இசைக்கு மொழி தடை இல்லையே J.K. SIVAN
எனக்கு சங்கீதம் தெரியும் என்று நான் பெருமைப் படமுடியாது. ஆனால் பாடுவேன் என்று சமாதானம் அடையமுடியும். இதிலும் ஒரு சிறிய சிக்கல். பாடினால் யாருக்கு பிடிக்கும் என்று கேள்வி எழும்புகிறதே, அதற்கு ஒரே விடை, எனக்கு பிடிக்கும் என்பதால் நான் பாடுகிறேன், பாடுவேன்.
பாடுவது வேறு கேட்பது வேறு. கேட்கப் பிடிக்கிறவர்கள் பாடவேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே. சங்கீதம் நமது பண்பாட்டில் கலந்ததோ இல்லையோ, ரத்தத்தில் கலந்தது என்று நிச்சயம் சொல்லமுடியும். பாடாதவர் எவருமே இல்லை. தனக்குள் தானே, தனக்கு மட்டும் பாடிக் கொள்கிறவர்கள் வெளியே பிறரைப் பாடிக் கொல்வதை விட இது மேன்மையானது. சமூக விரோதமானது அல்ல.
அவுரங்க ஜீப் பாடமாட்டான் என்பதை விட பாடுபவர்களை தண்டிப்பானாம். சங்கீதம் பிடிக்காது அவனுக்கு.
நவராத்திரி சமயங்களில் நிறைய மாமிகள் வீட்டில் வந்தவர்களை பாட சொல்வார்கள். சப்தம் வெளியே வராமல் பாடும் சாமர்த்தியம் கொண்டவர்கள் இருக்கிறார்கள், ஒரே ராகத்திலேயே எல்லா பாட்டுகளும் பாடக்கூடிய பாடகர்களை பொறுமையின்றி கேட்டிருக்கிறேன். ஆரம்பித்து விட்டு முடிக்கமுடியாமல் தவிப்பவர்களும் உண்டு. அடுத்த அடி மறந்து போச்சே, என்று சமாளிப்பவர்களும், எப்படியோ ஒரு பாதி பாடி விட்டு, ''ஒரு வாரமா இருமல், தொண்டை கட்டியிருக்கிறது '' என்று வராத நோயை சமய சஞ்சீவியாக வரவழைத்துக் கொள்பவர்களையும் கண்டிருக்கிறேன்.
சிலர் பாட்டு '' படி' ப்பார்கள். என் நண்பர் நகரத்தார் ஒருவர் வீட்டில் நான் செல்லும்போது ''சிவன் சார் நல்லா பாட்டு படிப் பாங்க'. எங்கே முருகன் மேல் ஒரு பாட்டு படிங்க'' என்று சொல்வார்கள். நெளிவேன். அவர்கள் பாடச் சொல்கிறார்கள் என்பது தெரியாமல் ஆரம்ப காலத்தில் ''அடடா முருகன் மேல் பாட்டு படிக்க சொல்கிறார்களே, ஒருவேளை புஜங்க ஸ்தோத்ரம் , அல்லது கந்த சஷ்டி கவசம் ஸ்லோக புஸ்தகம் கொண்டுவந்து பாராயணம் பண்ணியிருக்க வேண்டுமோ'' என்று தோன்றியது. அப்புறம் தான் என்னை பாடச் சொல்கிறார்கள் என்பது புரிந்தது.
நகரத்தார் என்று சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. தோடி மேதை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர சக்ரவர்த்தி ஒரு பிரபல நகரத்தார் குல தனவந்தர் குலத்தில் ஒரு விசேஷம் என்பதால் காரைக்குடிக்கு வரவழைத்த்தார்கள். அன்று அவர் கச்சேரி. மனிதர் வழக்கம்போல் அபூர்வமாக 3 மணிநேரத்துக்கும் மேல் கான மழை பொழிந்தார். எங்கிருந்தோ எல்லாம் ரசிகர்கள் மாட்டுவண்டி, கோச் வண்டி, சாரட் எல்லாம் பிடித்துக் கொண்டு பல ஊர்களிலிருந்து வந்து ரசித்தார்கள். இரவெல்லாம் தீவர்த்தி வெளிச்சத்தில் தரையில் அமர்ந்து கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் தேவ கானம் பருகுவார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனவந்தருக்கு தனக்கும் சங்கீதம் தெரியும் என்று சபையில் எல்லோர் எதிரிலும் காட்டிக் கொள்ள ஆசை.
நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்னம் பிள்ளையை கௌரவித்து பணமுடிச்சு கொடுத்து, பலர் எதிரில், ''ஐயா, உங்கள் கச்சேரி அருமையிலும் அருமை. நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஏமாற்றம். நீங்கள் தோடியில் ஒரு கீர்த்தனமாவது பாடி இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும் எனக்கு'' என்று உளறினார். அன்று பிள்ளை ஒருமணி நேரத்துக்கு மேலாக தோடியில் அபூர்வ ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் செய்து எல்லோரையும் சங்கீதக் கடலில் மூழ்க அடித்ததில் தொப்பலாக நனைந்து நிறைய பேருக்கு தோடி ' ஈரம்' இன்னும் காயவில்லை
அப்படி இருக்க, இந்த செட்டியார் இப்படி திடீர் என்று தனது அறியாமையை ''ராபணா'' என்று போட்டு உடைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ராஜரத்தினம் பிள்ளைக்கு ஒரு புறம் கோபம், இன்னொருபக்கம் ஹாஸ்யம். அநேகர் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தனர். ஊரில் பெரிய மனிதராயிற்றே. ராஜரத்தினம் பிள்ளை குறும்புக்காரர் என்று அநேகருக்கு தெரியும். இந்தமாதிரி சந்தர்ப்பங்கள் கிடைத்தார் விடுவாரா?
ராஜரத்தினம்சி பிள்ளை சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு பவ்யமாக எல்லோர் எதிரிலும் ''செட்டியார்வாள், உங்கள் சங்கீத ஞானம் எனக்கு தெரியும். நீங்கள் ஒரு ஜாம்பவான் என்று கேள்விப்பட்டு தான் உங்கள் எதிரில் நாதஸ்வரம் வாசிக்க ஒப்புக்கொண்டேன். உயர்ந்த சங்கீத ஞானம் கொண்ட சிறந்த ரசிகர் நீங்கள். நான் தப்பு செய்துவிட்டேன். அதனால் உங்களை எப்படியாவது சந்திக்காமல் சென்றுவிடவேண்டும் என்று பார்த்தேன். என்னைக் கையும் களவுமாக பிடித்துவிட்டீர்களே. நீங்கள் சொன்னது ரொம்ப வாஸ்தவம். நான் இன்று தோடி பாடமுடியாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சொல்லாமல் தப்பிக்கலாம் என்று பார்த்தேன். வகையாக உங்களிடம் அகப்பட்டுக் கொண்டேன்.
செட்டியார் பெருமிதமாக அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது நாதஸ்வர சக்ரவர்த்தி சொன்னது தான் இங்கு விஷயமே.
''செட்டியார் மன்னிக்க வேண்டும். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். வரும் அவசரத்தில் நான் வழக்கமாக தோடி ராகம் வாசிக்கும் நாதஸ்வரத்தை வீட்டிலேயே மறந்துபோய் வைத்து விட்டு வந்தேன். சரி வந்த இடத்தில் இந்த நாதஸ்வரத்தில் வரும் ராகங்களை மட்டும் வாசித்து விட்டு நழுவலாம் என்று நம்பி ஏமாந்தேன். என்ன செய்வது.உங்களிடம் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டேன். '' என்றார். சபையே குலுங்கியது. சிரிப்பு அடங்கவும் கைதட்டல் அடங்கவும் வெகு நேரமாயிற்று.
செட்டியார் பாவம் தனது சங்கீத ஞானத்திற்காக அனைவரும் கை தட்டுவதாக எண்ணி பெருமைப் பட்டார்.
இந்தக் கதை இருக்கட்டும். நான் இன்று இதை எழுத முற்பட்டது. ஒரு இந்தி பாடகர் பற்றி. தலத் மஹ்மூத். .இசையுலகம் இன்றுவரை காணாத ஒரு தனிப்பிறவி. எத்தனை பாட்டுகள், எல்லாமே அந்த இனிய தேன் குரலில் பாடியவை. நான் சிறிய பையனாக இருந்த காலத்தில் ''பாபுல்'' என்ற ஹிந்தி படத்தில் திலிப் குமாருக்காக அவர் பாடிய பாடல்களை முதலில் கேட்டேன். அன்று முதல் இன்றுவரை நான் இந்தி நிபுணன் இல்லை. இசைக்கு மொழி ஏது? . தலத் மஹ்மூத் குரல் காந்த சக்தி கொண்டது. இதயத்தை பிழியும் சக்தி வாய்ந்தது. உள்ளே எங்கேயோ புகுந்து மயிலிறகு தேன் தோய்த்து தடவுவது போல் மனதை த்தொட்டு தடவி சுகம் தருவது.
No comments:
Post a Comment