Saturday, January 20, 2018

கிருஷ்ணா ராமா கோவிந்தா

என் தாய் வழி பாரதி வம்சம் J.K. SIVAN

கிருஷ்ணா ராமா கோவிந்தா...

எத்தனையோ நூறு ஆண்டுகள் முன்பு இருந்த சில முன்னோர்களைப் பற்றி சொல்லும்போது ஒரே பெயர் திரும்ப திரும்ப வரும். ஏனென்றால் தாத்தா பெயரை தாங்கிய ஒரு பேரன் அதே பெயர் தாங்கிய ஒருவனுக்கு பிற்காலத்தில் தாத்தாவாகி விடும்போது ஒரு பேராவில் ரெண்டு பேர் பெயரும் சொல்லவேண்டி வரும். அடையாளம் தடுமாறும். பிரபல பெயர்கள் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.

எனவே தான் இந்த சத்துமா கைங்கர்யம் ராமஸ்வாமி பாரதி தம்பதிகளுக்கு ப்ரணதார்த்தி ஹரன் அருளினால் புத்திர பாக்கியம் ஏற்பட்டு பிறந்த குழந்தைக்கு பஞ்சாபகேசன் என்று பெயர் வைத்தார்கள். ஜாதகபலன் சொன்னபடி, அந்த புத்ரனுக்கு, வித்யாபலம் இல்லை, ராஜப்ரீதி யோகம்இருந்தது. இவர் தான் தஞ்சாவூரை ஆண்ட மராத்தி வம்ச சிவாஜி ராஜாவின் ரெண்டாவது ராஜகுமாரியை தூக்கி வளர்த்தவர். பஞ்சாபி என்று எல்லோரும் அழைப்பார்கள் அவரை.
தனது 50வது வயதில் ராஜாமணி பஞ்சு ஐயர் என்ற பெயர் பெற்றார்

பஞ்சு ஐயர் மந்திர தந்த்ரங்கள் கற்பித்து, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி யோடும், அவர் குமாரன் , சிவாஜி மகாராஜாவிடம் நெருக்கமாக நட்பு கிடைத்தது. (ராஜ ப்ரீதி ).
பஞ்சு ஐயரின் அத்தை மகன் பிரபல சங்கீத வித்வான் ரெட்டை பல்லவி தோடி சீதா
ராமையர். பஞ்சு ஐயர் தஞ்சாவூரில் அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு. அவரோடு ராஜாவின் அரண்மனைக்கு அடிக்கடி போவதுண்டு.சிவாஜி ராஜாவின் குடும்பத்தோடு இதால் தொடர்பு பஞ்சு அய்யருக்கு கிடைத்தது. ஏதோ காரணமாக ஒரு நாள் ராஜாவின் பெண் குழந்தை ராஜாமணி கை விடாமல் அழுத வண்ணம் இருக்க, பல மருத்துவர்கள் என்ன பாடு பட்டும் அழுகையை நிறுத்தவில்லை. ராணி, தாதிகள் என்ன பண்ணியும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
அப்போது தான் அதிருஷ்டம் அவரது வாழ்க்கையில் விளையாடியது. அங்கு அந்த நேரத்தில் வந்த பஞ்சு ஐயர் தான் தினமும் பூஜை செய்கிறபோது ஆடும் கிருஷ்ணா ராமா கோவிந்தா, கேசவ மாதவ கோவிந்தா சம்போ சங்கர மகாதேவா சாம்ப சதாசிவ சங்கரா என்று கை கொட்டி பூஜா கிரகத்தில் சிவ தாண்டவம் ஆடுவதை அங்கு ஆடினார். இதைப்பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தனர். அழுதுகொண்டிருந்த குழந்தை அனைவரும் சிரிப்பதை பார்த்து தானும் கை கொட்டி சிரித்தது. அழுத குழந்தை சிரித்தது அனைவருக்கும் வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. சிவாஜிக்கு பரம சந்தோஷம்.

''யார் இவர்?'' இன்று சிவாஜி ராஜா சீதாராமய்யரிடம் கேட்டார்
''என் மாமா பிள்ளை. பஞ்சு ஐயர் என்று பேர். ஊர் திருவையாறு பக்கம் சாத்தனூர்''
''நம்ம குழந்தை ராஜாமணியை சந்தோஷப்படுத்தின இவர் நம்மோடு அரண்மனையில் இங்கேயே இருக்கட்டுமே''

பஞ்சு அய்யர் பக்கம் நின்றிருந்த தாதியின் கையில் இருந்த ராஜாமணி பஞ்சுவையரிடம் தாவினாள். சாக்ஷாத் மஹா லக்ஷ்மியை போன்ற அந்த ஒன்றரை வயது குழந்தை பஞ்சுவையரிடம் அணைந்து கொண்டு இருந்தது. அன்று முதல் அவருக்கு அரண்மனை வாசம் கிட்டியது.

இந்த குழந்தை ராஜாமணியைப் பார்த்துக்கொள்ளும் உத்தியோகத்துக்கு அவருக்கு அந்த காலத்தில் சிவாஜி ராஜா அளித்த சன்மானம் என்ன என்று சொல்லட்டுமா. அசந்து போவீர்கள்:

காசா உலுப்பை 3 உக்கிராண திட்டம்.. -- அதாவது பெரிய தட்டில், பட்டினம் பக்கா ரெண்டு படி அரிசி, அதற்கு தக்க மளிகை சமையல் சாமான்கள், (சுமார் 20 பேர் சாப்பிடும் அளவு) -- (சரவண பவன் அளவு அல்ல) --நித்யம் கொடுக்கப்படும். வருஷத்துக்கு ஒருமுறை சோமன் (வேஷ்டி அங்கவஸ்திரம்) சால்வை, புடவை ரெண்டு ஜோடி. இதற்கு அவர் புரியும் வேலை குழந்தைக்கு ''கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று கை தட்டிக்கொண்டு பாடுவதும் ஆடுவதும் தான் ....'' கிருஷ்ணன் தனது பெயரை சொல்பவர்களை எப்படியெல்லாம் வாழ வைக்கிறான் என்று பஞ்சு ஐயர் ஒரு உதாரணம் என்று சொல்லலாமா?
என் முன்னோர்கள் இன்னும் வருவார்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...