Tuesday, January 2, 2018

THIRUCHOTRUTHURAI SAPTHASTHANAM





யாத்ரா விபரம் 
                                           ஊருக்கெல்லாம்  சோறு 

இந்த யாத்ரா விபரம் எனது திருவையாறு சப்தஸ்தான யாத்திரையில்  திருச்சோற்று துறை ஓதனவனேஸ்வரர் தரிசனம் பற்றியது என்றாலும் முதலில் இன்றைக்கு திருவெம்பாவை பாடல் ஒன்று சொல்கிறேன்:

மணி வாசகர் இந்த 10வது திருவெம்பாவை பாடலில் சிவபெருமானின்  உலகளாவிய  தோற்றத்தை குறித்து துவங்குகிறது.  அடி முடி காணா  ஒளி மையமாக நின்ற சிவனின் பாதங்கள்  வார்த்தைகளில் விவரிக்கமுடியாத படி அனைத்து பாதாளங்களுமாக  நிற்கிறது.  அழகிய புஷ்பங்களால் சூட்டப்பட்ட சிவனது திருமுடியோ  வானளாவி எல்லாம்   அதுவே என காட்சி தருகிறது. நம்மைப்போல் சிவன் ஒரு மேனி கொண்டவன் அல்ல, உமையொரு பாகனாதலால் திருமேனி ஒன்றாய் பலவாய் காண்பது. சிவனை வரையறுத்து சொல்ல வார்த்தைகள் இனி பிறக்கவேண்டும். எந்த வேதமும், தேவர்களும், ரிஷிகளும், முனீஸ்வரர்களும், அறியா பழமனாதி அல்லவா அவன்.  அவனை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள அன்பு ஒன்றே போதும்.   எங்கும் நாம் தேடிக் காணாமுடியா அவனை அடியார் நெஞ்சங்களில் எளிதாக உணரலாம். குறை குற்றம் அற்ற ஏற்றம் கொண்டவன். பெண்களே, அவனைப் பாட புகழ வேண்டும் என்று நினைத்தால், அவன் யார், எந்த ஊர், என்ன பேர், உறவினர் யார், உற்றார் யார், பெற்றார்  யார் எதுவுமே அறியமுடியாத ஆச்சர்யமாக அல்லவோ உள்ளான். பேசாமல் இரு கை  சிரத்தில் வைத்து ஓம் நமசிவாய என்று சொல்லி மனம் நிறைவது  ஒன்று தான் வழி. 

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழம் தொண்டர் உளன்
கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏதுஅவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசுஏலோர் எம்பாவாய் !!(10)

இப்படிப்பட்ட ஒரு சிவனை சப்தஸ்தான க்ஷேத்ரம் ஒன்றான  திருச்சோற்றுத்துறையில் கண்டேன்.  தஞ்சாவூர் மாவட்டத்தில்  திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது  திருச்சோற்றுத்துறை.   சோற்றுத்துறைநாதர்,  ஒதவனேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவன் இங்கே ஸ்வயம்பு.  அப்பர், சுந்தரர், சம்பந்தர்   தரிசித்து பாடல்  பெற்றது. 

நந்தி திருமணத்தின் போது  அனைவருக்கும் இங்கிருந்து தான் உணவு சென்றது.   சிவன் சோற்றுத்துறை நாதர் என்றும் அம்பாள் அன்னபூரணி என்றும் பெயர் கொண்டதிலேயே தெரிகிறது.  அடியார் பசிதீர உணவு தரும் தலம். காவிரி தென்கரையில்  13வது சிவஸ்தலம். சப்தஸ்தானத் தலங்களுள் மூன்றாவது ஸ்தலம்.  இங்கே தான் சப்தஸ்தான விழாக்காலத்தில்  அனைவருக்கும்  அன்ன தானம் .

முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார்கள்.

வாசலைக்  கடந்து உள்ளே  விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் .வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன. .வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து  அருள் பாலிக்கும் அன்னபூரணி.  ஒப்பிலாம்பிகை. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவன் தொலையாச் செல்வர்.அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும்.

இரண்டாவது வாசலைத்  தாண்டி நுழைந்தால்  பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை.   நேரே பார்த்தால் மூலவர் சந்நிதி. தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருள் பாலிக்கிறார்.


ஒரு முறை திருச்சோற்றுத்துறை  மற்றும் பகுதிகளில்  வறட்சி. பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடியபோது அருளாளர் என்ற சிவபக்தர்  " பரமசிவா,  இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா" என்று கதற,   ஜோ என்று மழை பொழிய ஊர்  வெள்ளக் காடானது. அதில் ஒரு பாத்திரம்  மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் "அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு"' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். 

அந்த  அக்ஷய  பாத்திரத்தால்,  ஊரில் எல்லோருக்கும்  சோறும், , நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார்.  அருளாளருக்கும் அவர் மனைவிக்கும்  கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலைகளை  பார்க்கலாம். 

அர்த்த மண்டபத்தில் நுழைந்ததும் கண்ணில் படுபவர் ஆறுமுகப் பெருமான்.  தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.  முதலாம் ஆதித்த சோழன் காலத்திய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது.  சோழர் காலக் கல்வெட்டுக்கள்  யார்  யார்  விளக்கெரிக்கவும்,
 நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்தார்கள் என்பதை நம்மால் படிக்கமுடியாதபடி சொல்கிறது.

சித்திரை பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர்.  இது தான் சப்தஸ்தான விழா. 

கோவில் நேரம்: 9.00 a.m. to 11.00 a.m.  - 4.00  - 7.30 pm    போன்:  +91- 9943884377
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...