Wednesday, April 6, 2022

SUNDARAMURTHY NAYANAR


 

தம்பிரான் தோழர் - நங்கநல்லூர் J K SIVAN

''நானும் இறந்து போகிறேன்''

பரவை நாச்சியாரையும் சுந்தரரையும் இணைக்க தரகனாக பரமேஸ்வரன் பல நாட்கள் நடந்து அலைந்து சந்தோஷமாக இருவரையும் சேர்த்து வைத்த விஷயம் பல சிவபக்தர்கள் காதுகளை நிரப்பியதில் அவர்கள் அதிசயித்து மகிழ்ந்தார்கள். ஆனால் இந்த விஷயம் தனது காதில் காய்ச்சிய சூடான ஈயமாக இறங்கி ஒருவர் படு பயங்கர கோபத்தில் இருந்தார். அவர் பெயர் ஏயர் கோன் கலிக்காம நாயனார்.

''அடடா, என் பரமேஸ்வரனை, பரவை என்பவளிடம் பலமுறை தூது அனுப்பிய சுந்தரரை நான் விட்டேனா பார் '' என கோபத்துடன் கிளம்பினார் .

காவிரி நதியின் வடகரையில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமம் திருப்பெருமங்கலம் .அங்கே வேளாளர் ஒருவர் சிறந்த சிவபக்தர். அவர் தான் மேலே சொன்ன ஏயர்கோன் கலிக்காம நாயனார். அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவர். எல்லா சிவாலயங்களிலும் வரிசையாக நிற்பவர்களில் ஒருவர். ஏயர்கோன் என்பது குலப்பெயர். அவர் பெயர் கலிக்காமன் . மானக்கஞ்சார நாயனார் பெண்ணை மணந்தவர். நந்தனார் சென்று வழிபட்ட திருப்புன்கூர் சிவலோகநாதன் ஆலயத்திற்கு நிறைய திருப்பணிகள் புரிந்தவர்.
பெருமூச்சு விட்டார் கலிக்காமர். ''என்ன துணிச்சல் இந்த சுந்தரனுக்கு? என் பகவானை ஆண்டவனை தொண்டனாக தூது செல்ல ஏவுபவனும் ஒரு பக்தனா? இது என்ன பாவம்! இப்பெரும் பிழையை சுந்தரன் செய்தான் என்று காதால் கேட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறேனே. மஹா பாவி நான். பெண்ணாசை பிடித்த ஒருவனுக்காக, அவன் பக்தன் என்பதால், அவன் ஏவியதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவதும் போவதுமாக என் பரமசிவன் அலைந்தானா? நான்முகன். மால் ஆகிய தேவரெல்லாம் தொழும் தேவாதி தேவன் தூது செல்ல இசைந்தாலும் அவ்வாறு சுந்தரன் சிவனை ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்த சுந்தரனை நேரில் பார்த்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை என்று பொருமினார் கலிக்காமர்.
இந்த விஷயம் சுந்தரர் காதில் விழுந்தது. பகவானே, சிறந்த சிவபக்தர் கலிக்காமர் மனம் நோவாமல் இருக்க, கோபம் தீர, நீ தான் உதவவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
திருவாரூர் தியாகேசன் மனம் இளகியது. இருவரையும் நேசிப்பவர் அவர். அவர்களை நல்ல நண்பர்களாக்க திட்டம் தீட்டினார்.
திடீரென்று கலிக்காம நாயனாருக்கு தாங்கமுடியாத வயிற்று வலி, சூலை நோய் வாட்டியது. எந்த மருந்தும் உதவ வில்லை. வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றினார்.
"கலிக்காமா, உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் சுந்தரன் தீர்த்தாலன்றித் தீராது" எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர்
"வழிவழி அடியனான என் வழியை, வருத்தத்தை வம்பனான அவ்வன்றொண்டன் சுந்தரனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்க என் வலி தீர்வதைக் காட்டிலும் என்நோய் என்னை வருத்துதலே நன்று' என்றார் கலிக்காமர்.
சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றினார் .''சுந்தரா, என் எண்ணத்தால், ஏயர்கோன் உற்ற சூலைநோயை நீயே நேரில் சென்று தீர்ப்பாய்' எனக் கட்டளையிட்டார்
நம்பியாரூராரும் பரமேஸ்வவரனை வணங்கிப் பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக் கேட்ட கலிக்காமர் வெகுண்டு,
'மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற இவ் வயிற்றி னோடும் கிழிப்பேன்'' என்று தனது உடைவாளால் தன வயிற்றைக் கிழித்தார். உடைவாளால் வயிறு கிழிந்து கலிக்காமரின் சூலை நோய், அவர் உயிர் ரெண்டுமே தீர்ந்து போய்விட்டது.
கலிக்காமர் இறந்ததைக் கண்ட அவரது மனைவி அக்கணமே உடனுயிர் விடத்துணிந்தாள் . அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் வீட்டு வாசலுக்கு வந்து விட்டார் என்று கூட இருந்தவர்கள் சொல்லக் கேட்டார். தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர் கொள்ளும் படி சுற்றத்தார்களை ஏவினார். அவர்களும் நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் 'கலிக்காம ருடைய சூலைநோயை நீக்கி அவருடன் சேர்ந்து இருப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறேன்' என்றார்.
அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று 'சுவாமி! அவருக்கு இப்போது சூலைநோயோ வேறு எதுவுமோ இல்லை. உள்ளே பள்ளி கொள்கின் றார்' என்றனர்.
இதைக் கேட்ட சுந்தரர், '' கலிக்காமருக்கு ஒரு தீங்கும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இருப்பினும் என் மனம் தெளிவு பெறவில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும் அழைத்து வாருங்கள் ' என்றார்.
''வாருங்கள் என்று சுந்தரரை உள்ளே கிடந்த கலிக்காமர் உடலருகே அழைத்து சென்றார்கள். கலிக்காமர் குடல் சரிந்து உயிரற்ற பிணமாக கிடப்பதைக் கண்ட சுந்தரர்
''ஆஹா, இப்படியா நிகழ்ந்தது என்று நடந்ததை அறிந்தார். நானும் இவரைப் போலவே இறந்து போவது தான் நல்லது '' என்று அருகே இருந்த உடைவாளை பற்றினார்.
அப்பொழுது அங்கே ஒரு ஆச்சர்யம் நடந்தது. பரமேஸ்வரன் அருளால் கலிக்காமர் உயிர் பெற்றெ ழுந்து "கேளிரேயாக்கிக் கெட்டேன்" என்று சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக்கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார்.
கலிக்காமரும் வாளை விட்டெறிந்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் அன்பினால் தழுவிப் பிரியாத நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் சிவலோகநாதன் திருவடிகளை வணங்கிப் போற்றினர்.
அப்புறம் நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் ஆரூரர் இசைவு பெற்றுத் தம்முடைய ஊருக்குத் திரும்பினார். அங்கு தமக்கேற்ற திருதொண்டுகள் புரிந்திருந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...