Saturday, April 30, 2022

DABOLKAR HOUSE

 


தபோல்கரின் இல்லம். ---   நங்கநல்லூர்  J K SIVAN 

நான் சமீபத்தில் பம்பாயில் இருந்து  ஷீர்டி செல்வதைப் பற்றி  சொன்னபோது நண்பர்கள்  பம்பாயில் ஒரு முக்கிய இடத்தைப்  பற்றி சொன்னார்கள். 

பாந்திராவில்  சாய் ஸத் சரிதா  எழுதிய   ஹேமாத்ரி பந்த்  என்கிற  கோவிந்தராவ் தபோல்கர்,1856-1929 வரை வாழ்ந்தவர்.  1911ல் அவர் கட்டிய  '' சாய் நிவாஸ்''  என்ற  வீடு   பாந்திரா மேற்கு பகுதியில்  செயின்ட் மார்ட்டின் தெருவில்  இருப்பதாகவும் அங்கே  உள்ளே  ஒரு பிரார்த்தனை கூடத்தில் ஷீர்டி பாபாவின் ஒரிஜினல்   முழு உயர படம் ஒன்று இருக்கிறது. அங்கே அந்த படத்தின் எதிரில்  உட்கார்ந்து தான்   தபோல்கர் சாய் சத் சரிதம் எழுதினார்  என்றும் அறிந்து மகிழ்ந்தேன்.   பாபா  தபோல்கருக்கு  கொடுத்த  ரெண்டு காசுகள், தபோல்கரின்  மூக்குக் கண்ணாடி,  பாபாவின் பாதுகை எல்லாமே  பொருட்காட்சியாக எல்லோரும் காண வசதி செய்திருக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை  யார் வேண்டுமானாலும் சென்று இலவசமாக தரிசிக்கலாம். அதை நிர்வகிப்பவர்  தபோல்கரின்  பேரன்  இன்னொரு தபோல்கர். 

தபோல்கர்  வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகஸ்தர்.  குஜராத்தில் ஆனந்த்  என்கிற ஊரில் உத்யோகம்.  காகா சாஹேப்   தீக்ஷித் என்ற நண்பர் அவருக்கு பாபாவின் லீலைகளை பற்றி ஒரு கடிதம் எழுதினத்திலிருந்து எப்படியாவது பாபாவை தரிசிக்க  ஆர்வமாக இருந்தது.  பம்பாய் குடியேற முயற்சித்தார். 

1910ல் பாபாவின் அருளால்,  தபோல்கர் எதிர்பாராதபடி,   பாந்திராவுக்கு மாற்றல் ஆகி வந்தார். ஷீர்டி விஜயம் செய்ய  30 நாள்  லீவ் கேட்டிருந்தார். கிடைத்தது.  

அக்காலத்தில்  ஷீர்டி ஒரு  வனாந்திர பிரதேசம். குக்ராமம் .  அங்கு என்ன விசேஷம் என்றால் பாபா ஒன்றே தான். அது ஒன்று போதாதா, உலகையே வளைத்துக் கட்டிப்போடாதா?   பல பாகங்களி லிருந்து பக்தர்கள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு தரிசனம் பெற வந்தார்கள்.  

தபோல்கர்  பாபா வுடன் எப்போதும் இருந்த   காகாசாஹேப்  தீக்ஷித்   மற்றும் நானாசாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.  தபோல்கரை பார்க்கும்போதெல்லாம் நானா சாஹேப்  ''ஹேமாத் ,  ஷீர்டி போனீர்களா?   பாபா தரிசனம் ஆயிற்றா ? என்று கேட்பார் . ஒன்றி ரண்டு முறை கூறியும் முயற்சித்தும்  தபோல்கரால்  ஷீர்டி போகமுடியாமல் ஏதோ வேறு வேலைகள்  அவரது ஷீர்டி விஜயத்தை தள்ளிப்போட வைத்துக் கொண்டே இருந்தது. அப்போதெல்லாம்  ரயில் வசதி இருந்தது.  

தபோல்கர் படித்தவர். மராத்தி குறுநில மன்னர்கள் மஹாதேவ், ராம்தேவ் ஆகியோருக்கு மந்திரி. நிறைய ஆன்மீக புத்தகங்கள் எழுதியவர். கணக்கு வழக்குகள் பார்க்க புது முறை வகுத்தவர்.  பிற்காலத்தில் ஷீர்டி சமஸ்தானத்தில் கணக்கு வழக்குகள் பார்த்து நிர்வாகம் பார்க்கும்போது அவர் பெயர் ''ஹேமாத்ரி பந்த்'' . 

''என்னய்யா இன்னும் நீங்கள் ஷீர்டி போகவில்லையா?' என்று தபோல்கரிடம்  காகா சாஹேப் மீண்டும் ஞாபகப் படுத்தப்  பட,   அவரும்   ''சரி இப்போதே புறப்படுகிறேனே'' என்கிறார். ரயிலில் சென்று  தாதரில் இறங்கி மன்மத்  செல்லும் வேறு ரயிலைப்பிடித்து ஷீர்டி செல்ல உத்தேசம்.  ரயிலில்  அறிமுகமில்லாத ஒரு பிரயாணி ''சார் எங்கே போகிறீர்கள்?''  என்கிறான். '' தாதரில்  இறங்கி மன்மத் போகும் ரயிலைப்  பிடித்து ஷீர்டி போகிறேன்''.

''தாதரில்  இறங்கவேண்டாம். மன்மத் போகும் ரயில் அங்கே வராது'' என்று ஷீர்டி செல்லும்  சரியான வழியை கூற ஷீர்டி வந்து சேர்கிறார் தபோல்கர். நேராக  வாடா வுக்கு சென்று தங்கி  பாபாவை த் தேடி செல்ல எண்ணம்.  இங்கே தான் வாடா  அருகில் பாபா  ஒரு மசூதியில் இருக்கிறார் என்று யாரோ சொல்ல பாபாவை சென்று தரிசிக்கிறார். இப்போது போல் அப்போதெல்லாம் கூட்டம் இல்லை. பாபா அருகில் சென்று அவர் திருவடிகளை தொட்டு வணங்குகிறார். உடல் சிலிர்க்கிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதோ ஒரு புதிய சக்தி மின்சாரம் போல் பாய்கிறது. வாழ்க்கையையே அக்கணம் மாற்றிவிட்டதோ ?

ஷீர்டி சென்றபோது பாபா  கல் இயந்திரத்தில்  கோதுமை மாவரைத்து  அந்த மாவை  ஷீர்டி கிராம எல்லைகளில் தூவினதைப்  பார்த்தார்.   அதன் மூலம் அந்த கிராமத்தில் காலரா பரவாமல் தடுத்தார் என்பது பாபாவின் எண்ணற்ற  அதிசயங்களில் ஒன்று.  அதை  எழுதி எல்லோருக்கும் தெரியப்படுத்த  வேண்டும் என்று  தபோல்கருக்கு  ஆசை.  மாதவ ராவ் தேஷ்பாண்டே  (ஷாமா)  என்பவரிடம் அனுமதி கேட்டார்.  ''எழுதப்பா'' என்று அனுமதியளித்தார் ஷாமா.

தபோல்கரிடம்   ஷாமா  ' ஹேமாத் , நீ என்னுடன் வா. பாபாவிடம் உன் எண்ணத்தை சொல்வோம். ஆசிபெறுவோம் '' .  

 பாபா முன் நின்று வணங்கினார்கள்.  மெதுவாக ஷாமா  ''குருநாதா,  தபோல்கர்  பாபாவின் லீலைகளை  புத்தகமாக எழுத ஆசைப் படுகிறார்.  உங்கள் ஆசிர்வாதத்தோடு துவங்க வந்திருக் கிறார்''

பாபா  தபோல்கரை  என்ற இறங்க பார்த்தார். ''ஹேமாத், ''என்று  அவர் பெயரைச் சொல்லி, ''கிட்டே வா''  என  கையில் ஜாடை காட்டுகிறார் பாபா. 
 ஹேமாத் அருகில்  நெருங்கி   சிரம் தாழ்த்தி குனிந்தார்.   பாபாவின் கரங்கள் தபோல்கரின்  சிரத்தை தொட்டு தடவுகிறது.   அருகில் இருந்து  ''உதி'' எனும் திரு நீற்றை அளித்தார்.  தபோல்கருக்கு கொள்ளை ஆனந்தம் ஆச்சர்யமும் கூட. எப்படி பாபாவுக்கு தனது பெயர்  ஹேமாத்ரி ''

 '' நீ  எழுது.   உனக்கு  என் ஆசீர்வாதம் உண்டு.  குறிப்புகள் கேட்டு எழுதிக்கொள்.  என் லீலைகளை  நீ சரியாக  எழுத்தில் வடித்தால் அதை, படித்தாலோ  சொன்னாலோ கேட்டாலோ, அறிபவர்கள் பாபங்கள், அறியாமை எல்லாம் அழியும்.  உலக வாழ்க்கையில்  கஷ்டங்கள் காணாமல் போகும்'' என்று அங்கீகரித்தார்.

வரும் வழியில்  ஷாமா,  '' ஹேமாத், (ரொம்ப நெருக்கமானவர்கள் அழைக்கும் பெயர்)  நீ அதிர்ஷ்டக்காரன். இனி நீ எழுதப்போவதில்லை,  பாபாவே  தனது அனுபவங்களை உன்னை  ஒரு கருவியாக கொண்டு   உன்  எழுத்தின் பலத்தால் பக்தர்களை இனி அணுகப்போகிறார்'' பக்தர்கள் மனதில்   உன் எழுத்து, பரிபூர்ண நம்பிக்கை ஊட்டும் காவியமாகப் போகிறது. '' என்றார்.

''பாபா போன்ற  குரு அவசியம் எல்லோருக்கும்  வாழ்க்கையில் தேவை என்று  உணர்ந்த   தபோல்கருக்கு அடிக்கடி  பாபாவின்  அரூப விஜயம்,  தரிசனம்  அவரது பாந்திரா இல்லத்தில் கிடைத்தது. அவர்  சத் சரிதம் எழுத  அவ்வப்போது அவரை வழி நடத்தி பாபாவே  உதவினார் என்பது எவ்வளவு பெரிய பாக்யம். 

1916ல்   தனது  சரித்திரத்தை எழுத  பாபா  அனுமதித்தார்.   தபோல்கர்  எழுதிய  சாய் சத் சரிதா  முதலில் மராத்திய கவிதை ரூபத்தில். 900 பக்கங்கள் கொண்ட மராத்தி புத்தகமாக  புத்தகமாக   மூன்று ரூபாய்க்கு கிடைத்தது. அப்புறம்  பல மொழிகளில் வந்தது.

1917ல்  ஒரு பௌர்ணமி  அன்று ஹோலி பண்டிகை.  வடக்கே ரொம்ப விசேஷமாக கொண்டாடு வார்கள்.  தபோல்கருக்கு  ஒரு விடியல்காலை கனவு.  பாபா  ஒரு சந்நியாசி மாதிரி இருக்கிறார்.  பேசுகிறார்:

''ஹேமாத் , நான் உன்னை பார்க்க வரேன். உன்னோடு தான் சாப்பிடப்போறேன்''. விழித்துக் கொண்ட  தபோல்கர்  ஆச்சர்யப்பட்டார். பாபா  சொன்னது  காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.   ஏழு வருஷமாக பாபாவுடன் தொடர்பு. அடிக்கடி  தரிசித்தவர். தியானம் செய்தவர். ஆனால்  இன்று தான் முதல் தடவையாக  ''உன் வீட்டுக்கு வரேன், உன்னோடு சாப்பிடறேன்'' என்ற வாசககம். மனைவியைக் கூப்பிட்டு ''ஒரு சந்நியாசி சாப்பிட வருகிறார்.  கொஞ்சம் அயிட்டம் எல்லாம்  கூடுதலாக சமைத்துவிடு ''என்றார்.

''எந்த சாமியார் வரப்போறார் , எப்போது ?'' என்று  கேட்டாள்  மனைவி.

ஹேமாத்   தான் கனவு கண்ட விஷயம் சொன்னார்.  அவளுக்கு சந்தேகம்.  ஷீர்டிலேருந்து  பாபா  பம்பாய்க்கு வருவது சாத்தியமா? எத்தனை பக்தர்கள்  ராஜ போகமாக அவருக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கிறார்கள், இங்கே வந்து நம்ம வறட்டு சமையலையா பாபா  சாப்பிடப்
போறார்?''
''இல்லேம்மா, அவர்  நேர வரமாட்டார், ஒரு வேளை  வேறே யார் ரூபத்திலாவது வருவார்''
கொஞ்சம் கூட  சமையல் பண்றதாலே நமக்கு என்ன நஷ்டம்?''

பகல் வேளை தாண்டிவிட்டது. ஹோலி பண்டிகையாதலால்  சிலர் சாப்பிட  வந்திருந்தார்கள்.   இலை போட்டாகிவிட்டது. இலைகளை சுற்றி  ரங்கோலி வண்ண வண்ணமாக  காட்சி அளித்தது.  ரெண்டு வரிசையாக  சாப்பிட உட்கார்ந்தார்கள்.  வீட்டில் உள்ளவர்கள், விருந்தாளிகள்  எல்லோரும்  அமர்ந்தாகிவிட்டது. எங்கே அந்த சந்நியாசி??  காத்திருந்து யாரும் வராததால்,  வாசல் கதவை சார்த்தியாகிவிட்டது.  பரமாறியாகிவிட்டது. அன்னசுத்தி  பரிசேஷணம் ஆகி, போஜனம் ஆரம்பமாகிவிட்டது.  வாசலில் மாடிப்படியில் படிக்கட்டில் யாரோ நடக்கும் சத்தம்.....
வாசலில் சென்று கதவை திறந்தார் ஹேமாத்.   அலி முஹம்மது, மௌலானா  இஸ்மு முஜாவார்  ரெண்டுபேரும் தெரிந்தவர்கள்.   உள்ளே  போஜனம் நடப்பதை பார்த்து அவர்கள்  இடையூறுக்காக  வருந்தினார்கள்.

''ஹேமாத்,  போங்கோ  பாதிலே எழுந்து வரும்படியாக பண்ணிட்டோம். ஸாரி , போய் சாப்பிடுங்கோ, மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். இந்தாங்கோ, இதை வைத்துக்கொள்ளுங்கள், அப்புறம் இது பற்றி பேசுவோம்  என்று சொல்லி ஒரு பெரிய பார்சலைக்   கொடுத்தார்கள்.   தபோல்கர்  பொட்டலத்தைப்  பிரித்தார்.  உள்ளே  ஒரு  பாபாவின் பெரிய   படம்.  பாபாவின் கால்களுக்கு நமஸ்காரம் செய்து கண்ணில் ஒற்றிக்கொண்டார் ஹேமாத்.

''அலி எங்கே கிடைத்தது இந்த படம் உங்களுக்கு?''

''என் வீட்டில்  தான் இருந்தது.  ஒரு  துறவி  கொடுத்தது.  அப்புறம் விவரம் சொல்றேன், உள்ளே  போய் முதல்லே  சாப்பிடுங்க'
விசேஷ  விருந்தாளியாக   சந்யாசிக்காக போட்ட  இலை  முன்னால்  அந்த பாபா படத்தை வைத்துவிட்டு  ஹேமாத்  சாப்பிட உட்கார்ந்தார்.
அந்த நேரத்தில் ஷீர்டியில் என்ன நடந்தது தெரியுமா?
பாபா  அருகே  ஷாமா.
அவரிடம்  பாபா ''ஷாமா,  அப்பாடா  என்ன ருசியான விருந்து.  பம்பாயில்  ஹேமாத் வீட்டில்  வயிறு நிறைய சாப்பிட்டேன்'' என்கிறார்.
ஷாமாவுக்குப்  புரியவில்லை. அப்புறம் ஒருநாள்  ஹேமாத் ஷீர்டி வந்தபோது ஹோலிபண்டிகை  அன்று நடந்த விஷயத்தை  விவரித்தபோது தான் பாபா சொன்னதன் அர்த்தம் புரிந்து. அசந்து போனார்.

இந்த சம்பவம் நடந்து வெகு நாட்களுக்கு பிறகு  ஹேமாத்  அலி முஹம்மதை சந்தித்தார். அப்போது  ஆளுயர  சாய்பாபா படத்தை பற்றி சொன்னார்.  இதன்  பின்னால் ஒரு சரித்திரம் இருக்கிறது. சுருக்கமாக  சொல்கிறேன்.

சில நாட்கள்  முன்பு, அலியின் மைத்துனன் நோய்வாய் பட்டான்.       அலியிடம் எவனோ ஒரு மாந்த்ரீகன்  ''வீட்டிலுள்ள  சாமியார்கள் படங்களை கழட்டி சமுத்திரத்தில் எறிந்தால்  வியாதி குணமடையும்'' என்று சொல்லிவிட்டான்.  சும்மா இருப்பார்களா  அலியின் வீட்டில்?.  வீட்டில் இருந்த  அத்தனை  மஹான்கள்  படங்களும் காணாமல் போய்விட்டது ஆனால்  ஆச்சர்யமாக   ஸாயிபாபா  படம் மட்டுமே  சுவற்றில் தொங்கியது.  

அந்த  படம்  சில வருஷங்களுக்கு முன்பு  அப்துல் ரஹ்மான் என்கிற பாபா பக்தர் பக்கீர்,  அலி முஹம்மதுவுக்கு அளித்த   சாய்பாபா படம்.  அதை என்ன  செய்வது?  யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்த பொது  ஹேமாத்  ஞாபகம்  அலிக்கு வந்தது.   ஸாயிபா  முழு உருவத்துடன்  பார்சல்  கட்டப்பட்டு,   ஹேமாத்திடம் வந்தார்.  அதை  எதிரில் வைத்துக் கொண்டு தான்  மேலே  ரெண்டாவது  பாராவில்  சொன்னபடி  சாய் சத் சரிதம்   தபோல்கரால் எழுதப்பட்டது.

