பருத்துக் கண்டே போகும் பம்பாய் -
நங்கநல்லூர் J K SIVAN
பம்பாயில் ஷீர்டி பாபா எங்கும் காணப்படுகிறார்.. நான் தங்கியிருந்த அந்தேரி, மரோல் பகுதியில், ஒரு சிறு இரும்பு படியில் மேலே ஏறி, மாடியில், தனியாக உட்கார்ந்து கொண்டிருந்த பாபா முன் நின்றேன். என்னால் தரையில் உட்கார முடியாதே. காலை ஏழு மணிக்கு யாரும் கோவிலுக்கு வரவில்லை. பாபா உயிரோவியம் போல் அமர்ந்திருந்தார்.
மாடிப்படி இரு பக்க கம்பிகளை மறைத்து பிளாஸ்டிக் பல நிற பூமாலைகள் நிஜ புஷ்பாலங்காரம் போல் காணப்பட்டது.
பாபா முன் ஒரு பாத்திரத்தில் சில்லரைக் காசுகள். அவரை ஷீர்டியில் பார்த்தாலும் வேறே எங்கே பார்த்தாலும் எங்கிருந்தோ ஒரு திருப்தி மனதில் உள்ளே புகுந்து விடுகிறது.
பம்பாயிலிருந்து ஷீர்டி காரில் சென்றோம். அப்போதிருந்த ஷீர்டி இப்போது இல்லை. எங்கும் வியாபாரம். நோக்கு இடமெல்லாம் ஷீர்டி பாபா படத்தோடு ஹோட்டல்கள், கடைகள், சில்லறை வியாபாரிகள், நாமம் போட கையில் நாமக்குச்சியுடன் துரத்தும் குழந்தைகள். எண்ணற்ற வண்டிகள், நிறுத்த நிற்க இடமில்லாத ஷீர்டி . ஸாயி பாபாவுக்கு தெரியாத ஷீர்டி. எங்கும் சப்தம். செருப்பு வைப்பதற்கு இடம் கொடுத்து சம்பாதித்து வீடு கட்டி வாழும் தெரு அர்ச்சனை திரவிய பூ வியாபாரிகள். அடேயப்பா எத்தனை ஆயிரம், லக்ஷம் பேரை வாழவிக்கிறார் அந்த முற்றும் துறந்த கந்தல் துணி உடுத்திய சந்நியாசி. ஒவ்வொரு முறை ஷீர்டிக்கு சென்றாலும் அதன் உருவம் மாறிக் காண்கிறது. ஏழு வருஷம் முன்பு நான் சென்ற ஷீர்டி இல்லை இது. பக்தர்கள் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டால் நேரக்கூடிய மாற்றங்கள் தாம் இவை.
ஏதோ ஒரு காந்த சக்தி இன்னும் அங்கே இருப்பதால்
தானே அவ்வளவு கூட்டம். என்னை மறந்து அவர் முன்னே நின்றபோது எத்தனை அமைதி மனதில். அவரைப் பற்றி எழுதியது மனத் திரையில் ஓடுகிறது. பம்பாயில் இருந்து 300 கி.மீ தூரம் அதிக வேகமாக
செல்ல முடியாதபடி நிறைய பொறுமையை சோதிக்
கும் ஸ்பீட் பிரேக்கர்கள். குண்டும் குழியுமான தெருக்கள். சாலைகள்.
திரும்பி பார்ப்பதற்குள் காலம் ஓடிவிடுகிறது. சுமார் ஒரு வார காலம் மும்பை ஷீரடி என்று புனித பயணம் மேற்கொண்டதில் அன்றாட எழுத்து பயிற்சி நின்று விட்டது.
தமிழ் நாட்டை தாண்டின வுடனே நாக்கு செத்து போயிடும். மும்பையிலே வெஜிடேரியன் சாப்பாடு கிடைக்கத்தான் செயகிறது. இப்போதெல்லாம் உணவு ஒரு பிரச்னையே இல்லை. எங்கும் எல்லாமே கிடைக்
கிறது. விலை தான் அதிகம் என்ற எண்ணம் மனதில் உறுத்தும்.
