Tuesday, April 26, 2022

SUNDARA MOORTHI NAYANAR


 


தம்பிரான் தோழர் -   நங்கநல்லூர்  J K  SIVAN

ஒப்பற்ற   ஈச நேசம்.

ஒரு தடவை  சுந்தரரும் சேரமான்  பெருமாள் நாயனாரும் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்கள் . போகும் வழியில் ,  நாகப்பட்டினம் எனும் திரு நாகையில் காயாரோஹண ஈஸ்வரனை சந்தித்தனர்.  இந்த க்ஷேத்ரம்  திருநாகைக் காரோணம் என பெயர் பெற்றது.   எனக்கு  ஒரு முத்து மாலை தா,    இது மட்டும் போதாது, ஆடைகள்,நவரத்தினங்கள், ஆபரணம்,  காற்றைவிட வேகமாக பறக்கும் குதிரைகள் என்று பெரிய  ஜாபிதாவாக தனது பாடல் ஒன்றில் சிவனை வேண்டுகிறார் சுந்தரர்.  

'' நீ  எனது நண்பன் அல்லவா, நான் கேட்பதைத்  தருபவன் அல்லவா என்ற உரிமையில் இதை கேட்கிறார்.  சிவனுக்கும் சுந்தரருக்கு அப்படிப்பட்ட அற்புதமான ஸக்ய பாவம், தோழமை அல்லவா?

ஏழாம் திருமுறை, திருநாகைக் காரோணம்  046 என்ற பதிகத்தில் ஒரு  சுந்தரமூர்த்தி நாயனார்   பாடல்:

‘’பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
 பாவையரைக்  கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்து  வைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே’’.

வங்கக்  கடற்கரை  ஓரத்தில் உள்ள  நாகப்பட்டினம் எனும்  திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற  காயாரோஹண பெருமானே,   நீர்  ரொம்ப பெரிய ஆள்,   பல ஊர்களுக்கு செல்பவர், , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பவர்,  அங்ஙனம்  பிக்ஷை  பெறும்போது   பிக்ஷை   இட வருகின்ற, பாவை  போலும் மகளிர்  பக்தி பரவசத்தோடு  தமது  மனதையும்  அர்ப்பணிப்பார்கள், அதையும்  ஏற்றுக் கொள்பவர்.   இறந்தவரது எலும்புகளை மேலே  கபாலம்  போன்ற  ஆபரணமாக பூண்டு கொண்டு, எருதின் மேல் ஏறித்திரிபவர்.   இவைகளைப் போலவே,   என்னிடம் உள்ள பொருளை மறைத்து  வைத்து, என்  பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காதவர். கேட்டால் என்னிடம்  ஏதும் இல்லை என்பவர்.  இவையெல்லாம் உம்முடைய  சிறந்த  லோகநாயகன் என்ற  அந்தஸ்துக்கு பொருந்தாதே.  நீர்  என்ன பண்ணுகிறீர், இப்போது  நான் அணிவதற்கு முத்தாரமும், மேற் கொண்டு  மாணிக்க மாலை. வயிரமாலைகளும்  நான் அணிய  தரவேண்டும். உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், நறுமண சந்தனமும்  அவசியம்  தரவேண்டும்.நீர், அதை  தவறாமல்  அளித்தருளல் வேண்டும்''.  

எந்த அளவிற்கு  கடவுளுக்கும் பக்தனுக்கும்  தொடர்பு,  நட்பு, நேசம், இருந்தால்   இவ்வாறு  கேட்க தோன்றும்!. அந்த 
பரமேஸ்வரனும்  சுந்தரனுக்கு கேட்டதெல்லாம் உடனே  கொடுத்தான், செய்தானே.

சேரமான் பெருமாளுடன்  தெற்கே  நிறைய  சிவ  ஸ்தலங்கள் சென்றிருக்கிறார்  சுந்தரர்.  அவர்கள்  இருவரும் திருக்கண்டியூர் சென்று ஆற்றைக் கடக்க முடியாத அளவு   காவிரியில் பெரும் வெள்ளம். ஆற்றின்  அக்கரையில் திருவையாறு .  

