Wednesday, April 20, 2022




 வைணவ விண்ணொளி - நங்கநல்லூர் J K SIVAN

கூரத்தாழ்வான்.

''அருமையானகுருவும் அபிமான சிஷ்யனும் ''- 5



சில  நாட்களாக  தொடராக  எழுதி வந்த ஸ்ரீ கூரேசர் சரித்திரம்  இந்த  பதிவுடன் நிறைவு பெறுகிறது. வைணவ விண்ணொளி என்ற தலைப்பு தொடரும்.

ஸ்ரீ ராமானுஜருக்கு வயது நூறைத்  தாண்டி விட்டது. கூரேசரும் இப்போ கிழவர், கண்ணற்றவர் வேறு, வயதிலும் சற்று மூத்தவர்.   கூரேசர் வாழ்க்கை பெரும்பாலும் ஸ்ரீரங்கத்தில்  பெருமாள் சந்நிதியிலும் ராமானுஜர் திருவடிகளிலுமே  கழிந்தது. வழக்கம்போல் ஒரு நாள் கம்பை  ஊன்றிக்கொண்டு  மெதுவாக  யார் உதவியோடு அரங்கன் ஆலயத்தில் அவன் முன்னால் நின்றார்.  அங்கிருந்து சற்று நேரத்தில் வழக்கமாக  திரும்புபவர் அன்று ஏனோ அதிக நேரம் நின்று கொண்டே இருந்தார். நேரம் ஓடியது.

”என்ன கூரேசா ஏதோ சொல்ல நினைக்கிறாய் போலிருக்கிறதே?” என்று  கேட்டான் அரங்கன். 


“எனக்குக் குறை யொன்று மில்லை கோவிந்தா!  ஏதோ உன் முன்னால் நின்று கொண்டு   ஆத்ம திருப்திக்கு மனசுக் குள்ளேயே   உன்னைப் போற்றி பாசுரங்கள்  பாடவேண்டும் என தோன்றியது.”


"எனக்கும் உன்னைப்  பார்த்துக் கொண்டிருப்பதில்  ரொம்ப மகிழ்ச்சி தான்.   கூரேசா, எதாவது என்னிடம் கேளேன்?''

“ரங்கா ! என்ன விளையாடுகிறாயா எனக்கு தான் ஒரு குறையும் நீ வைக்கவில்லை என்றேனே . நான் என்ன கேட்பேன் உன்னிடம்?”


“அப்படியொன்றுமில்லை, நீ  ஏதாவது கேட்டே ஆகவேண்டும் உனக்கில்லை என்றால் ரங்கநாயகிக்காகவாவது, என் ராமானுஜனுக்காவாவது எதையாவது கேள்!!”

“சரி ரங்கா, என்னை இந்த உடலில் இருந்து விடுவித்து உன் பாத கமலத்தில் சேர்த்துக்  கொள்கிறாயா?”

“”ஹு ஹும்” மாட்டேன். வேறே எதாவது கேள் கூரேசா !!”

“வேறே ஒன்றுமே இல்லையே என்ன கேட்பேன்.?!””

“சரி, அப்படியென்றால்  உன் விருப்பப் படியே ஆகட்டும். உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சார்ந்த அனைவருக்கும் நீ கேட்ட வரம் அளிக்கிறேன் !!”


பரம திருப்தியோடு கூரேசன் திரும்பினார். ராமானுஜருக்கு  கூரேசன்  அரங்கனோடு நிகழ்த்திய  மேற்கண்ட சம்பாஷணை  பற்றி  தெரியவந்ததும்  ஆனந்தத்தில் மேலே அணிந்திருந்த வஸ்திரத்தை தூக்கி போட்டு பிடித்து கூத்தாடினார்.


ஒரு சிஷ்யன் கேட்டான் ஆச்சர்யரே என்ன ஆயிற்று திடீரென்று உங்களுக்கு . என்ன ஆனந்தம்  ? “


என்  அருமை கூரேசன்  தயவால்   எனக்கும் அல்லவா நாராயணனின் பாத கமலப்ராப்தி வரம் கிட்டியது. நானும் கூரேசனைச்    ''சார்ந்த''   வனல்லவா”. இதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. திருக்கோஷ்டி நம்பிகள்  ''நான் உபதேசித்த ரகசிய மந்திரத்தை எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக அறிவித்ததால்   நீ  நரகத்துக்குச்  செல்வாய்'' என்ற சாபம் இருந்ததே.  ஆகவே எனக்கு வைகுண்ட பிராப்தி கிடையாதே.  இப்போது கூரேசன் மூலம் அவனைச் சார்ந்தவன் என்கிற வகையில்  அது நிவர்த்தி ஆகிவிட்டதல்லவா?