சாம்பார் தித்திப்புடன், தடிமனான இட்லி, குண்டு வடையுடன் கிடைக்கிறது. உள்ளே தள்ளுவது சற்று கடினம் தான். வடா பாவ் என்று புரிபடாத ஒரு ருசியில் நிறைய பேர் சாப்பிடும் வஸ்து எனக்கு பிடிக்கவில்லை. சுடச்சுட பூப்போல மிருதுவான தொட்டால் வளைந்து ஓடியும்படியான மெல்லிசு இட்லி ரெண்டின் மேல் கார சாரமான மிளகாய்ப்பொடி நல்லெண்ணையை மனதில் நினைத்துக்கொண்டு அந்த ஆனந்தத்தில் கண்ணை மூடிக்கொண்டேன்.
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள்-- ஸ்ரீ ராமானுஜர்-- கோவிலில் காஞ்சிபுரம் இட்லிக்கு கோவிலில் பிரசாத ஸ்டாலில் கொடுப்பதை சாப்பிட்டவர்களுக்கு அதன் ருசி, இதை படிக்கும்போது நாக்கில் நீர் சுரக்க வைக்கவில்லை என்றால் எனக்கு எழுதத் தெரியவில்லை என்று தான் அர்த்தமாகும்.) ப்ரசாதத்துக்கு என்று எப்போதுமே தனி ருசி சேர்ந்துவிடுவது அதிசயம்.
பம்பாய் என்று அநேக வருஷங்கள் அழைக்கப்பட்டு மனதில் ஊறின பெயரை மாற்றி கொம்பில்லாத பசுவைப் போல மும்பை என்று அழைப்பது ஏதோ வேஷ்டி இடுப்பில் நழுவியது போல கஷ்டமாகத்தான் இருக்கிறது. எங்கும் எதிலும் மாற்றம். நிறைய ஜனங்கள் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். எல்லோருக்குமே எதிலோ எங்கோ முக்ய வேலை இருக்குமோ? வேகம் வேகம் வேகம். வாகனங்களை விட நடப்பவர்கள் வேகமாக செல்ல முடிகிறது. மாடி ரயில் நிறைய பறக்கிறது. மோனோ ரயில் என்று ஒன்று நீளமாக ஓடுகிறது. பார்க்கும்போதே கால் தவறி கீழே விழுந்து விடுமோ என்று பயம் தோன்றி தெரு ஓரமாக ஒதுங்க வைக்கிறது.
பம்பாயில் சுபிக்ஷம் எங்கும் தெரிகிறது. ஏழை நடுத்தரம் பணக்காரன் எல்லோரும் சந்தோஷமாக வாழ பம்பாய் மஹாலக்ஷ்மி வழி வகுத்திருக்கிறாள். தாராவி பகுதி பல வீடுகளை, வீடுகள் என்ற பெயரில் பல தகர குடிசைகளை கூட ஒன்றாக இறுக்கி நெருக்கி எங்கும் துளி இடமில்லாத மக்கள் வாழும் இருப்பிட மாக தெரிந்தது. இது மாதிரி நெரிசல் நெருக்கம் தானே கொரோனாவுக்கு கொண்டாட்டம்.
ஜூஹூவில் இஸ்கான் ISKCON கோவில் பெரிசு. உள்ளே அற்புதமான கிருஷ்ணன் ராதா பொம்மைகள். சிவந்த நாமமணிந்த பெண்கள் தான் கடைக்காரிகள். கோவிலை சுற்றி பின்னால் உணவு கடைகள். மக்கள் அங்கே தான் அதிகம் காணப்படுகிறார்கள். பக்தி பிரவாகமாக பாடல்கள் ஆட்டங்கள் மனதை நிறைத் தது. இணைக்கப்பட்ட பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலையங்களில் நடக்கவேண்டிய அவசியம் இல்லை. வாக்கலேட்டர், எஸ்கலேட்டர், லிப்ட், என்று பலவசதிகள். பாதுகாப்பு பகுதியை கடந்தால் முன்பெல்லாம்
தண்ணீர் குடிக்கக்கூட சிரமம். இப்போது கழிவறை, கடைகள், வயிற்றை நிரப்ப பல கடைகள், உட்கார்ந்
தால் நேரம் போவதே தெரிவதில்லை. டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் வளர்ச்சியில் பேப்பருக்கும் பேனாவுக்கும் வேலையே இல்லை. கும்பலை எளிதில் சமாளிக்கும் பெண்கள் புக்கிங் கௌண்ட்டர்களில் அதிகமாக தெரிகிறார்கள்.
No comments:
Post a Comment