குரு நானக் கல்லூரிக்கு வாருங்கள்....J.K. SIVAN
இன்றோடு நான்கு நாட்களாக நான் காமதேனுவுடன் இருக்கிறேன். முப்பத்து முக்கோடி தேவர்கள் அவள் தேகத்தில் குடி கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற அன்பர்கள் ஆணும் பெண்ணுமாக அவளை தரிசித்து புகைப்படம் எடுத்துக்கொள்வதை ரசித்தேன். சில ப்ரகிருதிகள் காமதேனுவை ஜல்லிக்கட்டு காளையென நினைத்து அவள் கொம்புகளை பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தது அவர்கள் அறியாமையை பறை சாற்றியது.
கொஞ்சம் தள்ளி தேவலோக மெத்து மெத்து பாதையில் நடந்தபோது எதிரே பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை கண்டேன். அடாடா என்ன கண்கொள்ளாக் காட்சி. பரமேஸ்வரா உன்னைக் காண்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ. அப்பளம் வடாம் வகையிலிருந்து ஆனந்த பரவச யோக நிலை அடையும் யோக ஆசனம் வரை எத்தனைபேர் வழி காட்டுகிறார்கள் இங்கே. அவசரம் அவசரமாக அந்தணர் சபை வருவோர் போவோரை அழைத்து அங்கத்தினராக்குகிறார்கள்.
எனக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு சங்கங்கள். ;ஒன்று பதிவு பெற்றது மற்றது அதைப் பெறாதது. போஸ்ட் ஆபிஸ்காரர்கள் கூட்டமாக ஸ்டாம்ப் விற்றார்கள். கங்கை ஜலத்தை வருவோர் போவோர்க்கெல்லாம் ப்ரோக்ஷணம் செய்த ரெண்டு பெண்களுக்கு நன்றி தெரிவித்தேன். என் கையில் மஞ்சள் சிவப்பு கயிறு கட்ட விருப்பப்பட்ட முதியவரிடமிருந்து தப்பித்துக் கொண்டேன்.
நடந்த சில வினாடிகளில் எதிரே ஒரு மேடையில் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் குரலில் ஐந்தாறு பெண்கள் நாட்டுப்பாடல்களை பாடி சிந்தை கவர்ந்தார்கள் . அங்கே கமகம என்று மணந்ததால் அருகே இருந்த '' காப்பிக்குடி' கடை கொடுத்த இருபது ரூபாய்காப்பி பருகும்போது ருசியாகவே இருத்தது.
அடுத்த தமிழ் வருஷ பஞ்சாங்கத்தை ஒரு பெட்டியில் நிரப்பி ஒரு பையன் விநியோகம் பண்ணின்னதால் கொஞ்சம் தள்ளு முள்ளு. ஒரு சிறு துண்டு இருட்டுக்கடை அல்வாவை குச்சியில் ஒருவர் நீட்டியதைப் பெற பல கைகள்.
ஒரு இடத்தில் எதற்கு இத்தனை சிவலிங்கங்கள் என்று கேட்கும் முன்பே அவர்கள் ஸ்தபதிகள் சங்கத்தார்கள் என்று மேலே ஒரு பிளெக்ஸி பேனர் சொன்னது. வேலூர் தங்கக்கோயில் அம்மன் வீற்றிருந்தாள் . அவள் அருகே சாமியார் அமர்ந்த நிலையில் பதுமையாக இருந்தார். அவர்களைத் தனியாக விட்டுவிட்டு ஏன் எல்லோரும் போய்விட்டார்கள்?
எட்டாயிரம் பேருக்கு தினமும் மூன்று வேளை ராஜ போஜனம். . காலை உணவு, காபி டீ, மதிய வாழை இலையில் அளவற்ற அறுசுவை உண்டி. மாலை தேனீர் காபி சுண்டல், இரவு சப்பாத்தியுடன் ஏதோ ஒரு சாதம். இதற்கு மேல் என்ன தேவை
என்னன்னவோ மடங்கள், ஆலய நிர்வாகங்கள், ஞானிகள், ,துறவிகள், மூலிகை விற்போர், பூஜா திரவியங்கள் விற்போர், கோ பூஜை செய்ய பசுக்கள், கன்றுக்குட்டிகள், பிரசங்கங்கள், அப்பப்பா சொல்லில் அடங்காது.
கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் பத்துக்கு பத்து சதுர அடி இலவச இடத்தில் தன்னுடைய வெளியீடுகளை ரெண்டு சாப்பாடு மேஜைகளின் மேல் துணி விரித்து பரப்பி வண்ண வண்ண புத்தகங்களை கிருஷ்ணனைக்காட்டி வருவோர் போவோர் கவனத்தை ஈர்த்தது. நன்கொடை கொடுத்தான் கொடுக்காமலும் அநேக புஸ்தகங்களை விநியோகித்தேன்.
சார், விளக்கு எரிகிறதா என்று ஒருவர் கரிசனமாக கேட்டு எரியாத ஒரு விளக்கை எரிய வைத்தார். ஒரு போலீஸ் பெண்மணி எதிரே சாய்ந்து நின்று கொண்டு ''எந்த காரணத்தை கொண்டும் மொபைல் போனை கீழே வைக்காதீர்கள். இன்று ரெண்டு மூன்று பேர் இழந்து விட்டார்கள் என்றபோது சூடு கண்ட பூனையான நான் போன கண்காட்சி யின் போது ஜெயின் கல்லூரி ரி வளாகத்தில் என்னுடைய அருமையான மொபைல் போன் இரு பெண்கள் மூலம் காணாமல் போனதை நினைவில் கொண்டேன். காலையிலிருந்து மாலை வரை ஒரு சிலர் பழங்கால ஆலய வாத்ய கருவிகளை இயக்கி சப்தமூட்டினது கேட்பதற்கு வினோதமாக இருந்தது.
ஒன்று இந்தவருஷமும் கவனித்தேன். நிறைய பேருக்கு கலர் கலர் நோட்டிஸ் சேமிக்கும் பழக்கம் இருக்கிறது. இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை. எல்லா வயதினருக்கும் இந்த ஆசை இருக்கிறது. சிலர் இதற்கென்றே ஒரு பெரிய பையை முதுகில் சுமப்பதை கண்டேன் , எனது நண்பர் தான் சேகரித்த சில காகிதங்களை என் அருகே வைத்திருந்தது ஒரு நோட்டீஸ் சேர்ப்பவர் கண்ணில் பட்டுவிட்டதால், கழுகு செத்த எலியை கவ்வுவது போல் அதை கவர்ந்து சென்று விட்டார். என் எதிரே இருப்பதை என்னைக் கேட்காமலேயே எடுத்துச்செல்லும் பண்பு கொண்டவர்..... நிறைய இருக்கிறது .சொல்ல. ஒன்றிரண்டோடு முடித்து விடுகிறேன்.
சில பழங்குடி மக்கள், சில ஜாதி மக்கள் மேம்பாடு சங்கங்கள், ஆலய வழிபாட்டு குழு, வேத பாராயண குழுக்கள் தங்கள் ஸ்டால்களில் வித விதமாக மக்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ விசித்திரமான சுவாரஸ்யமான ஸ்டால்கள் உண்டு. அவற்றைப் பற்றி எழுத ஆசை தான். நேரமில்லை.
வாசலில் நுழைந்து வெளியே செல்லுமுன் ABCD என்று பல எழுத்துக்களில் 1-20 வரை ஒவ்வொன்றிலும் பல ஸ்டால்கள். வாசலில் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் மலைகள், கோவில்கள். திருப்பதி வெங்கடாசலபதி வந்து இறங்கியிருக்கிறார். பூஜை, ஆராதனை தொடர்ந்து அங்கே நடக்கிறது.கண்ணைப் பார்க்கிறார்.
ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம். பல முகநூல் நண்பர்களை முதன் முறையாக பார்த்து பேசினது. ஒரு பழைய காணாமல் போன நண்பனின் சகோதரரைப் பார்த்தேன். என் பல வருஷ நண்பன் மறைந்து போனதை சொன்னார். வாழ்க்கை நிலையாமை புரிந்து வாடினேன். அவனோடு பழகிய நாட்கள் நினைவில் வந்தது. பிறகு எழுதுகிறேன்.
No comments:
Post a Comment