 கீதையில் கிருஷ்ணன் சொல்வது தான் நடக்கிறது. ' அநீதி, அக்கிரமம், 'தீயசக்திகள் பரவி தர்மம் நேர்மை ஆகியவை குறைந்து தவிக்கும்போது நானே வருவேன் அவற்றை   அழிப்பேன். தர்மம் நிலைநாட்டுவேன்'' என்பது தான் ஒருவகையில் ஷீர்டியில் பாபாவின் அவதாரமோ?   

ஷீர்டி ஹமத் நகர் ஜில்லாவில், கோதாவரியை கடந்து கோபர்காவ்ன் வழியாக நிம்காவ்ன் நோக்கி நடந்தால் தெரியும் கிராமம் என்று அக்காலத்தில் அடையாளம் சொல்வார்கள்.  இப்போது கார்,  பஸ், தனியார் துறை வாகனங்கள் பெருகிவிட்டன.  பம்பாயிலிருந்து  300 கிமீ. தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கிடக்கிறார்கள். வழியெல்லாம்  பல இடங்களில் நல்ல   சைவ  உணவகங்கள். 

Friday, April 29, 2022

PRANAVA MANTHRA OM

 

''ப்ரணவ மந்திரம்''   -   நங்கநல்லூர்   J K  SIVAN 

“தியானம் என்பது  மனதை   ஒரு நல்ல விஷயத்தால் நிரப்பும் வேலை.  எப்போது நிரப்ப முடியும்?  மனது காலியாக  இருந்தால் தானே நிரப்ப இடம் இருக்கும்?   

மனதை  எப்படி காலியாக்குவது?  
மனது முழுதும்  ஓயாமல்  ஒழியாமல்  பாய்ந்து வரும்  கடல் அலைகள்  போல் என்னென்னவோ  எண்ணங்கள்  மனதை  ஆக்கிரமிப்பதால் அது எப்போதும்  நிறைந்து தான் இருக்கிறது. மேலே மேலே எது வந்தாலும் அதற்கும்  நெருக்கி  பம்பாய் நகரம் போல்   இடம் கொடுக்கிறது.  அதனால்  தான்  என்னென்னவோ சம்பந்தமில்லாத எண்ணங்கள்  ஒன்று சேரும்போது அடிக்கடி,  சலனம் உண்டாகிறது.  

ஏதேனும் ஒரே ஒரு எண்ணத்தில் மனது நிறைந்தால்  அதில்  வேறு பாதிப்பு எதுவும் இல்லை.  அதில் இருக்கும் ஒரே விஷயம்  கூட  எல்லாமும்  ''தான்''  இல்லை  ''அவன், அது''  என்பதால்  மனது காலி தானே.  வேறு எதுவும் இல்லாதது காலி தானே.    

ஒரு வியாதியஸ்தனுக்கு  எப்போது  மருந்து கொடுத்தாலும்   ' மருந்தா,  வேண்டாம்''  என்பான்.
ஏன்  மருந்து வேண்டாம் ?
''மருந்து கூட   சாப்பிடமுடியாத படிக்கு  அவனுக்கு  உடம்புக்கு  ரொம்ப  முடியலே.  கொஞ்சம்  சரியானபிறகு  மருந்து சாப்பிட முடியும் போது,   சாப்பிடுகிறேன்'' என்பான்.

தியானம் செய்வதில் நாம் இப்படித்தான் இருக்கிறோம்.  ''தியானமா'' அதெல்லாம்  நம்மால் முடியா துப்பா. கொஞ்சம் மனசை  தயார் பண்ணிக்கொண்டு  அப்புறம் தியானத்தில்  ஈடுபடுகிறேன்''  என்கிறோம்.

 வாழ்க்கையில்   துன்பம், பெரிய கஷ்டம், கோபம், பயம், இதுமாதிரி ஏதாவது நம்மை  வாட்டும் போது,  ''இப்போ மனசு சரியில்லேப்பா, கொஞ்சம்  நார்மல் ஆகட்டும். தியானம் பழகறேன்'' என்று தள்ளிப்போடுகிறோம். 

தியானம்  நமது கஷ்டங்களை தீர்ப்பது என்று ஏனோ நமக்குத் தெரியவில்லை.  பகவத் தியானம், எண்ணங்களைச்  சீர்படுத்தும்,  அதை பாதிக்கும் விஷயங்களை  அப்புறப்படுத்தும் என்று ஏனோ நமக்கு புரிவதில்லை.  மன அமைதியை தருவது  தியானம் தான்.

இந்த பிரபஞ்சம் உருவான தே  தியானத்தின்  மந்திரம்   ''ஓம்''  என்பதால்  தான் என்று உணர்வ தில்லை.   வேறு எந்த மந்திரம் சொல்லும்போதும் , அதற்கு சக்தி அளிப்பது, ஆரம்பத்தில்  ஓம் என்று ஆரம்பிப்பதாலும்.   முடிக்கும் போதும்  ''ஓம்''   என்று  உச்சரிப்பதால் தான்.

ஒரு சிஷ்யனுக்கு  ஒரு யோகி  ஒரு மந்திரம்  கற்பித்தார்.  
''டேய்  சிஷ்யா, நான் சொல்லிக்கொடுக்கும் இந்த மந்திரத்தை ரஹஸ்யமாக வைத்துக்  கொள், இது எல்லோருக்கும் தெரியாது.  ஒரு சிலர் மட்டும் தான் அறிவார்கள்.நீயும் அவர்களில் ஒருத்தன்''

 ரொம்ப பெருமையோடு சிஷ்யன் வீட்டுக்கு  போனான்.   மறுநாள்  சந்தைக்கு போனான்.  அங்கே  அநேகர்  அவனுக்கு குரு முதல் நாள்   ரஹஸ்யமாக சொல்லிக் கொடுத்த மந்திரத்தை   உரக்க  சர்வ சாதாரணமாக சொல்லிக்  கொண்டிருப்பதை கேட்டான்.  கோபத்தோடு  யோகியிடம் போனான்.

''குருவே, என்ன இது,  என்னிடம் நேற்று  இது ரஹஸ்யம், வெகு சிலருக்கு தான் தெரியும் என்று சொன்ன மந்திரத்தை இன்று குளக்கரையில் அநேகர் குளிக்கும்போது கூட   இதைச் 
 சொல்லிக்
 கொண்டிருப்பதைக்  கேட்டேனே . அது எப்படி ரஹஸ்யமாகும்?''

குரு பதில் சொல்லவில்லை.  தனது ஜோல்னா பையில் கையை விட்டு பச்சையாக ஒரு கல்லை எடுத்தார்.
 ''அடே சிஷ்யா,  இதை ஊரில்  ஜனங்களிடம் காட்டு. இதை வாங்க   யார்  எவ்வளவு கொடுப்பார்கள்  என்று தெரிந்து கொண்டு வா?.  ஒருவருக்கும் நீ   இதை விற்கக்கூடாது.  நீ வந்தபிறகு  நான் அந்த மந்திரத்தை பற்றி உனக்கு   பதில் சொல்கிறேன்'' என்று அனுப்பினார்.

சீடன் ஒரு காய்கறி காரியிடம் பச்சைக் கல்லைக்  காட்டி ''எவ்வளவு கொடுப்பே  இதுக்கு'' என்று கேட்டான்.
''நாலு கத்திரிக்கா தரேன்.  இந்த கல்லு என் பேரனுக்கு விளையாட உதவும்''
அடுத்து சில கடைக்காரர்களை படையெடுத்தான். ஒவ்வொருவரும்  அதை பார்த்து விட்டு வெவ்வேறு தொகையை  தருவதாகச் சொன்னார்கள்.
ஒரு பணக்கார  நகை வியாபாரி  அதை திருப்பி திருப்பி பார்த்தான்.   '' தம்பி, இது நல்ல  இமிடேஷன் மரகத கல்லுப்பா,   இரு நூறு  ரூபாய் தாளும்.  தரேன்''   என்றான்.
ஒரு  பாங்க்  மேனேஜர்  அந்த கல்லை பரிசோதனை செய்து விட்டு ஐநூறு  ரூபாய்  பெறும் ''
என்றார்.
ஒரு  வைர நவரத்ன  கல் வியாபாரியிடம்  சீடன் கல்லைக் காட்டினான்.  ''அருமையான கல்லுங்க  இது. இது மாதிரி  இவ்வளவு வருஷத்திலே நான் பார்த்ததேயில்லை. நீங்க  என்ன விலை சொன்னாலும் தரலாம்.  இந்த ஊர் ராஜாவிடம் கூட  இவ்வளவு பெரிய  மரகதம்  வாங்க பணம் இருக்குதுங்க  ''   என்றான்.
சீடன் யோகியிடம் ஓடினான்.  அவர் அந்த பச்சைக் கல்லை வாங்கி ஜோல்னா பைக்குள் போட்டுக்கொண்டார்.

இப்போ சொல்லுங்க குரு,  ஊரில் எல்லோருக்கும் தெரிந்த மந்திரத்தை ஏன்  நீங்க என்கிட்டே  ரஹஸ்யம்னு சொன்னீங்க. காரணம் சொல்றேன் னு சொன்னீங்க சுவாமி.''

''அதற்கு விடை தான் நீயே தெரிந்து கொண்டு வந்துவிட்டாயேப்பா.  கல்லை அதற்கு தானே உன்னிடம் கொடுத்து அனுப்பினேன்''
''அது என்ன கல் என்ன  என்று  யாருக்காவது சரியாக தெரிந்ததா? அவரவர் ஏதோ ஒரு குத்து, குருட்டு,  மதிப்பு வைத்து   நாலு கத்திரிக்காயிலிருந்து  நாட்டின் முழு செல்வம் வரை உன்னிடம் தருவதாக சொன்னார்கள் இல்லையா? யாருக்கும் சரியான மதிப்பே தெரியலை இல்லையா?''
''ஆமாம்  குருவே''
''நான் சொல்லிக்கொடுத்த மந்திரமும் அப்படித்தான்.  அதை யாரெல்லாமோ  உதட்டளவில்  உச்சரித்து மதிப்பிடுகிறார்கள்.  அதன் உண்மை மதிப்பு  விடாமல் உச்சரித்து தியானிக்கிறவருக்கு தான் தெரியும்.   அதை வெளிப்படுத்த முடியாது. அவரவர் தன்னுடைய அனுபவத்தால் தான் அதை உணரமுடியும்.''
ஆஹா  என்று வியந்து போனான்  சிஷ்யன்.  ஓம்  என்ற மந்திரத்தின்  மஹிமை அதை உணர்ந்தவருக்கு தான் புரியும், தெரியும். பிரணவ மந்திரம் என்று அதற்கு பெயரல்லவா. இறைவனைக் கட்டிப்பிடித்திழுத்து நம்மோடு இணைப்பது.


இத்துடன் இணைத்திருப்பது   ஓம் பர்வதம் என்ற  பனிக்கட்டியால் ஸ்வயம்புவாகவே  அமைந்துள்ள  கைலாச சிகர  பர்வதம். பகவான் நிச்சயம் இருக்கிறார் ஸார் ...

Thursday, April 28, 2022

CHEMBUR MURUGAN

 திருசெம்பூர் முருகன்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


இந்த மாதம்  பம்பாய் சென்றபோது என்   பம்பாய் நண்பர்கள்  சிலரை  நான் நேரில் சந்திக்க நேர்ந்தது.   திட்டமிடப்படாத   திடீர் சந்திப்பு.  ஒவ்வொருத்தரும் எங்கெங்கோ வசிக்கிறார்கள்.  நான் இருக்குமிடம் அவர்களுக்கு அருகேயா வெகு தொலைவிலா  என்று  எனக்குத்  தெரியாதே. நானே  பம்பாய்க்கு அடிக்கடி முன்பு சென்றவன் என்றாலும் அங்கே வசிக்காதவன் ஆயிற்றே.  ஒரு நண்பர்  ஒரு யோசனை சொன்னார்.  எங்கள் வீடு  செம்பூர் அருகே சேதா நகரில்  இருக்கிறது. அங்கே வாருங்கள்.  அது பலருக்குத்  தெரிந்த இடம். அங்கே உங்களை எல்லோரும் சந்திக்கலாம், இன்னொரு விசேஷம் அங்கே சமீபத்தில் கும்பாபிஷேகமான  ஸ்ரீ செம்பூர் முருகன் ஆலயம் சென்று தரிசனம் செய்யலாம் என்றார்.   அவர் விலாசத்தை ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் அனுப்பினேன். அவர் வீட்டில் ஏராளமானவர்களை வரவேற்று அமர்விக்க  இடம் போதாதே.  பம்பாய் என்றால் முதலில் இடத்தை பற்றித்  தானே  சிந்திக்க வேண்டும். ஆகவே  என்னையும் என் மனைவியையும் சேர்த்து ஒரு பத்து பேர்  சேத்தா நகர் எனும் இடத்தில் ஸ்ரீ க்ரிஷ்ணமுர்த்தி இல்லத்தில் ஜமா பந்தி கூடினோம். 

 கோயம்பத்தூரில் த்யான பிரசித்தம் எனும் அற்புதமான முதியவர்கள் காலனியில் வசிக்கும், என் இனிய நண்பர், அடிக்கடி  எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும்,   மிலிட்டரி கார (மீசைக்கார) நண்பர் ஸ்ரீ வைத்யநாதன்  தனது  பெண் வீட்டில்  பம்பாயில் இருந்ததால்  காட்கோபரிலிருந்து செம்பூர்  வந்துவிட்டார்.  பெரியவா பக்தர் சுணாபட்டி  ஸ்ரீ N  கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ சிவராமன் தம்பதியர், அவர்கள் நண்பர்கள் சிலர்,   வந்திருந்தார்.  ஒரு  கிவாஜ  ரசிகர் சீடர்  அற்புதமாக தமிழ் சொல் விளையாட்டு வீரர் , சிலேடை கவிஞர்  ஸ்ரீ  கே. ஜி.எஸ். விஸ்வநாதன்  ஆகியோர்  வந்திருந்தார்கள். மொத்தத்தில்  வைத்யநாதனைத் தவிர மற்றவர்கள் அன்று தான் நேரில் என்னை சந்தித்தவர்கள்.  

அன்று ஸ்ரீ ராமநவமி. அதை சிறப்பாக  கொண்டாட  சில  பத்ராசலம் ராமதாஸ்,  சதாசிவ ப்ரம்மேந்த்ரரின்  ராமர் பாடல்கள், மற்றும்  சில  தமிழ் பாடல்கள்  பாடினேன். வந்திருந்தவர்கள் சிலர்  அற்புதமாக பாடினார்கள். நடு நடுவே  ராமாவதாரம் பற்றி பேசினேன். அது ஒரு கலந்துரையாடல். எல்லோருக்கும்  பானகம் நீர்மோர்,  கேசரி,  கிங்காங் வடை,  சுடச்சுட  இட்லி மிளகாய்ப் பொடி  டிக்ரீ   காப்பி எல்லாமே   விஜயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் நண்பர்கள்  உபயம். ரெண்டு மணி நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.  

ஸ்ரீ  ராமருக்கு ஹாரத்தி  பஜனை  ஸ்ரீ வைத்யநாதன் நிகழ்த்திய பிறகு  அருகே  செம்பூர்  சுப்ரமணிய சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்து முடிந்திருந்ததால் கூப்பிடு தூரத்தில் இருந்த அதற்கு  நடந்து சென்று சுப்ரமணிய தரிசனம் செய்துவிட்டு திரும்பினோம்.

சுப்பிரமணியர் ஆலயத்தைப் பற்றி  ஒரு  சிறிய குறிப்பு: 

குட்டி மெட்றாஸ்  என்று அழைக்கப்படும் மாதுங்காவில் ஒரு பகுதி சேத்தா நகர்.  அங்கே  சுப்ரமணிய சமாஜ் என்று சில  பம்பாய் வாழ்  தமிழ் பக்தர்கள் ஒன்று கூடி  ஆரம்பித்தார்கள்.  அது ஆரம்பானது  1940  களில்  விம்கோ  WIMCO  T  V லக்ஷ்மணன் என்ற பக்தரின்  மாதுங்கா  வீட்டில் அமர்ந்து  பேசியபோது  பிறந்தது  சுப்ரமணிய சமாஜம்.  சொந்த இடமில்லாதது ஒரு பிரச்சனையாக இல்லை.  சங்கரமடம் மற்றும்  சவுத் இந்தியன் பஜன் சமாஜ் நிறுவனம் தங்கள் இடத்தை உபயோகத்துக்கு  கொடுத்தது.அப்புறம் என்ன, ஸ்கந்தஷஷ்டி  பங்குனி உத்திரம், தைப்பூசம் விழாக்கள்,  உபன்யாசங்கள் பிரசங்கங்கள் எல்லாம் விமரிசையாக நடந்தது.

சமாஜத்தை சேர்ந்தவர்கள்  சேத்தா  நகரில் இடம் வாங்கினார்கள்.  ப்ரஸ்னம் பார்த்ததில்  இப்போதுள்ள சேத்தா நகர்  ஆலயம் ஒருகாலத்தில்  ரிஷிகள் முனிவர்கள் தவம் செய்த ஆரண்யமாக இருந்தது தெரிந்தது. ஆஹா இப்படி அல்லவோ சுப்பிரமணியன் கோவில் இடம் அமைய  வேண்டும் என்று மகிழ்ந்தார்கள்.  ஒரு  ஆலய நிர்மாண குழு அமைத்தார்கள்,.  அவர்கள் பெயர்கள் ஆலயத்தில் கல்வெட்டில் காண்கிறது. 

ஒரு பெயர் எனக்கு  பழைய நினைவைக் கிளப்பிவிட்டது.  ஸ்ரீ  ''S  வெங்கிடேஸ்வரன் ''  ....  ஆஹா இந்த அற்புத மனிதரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். என்னோடு அன்பாக நிறைய பேசி இருக்கிறாரே. சிறந்த கப்பல்  சம்பந்தப்பட்ட  வழக்குகளில்,   சட்ட நிபுணர், கப்பல்  உலகத்தில் பலரும் அறிந்த அசகாய சூரர் ஆயிற்றே.  நான் கப்பல் நிறுவனத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல்  பிழைத்தவன். அவரை பம்பாயில்  மேக்கர் பவனில்   MAKER BHAVAN கட்டிடத்திலும் சென்னையில் எங்கள்  கப்பல் நிறுவனத்திலும் அடிக்கடி பார்த்தவனாயிற்றே. அன்பும் பண்பும் நிறைந்த  வெங்கிடேஸ்வரனை  மறக்க முடியுமா?  அவர் பெயர் தாங்கிய  கல்வெட்டின் முன் நின்று ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தி ஆசி பெற்றேன். 