''அடடா,  நாம் பஞ்சநதீஸ்வரரை தரிசிக்க வழி இல்லையே '' என  ஏங்குகிறார்  சேரமான் பெருமாள்.

''ஆமாம்,   என்ன செய்வது. ஆற்றின் வெள்ளம் கரை புரண்டு ஓடுகி றதே. நமக்கு தான்  சிவன் இருக்கிறாரே அவரையே உதவி கேட்போமே''  என்று சுந்தரர்  ஒரு பாடல் படுகிறார்.  சிவனுக்கு  சுந்தரர் பாடல்கள் தான் தேன் ஆயிற்றே!.

ஆனந்தமாக சுந்தரர் பாடலைக் கேட்ட  ஐயாறப்பர்  மகிழ்கிறார்.  கங்கையையே அடக்கி தலையில் வைத்துள்ள வருக்கு காவிரியே, கொஞ்சம்  உன் நீரை நிறுத்திக் கொள்’’   என்று சொல்வது கடினமா?  

வெள்ளம் அடங்குகிறது. காவேரி  ஆற்றின் நடுவில் , மணல் பாதை,  வழி விடுகிறது. இருவரும் ஆற்றைக்  கடந்து,  அக்கரையில் பஞ்சநதீஸ்வரரை தரிசிக்கிறார்கள்.  காவிரி மீண்டும் வெள்ளத்தால் நிரம்புகிறது.  இரு பக்தர்களும் சிவனருளைக்  கண்ணால் கண்டு வியந்து போகிறார்கள்.  இந்த அதிசயம் அங்கிருந்த அனைவரையும் சிலை யாக்குகிறது. இப்படியா  ஒரு சிவபக்தர். சிவ நேசராக, தோழனாக,  என்று சுந்தரரை வணங்குகிறார்கள்.

''சுவாமி,  என்னுடன் நீங்கள் என் ஊருக்கு வரவேண்டும்''  என்று சேரமான் சுந்தரரை வேண்ட அவருடன் செல்கிறார் சுந்தரர். மாலை மரியாதை வாத்திய வேத கோஷ மேள தாளங்களுடன்  சுந்தரரை அழைக்கிறார்.  சிலகாலம் அவருடன் தங்குகிறார் சுந்தரர்.  

''என்னை மறந்தாயோ சுந்தரா?'' என்று   தியாகராஜன் கேட்பது போல் அடிக்கடி தோன்றவே  திருவாருர்  செல்ல விரும்புகிறார்.  சேரமான்  சுந்தரருடன் திருவாரூர் செல்ல இயலவில்லையே என்று  வருந்துகிறார்.

''ஐயா, சிவனடியாரே,  நீங்கள் அரசர், உங்கள் கடமையை செவ்வனே செய்து ராஜ்ய பரிபாலனம் செய்யுங்கள்''  என்று சுந்தரர்  அவரைக்  கேட்டுக் கொள்ள, தக்க மரியாதை, சன்மானங்களோடு அவற்றை சுமக்க நிறைய  ஆட்களையும் கூட சேர்த்து திருவாரூருக்கு  சுந்தரரை வழியனுப்புகிறார் சேரமான்.

சிவனுக்கு  எப்போதும் சுந்தரர் தன்னிடம் தான் பரிசு பெறவேண்டும் என்று விருப்பமோ?  எவ்வாறு மற்றவரிடம் தனது தோழர் சன்மானங்கள் பெறுவதை விரும்புவார் ?

''ஓஹோ,  அப்படியா சேதி, சுந்தரா,   நீ எப்படி சேரமான் கொடுத்த பரிசுகளோடு, மூட்டை முடிச்சோடு,  திருவாரூர்  செல்கிறாய் என்று  நான் பார்த்து விடுகிறேன்’’  என்று  பரமேஸ்வரன் சங்கல்பித்தான். அப்புறம் என்ன ஆயிற்று?
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...