மார்கழி மாதம் திருவாதிரை நாள் .....J.K. SIVAN .
மார்கழி திருவாதிரையன்று சிவன் கோவில் செல்லும் பழக்கம் சின்னவயதிலிருந்து உண்டு. வீட்டில் ரேடியோவில் விடியற்காலை ''மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுது ஐயே '' என்று கணீரென்று S.G . கிட்டப்பா குரல் ஒலித்தது இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. என்ன குரல். கோபாலக்ரிஷ்ண பாரதியார் நந்தனார் கீர்த்தனைகள் அபூர்வமானவை அல்லவா. அவற்றில் ஒரு மணி இந்த பாடல். நந்தனார் தனது எஜமானனிடம் மார்கழி மாதம் சிதம்பரம் நடராஜனை திருவாதிரை அன்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கும் பாடல்.
ஆருத்ரா என்பது, சமஸ்க்ரிதத்தில் திருவாதிரை நட்சத்திரம். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று அதிசயிக்க செய்யுமாம். நடராஜரின் அழகு தான் அவரை கோவில்களில் இருந்து திருடி வெளி நாடுகளில் விற்க செய்கிறது. அந்த அழகில் மயங்கி தானே அதற்கு அத்தனை டிமாண்ட்.
அவர் இடது பதம் தூக்கி ஆடும் அழகு, கண்ணைப்பறிக்காதா? என்ன கம்பீரம்! மரகத நடராஜனை இன்று உத்தரகோசமங்கையில் சந்தனக்காப்பு களைந்து தரிசனம் காட்டிய படம் இணைத்துள்ளேன். என்ன கொள்ளை அழகு அந்த காலைத்தூக்கி நின்றாடும் தெய்வத்துக்கு. ஓஹோ இடது பக்கம் வாசம் செய்யும் உமைக்கு நின்று கொண்டே இருந்தால் கால் வலிக்காதா? அதற்காகத் தான் இடது பதம் தூக்கியா ...?
மார்கழி மாதம் என்பது விண்ணுலகத்தில் விடியற்காலை. இந்த ப்ரம்ம முகூர்த்த காலத்தில் நீராடி, இறைவனை தரிசிப்பது உசிதம். மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள் அனைவரும் சிதம்பரம் வருவார்களாம்.
பதஞ்சலி, வியாக்ர பாத ரிஷிகள் திருவாதிரை அன்று தில்லை சபாபதி நடனத்தை காண தவம் இருந்தனர். அவர்கள் பக்தியை மெச்சி ஈசன், தில்லையில் மார்கழி திருவாதிரை அன்று ஆனந்த நடனமாடினார் தில்லை நடராஜர். ஆருத்ரா என்றால் நனைந்த என்று ஒரு அர்த்தம். அவரது கருணை மழையால் இருவரும் பரவரசத்தில் நனைந்த நாள் ஆருத்ரா.
பதஞ்சலி, வியாக்ர பாத ரிஷிகள் திருவாதிரை அன்று தில்லை சபாபதி நடனத்தை காண தவம் இருந்தனர். அவர்கள் பக்தியை மெச்சி ஈசன், தில்லையில் மார்கழி திருவாதிரை அன்று ஆனந்த நடனமாடினார் தில்லை நடராஜர். ஆருத்ரா என்றால் நனைந்த என்று ஒரு அர்த்தம். அவரது கருணை மழையால் இருவரும் பரவரசத்தில் நனைந்த நாள் ஆருத்ரா.
ஓவ்வொரு மாதமுமே திருவாதிரை அன்று நடராஜப் பெருமானை வணங்கி பிரார்த்தனை செய்வது பற்றி ''சித்சபேச தசகம் ' விளக்குகிறது. பக்தியோடு பாராயணம் பண்ணினால் சகல நன்மைகளையும், யோகபலனும் பெறலாம் என்கிறது.
* பிரகாசம் பொருந்திய சித்சபையின் தலைவரும், தில்லைவாசிகளாலும், வேதபண்டிதர்களாலும் வணங்கப்படும் திருப்பாதங்களைக் கொண்ட நடேசப்பெருமானை நான் துதிக்கிறேன்.
* ஒரு பாதத்தை மேலே தூக்கி நின்று ஆடுபவரும், காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலனும், வணங்கும் அன்பர்களைக் காக்க சூலம் தாங்கி நிற்பவரும், மனக்கவலைகளைப் போக்கி அருள்செய்பவரும், கருணையே வடிவானவரும், கபாலம் ஏந்தி நிற்பவருமான சிதம்பரப் பெருமானைப் போற்றுகிறேன்.