இப்போது நிர்வாக கமிட்டீயில் உள்ள  ஸ்ரீ சுப்ரமணியனையும் நேரில் சந்தித்தேன். அவர்  என் நண்பர், பிரபல வக்கீல் ஜே. ராதாகிருஷ்ணனின் நண்பர்.   ஸ்ரீ ராதாகிருஷ்ணன்  மேலே சொன்ன ஆரம்ப கால  ஆலய  கமிட்டீயில் இருந்தவர்.  இப்போது  84+ .     சென்னையில் ராயப்பேட்டையில்  இருக்கிறார். இனிய நண்பர். 

செம்பூர்  சேத்தா நகர்  சுப்ரமணியசுவாமி ஆலயம் ஆகம விதிகளுக்குட்பட்டு  நிர்மாணிக்கப் பட்டு அதன் வரைபடத்தை  மஹா பெரியவாளிடம் சமர்ப்பித்து அவர்  அறிவுரைப்படி  1972ல்  எழும்பிய ஆலயம்.  சமீபத்திய  கும்பாபிஷேகம்  6.4.2022 அன்று நிறைவு பெற்றது.  மஹான்கள்  கிருபானந்த வாரியார், சுவாமி சின்மயானந்தா  ஆகியோர்  விஜயம் செய்து உபன்யாசங்கள் நிகழ்த்திய ஆலயம்.

இந்த  ஆலயம் ஒரு பெரிய பங்களா மேல் மூன்றாவது மாடியில் கோபுரத்தோடு  காட்சி தருகிறமாதிரி உள்ளது. மேலே ஏற  லிப்ட் LIFT  பொருத்தி இருக்கிறார்கள். வயதானவர்கள் கஷ்டமின்றி ஏறி தரிசிக்கலாம்.  சுப்ரமணிய சுவாமி   நாலரை அடி  உயரத்தில் மாளிகைமலை மேல் ஜம்மென்று நிற்கிறார்.  மயிலத்தில் உருவான சிலை.  இந்த ஆலயத்திற்கென்று  மஹாபலிபுரத்திலிருந்து  சுமார்  800 டன்  கற்பாறைகள் பம்பாய்க்கு சென்றுள்ளது.  கும்பாபிஷேகங்கள்  1980, 1991,2000, 2011, அப்புறம்  2022ல் நடந்துள்ளது.

எப்போதோ நான் செய்த புண்யம் என்னையும்  இந்த  முறை பாம்பே சென்றபோது  அவர் முன்னே நின்று  ஆனந்தமாக கும்பாபிஷேக விசேஷ தரிசனம் செய்ய வைத்துள்ளது.

MANICKA VACHAKAR

 மாணிக்க வாசகர் - நங்கநல்லூர்  J K  SIVAN 



''அரிமர்த்தன  பாண்டியனின் அதிசய குதிரைகள்''

 நாம்  வாழ்க்கையில் நிறைய கஷ்டம் அனுபவிக்கிறோம் என்று அழுகிறோமே.. மகா பெரிய பக்தர்கள், கடவுளையே நேரில் காண்பவர்கள், கண்டவர்கள்,  பட்ட, அனுபவித்த துன்பங்களுக்கு முன்னால் நமது  கஷ்டங்கள் தூசிக்கு சமானம்.  சோதனை மேல் சோதனையாக  பக்தர்களை வாட்டுவது விஸ்வேஸ்வரனுக்கு பிடிக்கும்.  அப்படியும்  விடாமல் அவன் மேல் பக்தி கொண்ட
அவர்களுக்கு  தக்க சமயத்தில்  சுகவாழ்வு தருபவன் அவன்.  பக்தி எப்படி இருக்கவேண்டும் என்று உதாரண புருஷர்களாக  திகழ்ந்த  அப்படிப்பட்ட  பக்தர்களை நாம்   புராணங்களில், சரித்ரங்களில் உபன்யாசங்களில் புத்தகங்களில்  எல்லாம் அறிகிறோம்.

''பாண்டிய மன்னனிடம்  மாணிக்கவாசகர் அனுப்பிய  வீரர்கள் வந்து,  ''சீக்கிரமே  குதிரைகள் வந்து சேரும் நீங்கள் செல்லுங்கள் என்று எங்களை அனுப்பிவிட்டார்'' என்றுரைத்தார்கள்.  
பாண்டியன் காத்திருந்தான். காலம் ஓடியதே தவிர  மணிவாசகரோ, குதிரைகளோ வந்து சேரவில்லை. 

அரசன்  கட்டளைப்படி மணிவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தி பணம் என்னாயிற்று என்று துறுவினார்கள். தன்னலம் கருதாத ஞானிகளுக்கே அந்தக்  காலத்தில் இந்த கதி. இப்போதோ பல ஆயிரம்  கோடி ..மோசடிகளில், பட்டப்பகலில், ஈடுபட்டாலும், அவர்களுக்கு வசதியாக,  எந்த  களங்கமும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வெளிநாடு சென்று   எங்கோ சுகமாக ஆனந்த வாழ்க்கை. அதற்கு உறுதுணையாக சட்டம், உச்ச மேலிடத்து அதிகார உதவி .... உதவ பலர்...கருப்பு கோட்டுகள் காசுக்கு  அவர்களை  ஹரிச்சந்திரனாக்கி  விடுகிறதே! சே. உலகம் எப்படி மாறிவிட்டது! 

 சித்தத்தை சிவன் பால்  வைத்து மணிவாசகர் அமைதியாக வாய் திறவாமல் துன்பங்களை  ஏற்றார். அவர் மேல் விழுந்த  அடிகளை பெருந்துறை ஆத்மநாதன் வாங்கிக்  கொண்ட தால் மணிவாசகருக்கு எந்த வலியும் தெரியவில்லை. ஆகவே ராஜாவின் ஆட்கள் சித்திரவதையை அதிகமாக்கினார்கள். பாவம் ஆத்மநாதன்தான் அவ்வளவையும் வாங்கிக்  கொண்டான்.

ஆவணி மூலம் வந்தது.  சூரியன் உச்சிக்கு வந்தபோதும் வாசலில் குதிரை சப்தம் எங்கும் கேட்க வில்லை. சுற்றுவட்டாரத்தில் கூட 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தி  பாண்டியனை ருத்ரனாக்கியது.

'வாதவூரரே ,  இன்றைக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு  குதிரைகள் வராவிட்டால்  உமக்கு முடிவு நேரிடும் '--- ராஜா ஆணையிட்டான்.  அவரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிடுக்கியால் (iron clamps) இறுக்கினார்கள். மாணிக்கவாசகர் ''ஹர ஹர மகாதேவா! பெருந்துறை ஈஸா!''.   சிவனை மனதால் தஞ்சம் அடைந்தார்.

ஆத்மநாதன் சும்மாவா இருப்பான்.  ''சிவ  கணங்களா, நீங்கள் தான்  குதிரை வீரர்கள், இதோ இந்தப்  பக்கத்தில் உள்ள  காடுகளிலுள்ள நரிகளை உயர்ந்த ரக குதிரைகளாக ஏற்கனவே மாற்றியாகி விட்டது. அவற்றை மதுரைக்கு  இழுத்துச் செல்லுங்கள். சற்று நேரம் கழித்து நானே குதிரைப் படையின் காவலனாக, தலைவனாக வந்து பாண்டியனை சந்திக்கிறேன்.'' 

 குதிரை மேல் வந்த சிவனுக்கு  '' பரி மேல் அழகர் ''என்று ஒரு பெயர் இந்த கதையைப் பின்னணி யாக கொண்டது.

சூரியன்  மெதுவாக மேலை வானத்திற்கு நகர்ந்த சமயம்  குதிரைகள் கனைக்கும் பெருத்த சப்தம், கண்ணுக்கெட்டிய  தூரம் வேகமாக குதிரைகள் புழுதியை வாரி வீசி ஓடிவந்தன. பாண்டியனுக்கு செய்தி போனது.  ஒரே ஆச்சர்யம்.  ''அடாடா,  நிரபராதியான முதல்  அமைச்சரைத் தண்டித்தேனே'' என வருந்தினான்.

குதிரை அணி மதுரையில்  பாண்டியன்  அரண்மனையை நெருங்கியது. அணித்தலைவன்  ''பாண்டிய மன்னா, நீ விரும்பிய குதிரைகளை பார்வையிடு. குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உடல் உறுப்புச் சிறப்பைக்  கூறி,     'இவை உன்னுடையவை. கொடுத்த பணத்திற்கு அதிகமாகவே!''  என்று கூறி ஒப்படைத்தான். பெரு மதிப்பு பெற்ற பீதாம்பரம் ஒன்றை பாண்டியன் அவனுக்குப் பரிசாக அளித்தான்.    அந்த இளம் வீரனோ சிரித்துக்கொண்டே  பாண்டியன்  அளித்த விலை யுயர்ந்த பீதாம்பரத்தை கையிலிருந்த குச்சியால் வாங்கி  எடுத்து முதல் குதிரையின் மேல் போட்டு விட்டு விடைபெற்றான். ராஜா குதிரைகளை மற்ற குதிரைகளோடு சேர்த்து  கொட்டகையில்  அடைத்தான்.

அன்றிரவே   பாண்டிய ராஜாவுக்கு பயங்கரமான ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.புதிதாக வந்த அத்தனை குதிரைகளும்  ஏன் எப்படி காட்டு நரிகளாக மாறியது? அந்தக் கொட்டடியில் இருந்த மற்ற குதிரைகளையும் கடித்துவிட்டு காட்டை நோக்கி ஓடி விட்டனவே. இது என்ன மந்திர மாயம். எல்லாம் வாதவூரன் திட்டமிட்டு செய்தது.  அரிமர்த்தன பாண்டியன் மீண்டும் மிகவும் கோபம் கொள்ள மாட்டானா ? 

''கொடுத்த பொற்காசுகளை திரும்ப ராஜாங்கத்துக்கு கட்டும் வரையில் வாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிற்க வையுங்கள்.'' பாண்டியன் உறுமினான். 
 
வாதவூராருக்கு நடந்தது எதுவும் தெரியாது.  விஷயம் அறிந்தபோது  ''எல்லாம் பெருந்துறை ஈசன் செயலே!. அவனன்றி ஓரணுவும் அசையாதே!'' என்றிருந்தார்.

பாண்டியன் கட்டளைப்படி மணிவாசகரைக் கட்டி, வைகை சுடுமணலில் நிறுத்தினார்கள். மறுப்பு எதுவுமின்றி அவர் அங்கே நின்று பெருந்துறை பெம்மானே! அருளாளா! என்று மனநிறைவோடு பாடினார். சுடுமணல் நிரம்பியிருந்த வைகையில் எங்கிருந்து காலம் தப்பி கடுங்கோடையில் இவ்வளவு பெருவெள்ளம் திடீரென்று கடல் போல நிரம்பியது.. வெள்ளம்....  வெள்ளம்...கணத்திற்கு கணம் .. வெள்ளம்  அதிகரிக்கிறதே ......

தொடரும்

SANKALPAM

 ஸங்கல்பம்    -   நங்கநல்லூர்   J K  SIVAN 


வீட்டில்  ஏதோ ஒரு நல்ல  ஒரு  சுப கார்யம். வாத்யார்  ''ரெடியா''  என்று கேட்டுக்கொண்டே  ஓடி வருகிறார். ஒரு காதில் யாருடனோ  மொபைலில் பேசிக்கொண்டே  இருக்கிறார்.   வாசலில்  ஸ்கூட்டரோ, காரோ  நிற்கிறது. அவருக்கு  உதவியாக ஒரு பட்டாளமே வைத்திருக்கிறார்.  ஒவ்வொருத்தருக்கும் எங்கெங்கோ ஜோலி.  நல்லது   கெட்டது  எல்லாத்துக்கும் அவர் ஒருவரே.  மொபைலில் ஆபீஸ் நடத்துபவர்.  முன்பெல்லாம் இடுப்பில்   சில்லரைக் காசாக  முடிந்து கொள்பவர்,  இப்போது ஜீ பே  GPAY அக்கௌன்ட்  வைத்திருக்கிறார். கொடுக்கல் வாங்கல் எல்லாம் அதில்  தான்  . தவிர  பையில் ஒரு பர்ஸ் வேறு   ஒரு  ரூபா  ஐந்து  பத்து ரூபா  நாணயங்கள்  தேவைப்படும் என்பதால் நிறைய  வைத்திருக்கிறார்.  

சில சங்கல்ப  அஷ்டோத்ர, ஸஹஸ்ர நாம, ஸ்தோத்ர, கர்மா மந்த்ரங்கள் எல்லாமே  மொபைலில் வைத்து பார்த்தும் சொல்கிறார். அவ்வளவு பிஸி .  

காலத்திற்கு ஏற்றவாறு சம்பிரதாயங்கள் மாறிவந்தாலும்  நமக்கு ஸ்ரத்தை இருப்பதில் மாறுதல் இருக்கவே கூடாது.  இடது கை  வலது தொடை மேலே, வலது கை மூடிண்டு  சொல்லுங்கோ.....
தரையில் உட்காரமுடியாத அவரை விட உயரமாக  ஒரு ஸ்டூலில் அமர்ந்திருக்கிறேன்.

 ''மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்........''
  அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் க³தோபிவா| ய:ஸ்மரேத் புண்ட³ரீகாக்ஷம்ʼ
   ஸ: பா³ஹ்யாப்⁴யந்தர: ஶுசி:|| மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரீ ராம-ராம-ராம||திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த ….

“ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ வித்யாபலம் தைவபலம் ததேவ கௌரீபதே (லக்‌ஷ்மீபதே)தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி”

இப்படித்தான் பல காரியங்களுக்கும் சங்கல்பம் ஆரம்பிக்கிறது. இதன் பொருளை பார்ப்பது நல்லது. ஏன் என்பது பின்னால் விளங்கும். இதற்கு அர்த்தம்  யாருக்கும் தெரியாமலே  சொல்கிறோம், சொல்வதையும் சரியாக சொல்லாமல் பாதி விழுங்கி விட்டு  பாதி தப்பாக சொல்கிறோம், நடுவில் யாருடனோ பேச்சு வேறு.... 

''நான் செய்த எல்லா பாவங்களையும் அழிப்பதன் மூலம், பரமேஸ்வரனை திருப்தி படுத்துவதற்காக
புனிதமல்லாததோ புனிதமானதோ எந்த நிலையில் இருப்பவனானாலும், யார் தாமரைக் கண்ணனை மனதால் நினைக்கிறார்களோ அவருடைய உள்ளும் புறமும் சுத்தமானதாகிறது. மனது சொல் இவற்றால் செய்த செயல்களால் கிடைத்த பாபம் ஸ்ரீ ராமனை நினைப்பதால் நீக்கப்படுகிறது; சந்தேகம் வேண்டாம்.
விஷ்ணுவே திதி. அதுவே வாரம். நக்ஷத்ரமும் விஷ்ணுவே. யோகம் கரணம் ஆகியவையும் விஷ்ணுவே. உலகமெல்லாமே எல்லாமே விஷ்ணு மயமாகும்.
கௌரீ பதியாகிய சிவபிரானே (லக்ஷ்மியின் பதியான விஷ்ணுவே) உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன்.அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) லக்னம் நல்ல லக்னமே; நாள் நல்ல நாளே. நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவை நல்லன செய் வனவே.  கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
எல்லா கூறுகளையும் கவனிக்கப்போனால் நல்ல நேரம் என்பது தேவர்களுக்கும் அகப்படாதாம். அப்படியானால் மனிதர்களான நமக்கு மட்டும் எப்படி அகப்படும்? அதனால் சுலபமான வழி இறைவனை நினைப்பதே. அது ராமனோ, கௌரீபதியான சிவனோ லக்ஷ்மி பதியான விஷ்ணுவோ - அது நம் குல ஆசாரப்படி இருக்கட்டும். அப்படி இறைவனை நினைக்க அந்த லக்னமே நல்ல லக்னம் ஆகிவிடுகிறது. அந்த நாளே நல்ல நாள் ஆகிவிடுகிறது. அமாவாசை அன்று சந்திரனுக்கு பலமில்லை.இருந்தாலும் இறைவனை நினைக்க அது பலம் பொருந்தியது ஆகிவிடுகிறது.

''ஸார் , நான்  வாத்தியாரை கேட்டு   நல்ல நாள்தான் பார்த்தோம்; நல்ல முகூர்த்தம்தான் பார்த்தோம். இருந்தாலும் எடுத்த காரியம் இப்படி ஆகிவிட்டதே ''     என்று புலம்புகிறார்கள். 
என்ன பிரச்சினை? 

கர்மாவை செய்து வைப்பவர் சொல்லச்  சொல்ல திருப்பிச் சொன்னார்களே தவிர இந்த சங்கல்ப நேரத்தில் பகவானை நினைத்தார்களா?  ஏன் நினைக்கவில்லை?  யாரை  வேண்டிக்  கொண்டு காரியதஹே ஆரம்பிக்கிறோமோ, அந்த பகவானை பற்றிய  மந்திரத்தை  வாய் பாதியாகவும், தப்பிக்கவும் சொல்கிறதே தவிர, மனது துளியும் அவரை நினைக்கவில்லையே.  மனது பகவானை நினைக்காமல், அவரை மனம் தேடாமல்  அவர் வந்து தானாகவே  நம் எதிரே நின்று உதவுவார் என்று எதிர்பார்க்கக் கூட இல்லை.  அப்படியும் அவர் நமக்கு பாரபக்ஷமின்றி உதவத்தான் செயகிறார்.
அவசரப்பட்டுக்கொண்டு,  அதனால் இனிமேல் முகூர்த்தமே பார்க்க்க வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். முடிந்த வரை நல்ல முகூர்த்தமாக பார்த்துவிட்டு -ஆதர்ச முகூர்த்தம் கிடைப்பது அரிது என்பதாலும், தெரிந்த தெரியாத தோஷங்கள் இருக்கலாம் என்பதாலும் - பகவானை நினைத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.

