''சிவா, எனக்கு நீ இதைத் தா'' என்று சண்டைபோட்டு உரிமையோடு எதையும் பெற்றவர். திருநாவலூரில் பிறந்த சுந்தரர் 18 வருஷங்கள் மட்டுமே வாழ்ந்தவராம். அதற்குள்ளாகவா இந்த அமரத்வம் !
பிறக்கும்போது நம்பி ஆரூரர் என்று தாத்தா பெயரை வைத்தார்கள் சடையனாரும் இசைஞானியும்.
முற்பிறவியில் ஆலால சுந்தரம். திருப்பார்க்கடலில் அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலஹால விஷத்தை எடுத்து சிவனிடம் கொடுத்தவர் ''ஆலஹால ''சுந்தரர். கைலாயத்தில் சிவனின் அருகேயே இருந்தவர். திருத்தொண்ட தொகையை உலகுக்கு அளிக்க பூமியில் பிறந்தவர்.
நாவலூர் ராஜா நரசிங்க முனையர் ஆண்ட தேசம். ராஜாவை சிறுவன் நம்பி ஆரூரனின் அழகு கொள்ளை கொள்ள, பெற்றோர் அனுமதியுடன் ராஜாவிடம் வளர்ந்தான். சந்தக்கவி சிவாச்சாரியார் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடாகி நடை பெற்று க்கொண்டி ருக்கும்போது திருமண மண்டபத்திற்கு ஜடாமுடியோடு விபூதி, ருத்ராக்ஷம் அணிந்த ஒரு கிழவர் வருகிறார்.
முஹூர்த்த நேரம் நெருங்கியது. நம்பி ஆரூரன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுமுன் ''நிறுத்து இந்த கல்யாணத்தை. யாரைக்கேட்டு இவனுக்கு கல்யாணம் நடக்கிறது இங்கே?'' என்கிறார்
''யார் நீங்கள்? என்ன சொல்கிறீர்கள்? பைத்தியமா உங்களுக்கு?'' .
''இந்த பிள்ளையாண்டான், நம்பி ஆரூரன், எனது கொத்தடிமை. அவனது தாத்தாவே கைப்பட இவனையும் சேர்த்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது என்னிடம் உள்ளது. ஆரூரா எழுந்து வா என்னோடு''
எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டு ஆரூரன் திருமணம் நின்றுபோய் கிழவரோடு புறப்பட்டான். மணப்பெண் அங்கேயே அவன் காலில் விழுந்து மயங்கி மரணமடைந்தாள்.
''தாத்தா யார் நீ, எங்கிருந்து வந்தாய்? நீ எப்படி என்னை அடிமையாக்கமுடியும்? அப்படி எதை வைத்து என்னை அடிமையாக்கி எங்கே இழுத்துக்கொண்டு போகிறாய்?'' என்றான் ஆரூரன்.
''ஆரூரா பேசாமல் வா. நான் திருவெண்ணெய் நல்லூர் காரன். அங்கே ஊர் பஞ்சாயத்தில் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்.''
பஞ்சாயத்து கூடியது. கிழவர் ஒரு ஓலைச்சுருள் எடுத்து படித்தார். ''சபையோர்களே நான் இதன் வாசகம் படிக்கிறேன் கேளுங்கள்
''நான், திருநாவலூர் ஆதி சைவன். என் பெயர் ஆரூரன், நானும் என் சந்ததிகள் யாவரும், திருவெண்ணெய் நல்லூரை சேர்ந்த பித்தன் என்பவருக்கு மனதாலும் ஜீவனாலும் பரம்பரை அடிமைகள். அவருக்கே ஆட்பட்டவர்கள்''
பஞ்சாயத்தார் அந்த ஓலைச்சுவடியை தக்க சாட்சியங்களோடு பரிசோதித்து தாத்தாவின் கை எழுத்து அங்கீகரிக்கப்பட்டு ஏகமனதாக நம்பி ஆரூரன் அந்த கிழவர் பித்தனின் அடிமை என முடிவானது.
''வா என் வீட்டுக்கு '' என்று ஆரூரனை அழைத்துக்கொண்டு திரு வெண்ணைநல்லூர் அருட்துறையான சிவாலயம் செல்கிறார் கிழவர்.
''இறைவா சிவபெருமானே, எனக்கு இப்படி நேர்வது உனக்கு சம்மதமா'' என்று ஆரூரன் கண்களில் நீர் வழிய கிழவரை தொடர்ந்து சென்றவன்
''வா இந்த கோவிலுக்கு செல்வோம் '' என்று நுழைந்த பித்தன் பின் மற்றவர் தொடர ஆரூரன் செல்கிறான். பித்தன் மாயமாகி எதிரே சிவன் தெரிகிறார்.
''ஓஹோ இது உன் வேலையா. என்னை சம்சார சாகரத்தில் இருந்து தடுத்து ஆட்கொண்டாயா? உன்னை அறியாமல் ஏதேதோ பேசிவிட்டேனே " என ஆரூரர் வருந்துகிறார்.
''சுந்தரா, நீ என்னோடு கைலாயத்தில் கூடவே இருந்த எனது பக்தன் உன்னை பிரிவேனா ' என காட்சி கொடுக்கிறார் அருட்துறை அம்மான் பரமசிவன். சிவனோடு வாதம் செய்ததால் சுந்தரர் ''வன் தொண்டர்'' என பெயர் பெற்றவர். என்னை பித்தா என்றே பாடு எனக்கு பிடிக்கும்'' என்கிறார் மகேஸ்வரன்.
அப்போது திருவெண்ணைநல்லூர் சிவன் ஆலயத்தில் எழுந்தது நாவினிக்க நாம் பாடும் இந்த தேவார பாடல்
''பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே''
இன்றும் இந்த ஆயிரக்கணக்கான வருஷங்கள் முன் கட்டிய அற்புதமான ஆலயம் திருவெண்ணெய் நல்லூர் க்ஷேத்ரத்தில் உள்ளது. தடுத்து ஆட்கொண்ட நாதர். கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர் என்ற ''பித்தன் '' கிழக்கு நோக்கி இங்கே ஸ்வயம்பு லிங்கம். அம்பாள்: வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை.
திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி..விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. . பெண்ணையாற்றின் தென்கரையில் .10 ஏக்கர் நிலப்பரப்பில் இராஜகோபுரம் ரெண்டு பிராகாரங்கள். உள்ளே சென்றால் சுந்தரருடன் "வழக்கு தீர்த்த மண்டபம்" .கவசமிட்ட கொடிமரம், விநாயகர், பலிபீடம். மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தரும் விமானம் . சுந்தரர் சந்நிதி
சுந்தரர் கையில் ஓலையுடன் நிற்கிறார். ஹாலஹால விஷம் நெஞ்சில் திகு திகு என சிவனை எரிக்காமல் இருக்க பார்வதி பசு வெண்ணெயால் கோட்டை கட்டி பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவே தவம் செய்ததால் இந்த க்ஷேத்ரம் ''வெண்ணெய்நல்லூர்''
பழைய பெயர் அருட்துறை. அது தான் மேலே தேவாரத்தில் சொல்லப்பட்ட பழம் பெயர்.
பழைய பெயர் அருட்துறை. அது தான் மேலே தேவாரத்தில் சொல்லப்பட்ட பழம் பெயர்.
No comments:
Post a Comment