தொண்டு கிழவர் ராமானுஜர் கூரேசர் வீடு நோக்கி சென்றார்.


“கூரேசா” நீ என்ன கார்யம் செய்துவிட்டாய்.   குருவாகிய என்னை கேட்காமலேயே இப்படி  செய்யலாமா ??”

கூரேசருக்கு புரியவில்லை, பதில் சொல்லவில்லை விழியின்றி விழித்தார்.


“ஏன் பேசமுடியவில்லை உம்மால்? எதற்காக ரங்கனிடம் உடலிலிருந்து விடுபடவேண்டும்  என்று   கேட்டீர் . நான் குருவாக இருக்கும்போது எனக்கு முன்பு நீர் அங்கு ஏன் செல்லவேண்டும். சொல்லும்.   ஏன் அவ்வாறு கேட்டீர்?


“சுவாமி!! நாராயணன் திருவடியில் பரமபதம் பெற முறையாகவே வேண்டினேன்”

“புரியும்படியாக சொல்லும் . மழுப்பவேண்டாம் ”

“நீங்கள் சொல்வீர்களே ஒரு பாசுரம். அதில் வருமே "பரம பதம் சென்ற மூத்தவர்கள், இளையவர்கள் பரமபதம் அடைய வரும்போது வாசலில் நின்று வரவேற்பர் என்று " எனக்கு அதில் உடன்பாடில்லை. இளையவர்கள் முன்பாக சென்று மூத்தவர்கள் வரும்போது முறையாக மரியாதையுடன் அவர்களை வரவேற்க வேண்டும். ஆகவே நான் சிஷ்யன் என்ற முறையில் உமக்கு முன்பாக செல்ல வரம் கேட்டேன்”. என்றார் கூரேசர். ஆடிப்போனார் ஆசார்யன்


" என்னருமை கூரேசா, வைகுண்டத்தில்  இளையவர் முதியவர்  என்ற பாகுபாடு  ஏது? இளையவர் யார்? முதியவர் யார்? பாபி யார் ? புண்யசாலி யார்? ஞானி யார்? அஞ்ஞானி யார்?  வைகுண்டத்தை  அடைந்தவர்களுக்கு இதெல்லாம் கிடையாதே.  இது தெரிந்தும்  கூட, இங்கு செய்தது போல் அங்கும் எனக்கு சேவை செய்ய உமது  மனம் விழைந்தது புரிகிறது. என் அருமை கூரேசரே !! உமக்கு ஈடு நீரே தான்”


ஆசார்யன் கண்களில் நீர்மல்க கூரேசனை  ஆரக் கட்டித்  தழுவிக்கொண்டார் .

”கூரேசரே ,நீரே என் ஆத்மா.உம்மை நான் எப்படி ப் பிரிய முடியும்? என்னைத்  தனியனாக விட எண்ணமா? என்னையும் உம்மோடு கூட்டி செல்ல வேண்டியதுதானே ”


கூரேசன் சிலையாக நின்றார். இறைவன் முன்பு நின்றிருந்தபோதும் இந்த எண்ணம் தோன்றாமல் போனதே என சிந்தித்தார் .


”என்னை மன்னித்தது விடுங்கள் பிரபோ!!” என்று ராமனுஜரின் கால்களைப் பிடித்தார்.


“கூரேசா, உமக்கு வரமளித்த ரங்கநாதன் எனக்கும் வரமளிப்பான் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நேரே போகிறேன் எனக்கு முன் போகாமல் உம்மை தடுக்க வரம் தேடுகிறேன்- இல்லை.  இல்லை  அது  தவறு. தவறு,  நான் அப்படிச் செய்ய மாட்டேன்.  இது  என் அரங்கனின் ஆக்னை..  அதை  மாற்ற நான் யார்?. நாராயணன் சித்தம் அவ்வாறென்றால் அதற்கு உட்படுவதே என் கடமை””


ஒரு கணம் யோசித்த ஆசார்யன்  ஸ்ரீ ராமானுஜர்  மெதுவாக கண்ணீர் மல்க   தொடர்ந்தார்


”கூரேசரே !! நீர் போய்விட்ட பிறகு நான் எப்படி இங்கு வாழ முடியும்? பரமபத நாராயணன் உம்மைக் கவர்ந்தான். நீவிர் அங்கே செல்லும் . நான் இங்கே ரங்கனாக உள்ள நாராயணன் நிழலில் இருக்கிறேன்.”


கால ஓட்டத்தில் துகள்கள் உருண்டன. கூரேசன் பரமபதம் அடைந்தார், ராமானுஜரை அனேக சீடர்கள் சென்றடைந் தனர்.  ஆனால்  அவர்களில் ஒருவராவது கூரேசனாக முடியுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...