சங்கல்பம்  என்றால்  என்ன தெரியுமா?  ஒரு திட சித்தம், உறுதி மொழி, நான் உன்னை வேண்டிக்கொண்டு இந்த காரியத்தை எடுத்துக்கொண்டு நடத்துகிறேன், அதை சரியாக செய்து  உனக்கு திருப்தியாக முடிப்பேன், அதுவும்   உன் ஆசியால் என்று பகவானை வேண்டிக்கொண்டு  துவங்கும் காரியம். எவ்வளவு அர்த்தம் பார்த்தீர்களா?

இனியேனும் சங்கல்ப நேரத்தில் இறைவனை நினைத்துக்கொண்டு சங்கல்பம் செய்வோம்.   இனியேனும்  மந்திரங்களை உச்சரிக்கும் போது  அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டாவது, படித்தாவது  தெரிந்து கொள்வோம். முடிவு நம் கையில் இல்லை, துவங்கி செயது முடிப்பது ஒன்றே நமது கடமை, கர்மா.  கர்ம  வினைப்பயன் தானே  விளையும்.



Wednesday, April 27, 2022

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

''ஏனய்யா  இப்படி படுத்து விட்டீர்? என்ன காரணம்?''- 2

மஹா பெரியவாளுக்கு பிடித்த  ஒரு  பாட்டு  அருணாசல  கவிராயரின்  ராமநாடக  கீர்த்தனையில் வரும்   மோஹன ராக  ''ஏன் பள்ளிக்கொண்டீர்  ஐயா?''  

அவரே சொல்கிறார் கேளுங்கள்:
''முன்னெல்லாம் இங்கே வருகிற ரொம்பப் பேர் பாடிக் காட்டின பாட்டுதான் அது. ஆனால் அப்படி  பேமஸ் FAMOUS ஆன பாட்டு கொஞ்ச வருஷமாகக் காதில் படவேயில்லை. எனக்குப் பாட வராது. இருந்த தொண்டையும் போய்விட்டது. பரவாயில்லை. இப்போது ஸாஹித்யந்தான் முக்யம்; ஸங்கீதம் இல்லை. அதனால் ‘டெக்ஸ்’டை மட்டும் சொல்கிறேன்.''  
உண்மையில்  மஹா பெரியவா  நல்ல இசைப் புலமையும் குரலும் கொண்டவர் .(இந்த பாடலை அலசும்போது  ஆங்காங்கே மனத்துக்குள்ளேயோ, மெல்லிசாக வாய் விட்டுமே கூடவோ அழகாகப் பாடினார்)
ரங்கம் என்று ஸபை கூட்டிவிட்டு அங்கே ஸ்வாமி படுத்துக் கொண்டிருப்பது விசித்ரமாயிருக்கிறது.அதையேதான் கவிராயர் ‘டாபிக்’காக எடுத்துக் கொண்டு, ‘படுத்துக் கொண்டதற்குக் காரணம் இதுவா, இல்லாவிட்டால்  அதுவா?’ என்று நிறையக் கேள்வி அடுக்கிக்கொண்டே போகிறார். அதிலே ஹாஸ்யம், பரிஹாஸம் எல்லாம் இருக்கும். ஆனாலும் வெடித்துக் கொண்டு வராமல், ‘ஹாஸ்ய வெடி’ என்கிற மாதிரி இல்லாமல், கொஞ்சம் ஸுக்ஷ்ம நயத்தோடே மறைமுகமாகவே இருக்கும்.
‘ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?’
என்று முதல் கேள்வி.
‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? ஸ்ரீரங்கநாதரே! நீர் –
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?’
அதுதான் பல்லவி.
அப்புறம் அநுபல்லவி. அதிலே நிந்தா ஸ்துதி எதுவுமில்லாமல் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பேர் சொல்லாமல் அழகான கவிதை பாஷையில் காவேரி வர்ணனையுடன், காவேரியின் பெயரையும் சொல்லாமல், பாடியிருக்கிறார். காவேரி இரண்டாகப் பிரிந்து ஓடுகிற இடமாகத்தானே ஸ்ரீரங்கம் இருக்கிறது? அதைச் சொல்கிறார்:
ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே – அவதரித்த
இரண்(டு) ஆற்றுநடுவிலே (ஏன் பள்ளி கொண்டீரையா ?)
‘ஆம்பல் பூத்தசைய பருவத மடுவிலே’ என்றால், ‘ஆம்பல் என்கிற அல்லி  புஷ்பம் பூத்து அசைந்து ஆடுகிற மலைச் சுனையில்’ என்று அர்த்தமில்லை. ‘பூத்தசைய’ என்பது ‘பூத்து அசைய’ என்று இரண்டு வார்த்தையாகப் பிரியாது. ‘பூத்த’ ஒரு வார்த்தை; ‘சைய’ ஒரு வார்த்தை என்றே பிரியும். ‘சையம்’ என்பது ‘ஸஹ்யம்’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் திரிபு – ‘மத்யம்’ என்பது ‘மையம்’ என்று தமிழில் ஆனமாதிரி ‘ஸஹ்யம்’ என்பது ‘சைய’ மாயிருக் கிறது. ஸஹ்ய பர்வதம், ஸஹ்யாத்ரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. அதிலுள்ள ஒரு சுனைதான் தலைக்காவேரி என்று காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது. கொடகு  தேசத்திலுள்ள அங்கே பிறந்து முன்னே மைஸுர் ராஜ்யமாயிருந்த கன்னட தேசம் வழியாகப் பாய்ந்து, சேலம் ஜில்லாவிலே தமிழ் தேசத்துக்குள் ப்ரவேசித்து, அப்புறம் திருச்சிராப்பள்ளிக்கு வருகிற காவேரி, அங்கே காவேரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிகிற இடத்திலேயே ஸ்ரீரங்கம் இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு காவேரி பாய்கிறாள்.

கல்யாணப் பெண் வரனுக்கு மாலை போடுகிறது வழக்கமென்றால் இங்கேயோ அப்படிக் காவேரி கல்யாணப் பெண்ணான  போது தானே ''மாலை''  யாகி  ''திருமாலை ''இரண்டு பக்கமுமாக அணைத்துக் கொண்டிருக்கிறாள்! அதனால் அந்த ஸ்ரீரங்கநாதனை லக்ஷ்மீநாராயணன், ஸீதாராமன் என்கிற மாதிரி அவள் பேர் சேர்த்து – அதுவும் முன்னாடியே சேர்த்து: ‘மிஸ்ஸிஸ்’ஸில் பத்னி பேருக்குப் பின்னாடி புருஷன் பேர் சேர்க்கிற மாதிரியில்லாமல் இங்கே மிஸ்டர் பேருக்கு முந்தி மிஸ்ஸிஸ் பேர் சேர்த்து – காவேரி ரங்கன் என்று சொல்வதாயிருக்கிறது.
உபய காவேரி என்று இரண்டாகப் பிரிந்து ஏற்பட்ட இட மத்தியிலே ஸ்வாமி பள்ளி கொண்டிருப்பதைத்தான் ‘இரண்டாற்றின் நடுவிலே’ என்று பாடியிருக்கிறார்.

காவேரி ஸஹ்யாத்ரியில் உற்பத்தியாவதை, அவள் புனிதமான திவ்ய தீர்த்தமானதால் உற்பத்தி என்று சொன்னால் போதாது என்று, அவதாரம் பண்ணினதாகவே ‘அவதரித்து’ என்று உசத்திச் சொல்லியிருக்கிறார்.
அவதாரம் என்ற வார்த்தையைப் போட்டாரோ இல்லையோ, அவருக்கு ரங்கநாதனின் அவதாரமான ராமசந்த்ர மூர்த்தியிடமே மனஸ் போய்விட்டது! ஸந்தர்பவசாத் அவர் ரங்கநாதனைப் பாடும்படி ஏற்பட்டாலும் அவருக்குப் பிடிமானம் என்னவோ ராமனிடம், ராம கதையிடம்தான்! அதனால், ‘பல்லவி – அநுபல்லவிகளில் க்ஷேத்ர மூர்த்தியைப் பிரஸ்தாவித்தாயிற்று; அது போதும்’ என்று சரணத்தில் இஷ்ட மூர்த்தியான ராமனுக்கே, பாலகாண்டம் தொடங்கி அவன் கதைக்கே, போய்ப் பாட ஆரம்பித்து விட்டார்!

வியங்கியமான (மறைமுகமான) நிந்தா ஸ்துதியும் இங்கேயிருந்துதான் ஆரம்பம். இஷ்டமானவர்களிடந்தானே ஸ்வாதீனம்?
கோசிகன் சொல் குறித்ததற்கோ?
கோசிகன் என்பது குசிக வம்சத்தில் பிறந்ததால் விச்வாமித்ரருக்கு ஏற்பட்ட பெயர். ராமர் அவதார காரியமாக தல் முதலில் பண்ணினது விச்வாமித்ரர் சொல்படி தாடகை மேலே பாணம் போட்டதுதான். ‘அப்படிப் பண்ணும்படி பெரிய மஹர்ஷி சொல்லி விட்டார். ஆனாலும் ஸ்த்ரீ ஹத்தி கூடவே கூடாது என்று சாஸ்த்ரமாச்சே!’ என்று ராமர் தயங்கத்தான் தயங்கினார். தர்ம விக்ரஹம் என்றே பெயர் வாங்கப் போகிறவரில்லையா, அதனால்! அந்தக் கோசிகரோ, “லோகத்துக்குப் பெரிய உத்பாதத்தை உண்டாக்குபவர் விஷயத்தில் ஸ்த்ரீ-புருஷ பேதமெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. போடு இவள் மேல் பாணம்!” என்றார். விநய விக்ரஹமுமான ஸ்வாமி மறுக்க முடியாமல் அப்படிப் பண்ணி விட்டார்.
அப்போது பண்ணினாரே தவிர அப்புறம் மனசு ஸமாதானமாகவில்லை. ‘தர்மத்தில் ‘இப்படியா, அப்படியா?’ – சொல்லமுடியாத ஒரு இரண்டும் கெட்டான் விஷயத்தில், தர்மஸங்கடம் என்பதில், எதுவோ ஒன்றைப் பண்ணிவிட்டோம். அதுதான் ஸரி என்று அடித்துச் சொல்ல முடியாது போலிருக்கே!’ என்று ரொம்பவும் வியாகுலப்பட்டார்.
தீராத வியாகுலம் என்றால் அதைத் தீர்க்கமுடியாவிட்டாலும் ஏதாவது தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிப் போய் மறக்கவாவது செய்வோம் என்று தோன்றும் – இல்லியா?
“அப்படி ஏதோ சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளி கொண்டு விட்டாயோ?” என்று கேட்கிறார். அதுதான் ‘கோசிகன் சொல் குறித்ததற்கோ?’
அந்தச் சொல்லை இவர் ‘குறித்தது’, அதாவது consider பண்ணியது, பண்ணி வியாகுலப்பட்டது பின்னாடி. அப்போது உடனே பாணம்தான் போட்டார். அது குறி தப்பாமல் ராக்ஷஸியின் குலையிலே தைத்து அவள் ப்ராணனை விட்டு விழுந்தாள். “அந்த மாதிரி வேகமாக பாண ப்ரயோகம் பண்ணின ஆயாஸத்தில் அசந்து (அயர்ந்து) போய்த்தான் படுத்துக் கொண்டாயோ?” என்று அடுத்த கேள்வி:
அரக்கி குலையில் அம்பு தெறித்தற்கோ?
வில் நாணைத் தட்டிப் பார்த்து அதன் பிகு தெரிந்து கொண்டு பாணம் போடுவதுதான் ‘தெறிப்பது’.
ராமர் அநாயஸமாக, மலர்ந்த புஷ்பமாக இருந்து கொண்டேதான் மஹாஸ்திரங்களையும் போட்டது. பக்தியின் ஸ்வதந்திரத்திலும், கவிக்கு உள்ள ஸ்வதந்திரத்திலும் அவரை வேறே மாதிரியாகச் சொல்லிக் கவிராயர் சீண்டுகிறார்! அதையும் அவர் ரஸிக்கத்தான் ரஸிப்பார் என்று தெரிந்தவராகையால்!
பள்ளி கொண்டதற்கு இது காரணமில்லையென்றால், வேறு ஒருகாரணம் என்ன வாக இருக்கும்?
ஈசன் வில்லை முறித்ததற்கோ?
என்று இன்னொரு ‘பாஸிபிள்’ காரணத்தை அடுத்த கேள்வியாகக் கேட்கிறார். ஸீதையை விவாஹம் செய்து கொள்ளப் பிரியப்படுபவன் தம்மிடமிருந்த ருத்ர தநுஸை நாண் பூட்டிக் காட்ட வேண்டும் என்று ஜனகர் நிபந்தனை போட்டிருந்தார். ராமருக்கு ஒன்றும் கல்யாண ஆசையில்லை; என்றாலும் விச்வாமித்ரர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அந்தப் பந்தயத்திற்குப் போனார். போனவர் ஒரு வேகம் பிறந்து, வெறுமனே நாண் பூட்டிக் காட்டாமல் அந்த தநுஸையே உடைத்து விட்டார்! ‘அத்தனை வேகம் காட்டினது தான் பிற்பாடு உன்னை tired ஆக்கித் தூக்கம் போட வைத்து விட்டதா?’ என்று கேட்கிறார்.
ஓஹோ,  அதுவும் காரணம் இல்லையோ?  அப்படியென்றால் 
பரசுராமன் உரம் பறித்ததற்கோ?
அப்புறம் பரசுராமர் – க்ஷத்ரிய வம்சத்தைப் பூண்டோடு அறுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டவர் – வந்தார். ராமரிடம், “நீ உடைத்த ருத்ர தநுஸ் ஏற்கெனவே மூளியானதுதான். அந்த ஓட்டை வில்லை முறித்தது ஒன்றும் பெரிசில்லை. இதோ என்னிடம் மூளி, கீளி ஆகாத விஷ்ணு தநுஸ் இருக்கிறது. இதை நாண் பூட்ட முடியுமா, பார்! பூட்டா விட்டால் உன்னை விடமாட்டேன்!” என்று ‘சாலஞ்ஜ்’ பண்ணினார். ராமருக்கு அதுவும் ஒரு பெரிய கார்யமாக இல்லை. பரசுராமர் கொடுத்த விஷ்ணு தநுஸையும் சிரமப்படாமலே நாண் பூட்டினார். அதோடு, பரசுராமரால் நடக்கிற க்ஷத்ரிய வம்ச நாசத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்று நினைத்து அவருடைய சக்தி முழுதையும் கவர்வதையே குறியாகக் கொண்டு பாணப் பிரயோகமும் பண்ணி விட்டார்! அந்த முன்னவதாரக்காரர் தம்முடைய பின்னவதாரக்காரரிடம் தம்முடைய சக்தி முழுதையும் இழந்துவிட்டுத் தம்முடைய ஸம்ஹார கார்யத்தை ஸமாப்தி பண்ணினார்.
அவருடைய சக்தியை ராமர் கவர்ந்ததுதான் ‘பரசுராமர் உரம் பறித்தது’ என்று பாட்டில் வருவது.
‘சக்தி போனால் ஓய்ந்து போய்ப் படுக்கலாம். ராமருக்கோ சக்தி கூடியல்லவா இருக்கிறது? பின்னே ஏன் படுத்துக்கணும்?’ என்றால்:
அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் அதை ஜீர்ணிப்பதிலேயே சோர்வு ஏற்பட்டுத் தூக்கம் தூக்கமாகத் தானே வருகிறது? ராமருக்கு ஏற்கனவே மஹாசக்தி. இப்போது இன்னொரு அவதாரத்தின் பெரிய சக்தியையும் சாப்பிட்டிருக்கிறார். ‘இப்படிச் சக்திச் சாப்பாட்டில் அமிதமாகப் போனதில்தான், சோர்வு உண்டாகித் தூங்கி விடலாம் என்று பள்ளி கொண்டீரா?’ என்றே கவிராயர் கேட்கிறார்.
இன்னும் ஒரு காரணம் – கேள்வி:
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ?
’குற்றம் குறையே இல்லாத சுத்தையான ஸீதையுடன் காட்டுக்கு நடந்து போனாயே! அதிலே ஏற்பட்ட களைப்பினால் இளைப்பாறுவதற்கே பள்ளிகொண்டாயா?’
‘இளைப்பு’ என்றால் ஒல்லியாய்ப் போவது மட்டுமில்லை. சோர்ந்து, ஓய்ந்து போவதும் இளைப்புத் தான். அதைப் போக்கிக் கொள்வதையே ‘இளைப்பாறுவது’ என்கிறோம்.
இதற்கு மேலே, வனவாஸ காலத்திலே நடந்தவை ஸம்பந்தமாகக் கேட்கிறார்.
தூசிலாத குஹன் ஓடத்திலே கங்கைத்  துறை கடந்த இளைப்போ?
‘வேடனாயிருந்தாலும் உடம்பிலேதான் தூசி, மனஸு தூசி படாத பரம நிர்மலம் என்று இருந்த குஹனின் ஓடத்தில் கங்கையைத் தாண்டிப் போனாயே! அப்போது ஜிலுஜிலு என்றுதான் இருந்ததென்றாலும் ரொம்ப நாழிப் பிரயாணம், ஒரே மாதிரியான துடுப்போசையை மட்டும் கேட்பது ஆகியவற்றில் ஏற்பட்ட ’bore’-ல்தான், monotony-ல்தான் தூங்கினாயா?
மீசரம் ஆம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?
’மீசரம்’ என்றால் உயர்ந்தது. ‘ரொம்ப உயரமான சித்ரகூட சிகரத்துக்கு ஏறிப் போய், அந்த சிரமத்தில் அங்கே அப்படியே கிடந்தாயே, அப்போது பிடித்த தூக்கம்தான் இன்னும் விடவில்லையா?’
காசினி மேல் மாரீசன் ஓடிய கதி தொடர்ந்த இளைப்போ?
’காசினி’ என்றால் பூமிதான். இங்கே கரடும் முரடுமான காட்டு நிலம் என்று அர்த்தம் பண்ணிக்கணும். அப்படிப்பட்ட காட்டு வழியிலே மாரீச மான், மானுக்கே உரிய வேகத்தோடு ஓடினபோது அதற்கு ஈடுகொடுத்துத் தொடர்ந்து போனாயே! அந்தச் சோர்வுதான் படுக்கையில் தள்ளிற்றா?’
அதற்கப்புறம் சின்னச் சின்னதாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகிறார்! 
பாட்டு வேக வேகமாக ஓடுகிறது!
‘மாரீச மானைத் தொடர்ந்து போனது, முதலில் ஓட்டமும் நடையுமாக, அப்புறம் அந்த ‘நடை’ கூடக் கூடாதென்று ஒரே ஓட்டமாக ஓடினாய்! அதிலே ஏற்பட்ட களைப்பில்தான் தூக்கமா?’ என்று இத்தனை ஸமாசாரத்தை, ஓடிக்
களைத்தோ?  என்று சின்ன வாசகமாக்கிக் கேட்கிறார். அடுத்த  கேள்விக்கணை,,,
தேவியைத் தேடி இளைத்தோ?
’அப்படி இங்கே நீ மாரீசன் பின்னே ஓட, அங்கே உன் பர்ணசாலைக்கு ராவணன் வந்து ஸீதா தேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டானே! நீ அவளைத் தேடு தேடு என்று தேடி அலைந்தாயே! அந்த அசர்வா (அயர்வா)?’
''மரங்கள் ஏழும் தொளைத்தோ?''
’அதற்கப்புறம் ஸுக்ரீவனுடன் ஸக்யம் பண்ணிக் கொண்டு (நட்புப் பூண்டு) அவனுக்கு சத்ருவான அண்ணன் வாலியை வதம் செய்வதாக வாக்குக் கொடுத்தாய். அந்த மஹா பலிஷ்டனை ஜயிப்பதற்கான பலம் உனக்கு இருக்குமா என்று ஸுக்ரீவன் ஸந்தேஹப் பட்ட போது அதை (நி)ரூபித்துக் காட்டுவதற்காக, பர்மா teak (தேக்குமரம்) மாதிரி பெரிய சுற்றளவுடன் வரிசையாக நின்ற ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு போகும்படி பாணத்தைப் போட்டுக் காட்டினாய்! அத்தனை விசையோடு நாணை வலித்தது, உனக்கே ரொம்பவும் வலித்துத்தான் படுக்கை போட்டு விட்டாயா?’  இதுவும் இல்லையென்றால், ஒருவேளை....
''கடலைக் கட்டி வளைத்தோ?''
”லங்கைக்குப் போவதற்காக ஸமுத்ரத்துக்கே அணை கட்டுகிற பெரிய கார்யம் பண்ணினாயே! யஜமானனாக உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடாமல் உன்னுடைய உத்தம் குணத்தினால் நீயும் வானரப் படையோடு சேர்ந்து கல்லு, மண்ணு தூக்கி அந்தக் கார்யத்தில் ஈடுபட்டாயே! அதில் ஏற்பட்ட சோர்வுதான் காரணமா?”
அப்புறம் பெரிய வாசகமாகவே இரண்டு கேள்வி கேட்டு – ஏகப்பட்ட கேள்விதான் கேட்டாச்சே! – அதோடு முடித்து விடுகிறார்.
''இலங்கை எனும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?''   என்ன  இதுவும் இல்லையென்றால்....
''ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?''
லங்கைக்குப் போனபின் ஊருக்கு வெளியிலே வானர ஸேனை ராக்ஷஸ ஸேனையோடு போர்க்களத்தில் யுத்தம் செய்ததோடு நிற்காமல், ஊரெல்லைக்குள்ளே போய் அதன் கோட்டை கொத்தளம் முதலானவற்றை இடித்துத் தூள் பண்ணின. அப்போது பதிநாலு வருஷ வனவாஸத்திற்கு ஒப்பி வாக்குக் கொடுத்திருந்த ஸ்வாமி தர்ம விக்ரஹமான படியால் தாம் நகரப் பிரவேசம் பண்ணப்படாது என்று ரணகளத்தில் பாசறையிலேயே இருந்தார். அப்போது மட்டுமில்லை. இதற்கு முந்தி அவரே வாலிவதம் பண்ணி, ஸுக்ரீவன் கிஷ்கிந்தா ராஜ்யத்திற்கு ராஜாவாகும்படிப் பண்ணியிருந்த போதிலும், தாம் அந்த ஊருக்குள் போய் அவனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்காமல் காட்டிலேயே தான் இருந்தார்; லக்ஷ்மணரைத் தான் பட்டாபிஷேகம் பண்ண அனுப்பி வைத்தார். பிற்பாடு அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணியதாலேயே விபீஷணன் லங்கா ஸாம்ராஜ்யாதிபதியாகப் பட்டாபிஷேகம் பெற்றுக் கொண்ட போதும் அதையே தான் செய்தார். அப்படித் தம்மைத் தாமே, தர்மத்தை அலசிப் பார்த்து அவர் கட்டுப் படுத்திக் கொண்ட உசத்தியால்தான் இன்றைக்கும் அவரை லோகம் தர்மமூர்த்தி என்று கொண்டாடுகிறது….

