பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
இது நிஜமா?
செங்கல்பட்டுக்குச் சென்று மஹா பெரியவாளை சந்தித்து மனம் திறந்து உரையாடிய பின்னர் பால் ப்ரண்டன் மனதில் இதற்கு முன் இல்லாத ஒரு பேரமைதி குடி கொண்டது. அவர் சொன்னபடி ஒரு முறை திருவண்ணாமலை செல்லவேண்டும், அங்கே உள்ள யாரோ ஒரு யோகியை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் லேசாக அடிமனதில் கோடிட்டு இருந்தது. ஆனால் தான் எப்படியும் இங்கிலாந்து திரும்பவேண்டும் என்ற வெகுநாளைய தீர்மானம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வைத்தது.
மதராஸ் பட்டினத்தில் ப்ரண்டன் தங்கியிருந்த அறையில் காற்றோட்டம் இருந்தது. கொசுக்கடி அவ்வளவாக தெரியவில்லை. இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தார். ஆழ்ந்த தூக்கம். இன்னும் பொழுது விடியவில்லை.
அவர் ஆழ்ந்து உறங்கியபோது திடீரென யாரோ அவரைத் தட்டி எழுப்பியது இருந்தது. திகைப்போடு கண் திறந்து பார்த்தார். எங்கும் இருட்டு. அவர் தங்கியிருந்த அறைக்கதவு உள்ளே தாழ்ப்பாள் போட்டுப் பூட்டித்தான் இருந்தது. ஆனால், அறைக்கு உள்ளே கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் காஞ்சி பரமாச்சாரியார். அட இவர் எப்படி மெட்ராஸில் இந்த அறைக்குள் வந்தார்?
ப்ரண்டன் கண்ணை நன்றாக விழித்துப் பார்த்தார். பெரியவாளைச் சுற்றிப் புனிதமான பொன்னொளி பரவியிருந்தது. மீண்டும் அதே கனிவான அருள் பார்வை...இது நிஜமா பொய்த் தோற்றமா! ஏதோ கனவா? பால் பிரண்டன் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். நிஜம் தான். எள்ளளவும் பொய்யில்லை. அவர் தன்னைத் தானே கிள்ளிக் கொள்வதைக் கவனித்த பரமாச் சாரியார் முகத்தில் மெல்லிய குறும்பு கலந்த புன்முறுவல். பரமாச்சாரியார் கனிவோடு தேனினும் இனிய மதுரக் குரலில் சொல்லலானார்:
''நான் உன்னிடம் என்ன சொன்னேன்? ரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே. பயணத்தைத் தள்ளிப் போடு. ரமணரை நீ தரிசிப்பது மிக முக்கியம். அந்தச் சந்திப்பு உன் வாழ்வின் திசையை மாற்றும்!''
மஹா பெரியவா சொன்ன வார்த்தைகள் கணீரென்று காதில் விழுந்தது. நன்றாக புரிந்தது. ப்ரண்டன் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து அவரை உற்றுப் பார்க்க முயற்சிக்கும்போது அவர் இல்லை. பரமாச்சாரியார் காற்றில் கலந்து எப்படி மாயமாக மறைந்துபோனார்!
நிச்சயம் இது கனவல்ல, நூறு சதவீத நிஜம், என்றுணர்ந்த பால் பிரண்டனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
சீக்கிரமே தனது நண்பரை அழைத்து, அவரிடம் தன்னை திருவண்ணாமலை கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தார்.
பால் பிரண்டன் ரமணரைச் சென்று பார்த்தார் என்பது சரித்திரம். இந்த சம்பவத்தைத் தான் தன் புத்தகத்தில் ( A SEARCH IN SECRET INDIA ) பதிவு செய்திருக்கிறார் பிரண்டன். பால் ப்ரண்டன் திருவண்ணாமலை சென்று ரமணரை முதன் முதலாக சந்திக்கும்போது அவரிடம் கேட்பதற்கு ஒரு நோட் புத்தகத்தில் நிறைய கேள்விகள் எழுதி வைத்துக்கொண்டு சென்றார். அவர்கள் சந்திப்பை பற்றி முன்பே ஒரு கட்டுரையில் விவரமாக எழுதி இருந்தேன். வேண்டுமானால் மற்றொருமுறை அதை எழுதுகிறேன்.
வெகு காலம் கழித்து காஞ்சியில் மடத்தில் மஹா பெரியவாளை தரிசித்த ஒரு பக்தர் அவரிடம் துணிச்சலாக ஒரு கேள்வி கேட்டார்:
"சுவாமி! பால் பிரண்டனுக்கு நள்ளிரவில் காற்றுவெளியில் காட்சி கொடுத்தீர்களாமே! இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?''
கேள்வி கேட்டவரை பரிவோடு சற்றுநேரம் பார்த்த பரமாச்சாரியார் பிறகு ஒரு முறுவலுடன் சொன்னார்:
"அதனால் தான் நான் எப்போதும் சொல்கிறேன். தூங்குவதற்கு முன் நல்ல நினைவுகளையே நினைத்துக் கொண்டு தூங்க வேண்டும்!''
இதற்கு மேல் எதுவும் சொல்லாமல் பரமாச்சாரியார் எழுந்து மடத்தில் தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
மஹா பெரியவா சொன்ன அந்த பதில் மூலம் எல்லார் மனதிற்குள்ளும் அவர் புகுந்து விட்டார். புகழைத் துறந்த அவரது பதிலைக் கேட்ட சிலர், கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள்.
தான் செய்த அற்புதத்தைக் கூடத் தானே ஒப்புக்கொள்ள மறுத்தவர் போல், புறந்தள்ளும் அவரது முற்றும் துறந்த துறவுநிலையைக் கண்டபோது கேள்வி கேட்டவரின் கன்னங்களில் பக்திக் கண்ணீர் வழியத் தொடங்கியது.
No comments:
Post a Comment