* நெற்றியில் ஒளிவீசும் கண்களைக் கொண்டவரும், வியாக்ரபாதர், பதஞ்சலி போன்ற மகரிஷிகளால் வில்வம் போன்ற பூஜாதிரவியங்களால் அர்ச்சிக்கப்படுபவரும், ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாளைத் தோழனாகக் கொண்டவரும், புலித்தோலினைத் தன் ஆடையாக உடுத்தவரும், பவானியான சிவகாமி அன்னையைத் தன் மனைவியாகப் பெற்றவரும் ஆகிய சிற்றம்பல நடராஜப் பெருமானை வணங்கி மகிழ்கிறேன்.
* கண்ணிலிருந்து புறப்பட்ட தீக்கணையால் மன்மதனைத் தகனம் செய்தவரும், ஊன்றிய திருவடியில் அபஸ்மாரனை அழுத்தி நிற்பவரும், கழுத்தில் சர்ப்பங்களை மாலையாகப் அணிந்தவரும், வேதங்களின் சொரூபமாகத் திகழ்பவரும், ஆசையே இல்லாதவரும், ஒளிவீசும் ஜடாமுடியைத் தாங்கி நிற்பவருமான தில்லை நடராஜப்பெருமானுக்கு தலைவணங்குகிறேன்.
* திருவாதிரை நன்னாளில் அபிஷேகம் காண்பவரும், அழகிய உருவம் கொண்டவரும், சந்தனம், திரவிய அபிஷேகத்தால் மனம் மகிழ்பவரும், மனக்கவலையைத் தீர்க்கும் மகாபிரதோஷ புண்ணிய வேளையில் பூஜிக்கப்படுபவரும், பிரம்மா, விஷ்ணு, நந்திகேசர், நாரதர், இந்திரன் மற்றும் தேவர்களுடன் நர்த்தனம் புரிபவருமான சபாபதியைப் போற்றுகிறேன்.
* எந்த இறைவனை வணங்கினால் பரிசுத்தமான மனத்தைப் பெறுகிறோமோ, விபூதி, ருத்ராட்சம் அணிந்து எந்தப் பெருமானை வணங்கினால் பரிசுத்தம் அடைகிறோமோ, மாணிக்கவாசகர் போன்ற சிறந்த பக்தர்கள் எல்லாம் யாரைப் போற்றித் துதித்தார்களோ, அந்த தில்லை அம்பலவாணரை வழிபடுகிறேன்.
* எந்தச் சன்னதியை முன்ஜென்மத்தில் செய்த புண்ணிய வினைகளால் தரிசிக்க இயலுமோ, எந்த இறைவனிடம் சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனங்களை பரப்பி வழிபட்டால் கோரிய பலன் நிறைவேறுமோ, எந்த மூர்த்தியை துறவிகளும், ஞானிகளும் நித்தமும் தியானித்து மகிழ்கிறார்களோ அந்த சிற்றம்பலப் பெருமானை சேவிக்கிறேன்.
* சிறந்த திருவாக்கினைக் கொண்டவரும், பக்தர்களின் பாவங்களை போக்கி அருள்பவரும், யாகங்களைக் காப்பவரும், வேதங்களை உபதேசித்தவரும், பர்வதராஜ குமாரியான உமையவளிடம் விளையாடி மகிழ்பவரும், சிதம்பர ரகசியமாகத் திகழ்பவருமான கனகசபாபதி பெருமானைச் சரணடைகிறேன்.
* பூதங்களின் தலைவனான நடராஜ மூர்த்தியே! நீரே என் வாழ்வில் உண்டாகும் இன்னல்களைப் போக்கி அருள்செய்ய வேண்டும். சாதுக்களுக்கும், நல்லவர்களுக்கும் உண்டாகும் மனபயத்தை நீயே போக்கி துணை நிற்க வேண்டும். சபேசனே! உமது திருவடிகளை அடைக்கலம் புகுந்து நிற்கிறேன்.
* பிறவிப்பயனை அருள்செய்பவரும், மோட்சத்தை தந்தருள்பவரும், நம் வாழ்வில் இன்பங்களைச் சேர்ப்பவரும், தலையில் புண்ணிய மிக்க கங்கையினை தாங்கி நிற்பவருமான நடராஜப் பெருமானை போற்றுகின்றேன்.
No comments:
Post a Comment