லங்கையை வானரங்கள் இடித்தபோது அவருக்கு இரண்டு தினுஸில் வருத்தம். தாமும் அவர்களோடு உடலை வருத்தி ஸஹாயம் பண்ண முடியாமல் தர்மம் கட்டுப் படுத்துகிறதே என்பதில் அவருடைய மனசு வருத்தப் பட்டது ஒன்று. ரொம்ப அழகாகவும், பெரிசாகவும் மயன் நிர்மாணம் பண்ணிக் கொடுத்திருந்த லங்காநகரத்தையும், அந்த நகரவாஸிகள் பண்ணின தப்புக்களுக்காக யுத்தத்தின் அவசியத் தேவையை முன்னிட்டு, இடிக்கும்படி இருக்கிறதே என்ற வருத்தம் இன்னொன்று. “அதை மறக்க ‘ஸ்லீப்பிங் டோஸ்’ போட்டுக் கொண்டாயா?” என்று பழைய கேள்வியை மறுபடியும் அதே மாதிரி மறைமுகமாகப் போடுகிறார்.

அதோடு, ராமர் சரமாரியாக பாணம் போட்ட மாதிரியே தாமும் அவர் மேல் கேள்விக் கணை மாரி போட்டாயிற்று என்று கவிராயர் ‘ஃபீல்’ பண்ணினார். கடைசியாக ஒரே ஒரு கேள்வி ராம குண மேன்மையைத் தெரிவிப்பதாகக் கேட்டு முடித்து விட்டார்:
ராவணாதியரைத் தொலைத்த வருத்தமோ?
முதலில் ராவணாதிகள் பண்ணின அக்ரமத்திற்காக அழகான லங்கா பட்டணத்தை த்வம்ஸம் செய்வானேன் என்று ராமர் வருத்தப்பட்டார். அப்புறம் அவர்களையெல்லாம் ஹதாஹதம் செய்து, வீரராகவன் என்றே எல்லாரும் புகழும்படி நின்றபோதோ அவருக்கு உள்ளூர, “இந்த அக்ரமக்காரர்களைக் கூட ஏன் வதம் பண்ணியிருக்க வேண்டும்? அவர்களிலும், ராவணன் உள்பட, மஹா பலம், வீரம், யுத்த சதுரம், அஞ்சா நெஞ்சம், விட்டே கொடுக்காத உறுதி, நல்ல வேத பாண்டித்யம், ஸங்கீதத்திலே அபாரத் தேர்ச்சி – என்றிப்படி சிறப்புக்களைப் பெற்றிருந்தவர்கள் இருந்தார்களே! அவர்களுடைய மனசு திருந்தும்படிச் செய்ய முடியாமல் வதம் அல்லவா பண்ணும்படியாயிற்று?” என்று வருத்தம் ஏற்பட்டது.
பரம சத்ருவிடம் இப்படிப்பட்ட கருணையுள்ளம் படைத்த உச்சாணியில் ராமரைக் காட்டியதே அவருடைய பட்டாபிஷேகத்தைப் பாடின மாதிரி என்று அதோடு கவிராயர் முடித்து விட்டார்.



faith

 


ஆன்மீக வாழ்க்கை ஆனந்த வாழ்க்கை 
நங்கநல்லூர்  J K  SIVAN 
 
கடவுளோடு   எந்த விதத்திலாவது சம்பந்தத்தோடு  நடத்தும் வாழ்க்கை தான் நமது லக்ஷ்ய, சுதந்திர வாழ்க்கை. இது ஒருவரின் தனி சுதந்திரம்.  இதில் பிறரின் விருப்பு வெறுப்புக்கு இடமே இல்லை.

எந்த நல்ல எண்ணமும்,செயலும், வார்த்தையும் நன்மையைத்  தான் பயக்கும். வாழ்வில் அமைதி இருந்தால், அது நம்மோடு மட்டுமின்றி சுற்றிலும் மற்றோருக்கும் பரவும்.  எப்படி  கொரோனா தீங்கு விளைக்கிறதோ  அதைவிட வேகமாக  நல்ல எண்ணங்கள், செய்கைகள் பிறரைத் தன்வயப்  படுத்தி, நன்மை பயக்கும்.  உதாரண புருஷன்  என்று  இப்படி நடப்பவர்களை உலகம் சொல்லும். 

உலக வாழ்க்கை என்பது  இயற்கையோடு, உலகில் மற்றவர்களோடு  நாம்   செயல்படும், உறவாடும் ஒரு செயற்கை நாடகம். நிறைய பேர்  நடிக்கும்  சுவாரஸ்யமான  டிராமா.  பிடித்தது, பிடிக்காதது, விருப்பு வெறுப்பு, காதல், கீதல், கோபம்,  கீபம்,   சுகம்  துக்கம் எல்லாம் கலந்தது.   புதிது புதிதாக  காட்சிகள் ஒவ்வொரு காட்சியிலும் மாறி மாறி  வரும்.

 இதற்கு முக்கிய காரணம் ஒருவருடைய விருப்பு வெறுப்பும் அடுத்தவருடையதிலிருந்து வேறுபடுவது தான்.   ஒருவரின் விருப்பம், வெறுப்பு, எப்போதும், எல்லோருக்கும்,  பிடிக்கும், பிடிக்கவேண்டும் என்று ஒரு நிமிஷம் கூட எதிர்பார்த்து  நாம் வாழ  முடியாதல்லவா?. சகிப்பு தன்மை, பொறுமை, வாழ்க்கையில் அதனால்  ரொம்ப அத்யாவஸ்யம்.

நமக்கு ஒரு பொற்காலம் ஏற்படுத்திக்   கொள்ள நாம் செய்யவேண்டியது ஒவ்வொருவரிடத்திலும் உள்ள நல்ல குணம், நல்ல செய்கை, நல்ல வார்த்தையை மட்டுமே மதிப்பது.   மற்றதை அறவே புறக்கணிக்க வேண்டும். அன்னம்  பாலை மட்டும் குடித்து விட்டு நீரை அப்படியே பாத்திரத்தில் விட்டு விடுவது போல.   
இதால் எல்லோரிட மும் அன்பு வளரும். அன்பு நிறைந்த இடத்தில் அணு சக்தியின்  அழிவு எதற்கு தேவை?. அதற்கென்ற அவசியம் காணாமல் போய்விடும். பகவான் மீது அன்பை செலுத்துவோம் . சக மனிதரை நேசிப்போம்..
 ''அவனுக்கு  குழந்தை மனசுடா. கள்ளம் கபடு கிடையாது, எளிமையானவன்''.  இது தான் அன்பு வழி.

உடல் வளர்ச்சி போல் மன வளர்ச்சி, உள்ள வளர்ச்சியும் தேவை. ஒன்றாம் வகுப்பிலிருந்து நேரே அடுத்த ஜூன் மாதம் காலேஜில் போய்  உட்கார  முடியுமா. அதே போல் உள்ள அமைதி, பொறுமை, சகிப்பு தன்மை, எல்லாமே  கொஞ்சம் கொஞ்சமாக தான் விருத்தி அடையும். விடாது முயற்சி செய்ய வேண்டும். முக்யமாக பொறுமை வேண்டும். ஒரே நாள் ராத்திரியில் அடையும் சமாசாரம் அல்ல இது.  காலேஜில் அமெரிக்கா போய் படிப்பதால்  கிடைக்காதது.

ஒரு மந்திரம் தெரிந்து கொள்வோம். நம்மை அது தக்க சமயத்தில் காக்கும். ''யாரையும் தூக்கி எறிந்து நிந்தித்து, மனம் வருந்தும் படி, பேச  வேண்டாம். அப்போது தான் நம்மை யாரும் நிந்திக்க மாட்டார்கள்.''

வாழ்க்கையில் ''அடி'' படாததால் '' ( அனுபவ முதிர்ச்சி இல்லாததால்) கஷ்டங்களை அநேகர் எதிர்கொள்ளவேண்டி அமைகிறது. குழந்தைகள் எப்படி பெரியவர்கள் ஆகிறார்களோ அப்படித்தான் வாழ்வில் அனுபவம் (maturity ) ஏற்ப டும். நாம் நம்மை ஆள எவ்வளவு தலைவர்களை நம்பி பதவியில் அமர்த்துகிறோம். அப்பறம் தானே    ''அனுபவித்து '' உணர்கிறோம். இதையே வாழ்க்கையில் ''பாடம் '' என்று கற்றுக்  கொள்கிறோம்.

நம்மை விட ஏதோ ஒரு மேலான சக்தி நிச்சயம் உள்ளது. சந்தேகமே வேண்டாம். அது நம்முள் குடிகொண்டு நம்மை ஆட்டுவிக்கிறது மட்டும் அல்ல, எங்கும் எதிலும் பரவி அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் நிறைந்திருக்கிரது என்கிற எண்ணம் விடாமல் இருக்க வேண்டும். கடவுள் என்று அதை எந்த பிடித்த பெயராலும் அழைப்போம். அன்பை எல்லோரிடத்திலும் செலுத்தி முழுமையாக இதை  உணர முடியும். உள்ளத்தின் அமைதியில் அவனைக் காணலாம். ஒரு தனி ஆனந்தம் உள்ளே உருவாவதை அனுபவிக்க முடியும்.    நல்லதை, நன்மைகளை எதிர்பாராமல்  செய்பவன்,  அமோகமாக பிரதிபலன் பெறுவான்.  தனக்கு நல்லது என்று தெரிந்ததை, அறிந்ததை, செயல்படுத்தி மற்றோருக்கும் உதவுபவன் ஸ்ரேஷ்டன்.

''பகவானே உன் செயல் '' என்று எதையும் தன்னாலியன்றவரை சிறப்பாக செய்பவன் நல்ல பலனையே பெறுவான்.
எல்லோரும் நல்லவரே, எல்லோரும் என்னவரே என்று எவன் அன்போடு பழகுகிறானோ அவன் பலமடங்கு அன்பை பெறுபவன்.

நமக்கு வரும் கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாமுமே நாம் நம்மை செலுத்தும் அந்த பரம சக்தி காட்டும் வழியை புறக்கணிப்பதால் தான்.

மனதில் எப்போது அமைதி தோன்றுகிறதோ, ஆன்மீக வளர்ச்சியில் நீ தொடர்கிறாய் என்று அறியலாம். காரணம் என்னவென்றால் நாம் நம்முள் நம்மை செலுத்தும் அந்த அதீத சக்தியை உணர ஆரம்பித்து விட்டதால் தான். .

பிறரிடம் மாற்றத்தை எதற்கு எதிர் பார்க்க வேண்டும்? முதலில் நாம் மாறினாலே அவர்களிடம் மாற்றம் தானாக தெரியும்.   உலகம்  மற்றவர்கள் கண்ணாடி மாதிரி, நம்மையே  பிரதிபலிப்பவை.  நமது பிம்பம் தான் அது.

கடவுள் மீது நம்பிக்கையும், பக்தியும் உள்ளவனுக்கு எதிலும் பயம் தோன்றாது. அவன் தான் எதையும் எவரையும் அன்பினால் சொந்தம் கொள்கிறானே. பயம் எங்கிருந்து வரும்?

நமக்கு கஷ்டங்களும் துன்பங்களும் வருவது கூட ஒரு விதத்தில் அந்த நேரங்களில் நம்மை அவனை நினைக்கச் செய்வதால் நன்மையே என்று கூட தோன்றுகிறது. கஷ்டம் வந்தால் தான் நாம்  பயந்து, கடவுளை நாடுகிறோம். யாமிருக்க பயமேன் என்று  ஆதரவளிக்கும்,  ஷீர்டி பாபா, மஹா பெரியவா,  போன்ற மகான்களை 
வணங்கு
கிறோம். கம்சன்  சதா கிருஷ்ணனையே இரவு பகலாக பல வருஷங்கள்  தூக்கமின்றி நினைக்க காரணம், க்ரிஷ்ணனால் அவனுக்கு மரணம் வரும் என்ற பயத்தில்.  குந்தி தேவி  கிருஷ்ணா,  எனக்கு  கஷ்டங்கள் நிறைய கொடு அப்போது தான் உன்னையே  நினைத்து தேடுவேன், நீ வருவாய்  துயர் தீர்ப்பாய்  என்று  வேண்டியவள் .

உடலில் தோன்றும் உபாதைகள் அது அழிவுள்ளது என்று நினைவூட்டுவதற்காகவே தான்.  பழைய சட்டையை தூக்கிப் போட நேரம் நெருங்கி வருகிறது. புதியது நமக்கு எங்கோ தயாராகி  வருகிறது என்று உணர்த்தவே.

மற்றவரின் செய்கைகள் தவறு, சரி என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை.   அவர்கள் தாமாகவே தம்மை ஆராய்ந்து கொள்ள  சரியான பாதையில்  செல்ல நீ உதவினால் இறைவன் உனக்கிட்ட பணியை கொஞ்சமாவது செய்து வருகிறாய் என்று அர்த்தம்.

