ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து என்பார்கள். அது நமக்கு. அப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டால் என்ன ஆகுமாம்? அதிக பட்சமாக மூன்று நாள் கழித்து குப்புற மிதந்து மேலே நீர்ப்பரப்பில் காற்றில் நகர்வோம். யாராவது தூக்கி வெளியே போட்டு விட்டு போகிறார்கள்! என்ன ஆழம் தான் இருக்கட்டுமே நம்மால் நீஞ்சி மேலே வரமுடியாதா, கரை சேர முடியாதா என்பது அசட்டு தைரியம். உண்மையாகவே நீஞ்சத்தெரிந்தவன் எந்த ஆழத்தையும் கண்டு அஞ்சமாட்டான்.
அபிமன்யு மஹா வீரன். துணிச்சலானவன். அப்பனுக்கு தப்பாமல் பிள்ளையாக பிறந்தவன். ஆனால் அவசர குடுக்கை.
வியூகத்தை உடைத்து உள்ளே சென்றுவிட்டான். யுதிஷ்டிரன் முதலானோர் அவன் பின்னே செல்லமுடியாமல் ஜயத்ரதன் தடுத்து நிறுத்திவிட்டான். அது அவன் பெற்ற வரம். உள்ளே சென்ற அபிமன்யு தனி ஒருவனாக கௌரவசேனையால் சூழ்ந்து கொள்ளப்பட்டான் , கொல்லப்பட்டான். ஆறு மஹாரதர்கள் அவனை தாக்கி கொன்றனர்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் சம்சப்தகர்களை தொடர்ந்து முறியடித்து அவர்களைக் கொன்று திரும்பும்போது அபிமன்யு பிணமாகி இருந்தான்.
இங்கு இதற்கு முன் எனக்கு தெரியாத ஒரு கதை. மஹா பாரதத்தில் இல்லாத சம்பவம். கிருஷ்ணனுக்கு நடந்தது தெரியும். இந்திரனை கூப்பிட்டு ''நீ மகனை இழந்த பிராமணனாக அந்த மகன் மறைவுக்காக தீ மூட்டி அதில் உன் உயிர் தியாகம் செய்த்துக்கொள்பவனாக வா ''என்று சொல்லி இந்திரன் அப்படியே செய்ய அதை அர்ஜுனன் பார்த்துவிட்டு
'ஹே ப்ராமணா, எதற்கு நீ தீயில் உன் உயிரை மாய்த்துக்கொள்ள முனைகிறாய்? இறந்த உன் மகன் இனி உயிரோடு வருவானா? மாண்டார் மீண்டுவருவது நடக்கும் காரியமா?'' என்கிறான்
''ஆமாம் மஹாராஜா, இதுவும் சொல்வீர்கள் இன்னமும் உபதேசம் செய்வீர்கள். அவரவர் அனுபவித்து பார்த்தால் தான் புத்ர சோகம் என்றால் என்ன என்று புரியும்? உங்களுக்கு இப்படி ஒரு சோகம் வாழ்வில் ஏற்பட்டால் நீங்கள் இப்படியா பேசுவீர்கள்?'' என்றான் இந்திர பிராமணன்.
''ஆஹா என்ன சொன்னீர் பிராமணரே, எனக்கு உம்மைப்போல் இப்படி ஒரு இக்கட்டு நேருமானால் நான் தீயில் மூழ்கி உயிர் விட மாட்டேன் என்பது சத்தியம்'' என்றான் அர்ஜுனன். வந்த காரியம் ஆனதால் இந்திர பிராமணன் செல்கிறான்.
பாண்டவர் பாசறைக்கு திரும்பிய அர்ஜுனன் எங்கும் அமைதி, எவரும் கண்ணில் படாமல் வெறிச்சோடி இருக்கிறது. வழக்கமான குதூகலம் ஏன் காணோம். ஏன் தர்மன் மற்ற சகோதரர்கள், பிள்ளைகள் என்னை உற்சாகமாக வரவேற்கவில்லை? ஏன் என் மனத்தில் ஏதோ ஒரு பெரிய பாறை கனக்கிறது?
கிருஷ்ணன் பேசாமல் தேரோட்டி வருகிறான். அபிமன்யுவின் மரண செயதி அர்ஜுனன் காதில் எட்டி அவன் விதிர்விதிர்த்து போகிறான். இடிந்து விழுகிறான். அடக்க முடியாத சோக பிரவாகம்.
''தீ மூட்டுங்கள் என் மகனோடு நானும் செல்கிறேன்'' என்று அரற்றுகிறான்..அப்போது அங்கே இந்திர பிராமணன் வருகிறான் ''அர்ஜுன மஹாராஜா ஏதோ நான் சொன்னது ஒரு சாபமாகி விட்டதோ. ஐயோ , என்ன காரியம் செய்கிறீர்கள். என்னிடம் நீங்கள் வாக்களித்தது பொய்யோ?'' எனக்கு என் மகனோடு மேலுலகம் செல்வதை தடுத்தது ஏன். உங்களுக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா?''
