Wednesday, January 17, 2018

LAST MOMENT OF KRISHNA




ஒரு அவதாரம் முடிகிறது J.K SIVAN

கிருஷ்ணனின் மகன் சாம்பன் நண்பர்களோடு சேர்ந்து ரிஷிகளை ஏமாற்றி அவமதிக்க நினைத்ததும் , ரிஷிகள் சாபம் விருஷ்ணி குலத்தையே அழிக்கப்போகிறது என்ற உண்மையும், நல்லவேளை ,கிருஷ்ணனுக்கு தெரியாது என அவர்கள் நினைத்தார்கள். '' நாம் இந்த இரும்பைப்பொடியாக்கி கடலில் கலந்துவிட்டதால் ரிஷிகள் சாபம் பலிக்காது'' என கனவு கண்டார்கள்.

ஆனால் பரமாத்மா, ஸ்ரீ கிருஷ்ணன் இவை அத்தனையையும் அறிவார். கடலில் போட்ட அந்த இரும்புத் துகள்கள் கரையொதுங்கி அங்கெல்லாம் வளர்ந்திருந்த நாணல் புதர்கள் மூங்கில் தடிகளைப் போல தடித்து வளர்த்தன.

குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து 36 வருஷங்கள் ஓடியது. தனது அவதார நோக்கம் முடிவடைந்து விட்டது என்றும் அறிவார். யாதவ குலத்து விருஷ்ணிகளும் அக்கிரமம் புரிந்து நாளாக ஆக அகந்தையின் உச்சிக்குச் சென்றுவிட்டதும் தெரியும். தேவைக்கு அதிகமான செல்வமும், அதிகாரமும், செல்வாக்கும் கிடைத்து விட்டால் அகந்தையின் உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என்பது உலக நியதி. விருஷ்ணி குலம், இனம் அழிவதற்கான எல்லா காரணங்களும் அவர்களிடம் கூடி விட்டது. துவாரகையில்மெல்ல தீமைகள் எல்லாம் பரவத் தொடங்கின.

கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரமும் பாஞ்சஜன்யமும் அவரை வணங்கி விடை பெற்றன. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் அவ்வாறே விலகின. காந்தாரி இட்ட சாபம் பலிக்க இனிதடையில்லை. எல்லோரும் கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். ''செய்த பாவங்கள் தீர தல யாத்திரை போய்வாருங்கள் '' என்கிறார் கிருஷ்ணன்.

ஒரு கிரகண சமயத்தில் அவர்கள் புறப்பட அதுவே ஒரு கெட்ட சகுனமாகியது. தல யாத்திரை புறப்பட்டவர்களுக்குள் குருக்ஷேத்திர யுத்தம் பற்றிய விவாதம் துவங்கி அவர்களுக்குள் கைகலப்பில் முடிந்தது. பாண்டவர்கள் பக்கம் போரிட்ட சாத்யகிக்கும் கெளரவர்கள் பக்கம் போரிட்ட கீர்த்திவர்மனுக்கும் தகறாறு மூள சண்டையிட்டு கீர்த்திவர்மனை சாத்யகி கொன்று விடுகிறான். மற்ற யாதவர்கள் இரு பிரிவாக பிரிந்து கடற்கரையில் உலக்கை அளவில் வளர்ந்திருந்த நாணல் தடிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்று குவித்தனர். கிருஷ்ணனின் மகன்களும், பேரப்பிள்ளைகளும், சகோதரர்களும் இதனால் அனைவருமே மாண்டு போனார்கள்.

இதற்கிடையில் பலராமன் காட்டுக்குள் தவம் செய்யச் சென்றார். மறைந்து ஆதிசேஷனாக வைகுந்தம் சேர்ந்தார். நேரம் வந்துவிட்டது தனக்கு என்று அறிந்த கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு ஒரு செய்தி சொல்லி அனுப்பினார்.

''அர்ஜுனா, இந்த தூதுவன் வந்து சொன்னதும் உடனே துவாரகை சென்று அங்குள்ள எல்லா பெண்களையும் ஜாக்கிரதையாக மீட்டு ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்.''

கிருஷ்ணன் அடுத்து அந்தப்புர பெண்களை எல்லாம் அழைத்து ''அர்ஜுனன் இங்கு வருவான், உங்களைப் பத்திரமாக ஹஸ்தினாபுரம் கொண்டு சேர்ப்பான். நான் கானம் செல்கிறேன். தவமிருந்து செல்வேன். விடைபெறுகிறேன்'' என்கிறார்.

சாம்பன் வயிற்றில் வைத்துக் கட்டப்பட்ட இரும்புத் தடியைப் பொடித்து கடலில் கலந்த போது ஒரு சிறிய துண்டு பொடிபடாமல் மிகுந்தது. கடலில் அதை மீனொன்று விழுங்கி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவனிடம் சிக்கியது. மீனவன் மீனின் வயிற்றைக் கிழித்தபோது அந்த இரும்பு துண்டை
எடுத்தான் அவன். அதைக் கல்லில் நன்கு இழைத்து கூராக்கித் தன் அம்பின் நுனியில் அதைப் பொறுத்தி வேட்டைக்குப் புறப்பட்டான். அவன் பெயர் ஜரன்.

கிருஷ்ணன்.மன அமைதியோடு அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்று அங்கு நீளமாக வளர்ந்திருந்த புல் வெளியொன்றில் சிறிது ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தார். உடல் முழுவதும் புல்லுக்குள் மறைய பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக சிவந்து தெரிந்தது. வனத்தினுள் வேட்டைக்கு வந்த ஜரன் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல தோன்றிய கிருஷ்ணனின் பாதங்களை நோக்கி இரும்புத் துண்டு பொருத்திய அம்பை எய்தான். கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்துக் கொண்டு அம்பு உடலில் நுழைந்தது. கிருஷ்ணனுக்கு உடலின் பாதங்களைத் தவிர வேறு எங்கு தாக்கினாலும் மரணம் நேராது. கிருஷ்ணன் அன்று காந்தாரி கொடுத்த சாபம் நிறைவேறியது.

அர்ஜுனன் பெண்களோடு ஹஸ்தினாபுரம் புறப்பட்டுவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக யாருமில்லாத துவாரகையில் கடல் நீர் பிரவேசித்தது. துவாரகை நகரம் பாழ்நகரம் ஆகி கடலில் மூழ்கியது. அதைத்தான் நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டு பார்க்கிறோம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...