ஒரு விஷயம் கவனப்படுத்துகிறேன். மனம் எப்போது இறைவனின் தொடர்பில் ஈடுபட்டுவிட்டதோ, அந்தக் கணம் முதல் நீ தனியாக இல்லை. அவனது அழகிய ''நெட் வொர்க்'' திட்டங்கள், நேர்த்தியான செயல்கள் உனக்கு பலன ளிக்க தொடங்கிவிட்டது என புரியும். எப்போது மனதில் அமைதி குடி புகுந்ததோ, அப்போது உனக்கு வெளியே இருந்து ஒரு புத்துணர்ச்சி வந்து சேரும். களைப்பு,  அலுப்பு என்பதே காணாமல் போகும்.

எப்போது நீ அவனை நினைக்க ஆரம்பித்து  விட்டாயோ, நீ வெளிச்சம் தேடி வேறு விளக்கொளி நாட தேவையே இல்லை. நீ தான் சூரியனை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாயே,  வேறொரு விளக்கொளி வெளிச்சம் அவசியமில்லை.

உண்ணும் உணவு உடலை நன்றாக செயல் பட தேவையானதாக மட்டும் இருக்கட்டுமே. அது தான் ஆரோக்கியம். வாழ்வதற்கு தான் உணவே தவிர உண்பது தான் வாழ்க்கை அல்ல. இன்னும் வேண்டும் என்ற எண்ணம் வரும்போது உண்பதை நிறுத்திக்கொள்ள பழகினால் டாக்டர் வீடு அட்ரஸ் தெரியாமல் போகும். வாழ்க்கை இதால் முழுமை பெரும்.

நமது நல்ல எண்ணங்களும் நற்செய்கைகளும் நமக்கு மட்டுமல்ல பிறர்க்கும் உதவுகிறது என்பதை விட முதலில் நாம் உள்ளும் புறமும் தூய்மையடைகிறோம் என்று  அறியவேண்டும்.  அப்படி இருந்தால், அவன் தானே நம்முள் வந்து அமர்வானே. குப்பையிலா ஒருவன் வசிப்பான்? ஒரு இனிய சங்கீதம் மனதை வருடவில்லையா?. அது போல் இதயம் இதால் குளிரும்.    உள்ளே நின்று அவன் வழி காட்டும்போது  தப்பான பாதையில் எப்படி போகமுடியும்?. கல் முள் எதுவும் இல்லாத சீரான பாதை அல்லவா அது.?   பயணம் - ஒரு சுற்று பயணம் ஆகிறது - சுற்றி சுற்றி அவனையே அல்லவா சேர்கிறோம்.

கடவுள் ஏதோ ரொம்ப படித்த, யாகம் செய்த, தானம் செய்த, தனவந்தனுக்கு, ஆயிரம் கோவில் குளங்கள் சென்றவனுக்கு மட்டும்  தான்  அருள் புரிவார்  என்பது ராங் அட்ரஸ். ஒரு கணம் மட்டுமே போதும்.   சுத்தமாக கலப்படமில்லாத மனத்தால் அவனை நினைத்தால் அவனை  எவராலும்  உணரமுடியும். 
அவனை அடைந்து விட்டோம் என்று எப்படி  அறிவது.? அன்பு உன்னிடமிருந்து எதனிடமும் எவரிடமும் பெருகி விட்டதல்லவா? அதே.    

கடவுள் நமக்காக காத்திருக்கிறான். நாம் தான் எதிர் திசையில் போய்க் கொண்டிருக்கிறோம். அவன் உள்ளே இருக்கும் போது, நம் இதயத்தை பூரணமாக ஆக்ரமித்தபோது, '' நான், எனது ''    எப்படி தோன்றும்? . வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு   '' இது எனது என்று  சொல்லலாமா,? ''நான்'' அங்கு வசிக்கமுடியுமா'' ?

ஒரு காற்றின் சுகத்தில், நீரின் தெளிவில், பூவின் மணத்தில், பறவையின் குரலில், நிலவின் ஒளியில், உலகத்தின் இயக்கத்தில், விடியல் அமைதியில், நிசப்தத்தில், எதில் வேணுமானாலும் கிருஷ்ணனை  உணர முடியுமே. கும்பலாக சப்தம் இட்டுக்கொண்டு, ஸ்பெஷல் டிக்கெட் தேவையில்லை. கண்ணை முடி உள்ளே நோக்கினால் ''நான் இங்கே தான் இருக்கிறேன்'' என்று குரல் கொடுக்கிறானே. ஆரவாரத்தில் அமைதியை தேடலாமா?

Tuesday, April 26, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN


''ஏனய்யா  இப்படி படுத்து விட்டீர்? என்ன காரணம்?''

GOOGLE   கூகிள்  என்பது ஒரு மஹா விஷய சாகரம் ,  அதில் ஆழமாக மூழ்காமல்  கணுக்கால் அளவிலேயே ஏராளமான அசாத்திய சமாசாரங்கள் அகப்படுகிறதே,  அப்படியானால்  ஆழமாக மூழ்குபவருக்கு கிடைக்கும்  செல்வத்துக்கு கணக்கே இல்லை.  அதில் ஒண்ணே ஒண்ணை  மட்டும் தான் இன்று பதிவிடுகிறேன்.  

எங்கள் தாய் வழி முன்னோர்கள்  ராம பக்தர்கள். அருணாசல கவிராயரின்  ராமநாடக கீர்த்தனைகளை   இதர புராணங்களோடு  சேர்த்து  சங்கீத உபன்யாசம்  காலக்ஷேபம் செய்து  புரவலர்களால்  ஆதரிக்கப்பட்டு பெரும் புகழ் எட்டி ஜீவித்த  குடும்பங்கள்.  பாரதி என்ற பெயர் கொண்டவர்கள். அவர்களில் கடைசியாக   எனது தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதியார் கண் பார்வை குறைந்தவராக இருந்தும் எண்ணற்ற  பக்தி பிரசங்கங்கள் புரிந்தவர், கம்ப ராமாயணத்திலும் மற்ற இலக்கியங்களிலும் கரை கண்டவர்.  மஹா பெரியவா அவரது  பிரசங்கங்களைக்  கேட்டு  மடத்துக்கு அழைத்து  நேரில் பிரசங்கம் செய்ய வைத்து  ''புராண சாகரம்'' என்ற விருது அளித்து கௌரவித்தார். அந்த அற்புத விருதின்  வாசகம்:

''ஸ்ரீமத் சத்வ குண  ஸம்பன்னரான  புதுக்கோட்டை நகர் நிவாஸியான  வஸிஷ்ட  பாரதி அவர்களுக்கு  ஸர்வாபீஷ்டங்களும்  ஸித்திக்குமாறு   நாராயணஸ்ம்ருதி:

 ''முத்து பவழம் முதலியன கடலை நாடி இருப்பது போல் புராணங்களும் அவற்றின் கருத்துக்களும் தங்களிடம் நிறைந்திருப்பதை அறிந்து மிகவும் சந்தோஷித்து  நாம்  தங்களை ''புராண ஸாகரம்'' விருதை அளித்து அனுகிரஹிக்கிறோம்'' ---   நாராயணஸ்ம்ருதி''

இது நிற்க, மஹா பெரியவாளுடைய சங்கீத ஞானம்  எல்லோரும் அறிந்தது  தான். அவர் வீணை வாசிக்கவும் அறிந்தவர்.
இனி அருணாசல கவிராயரின்  பிரபல  ராமநாடக கீர்த்தனைகளில் ஒன்றை எப்படி மஹா பெரியவா ரசித்து  விளக்கினார் என்று அறிவோம். இது தான் நான் யாரோ ஒரு அற்புத மனிதர்  எழுதியதை  கூகிளில் படித்து ரசித்து என் வழியில் உங்களுக்கு  கொஞ்சம் சேர்த்து அளிக்கிறேன்.  

கவிராயர்  ராமாவதாரம்  எல்லாம் முடிந்து அரங்கனாக  ஸ்ரீ ரங்கத்தில்  மஹா விஷ்ணு  ஓய்வெடுப்பதைப் பார்த்து விட்டு  நூறு கேள்வி கேட்கிறார்.  காடு மேடு என்று எங்கெங்கோ அலைந்து எண்ணற்ற ராக்ஷஸர்களை துஷ்டர்களை நிக்ரஹம்  செய்து விட்டு ஸிஷ்ட  பரிபாலனம் செய்தவர்  ஏன் இப்போது  படுத்துவிட்டீர்? என்ன ஆயிற்று உங்க ளுக்கு?  என்று   அரங்கன் படுத்ததற்கு காரணம் கேட்கிறார்.  அந்த பாடல் முழுமையாக கேழே தருகிறேன்.

இராகம் : மோகனம்
தாளம் : ஆதி
பல்லவி
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா-ஸ்ரீரெங்கநாதரே - நீர்
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா

அனுபல்லவி
ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே
அவதரித்த இரண்டாற்று நடுவிலே

சரணம்
கோசிகன் சொல் குறித்ததற்கோ-அரக்கி
குலையில் அம்பு தெரித்ததற்கோ
ஈசன்வில்லை முறித்ததற்கோ-பரசு
ராமன் உரம் பறித்ததற்கோ

மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்
வழிநடந்த இளைப்போ
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத்
துறை கடந்த இளைப்போ

மீசுராம் சித்ரகூடச் சிகரக்கல்
மிசை கிடந்த களைப்போ
காசினிமேல் மாரீசன் ஓடிய
கதி தொடர்ந்த இளைப்போ

ஓடிக் களைத்தோ தேவியைத்
தேடி இளைத்தோ-மரங்கள் ஏழும்
துளைத்தோ-இலங்கை என்றும்
வளைத்தோ-கடலைக் கட்டிக்
காவல் மாநகரை இடித்த வருத்தமோ
ராவணாதிகளை அடித்த வருத்தமோ

இறைவனை துதிப்பதில்  இது ஒரு வழி.  ஸம்ஸ்க்ரிதத்தில் நிந்தா ஸ்துதி எனப்படும்.   நையாண்டியாக கேள்விகள் கேட்டு துளைப்பது.  இறைவனுக்கும் இது பிடிக்கும்.

ரொம்ப பெரிய  பதிவு ஆக இது வரும் என்பதால்  ஒரே ஒரு நையாண்டி பாடல், நிந்தா  ஸ்துதிக்கு உதாரணமாக சொல்லி நிறுத்திவிட்டு பின் தொடர்கிறேன்.  காளமேகப்புலவரின்  இப்படிப்பட்ட  பாடல்கள் பிரபலமானவை. ஒன்றே ஒன்று உதாரணத்துக்கு:

"சிவபெருமானை   சிதம்பரம் நடராஜனாக  அலங்காரம் அர்ச்சனை ஷோடசோபசாரம்  நைவேத்யம், யானை மேல் ஊர்வலம் பூம் பூம் என்று  எக்காளம்  எனும் வாத்தியம், பேரிகை முழக்கத்தோடு  கண்டு களித்த காளமேகத்துக்கு  குத்தலாக  ஒரு  பாடல் பாட தோன்றியது.  

 ''நச்சரவம் பூண்ட தில்லை நாதரே, தேவரீர்
பிச்சை எடுத்து உண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்கடல்போல் தான் முழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்?

சிவனே,  நீர்  அணிவதோ யாரும்  தொடாத  ஒரு ஆபரணம். கொடிய விஷம்  காக்கும் பாம்பு. தலையில் கழுத்தில் கையில் அது தான்.  அடுத்த வேளை  சாப்பாட்டுக்கு நீர்  கையில் கபாலம் எனும் மண்டையோட்டை எடுத்துக்கொண்டு  பிச்சை எடுப்பவர்  உமக்கு எதற்கய்யா, இந்த  எக்காள வாத்யம், யானை வாகனம், ஹோ என்று கடலலை  போல் சப்திக்கும் பேரிகைகள்  உமக்கு தில்லை எனும் சாம்ராஜ்யம்? எண்ணற்ற பக்தர்கள் சமூகம்?

தொடரும் 

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஒரு  யுக புருஷரின்  பூலோக யாத்ரை -  1

வைணவ விண்ணொளி  என்ற  தலைப்பு  இடும்போது  கோடி சூர்ய பிரகாசமாக திகழும் ஒரு விண்ணொளி ஸ்ரீ ராமானுஜரைத் தவிர  வேறு யாராக  இருக்க முடியும்?  ஆகவே  இந்த பதிவு அந்த தலைப்பை தங்கி இதுகாறும் பல  வைணவ தாரகைகளைப் பற்றிய  விஷயங்களை பரிமாறியது.  முத்தாய்ப்பு வைத்தது போல் ஒரு சில  பதிவுகள்  இனி ஸ்ரீ ராமாநுஜரைப் பற்றி வந்த பிறகு நிறைவு பெரும். 

ஸ்ரீ  ராமானுஜரின் 120 வருஷ  வாழ்க்கை  விவரம்   ஒரு  அற்புத சரித்திரம். நிச்சயம் அவர்  ஒரு  அபூர்வ மனிதர். என்றும்  மறக்கமுடியாத  ஒரு யுக புருஷர்.  அவர் வாழ்க்கை பயணம் நீண்டது அல்லவா. முழுதும்  விவரம் அறிந்து படிக்க  எத்தனை பேரால் முடியும்? .  ஆனால்  எல்லோரும் தெரிந்து கொள்ள  சுலபமாக ஒரு  பாதை அமைத்து  வருஷ  மாத  வாரியாக  மைல்  கல்லை நட்டு அங்கங்கு விஷயம் அறிவோம்.  எனக்கு இதை தயாரிக்கும்போது அதிசயமாக இருந்தது. இப்படி ஒரு மனிதரா??  நிச்சயம் மனிதரில்லையே,  தெய்வமல்லவா அவதாரம் செய்தது. பரமனின் படுக்கையான  ஆதி சேஷன் அல்லவோ  லக்ஷ்மணனாகவும்  பலராமனாகவும்  ஸ்ரீ ராமானுஜராகவும் உருப்பெற்றது.   

120 வருஷ  சமாசாரம் முழுதும் ஒரே  செய்தி மடலில் தர முடியும். ஆனால்  ஆதிசேஷன் போல்  நீண்டதாக  இருக்குமே. எனவே  இரண்டு மூன்று பகுதிகளாக தருகிறேன்.  எப்படி இருக்கிறது செய்தியின் விவரங்கள் என்று உங்களுக்கே  புரியும். .

1.    1017 சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்ரம்   - ஸ்ரீ ராமானுஜன் ஜனனம்
2     1017 தை மாதம்  புனர்பூசம்  - சகோதரன்  எம்பாரின்  ஜனனம்
3.    1024 -  7வயதில் உபனயனம்
4.    1025  --  வயது 8. அக்கா  பூமிதேவியின் திருமணம்
5.    1028 -    வயது 11   முதலி ஆண்டான்  ஜனனம் ,
6.                 தங்கை கமலைக்கு திருமணம்
7.                 நடாதூர் ஆழ்வான்,  கிடம்பி ஆச்சான், பிள்ளை திருமலை நம்பி  ஜனனம். 
8.    1032 -  15 வயது.     குருகை பிரான் பிள்ளான்  அவதாரம்
9.    1033    16  வயது.   தஞ்ஜாம்பாளுடன் (ரக்ஷாம்பாள் )திருமணம்
10.  1033-1037 -    16-20 வயது -  யாதவப்ரகாசரிடம் கல்வி , திருப்புட்குழியில்.
11.  1035 -    18 வயது.   தந்தை கேசவ சோமயாஜி மறைவு.
12.                 பெரிய திருமலை நம்பியின் 3வது மகன் ராமானுஜன்  ஜனனம்
13.  1038 --    21 வயது.    யாதவ பிரகாசர் கோஷ்டியோடு காசி மாக ஸ்நானம் புறப்பாடு.(தை, மாசி, பங்குனி)
14.  1038-1040 -   22-23 வயது.  யாதவ பிரகாசரிடம்  கல்வி.
15.  1039 - 22 வயது.   ஆளவந்தார்  காஞ்சி வருகை. (வைகாசி )
16.  1041 - 24 வயது.   யாதவப்ரகாசரிடம் கல்வி முடிந்து  காஞ்சி வரதராஜருக்கு கைங்கர்யம்.
 17  1042 -   25 வயது -  பெரிய நம்பியோடு ஆளவந்தார் அழைப்புக்கிணங்கி ஸ்ரீ ரங்கம் வருகை. ஆளவந்தார் பரம பதம் ஏகுதல்.
18.   1043 -   26  வயது.  மாளவ  ராஜா   ஜகத் தேவன் த்வார சமுத்ரம், பேலூர், யதுகிரி ஆகிய  ஊர்களை எல்லாம் தாக்கி ராம பிரியர்  அர்ச்ச விக்ரஹ அபகரிப்பு.
19. 1044 - 27 வயது.  முதலியாண்டான் ஸ்ரீ ரங்கத்திலிருந்து வந்து  ராமானுஜரிடம் இணைதல். 
20. 1045 -  28  வயது. ராமானுஜரின்  தாய்  பரமபதம் அடைந்தார்.
21. ஆண்டாளுக்கும்  கூரேசருக்கும்  திருமணம்.
22.  1046 -  29 வயது.  பேலுருக்கு  ஹோய்சால  பிட்டி தேவன் அரசன் ஆனான்
23.  1049 -  32 வயது. பெருமாளின் 6 கட்டளைகளை திருக்கச்சி நம்பி மூலம் பெறுதல். பெரிய நம்பிகளை   மதுராந்தகத்தில் சந்தித்தல்.  பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு  கஞ்சியில்  6 மாதம் வாசம்.
24. திருக்கச்சி நம்பிகளின்  அறிவுரையின் படி  சொத்து,  செல்வம் எல்லாம் துறந்து கூரேசர் காஞ்சியில் ராமனுஜரின் சிஷ்யன்  ஆகிறார்.
25. நடாதூர் ஆழ்வான் சிஷ்யன் ஆகிறார்.
26.  தாயின் அறிவுரைப் படி யாதவ பிரகாசர்  ராமனுஜரின் சிஷ்யர் (கோவிந்த தாசர்)  ஆகிறார்.- யதி தர்ம  சமுச்சயம்  எழுதப்படுகிறது.
27.  திருமலை நம்பிக்கு எம்பாரை (கோவிந்த பட்டர்) சைவத்திலிருந்து வைஷ்ணவத்துக்கு  மாறும்படி செய்தி அனுப்பிகிறார்.
28.  மார்கழியில்  யாதவப் பிரகாசர்  பரமபதம் எய்தல்.
29. 1050-  33 வயது. வேதாந்த சாரம்  உருவாகியது. இதுவரை இளையாழ்வார்,  இனி  உடையவர் ஆகிறார்.
30. திருவரங்க பெருமாள் அரையரோடு ஸ்ரீரங்கம்  வருகை -  உடையவர் பட்டம் பெறுதல்.
தொடரும் 

SUNDARA MOORTHI NAYANAR


 


தம்பிரான் தோழர் -   நங்கநல்லூர்  J K  SIVAN

ஒப்பற்ற   ஈச நேசம்.

