ஜனவரி 12 ஒரு மகத்தான நாள். இந்த நாளில் தான் 1863ல் எத்தனையோ குழந்தைகள் பிறந்தன. அவ்வளவுமா நினைவில் இருக்கிறது. ஒரு குழந்தை, கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா என்பவர் வீட்டில் புவனேஸ்வரிக்கு பிறந்தது. புவனத்தையே சுண்டி தன் பக்கம் இழுக்கும் மஹேஸ்வரனாக பிறந்த குழந்தை அது. நரர்களுள் இந்திரனாக ஜொலிக்கும் என்று தெரிந்து தான் நரேந்திரன் என்று பெயரிட்டாளோ அந்த அன்னை?
நரேந்திரன் எல்லாரையும் போல வளர்ந்தான், இசை, வாத்தியங்கள் வாசிப்பது, தியானம் எல்லாம் பழகிக் கொண்டான். சிறந்த ஞாபக சக்தி. எதையும் அலசி ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று சிந்தனை செய்பவன். பள்ளிப்படிப்பு முடிந்தது. கல்கத்தா
மாநிலக் கல்லூரி (Presidency College) மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் கற்றான். . அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு பற்றி ஆர்வமாக தெரிந்துகொண்டான். B.A . பட்டதாரி ஆனான்.
மனதில் இறைவனைப் பற்றிய உண்மைகளைப் பற்றி பல கேள்விகள் ஐயங்கள் கிளம்பியது. வழிபாடு ஏன், அதில் எதற்கு இத்தனை வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகள், எதற்கு முரண்பாடு? நிறையபேரை சந்தித்து விளக்கம் கேட்டும் திருப்தி இல்லை. அப்போது பிரபலமாக இருந்த பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தான்.
என் கேள்விக்கு பதிலென்ன?? ராமச்சந்திரா , பேராசிரியர் ஹேஸ்டி ,இருவருமே அவனை ஒருவரிடம் அனுப்பினார்கள்.
''நரேந்திரா,
ஒரு எளிய மனிதர் அருமையாக இதெல்லாம் விளக்குகிறார் அவரிடம் போ ''
'' யார் அவர்?
'ராமக்ரிஷ்ணராம். தக்ஷிணேஸ்வரத்தில் ஒரு கோயில் பூசாரி''
''அவசியம் அவர் யார் என்று சென்று பார்க்கிறேன்''
''யார் இவர். எங்கோ சிந்தனையோடு எதுவும் அதிகம் விளக்கமாக தெரியாத மனிதராக இருப்பார் போல் இருக்கிறதே என்று எண்ணம் தோன்றியது
''எனக்கு எனோ சொல்ல முடியாத ஒரு பரபரப்பு. எதிர்பார்த்திருந்த ஒன்று கிடைத்தது போல் மகிழ்ச்சி. அன்றிலிருந்து ஆறு மாத காலம் அவனை மீண்டும் பார்க்கும் வரை மனம் பிரார்த்தனையில். அவனைப்பற்றிய சிந்தனையில்.
அவனை முதலில் எப்படி பார்த்தேன் ? நினைவு கூறுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்:
''கங்கையை பார்த்தபடி உள்ள மேற்கு வாசல் வழியாக தான் உள்ளே நுழைந்தான். தனது ஆடை அலங்காரம் பற்றி கவனம் இல்லாதவன் போல் காணப்பட்டான். சீவாத தலை முடி. அழுக்கு ஆடை. வெளியுலகம் பற்றிய எண்ணம் இல்லை. அவன் கண்களை பார்த்தேன். அவை உள்நோக்கி சிந்தனையில் ஈடுபடுபவை என்று புரிந்தது. இப்படி ஒருவன் கல்கத்தாவில் உண்டா? என்று வியக்க வைத்தது.
''வா அப்பா . பாய் மீது உட்கார். எதிரில் அமர்ந்தான்.
''பாட த்தெரியுமா உனக்கு . தெரிந்தால் ஒரு பாட்டு பாடேன்
''பாடினான். அருமையான வெண்கலக்குரல். அவன் பாடல் ''ஹே மனமே, உள்ளே செல், அதுவே உன் இருப்பிடம். வெளியே சுற்றாதே.இந்த ஐம்புலன்கள் பஞ்சபூதங்கள் வெறும் வெளிப்பாடு. இருப்பது போல் தோன்றும் இல்லாதவை, அந்நியமானவை. நீ யார் என்று ஏன் மறந்தாய்?'' என்ற அர்த்தம் தொனிக்கும் வங்காள மொழி பாட்டு.
பாடி முடித்ததும் உணர்ச்சி மேலிட்டு அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டேன். கண்களில் நீர் வடிய அவனை காளி கோவில் வடக்கு தாழ்வாரம் அழைத்து சென்றேன்.
''ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்? மனதில் இரக்கமில்லாமல் என்னை காக்க வைத்துவிட்டாயே ! உலக விஷயங்களை மற்றவர் பேச கேட்டு காது புளித்துவிட்டது. என்னை புரிந்து கொள்ளும் ஒருவனுக்காக என் உள்ளத்தை கொட்டி தீர்க்க என்னை புரிந்து கொள்ள முடிந்த உன்னை தான் தேடினேன்.''
இரு கைகளை கூப்பி நரேந்திரன் அப்போது 'ப்ரபோ, நீங்கள் தான் வேதகால ரிஷி நர நாராயணன். மனித குலா துயர் நீக்க அவதரித்தவர்.'' என்றான்.
திரும்பி வந்து இருவரும் அறையில் அமர்ந்தபோது என்னை உற்று பார்த்தவன் ....
''சுவாமி நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?''
''ஆஹா பேஷாக. உன்னை இப்போது எப்படி பார்க்கிறேனோ அப்படி. பகவானை பார்க்கலாம், பேசலாம். யாருக்கு அக்கறை. ஏதோ தங்கள் குடும்ப கவலை, சுயநல தேவைகள் இது பற்றி தானே முறையிட்டுவிட்டு போகிறார்கள். உண்மையில் அவனை தேடுபவர் யார்? அவனை உருகி மனமார தேடினால் உடனே கிடைப்பானே''
அதற்கு பிறகு நடந்ததெல்லாம் உலகம் அறியும். சுவாமி விவேகானந்தர் நமக்கு கிடைத்தார்.உலகம் பெரும் பயனுற்றது.
No comments:
Post a Comment