அர்ஜுனன் சிலையாக நிற்கிறான். கிருஷ்ணன் அவனை அணைக்க அவன் தோள்களில் சாய்கிறான். அடுக்கடுக்காக அபிமன்யு சிறு குழந்தைமுதல் வளர்ந்தது, வளர்த்தது எல்லாம் நினைவில் தோன்ற அதையெல்லாம் சொல்கிறான். அவன் கண், காது, மூக்கு, அங்க லாவண்யம், அழகு, கம்பீரம் எல்லாம் வர்ணிக்கிறான்.
''அர்ஜுனா எதற்காக எவன் உன் மகன் இனி இல்லையோ அவனைப்பற்றி வாடுகிறாய். அவன் கர்மபலனை அவன் அடைந்துவிட்டான். க்ஷத்ரிய தர்மத்தை தவறாமல் செயது ஸ்வர்கம் ஆரோகணித்தான். உண்மையை உணர்வாயாக'' என்று ஆறுதல் சொல்லியும் அர்ஜுனன் அழுவதை நிறுத்தவில்லை.
ஒரு கணம் அர்ஜுனனை சந்திரலோகத்திற்கு அழைத்து சென்று அங்கே அபிமன்யுவை காட்டுகிறான் கிருஷ்ணன். ஆசையோடு, நிறைவேறாத விருப்பத்தோடு மரணம் எயிதியவர் மறுபிறப்பு அடையுமுன் சந்திரலோகம் செல்வார்கள். எந்த விருப்பமும் இன்றி ஆசை பாசம் அற்றவர்கள் முக்தி அடைவோர்கள் முதலில் சூர்யலோகம் செல்வார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறப்பு கிடையாது என்கிறது கீதை.
அர்ஜுனன் சந்திரலோக வாசலில் தடுக்கப்படுகிறான்.
யார் நீ எதற்கு இங்கு வந்தாய்?
நான் அர்ஜுனன். இங்கே என் மகன் அபிமன்யு இருப்பதால் அவனைக் காண வந்தேன்.
ஓ அப்படியா. இரு அனுமதி வாங்கி வருகிறேன்.
திரும்பி வந்த வாயில் காப்போன் ''ஐயா உங்கள் மகன் அபிமன்யுவை நீங்கள் சந்திக்க இயலாது'' என்றான்.
''நீ போய் அபிமன்யுவிடம் ''உன் தந்தை அர்ஜுனன் வெளியே காத்திருக்கிறான் என்று சொல். அவனே ஓடிவருவான். உள்ளே என்னை அழைத்துச் செல்வான் '' என்றான் அர்ஜுனன்.
திரும்பிவந்த வாயில் காப்போன் ''ஐயா, அபிமன்யு என்கிற ஜீவன் தனக்கு அர்ஜுனன் என்று யாரையுமே தெரியாது என்று சொல்லிவிட்டது'' எதற்கும் நீங்கள் உள்ளே சென்று நேரடியாக விசாரித்துக் கொள்ளலாம்.
''அபிமன்யுவின் ஜீவன் அர்ஜுனனை பார்த்து 'யார் நீ ?'' என்றது.
'அபிமன்யு என்னை உனக்கு தெரியவில்லையா.... என்று அர்ஜுனன் துக்கத்தோடு அவனது வாழ்க்கையை குழந்தை பருவம் முதல் விவரிக்கிறான்.''
அமைதியாக கேட்டு விட்டு அபிமன்யுவின் ஆத்மா ''ஐயா நீங்கள் இந்த இடத்தை விட்டு செல்லலாம்'' என்றது.
பூமிக்கு திரும்பிய அர்ஜுனன் அங்கே அவனையே பார்த்துக்கொண்டு பேசாமல் நின்ற கிருஷ்ணனிடம் நடந்ததை சொல்லி முறையிடுகிறான்.
''அர்ஜுனா, மரணத்திற்கு பின் பூமியை விட்டு சென்றவனுக்கு அங்கே நடந்தது எதுவும் நினைவில் இருக்காது என்று உனக்கு முன்பே சொன்னேனே. உலகத்தின் அனைத்து பந்தங்களும் சகல உறவுகளும் அறுந்து போவது தான் தான் மரணம்''.
வாஸ்தவம். நாம் நட்பு உறவுக்கு எல்லாம் அவர்கள் சிக்கலை தீர்க்க, துன்பத்தை தீர்க்க உதவுகிறோம். உபதேசிக்கிறோம். நமது உதவி, உபதேசம் எப்படி பயனளித்தது என்று அறிய ஆவல் கொள்கிறோம். அவர்களைப்பற்றிய கவலை, உணர்ச்சிகள் நம்மை பாதிக்கிறது. இது தான் பந்தம்.
உன் கடமையை செய். பிறகு அதை மற. அதோடு ஒட்டிக்கொள்ளாதே. உறவு நட்பு எல்லாமே இந்த உடலில் உயிர் உள்ளவரை தான். உண்மையில் நிரந்தர நண்பன் உறவினன் கிருஷ்ணன் ஒருவன் தான். அர்ஜுனனுக்கு நேராக கிடைத்தான். நமக்கு படத்தில் புஸ்தகத்தில், பாட்டில் எண்ணத்தில் கிடைக்கிறான் . அவ்வளவே. அவன் நாமத்தை சொல்வோம். கெட்டியாக பிடித்துக் கொள்வோம். அவன் பார்த்துக் கொள்வான். அது அவன் வேலை.
No comments:
Post a Comment