ஒரு தடவை  சுந்தரரும் சேரமான்  பெருமாள் நாயனாரும் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்கள் . போகும் வழியில் ,  நாகப்பட்டினம் எனும் திரு நாகையில் காயாரோஹண ஈஸ்வரனை சந்தித்தனர்.  இந்த க்ஷேத்ரம்  திருநாகைக் காரோணம் என பெயர் பெற்றது.   எனக்கு  ஒரு முத்து மாலை தா,    இது மட்டும் போதாது, ஆடைகள்,நவரத்தினங்கள், ஆபரணம்,  காற்றைவிட வேகமாக பறக்கும் குதிரைகள் என்று பெரிய  ஜாபிதாவாக தனது பாடல் ஒன்றில் சிவனை வேண்டுகிறார் சுந்தரர்.  

'' நீ  எனது நண்பன் அல்லவா, நான் கேட்பதைத்  தருபவன் அல்லவா என்ற உரிமையில் இதை கேட்கிறார்.  சிவனுக்கும் சுந்தரருக்கு அப்படிப்பட்ட அற்புதமான ஸக்ய பாவம், தோழமை அல்லவா?

ஏழாம் திருமுறை, திருநாகைக் காரோணம்  046 என்ற பதிகத்தில் ஒரு  சுந்தரமூர்த்தி நாயனார்   பாடல்:

‘’பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
 பாவையரைக்  கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்து  வைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே’’.

வங்கக்  கடற்கரை  ஓரத்தில் உள்ள  நாகப்பட்டினம் எனும்  திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற  காயாரோஹண பெருமானே,   நீர்  ரொம்ப பெரிய ஆள்,   பல ஊர்களுக்கு செல்பவர், , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பவர்,  அங்ஙனம்  பிக்ஷை  பெறும்போது   பிக்ஷை   இட வருகின்ற, பாவை  போலும் மகளிர்  பக்தி பரவசத்தோடு  தமது  மனதையும்  அர்ப்பணிப்பார்கள், அதையும்  ஏற்றுக் கொள்பவர்.   இறந்தவரது எலும்புகளை மேலே  கபாலம்  போன்ற  ஆபரணமாக பூண்டு கொண்டு, எருதின் மேல் ஏறித்திரிபவர்.   இவைகளைப் போலவே,   என்னிடம் உள்ள பொருளை மறைத்து  வைத்து, என்  பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காதவர். கேட்டால் என்னிடம்  ஏதும் இல்லை என்பவர்.  இவையெல்லாம் உம்முடைய  சிறந்த  லோகநாயகன் என்ற  அந்தஸ்துக்கு பொருந்தாதே.  நீர்  என்ன பண்ணுகிறீர், இப்போது  நான் அணிவதற்கு முத்தாரமும், மேற் கொண்டு  மாணிக்க மாலை. வயிரமாலைகளும்  நான் அணிய  தரவேண்டும். உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், நறுமண சந்தனமும்  அவசியம்  தரவேண்டும்.நீர், அதை  தவறாமல்  அளித்தருளல் வேண்டும்''.  

எந்த அளவிற்கு  கடவுளுக்கும் பக்தனுக்கும்  தொடர்பு,  நட்பு, நேசம், இருந்தால்   இவ்வாறு  கேட்க தோன்றும்!. அந்த 
பரமேஸ்வரனும்  சுந்தரனுக்கு கேட்டதெல்லாம் உடனே  கொடுத்தான், செய்தானே.

சேரமான் பெருமாளுடன்  தெற்கே  நிறைய  சிவ  ஸ்தலங்கள் சென்றிருக்கிறார்  சுந்தரர்.  அவர்கள்  இருவரும் திருக்கண்டியூர் சென்று ஆற்றைக் கடக்க முடியாத அளவு   காவிரியில் பெரும் வெள்ளம். ஆற்றின்  அக்கரையில் திருவையாறு .  

''அடடா,  நாம் பஞ்சநதீஸ்வரரை தரிசிக்க வழி இல்லையே '' என  ஏங்குகிறார்  சேரமான் பெருமாள்.

''ஆமாம்,   என்ன செய்வது. ஆற்றின் வெள்ளம் கரை புரண்டு ஓடுகி றதே. நமக்கு தான்  சிவன் இருக்கிறாரே அவரையே உதவி கேட்போமே''  என்று சுந்தரர்  ஒரு பாடல் படுகிறார்.  சிவனுக்கு  சுந்தரர் பாடல்கள் தான் தேன் ஆயிற்றே!.

ஆனந்தமாக சுந்தரர் பாடலைக் கேட்ட  ஐயாறப்பர்  மகிழ்கிறார்.  கங்கையையே அடக்கி தலையில் வைத்துள்ள வருக்கு காவிரியே, கொஞ்சம்  உன் நீரை நிறுத்திக் கொள்’’   என்று சொல்வது கடினமா?  

வெள்ளம் அடங்குகிறது. காவேரி  ஆற்றின் நடுவில் , மணல் பாதை,  வழி விடுகிறது. இருவரும் ஆற்றைக்  கடந்து,  அக்கரையில் பஞ்சநதீஸ்வரரை தரிசிக்கிறார்கள்.  காவிரி மீண்டும் வெள்ளத்தால் நிரம்புகிறது.  இரு பக்தர்களும் சிவனருளைக்  கண்ணால் கண்டு வியந்து போகிறார்கள்.  இந்த அதிசயம் அங்கிருந்த அனைவரையும் சிலை யாக்குகிறது. இப்படியா  ஒரு சிவபக்தர். சிவ நேசராக, தோழனாக,  என்று சுந்தரரை வணங்குகிறார்கள்.

''சுவாமி,  என்னுடன் நீங்கள் என் ஊருக்கு வரவேண்டும்''  என்று சேரமான் சுந்தரரை வேண்ட அவருடன் செல்கிறார் சுந்தரர். மாலை மரியாதை வாத்திய வேத கோஷ மேள தாளங்களுடன்  சுந்தரரை அழைக்கிறார்.  சிலகாலம் அவருடன் தங்குகிறார் சுந்தரர்.  

''என்னை மறந்தாயோ சுந்தரா?'' என்று   தியாகராஜன் கேட்பது போல் அடிக்கடி தோன்றவே  திருவாருர்  செல்ல விரும்புகிறார்.  சேரமான்  சுந்தரருடன் திருவாரூர் செல்ல இயலவில்லையே என்று  வருந்துகிறார்.

''ஐயா, சிவனடியாரே,  நீங்கள் அரசர், உங்கள் கடமையை செவ்வனே செய்து ராஜ்ய பரிபாலனம் செய்யுங்கள்''  என்று சுந்தரர்  அவரைக்  கேட்டுக் கொள்ள, தக்க மரியாதை, சன்மானங்களோடு அவற்றை சுமக்க நிறைய  ஆட்களையும் கூட சேர்த்து திருவாரூருக்கு  சுந்தரரை வழியனுப்புகிறார் சேரமான்.

சிவனுக்கு  எப்போதும் சுந்தரர் தன்னிடம் தான் பரிசு பெறவேண்டும் என்று விருப்பமோ?  எவ்வாறு மற்றவரிடம் தனது தோழர் சன்மானங்கள் பெறுவதை விரும்புவார் ?

''ஓஹோ,  அப்படியா சேதி, சுந்தரா,   நீ எப்படி சேரமான் கொடுத்த பரிசுகளோடு, மூட்டை முடிச்சோடு,  திருவாரூர்  செல்கிறாய் என்று  நான் பார்த்து விடுகிறேன்’’  என்று  பரமேஸ்வரன் சங்கல்பித்தான். அப்புறம் என்ன ஆயிற்று?
 

GREAT PHILANTHROPISTS

 கடையெழு வள்ளல்கள் -  நங்கநல்லூர்  J K  SIVAN 



நாமெல்லோரும்  இந்நாட்டு மன்னர் என்று பாரதியார் சொன்னதை அடிக்கடி ஞாபகப் படுத்துவதோடு இன்று
இன்னொன்றும் சொல்கிறேன்.  நாமும் வள்ளல்கள் தான். கொடுக்கும் மனது நமக்கும் நிறைய உள்ளது.  நம்மில் யாரவது நம்மிடம் இருப்பதை மற்றவர்க்கு கொடுக்காமல் இருக்கிறோமா?  வீட்டில் எத்தனை சாமான்கள், பொருள்கள், துணிகள், நமக்கு உபயோகம் இல்லை, கிழிந்தவை, சாயம் போனவை, சின்னதாக போனவை, மீந்து போனவை, ஊசிப்போனவை,  உடைந்தவை, ஓட்டை, இதெல்லாம் தெருவில் அப்படியே போட்டுவிடுகிறோமா?  ''இந்தாப்பா  என்று யாரையாவது கூப்பிட்டு கொடுக்கிறோமல்லவா?  இந்த குணம் யாருக்கு வரும்?  இது தானம் தர்மம் இல்லையா. வாசலில் வரும் பசுவுக்காவது இதை போடுகிறவர்கள் நம்மில் இல்லையா?

சங்கநூலான சிறுபாணாற்றுப் படையை நல்லூர் நத்தத்தனார் ஏன் ஏழே  ஏழு வள்ளல்கள் பற்றிமட்டும் சொல்லி விட்டு போய்விட்டார்? நம் போன்றவர்கள் அக்காலத்திலும் உண்டல்லவா?  ஏன் அவர்களை எல்லாம்   நத்தத்தனார்  கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்? ரொம்ப  பாரபக்ஷம் அவருக்கு.

ஏழு பேர் அப்படி என்ன செய்தவர்கள் என்று அவர்களை மட்டும் பற்றி பாடினார்? இதைப் போய், இந்த ஏழு வள்ளல் களைப் பற்றிய செய்திகளை மட்டும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன. அது சரி, யார் அந்த ஏழு வள்ளல்கள் அவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள்?

பேகன் - அவனிடம்  ஒரு போர்வை போர்த்திக்  கொண்டு  நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்தபோது  எதிரே ஒரு மயில் வந்து நின்றது.  அதன்  அழகை ரசித்துதால் , அப்போது மிகவும் குளிராக  இருந்ததால்,  அவனுக்கு  என்ன தோன்றியதோ?   ''இந்தா  இது உனக்கு'' என்று  தன் மேல் இருந்த  சால்வையை தற்கு போர்த்தி விட்டான். அது அவனுக்கு ஒரு அழகிய இறகை  பரிசளித்திருந்தால்  அது நன்றி உள்ள மயில். புலவர்  ஏனோ அதைப் பற்றி சொல்லவில்லை.?

பாரி -  பேகன் என்ன உசத்தி, நானும் தான் இப்படி மனிதர்களைத்  தவிர மற்ற ஜீவராசிகளுக்கும்  உதவுபவன். ஏன் அவனுக்கு மட்டும் தனி பெருமை?  என்று நினைக்கவில்லை. அப்போதெல்லாம் பத்த்ரிக்கைகள், போட்டோக்கள்,  வாட்ஸாப்ப் எல்லாம் இல்லை.  பேகன் வேறு காலம் பாரி வேறு காலம். இடமும் எங்கோ  தள்ளி.    

பாரி  ஒரு காட்டில் தேரில் நின்று கொண்டிருந்தான். தேர் நின்றிருந்தது.  குதிரைகளை அவிழ்த்து விட்டிருந்தான். அவை நீர் பருகி  புல் மேய்ந்து கொண்டிருந்தப்பது  எதிரே  ஒரு முல்லைக்கொடி  பாரியின் கண்ணில்  தென்பட்டது.  காற்றில் அந்த நீளமான  முல்லைக்கொடி  அங்குமிங்கும்  ஆலவட்டம்  ஆடியதைப்  பார்த்தான். அது சாய்ந்து கொள்ள ஒரு மரமோ, கொம்போ அருகில் இல்லை.  அப்போது தான் அவனுக்கு ஒரு விசித்திர எண்ணம் தோன்றி யது. ஆஹா, அருகில்  கொம்போ, மரம்  எதுவுமோ இல்லாமல் இந்த முல்லைக்கொடி  கொழுகொம்பு தேடுகிறதே.  இந்த சந்தர்ப்பத்தில் நாம்  உதவி செய்யலாமே.?என்று எண்ணினான்.   அருகில் தான்  நமது அரண்மனை.  பொடி  நடையாக  அரண்மனைக்கு நடந்தே சென்று விடலாம். கூப்பிடு தூரம் என்றாலும் யாரையும் கூப்பிட  வேண்டாமே என்று  தேரை அருகே இருந்த  வளர்ந்து வரும் முல்லைச் செடி பக்கத்தில் தள்ளி அதை அணைத்து  நிற்கும்படி நிறுத்திவிட்டு போய்விட்டான்.  முல்லைக்குத் தேர் தந்தவன் (பறம்பு மலை) ஒரு வள்ளல்.

காரி - (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன் (councilman)   இவன் எதுவும் பொருளாக  தரவில்லை. அதை விட உயர்ந்த சொற்களால் எல்லோர் மனதையும் இன்புறச்செய்தான்.  அழகான  இன்சொல் இருக்கும்போது மற்றது எதற்கு என்று நல்ல வார்த்தைகளையே எல்லோருக்கும் அள்ளித்தந்தவன். ரொம்ப கெட்டிக்கார வள்ளல்.  

ஆய் அண்டிரன்  ஒரு வள்ளல். பொதிகை மலையைச் சேர்ந்த வேளிர்  வம்சம்.   நான்  தென் காசி செல்லும்போது  ஆய்க்குடி என்ற  அருமையான ஊருக்கு சென்றேன். அது தான்  அண்டிரன் உருவாக்கிய நகரம், அவன் தலைநகரம். இன்றும் அவன்   பெயர் தாங்கி நிற்கிறதே.   மலைபகுதி என்பதால்  அவனிடம்   நிறைய  யானைகள் உண்டு.  யானைகள் அதிகம் இருந்ததால் அவனால்  தானம் கொடுக்க முடிந்தது.

 நாம் யாரையாவது கௌரவிக்க  பொன்னாடை என்று பளபளவென்று ஒரு துணியை போர்த்துகிறோமே அது போல் ஆய் அண்டிரன்  ஒரு புலவருக்கு உண்மையான புலித்தோலை   எடுத்து போர்த்தி   ஒரு யானையையும்  பரிசளித்தவன்.    ஆனந்தமாக அந்த புலவர்  ஏணிச்சேரி முடமோசியார் என்பவர்  என்ன பாடினார்? 

" மன்னா! நான் சோழ நாட்டில் பிறந்தவன். எனக்கு எந்தவிதமான குறையும் கிடையாது. நான் உன்னை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றுதான் வந்தேன். உன்னுடைய சிறப்பம்சங்களைப் பற்றி நிறைய பேர் பாடியதால், நீ எப்படி இருப்பாய் என்று உன்னுடன் பழகிவிட்டுச் செல்லலாம் என்றுதான் வந்தேன் . எனக்கே நீ இவ்வளவு பொருள் கொடுத்துள்ளாயே !! அப்படியெனில், உண்மையில் வறுமையில் வாடி வருபவர்களுக்கு நீ எவ்வளவு பொருள் தருவாய் ??"

'பொதிய மலை' என்றாலே  வெளியே தெரியாமல் பல  விநோதங்கள்,  இரகசியங்களும், அதிசயப் பொருட்களும் பொதிந்து கிடக்கும் மலை '' என்று பெயர். அதில் ஒன்று தான்  நீல நிற நாகத்தின் சட்டை.  அந்தப் பாம்பின் சட்டையை  வைத்த்திருப்பவனிடம்  அபரிமிதமாக  செல்வம் சேரும்,  வற்றவே வற்றாது என்பது நம்பிக்கை. 
ஆய் அண்டிரன் தன்னிடம் இருக்கும் யானை, செல்வங்கள் எல்லாம் கொடுத்துவிட்டான் என்பதால் அவனுக்கு ஒரு நீல நாக சட்டை யை  ஒரு முனிவர்  தந்தார். இவனிடம் செல்வம் பெருகினால் எல்லோருக்கும் பலன் என்று நினைத்தார்.  ஆய்  அண்டிரன் ''ஆஹா  இது என்னிடம் இருப்பதை விட  சிவபெருமானிடம் இருந்தால்  உலகமே செழிக்குமே '' என்று    திருக்குற்றால நாதர்  பாதத்தில் வைத்து விட்டான்.  அவனிடம் இருப்பதெல்லாம் கொடுத்தபின்  ஒருநாள்  ''இனி என்னிடம்  புலவர்களுக்கு  யாசகர்களுக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே, இனி இந்த உயிரால் என்ன பயன்'' என்று மரணத்தை தழுவினான்.    முடமோசியார்  அவன்   மரணம் பற்றி அறிந்து ஒரு பாடல் பாடினார்  அதில்  ''ஆய்  அண்டிரன் விண்ணெய்தியதால் நம்மை எல்லாம் இந்த பூமியில் நினைத்து  மழையைப்  பொழிந்து சுபிக்ஷமாக வாழ  அருள்கிறான்''  என்கிறார் 

அதியமான் -  அவன்  ஊர் தகடூர்.   கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த  குட்டி ராஜா அவனுக்கு பெரிய தாராள மான மனசு.இல்லை என்றால் வள்ளல் ஆக  முடி யுமா?  அவன் தாராளமானதுக்கு, பெரிய மனது பற்றி ஒரு சின்ன கதை சொல்ல வேண்டாமா ? அவனுக்கு தமிழ் மேல் அளவற்ற  பற்று,  தாகம்.   அடிக்கடி அவனைத் தேடி புலவர்கள், கவிகள்  எல்லோரும் வருவார்கள். கை நிறைய பரிசுகள் கொடுத்து அனுப்புவான்.  ஒளவை அடிக்கடி அதியமானை த்தேடி வருவாள்.  அவளுக்கு அவன் தமிழ் தாகம் தெரியும். அவனுக்கு ஒளவையின் கவித்தைத்திறன் ரொம்ப பிடிக்கும். ஆகவே  அவன் நாளைக்கு ஒளவை வருவாளே ,அந்த நெல்லிக் கனியை  அவளுக்கு கொடுத்து அவள் உண்டால்  நீண்டகாலம் தமிழும் வாழுமே  என்ற எண்ணம்.  அவளுக்கு அதை கொடுத்தான்.  அவனிடம் இருந்த நெல்லிக்காய் சாதரணமானது அல்ல. சாப்பிட்டால்  நிச்சயம்  நூறு வயதுக்கு மேல்  வாழலாம் என்று காரண்டீ இருந்தது.  நெல்லிக்  காய் சாறு  கொரோனா கிருமி நாசினியாம். யாரோ  வாட்சப்பில் சொன்னது நிஜம் தானோ?   ஒரே ஒரு நெல்லிக்காய் இப்படி  நமக்கு  கிடைத்தால் நாம் என்ன செய்வோம். ரெண்டாம் பேருக்கு சொல்லாமல் டபக்கென்று விழுங்கி விட்டு  எத்தனை வருஷம் ஆகி விட்டது என்று எண்ணு வோம்?  

