தப்பு செய்து அமாவாசை என்பதற்கு பௌர்ணமி என்று உளறிவிட்டேனே. எல்லாம் உன்னால் தானே அபிராமி. இதோ உன்னை நினைந்து நூறு பாடல்கள் விடாமல் ஒன்றன்பின் ஒன்றாக பாடுகிறேன். நான் உன் மீது தியானத்தில், முழு கவனத்தோடு இருந்ததால் . எனவே நீ என்ன செய்யவேண்டுமோ செய். என் உயிர் உன்னால் போகவேண்டும் என்று இருந்தால் நான் பாக்கியசாலி. நெருப்பிலோ நீரிலோ, இதில் மாண்டால் என்ன?''
ஒரு பாடல் எந்த வார்த்தையில் முடிகிறதோ அதுவே அடுத்த பாடலின் முதல் வார்த்தையாக துவங்குவது அந்தாதி. ஒன்றின் அந்தம் அடுத்ததின் ஆதி. அபிராமி அந்தாதி அவர் தப்பாக அமாவாசையை பௌர்ணமி என்று சொன்னதால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
எங்கும் அமாவாசை இருட்டு. சுற்றிலும் ராஜா மற்றும் அநேக மக்கள் கூட்டம். கீழே கொழுந்து விட்டு எரியும் நெருப்பு, அதன் மேலே ஊஞ்சல் போல் ஒரு பலகைதொங்க அதில் பட்டர். அவரோ அந்தாதில் மூழ்கிவிட்டார். அபிராமிக்கு ஆனந்தமான பாடல்கள் தனது பக்தன் பாடுவதைக் கேட்க ஒரு சந்தர்ப்பம். 'உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்..... ' என்று ஆரம்பித்து நூறாவது பாடல் ' உதிக்கின்றனவே ' என்று முடிகிறது. எல்லோர் கண்களும் இருண்ட அமாவாசை வானில் நிலாவை தேடுகிறது.
அன்னை அபிராமியை போற்றி 78 பாடல் முடிந்து 79வது துவங்கும்போது கருணை மிக்க தாய், அன்னை அபிராமி, மகனின் பக்தியை மெச்சி பேசாமலா இருப்பாள் அவன் சாகட்டுமே என்று.
பட்டர் இந்த உலகிலேயே இல்லை. அவர் - அன்னை அபிராமி இருவரே, இல்லை இருவரும் ஒருவரே. அவர் பாடல் தொடர்கிறது:
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே” 79
(அம்மா தாயே, அபிராமி உன் விழிகள் கருணை வெள்ளம் ததும்புபவை. வேதங்கள் அனைத்தும் போற்றி பாடும் உன் கருணையை நாடி இரவு பகல் என அனவரதமும் தொண்டன் நான். எனக்கெதற்கு இந்த உலகம் பூரா ஆட்கொண்ட பழியும் பாவமும் கொண்ட மனிதர்களின் தொடர்பு. அவர்கள் பக்கம் திரும்பினாலே எனக்கு நரகம் அல்லவோ கிடைக்கும். நான் எதற்கு அவர்களோடு தொடர்பு கொள்ளவேண்டும். எனக்கு இந்த தீயோ அதால் கிட்டும் மரணமோ ஒரு பயமா? இல்லை அம்மா. அதன் மூலம் உன்னை அடைவதானால் அதிகம் அதை நேசிக்கிறேன்.)
கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!” 80
நான் என்ன வார்த்தையால் உன்னை புகழ்வேன் என் தாயே. பளீரென்று இந்த அமாவாசை இருளில் புத்தம் புதியதாய் பெரிய வட்ட வடிவ நிலவை தோற்றுவித்து என் கன்மட்டுமல்ல அனைத்து கண்களும் விந்தையில் ஆழ்ந்து மகிழ வைத்தவளே. என்னை உன் அடியார் திருக்கூட்டத்தில் ஒருவனாக பாவித்து அருள் புரிந்த ஆனந்தத்தில் எனது மனமோ, கண்ணோ, இதயமோ மட்டற்ற ஆனந்தத்தில் மூழ்கி இருக்கிறதே தாமரை பூத்தது போல் பூத்தாளே ! அழகின் திருவுருவே. வார்த்தைகளை தேடுகிறேன் உன்னை வாழ்த்த.''
என்கிறார் பட்டர். ஏன் என்றால் அப்போது என்ன நடந்தது தெரியுமா ?
''சுப்ரமணியா, இது உன் பிரச்னையை தீர்க்கட்டும் என்று தனது ஒரு காதிலிருந்து தாடங்கத்தை (குண்டலம் என்று வைத்துக் கொள்வோம்) கழட்டி வானில் வீசினாள். அம்பாள் காதணி ஒளிவீச மறுக்குமா? ஆகாயத்தில் அது முழு நிலவாக பால் போல் ஒளிவீசியது. ஆஹா ஒஹோ என்று ஆரவாரம். ஆச்சர்யத்தால் திகைப்பு. ராஜா நடுங்கிவிட்டான். ''என்ன பக்தி என்னே இந்த பட்டரின் சக்தி'' அபிராமி பட்டரோ ''அம்மா தாயே, என் தவறான சொல்லக்கூட நிஜமாக்கிய தெய்வமே. என் உயிர் காத்தவளே'' என்று நன்றியும் ஆனந்தமும் கலக்க கண்ணீர் வழிய புலம்பினார்.
ராஜா யானைமேலிருந்து இறங்கி ஓடிவந்தான். ''அணையுங்கள் இந்த தீயை. இறக்குங்கள் பட்டரை கீழே'' கட்டளையிட்டான் சரபோஜி. கீழே இறங்கி வணங்கிய அபிராமி பட்டரின் காலில் விழுந்து அவர் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டான் ''சுவாமி என்னை மன்னித்து விடுங்கள். தங்களது பக்தியின் மேன்மை தெரியாது தவறு செய்து விட்டேன்'' என்று கதறினான்தவறை உணர்ந்த ராஜா.
சீர்காழி் கோவிந்தராஜன் சிறந்த அபிராமி பக்தர். அவர் வெண்கல குரலில் அபிராமியின் அருளை, அவளை வணங்குவ தால் உண்டாகும் நன்மையை அடிக்கடி கேட்டு ரசித்து முடிந்தவரை பாடுவேன். அது இது தான். அபிராமி என்னென்னவெல்லாம் தருவாள் என்று பெரிய லிஸ்ட் அதில் உள்ளது. கேளுங்கள் : https://youtu.be/7iYYxSnSWjY
No comments:
Post a Comment