''ராஜா  நீங்கள் ஏன் அதை சாப்பிடவில்லை ?'' என்று மந்திரி  காரணம் கேட்டபோது, அந்த நெல்லிக் கனியைத் தான் உண்பதை விட   ஔவை உண்டால் ஔவையுடன் சேர்ந்து தமிழும் செழித்துச் சிறக்கும் என்று கூறினான்  அதியமான்.  அதியமான் ஒரு குட்டி ராஜ்யத்துக்கு ராஜா. அதிக படைபலம் இல்லை.    எதிரிகள்  படையெடுத்து எந்த நேரமும்  அவன் ராஜ்ஜியம் போய்விடும், அவனும் கொல்லப்படுவான்.  அதியமான் இப்படி கவலையில் மனநிம்மதி இல்லாமல்  இருந்தான்.  மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜ குருவையும் அமைச்சர் பிரதானிகளையும்  கலந்து ஆலோசித்தபோது   படைபலத்தையும் மீறி தெய்வ  சக்தி துணை இருந்தால் நல்லது . காவல் தெய்வமான கால பைரவர்தான் சரியான துணை  என்று சொன்னார்கள்.  

சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவர்தான் தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று அறிந்ததும்  அதியமான்  கால பைரவருக்கு ஓர் ஆலயம் கட்ட  முனைந்தான். அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, கால பைரவர் சிலையை கொண்டு வரச்  செய் தான். கோயில் கட்டி ரெடியாக இருந்தது.  விக்ரஹம்  வந்தது. பிரதிஷ்டை ஆயிற்று.  
ஆலயத்தில்  நவக்ரஹங்களின்  சக்தி  இருக்க வேண்டும் என்று அவற்றையும் பிரதிஷ்டை செய்தான் அதியமான்.  தகடூரை காக்க  காலபைரவர் கையில்  திரிசூலம், வாள் சகிதம் அருள் பாலிக்கிறார்.   இன்றும்  தரிசிக்கலாம்.   ஆலய சிற்பங்கள் பழமை வாய்ந்தவை.
 காசிக்கு அடுத்து தனிச் சந்நிதியில் இருக்கும் கால பைரவர்  தகடூரில் தான்.   அதற்கு தட்சிண காசி கால பைரவர் ஆலயம் என்று பெயர். முக்தி க்ஷேத்திரம்.   தருமபுரி,  கர்நாடகா, கேரளா போன்று  பல இடங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வருகிறார்கள்.

நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன் என்று இவனைப் புலவர்கள் பாடுகிறார்கள். . நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன்  என்கிறார்கள். அர்த்தம் என்ன?   அவனை நாடி வந்தவர்கள்,புலவர்கள், மற்ற நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் தந்து மகிழ்த்தியவன். இதற்கு  தாராள மனம் நிறைய பெரிதாக  வேண்டுமே.

ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். கூத்தற்கு  நாடு கொடுத்தான் என்பார்கள்.  நடனமாடியவர்களுக்கு  நிலம் தானமாக அளித்தவன்.   கொல்லி
மலை நாட்டை ஆண்டவன். தன்னிடம் பொருள் கேட்டு வருபவர்கள் இனி யாரிடமும் கேட்க தேவை ஏற்படாத அளவில் இல்லறத்திற்கு பொருள் கொடுத்தான்.

கடை ஏழு வள்ளல்கள்  என்று  7 பேரை பற்றி  எங்கள் தமிழ் வாத்தியார்  கோ. கணபதி  ஒரு  மர  நாற்காலியில் தூங்கு மூஞ்சி மரத்தடியில் சொல்லிக் கொடுத்த  போது  அதை புரிந்து கொள்ளும் வயதில்லை. அதன் அருமை தெரியவில்லை.  ஏதோ பாடம், மனப்பாடம் பண்ண  வேண்டியது. இல்லையென்றால் அடிப்பார் என்று தான் தெரிந்தது. 
 

Sunday, April 24, 2022

NOSTALGIC RECOLLECTION


 


ஆரம்ப  பள்ளிக்  கல்வி -   நங்கநல்லூர்  J K  SIVAN 

இப்போதெல்லாம்  தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை மார்பில் இருந்து பிடுங்கி இழுத்து பள்ளிக்கூடத்தில்  அந்த தாயே சேர்க்கிறாள் . ரெண்டு ரெண்டரை வயசிலே பள்ளிக்கூடம். போய் அழுதுவிட்டு ஒரு மணியில் திரும்பி வர பல லக்ஷங்கள் வாங்குகிற  பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றது.      வயதானவுடன்  பெற்றோரிடம் இருந்து குழந்தை
கள் பாசமில்லாமல் பிரிந்து போகிறது என்று பின்னால் அழுது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு என்ன பிரயோஜனம்.  ஆரம்பத்திலிருந்து  இடைவெளி விடுவது நாம் தானே. 

எழுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னாள்  நாங்கள் அரசாங்கம் நடத்திய  ஆரம்ப தமிழ்ப்  பள்ளியில் தான் படித்தவர்கள். ஊரில் ஒரு பள்ளிக்கூடமாவது இருக்கும். அதில் ஆண் பெண் இருவரும் சேர்ந்தே படிப்போம்.  ஐந்து வகுப்பு வரை தரையில் தான் உட்கார்ந்தோம்.   மேலே FAN  கிடையாது.  கூரைக்கட்டு பள்ளிக்கூடங்கள். முக்கால்வாசி நேரம் மரத்தடிகளில் ஜிலுஜிலுவென்று காற்றில், மரத்தில் காக்கைகளுடன் தான் எங்கள் கல்வி போதனை நிகழ்ந்தது.  

கொஞ்சம் கொஞ்சமாக  வசதிகள் பெருகின. கூரைக்கட்டு பள்ளிக்கூடங்கள் அஸ்பெஸ்டாஸ் சிமிட்டி கொட்டகை போட்ட  ஜன்னலில்லாத அரை சுவர் கட்டிடங்களில் வகுப்புகளாக  சுவர்களால் தடுக்கப்பட்டு தரையில் நீண்ட பலகைகளில் உட்க்கார்ந்தோம். வகுப்பில் கரும்பலகை போர்டுகள் ஆசிரியருக்கு ஒரு நாற்காலி,  அப்புறம்  மேஜை, எங்களுக்கு பெஞ்சுகள்,  எதிரே எழுத டெஸ்க் கள்,  மரங்கள் எங்கும் நிறைந்து இருந்ததது. மின் விசிறி இல்லாமல்  அப்போது வியர்க்கவில்லை.   மாக்கல் ,   தகர  ஸ்லேட் தான் எழுத உபயோகிப்போம். .  அதைத் துடைப்பதற்கு  சிலர் நறுக்கிய கோவைக்காய்  கொண்டு  போவோம்.  அது தான்  ஸ்பான்ஜ் . அதால் துடைத்து  பலப்பம்  என்னும்  எழுது கோல். அச்சு கொட்டும் பல்பம்  சிறிய துண்டு  கொடுத்து  நிறைய  மேட்ச் பாக்ஸ்,  லேபிள் ,வாங்கி கொள்வான்  ஜெகதீசன். எங்களுக்கு  நோட் புக்   பென்சில்  உபயோகம் அப்போதெல்லாம்  தெரியாது.  

வகுப்பில் எப்போதும் வாத்தியார் இருக்க மாட்டார்.  ஒரு சில வாத்தியார்கள் தான் பள்ளிக்கூடத்தில். 
நாங்களாகவே  பேசிக்கொண்டு  விளையாடிக்கொண்டு இருப்போம்.  ஸ்லேட்டில்  '' சிவாஜி  வாயிலே   ஜிலேபி'' '' கரடி ரயில் டில்லி''   என்று  மேலும்  கீழும் எழுதி அந்த மூன்று வார்த்தை அதிசயத்தில் ஆனந்தமாக  மூழ்கி  லயித்ததுண்டு.  இதே போல்  இங்கிலீஷில்  CEYLON  / LONDON   என்று  மேலும் கீழும்  ஒரே மாதிரி வரும் வார்த்தைகளில் பிரமித்தது  உண்டு.  

சூளைமேடு  நுங்கம்பாக்கம்  பகுதியில்   சௌராஷ்டிர நகர்  அப்போதுதான்  புதிதாக   உருவாகிய  காலனி.  அதில் 2 வது தெருவில் இருந்து  க்ரிஷ்ணமூர்த்தி  என்ற  பட்டுநூல் காரர்கள்  வம்ச பையன் இது மாதிரி  விஷயங்களை  பிடித்துக் கொண்டு வந்து எங்களை அசத்துவான்.  

தென்னை ஓலையில் பாய்  பின்னச் சொல்வார் சுப்ரமணிய அய்யர். தக்கிளியில்  நூல் நூற்க சொல்வார்.  தக்கிளியில்  பஞ்சு நூலாக  வராமல்  அறுந்து போனால் கன்னா பின்னா என்று எங்கள் அப்பாவில் இருந்து  ஆரம்பித்து  திட்டுவார். சபிப்பார்.  தக்ளியில் நூல் நூற்க கற்றுக் கொடுக்காமல்  எங்களை சரியாக வளர்க்க வில்லையாம்.

பச்சை சட்டை லோகநாதன்  வீட்டில்  தோட்டம் இருந்தது.  அவனிடம் இருந்தது அந்த பச்சை சட்டை ஒன்று தான். அது எங்களுக்கு தெரியாதே.   அவன் அப்பா  தெருவில்  பழைய  பேப்பர்  அலுமினியம்  பொறுக்கி  விற்பவர்.  எங்களுக்குள்  எந்த வித்யாசம் தெரியாத தெய்வீக காலம் அது.  அவ்வப்போது  கொஞ்சம்  கத்திரிக்காய், வெண்டைக்காய் கொண்டு வந்து சுப்ரமணிய அய்யருக்கு  தருவான். தக்கிளி கொண்டுவர மாட்டான்  நூற்க மாட்டான் என்றாலும் காய்கறிகளுக்காக  அவனைப் புகழ்வார். அப்போதே வெள்ளக்கார  இந்தியாவில்  நமது நாட்டில்  லஞ்சம் தலை விரித்தாடியிருக்கிறது என்பதை  இது திருஷ்டாந்தமாக விளக்கும்.

விஸ்வேஸ்வரன்  பேர்  தான் பெரியதே  தவிர  குள்ளமாக  நரங்கலாக இருப்பான். இடது கால்  கொஞ்சம்  ஊனம். . போலியோ  என்று  சொல்கிறோமே  அதை  இளம்பிள்ளை வாதம் என்பார்கள்.   பிறவியிலிருந்தே இடது கால்  சூம்பி இருக்கும்.  விந்தி விந்தி நடப்பான்.  கால் பந்து கவர் பாலில் விளையாடும்போது தானும் விளையாட வருவான். சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.  அது அவனுக்கு பழகிப் போய் விட்டது.   விந்தி நடப்பதை ஒரு குறையாக  அவன்   நினைத்தே  பார்த்ததில்லை.  எங்களோடு அவனும்  நொண்டிக்கொண்டே   ஓடி ஆடுவான்.  கவர் பால் என்ற  ரப்பர் பந்தில், பழசான  டென்னிஸ் பந்தில்   படை படைக்கும் வெயிலில்  சாப்பாடு நேரத்தில் கால்பந்து விளையாடு வோம்.   ஓடிஏ முடியாது என்பதால்  விஸ்வேஸ்வரன்  தான்  கோல் கீப்பர்.  ஆள்  வேறு வேண்டுமே  விளையாட.  தன்னை விளையாட்டில் சேர்த்துக்  கொள்ள வேண்டும் என்பதால்   அவனே நான்  தான்  கோல் கீப்பர் என்று  அனௌன்ஸ் பண்ணி  விடுவான்.   அதனால்  அவன் எங்கள்  பர்மனண்ட் கோல் கீப்பர்.

சுப்ரமணிய அய்யர்  ஒண்ணாவது முதல் ஐந்தாவது வரை  வகுப்புகள் எடுப்பார். ஒரு  பெரிய  கூரை கொட்டகை 
ஹாலில்  சிறு தடுப்பு  சுவர்கள் கொண்ட வகுப்புகள். ஒன்று முதல்  ஐந்து வரை.   அவரே  ஹெட்மாஸ்டர். சர்வாதிகாரி. மூங்கில் பிரம்பு அவரோடு  உடன்  பிறந்தது.  கையை  நீட்டச்சொல்லி  உள்ளங்கையில் விளாசும் கிராதகன். 

அவர்  வீட்டுக்கு அருகே  பாரத்வாஜேஸ்வரர்  கோவிலில் அவர் தான் நிர்வாகம்.  இப்போது அது ட்ரஸ்ட்புரம்.  அர்ச்சகர் நாகநாதய்யர் அவர் மைத்துனன்.    ஆனால்   பாதிநாள் சங்கல்பம் பண்ணி வைக்க  அர்ச்சனைகள் பண்ண, சுப்ரமணிய அய்யர்  சென்று விடுவார்.  சில மந்திரங்கள் மட்டுமே  இதற்காக தெரிந்து கொண்டு மனப்பாடம் பண்ணி வைத்திருப்பார்.  

என் அருகே  எப்போதும்  உட்காரும்  விஸ்வேஸ்வரனின் அப்பா  வைத்தீஸ்வர கனபாடிகள்.  சூளைமேட்டில் பிரபலமான  வாத்யார்.  நல்லது பொல்லாது, சுப  அசுப காரியங்களுக்கு அவரை பல வீடுகளில் பார்க்கலாம்.  

சுப்ரமணிய அய்யர் அவருடைய  நண்பர்  என்பதால்  எல்லா கல்யாணங்களுக்கும், சுப  அசுப  காரியங்களிலும்  ஆள்   குறைந்தால் சுப்ரமணிய அய்யரை  ஆள் சேர்த்துக் கொள்வார்.  உபாத்யாயம், சிராத்தம்  தர்ப்பணம், எல்லாவற்றிற்கும் கூப்பிட்டுக் கொள்வார்.  வேஷ்டி, துண்டு, தக்ஷனை, சாப்பாடு இப்படியே   வாரத்தில்  மூன்றுநாள் எப்படியோ அய்யருக்கு  ஓடி விடும்.  வீட்டில் யாரும் இல்லாதவர்.  தனிக்கட்டை.  இப்படியாகத்தான் பல வித அனுபவஸ்தர் எங்கள் ஹெட்மாஸ்டர்.

சந்தோஷ நேரங்களில்  வகுப்பிலேயே  ''சிவ தீக்ஷாபரு ,  நகுமோமு''  என்று ஆலாபனை பண்ணிக்கொண்டே   பாடுவார். பல பாட்டுகளை அவருக்கு தெரிந்த  ஒரே ராகத்தில் பாடுகிறார் என்று  எனக்கு  அப்போது தெரியாது..

ஒருநாள்   திடீரென்று சுப்ரமணிய ஐயர்  பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. ராமநாதன் அவருடைய அபிமான சிஷ்யன்.  எங்கள் வகுப்பு சட்டாம்பிள்ளை. அவன் அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது  கும்பலாக  இருக்கிறது  என்று திரும்பி வகுப்புக்கு ஓடி வந்து  விட்டான்.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு  மணியடிக்கும் அப்பாதுரை வந்து  ''ஹெட்மாஸ்டர் மாரடைச்சி செத்துட்டார். பள்ளிக் கூடம் மூடணும். எல்லோரும் போங்கோ''  என்றான். எங்கள் வகுப்பை மூட வேண்டிய அவசியம் இல்லை.  கதவு கிடையாது. மேலே கூரை  தடுப்புச் சுவருக்கு இரண்டு புறமும் குட்டிச் சுவர்கள்.  தரையில் தான்   உட்காருவோம். எனவே எழுந்து ஓடிவிட்டோம்.

 செத்துப் போவது என்றால் என்ன  என்று எங்களில் நிறைய  பேருக்கு சரியாக தெரியாத வயது.  சில பையன்கள்  செத்துப்போவது பற்றி  பயமாக  சொல்வார்கள். அப்போது எழுந்து சென்று  மரத்தடியில் சிறிது சிறுநீர்  கழிக்க  வைக்கும்படியான  பயம் தோன்றியது  இப்போதும்  நினைவிருக்கிறது.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...